இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இரண்டு பக்கமும் கனத்த மௌனம். இருவருக்குமே தம் முடிவில் மாற்றுக்கருத்து இல்லை. என்ன சொல்லி மற்றவரைத் தன் பக்கம் கொண்டுவருவது என்று தெரியாமல் திணறினர்.
தன்னை அவன் புரிந்துகொள்ள மறுக்கிறான் என்பதில் பிரியந்தினிக்கு மிகுந்த மனவருத்தம். ஆரம்பத்தில் அவள் செய்த ஒரு தவறினால் அவர்களுக்குள் கரடுமுரடான சூழ்நிலைகள் உருவாகியது உண்மைதான். அவனும், எதற்கென்று இல்லாமல் அடிக்கடி கோபப்பட்டதும் நடந்ததுதான். அப்போது, ஒருவரைப்பற்றி மற்றவருக்கு ஒன்றுமே தெரியாது. அதன் பிறகு அப்படி இல்லை. எல்லாம் மாறிப் போயிற்று. அவளின் விருப்பங்கள், ஆசைகள், கனவுகள் அனைத்தும் அவனுக்குத் தெரியும். பிறகும் ஏன் அவளை விளங்கிக்கொள்ளவில்லை?
கோகுலனுக்கு அந்த வேலையை வேண்டாம் என்று சொல்வதை நினைக்கவே முடியவில்லை. திருமணமாகி, மனைவி என்று ஒருத்தி கண்ணையும் மனதையும் நிறைக்கும் அழகுடன் வந்தபிறகும், அவளைப் பிரிந்து இப்படித் தனியாக வாழும் வாழ்வை அறவே வெறுத்தான். இருந்தாலும், அவளோடு நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு, நல்ல வேலையும் அதனால் கிடைக்கிற சம்பளமும் முக்கியம். அதை ஏன் அவள் விளங்கிக்கொள்கிறாள் இல்லை? இதோ, கோபத்துடன் அழைப்பைத் துண்டித்தவனிடம் எடுத்துப் பேச முயலவில்லையே. அவளாக எடுக்கட்டும் என்று காத்திருக்க அவனாலும் முடியவில்லை. என்ன முடிவு செய்திருக்கிறாய் என்று கேட்கும் அலுவலகத்துக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். அதில், மீண்டும் அவனே அவளுக்கு அழைத்தான்.
அவன் அழைக்கிறான் என்றதுமே அவளுக்குள் பதட்டம் தான் தொற்றிக்கொண்டது. எதையுமே நேரே எதிர்கொள்கிறவளிடம் இப்போதெல்லாம் தயக்கமும், தடுமாற்றமும் தான் தலைவிரித்தாடிக்கொண்டு இருக்கிறது. காரணம், கணவனாகிப்போனவனின் மீது பற்றிக்கொண்ட பிரியம். அவனுடைய சின்ன வார்த்தை கூட அவளை ஆழமாகக் காயப்படுத்திவிடுகிறது. மெல்ல அழைப்பை ஏற்றாள்.
“என்ன முடிவு செய்திருக்கிறாய்?”
“பிளீஸ் கோகுல். கோபப்படாம கொஞ்சம் கேளுங்கோ. குழந்தை வந்த பிறகு எப்பிடியும் என்ர கேரியர்ல பெரிய பிரேக் ஒண்டு வரும். நாங்க காலில இருந்தாலும் சரிதான் கொழும்பில இருந்தாலும் சரிதான். மாமியோ அம்மாவோ காலத்துக்கும் கூடவே வந்து இருக்கப் போறேல்ல. எனக்கும் பிள்ளையை டேக்கேர் எங்கயும் விட விருப்பம் இல்ல. அதால மூண்டு அல்லது நாலு வருச பிரேக் நான் எடுக்கவேண்டி வரும். பிறகும், பார்ட் டைம் ஜொப்தான் பொருந்தும் எண்டு நினைக்கிறன். இதுவே என்ர கரியருக்கு பெரிய பாதிப்பா இருக்கும். அதுக்குப் பிறகும் வீடு, குடும்பம், பிள்ளை எண்டு எனக்குப் பொறுப்புக் கூடுமே தவிரக் குறையாது. இது எல்லாத்தோடயும் சேர்த்து முழு உழைப்ப, முயற்சியை வேலையில என்னால காட்டேலாது. இதுவே, எனக்குப் பெரிய சவாலான விசயமா இருக்கும். இதுல நீங்க வேற இருக்கிற பொஷிஷன விட்டுட்டு வா எண்டு சொல்லுறீங்க. அப்பிடி வந்தா இவ்வளவு நாளும் நான் போட்ட உழைப்புக்கு என்ன அர்த்தம்? எல்லாமே ஒண்டுமில்லாம போறதா?” என்று இரஞ்சும் குரலில் தன்னை விளக்க முயன்றாள் அவள்.
“ஆக உன்ர முடிவில மாற்றமே இல்ல! அப்பிடித்தானே?” என்றான் அவன் கசப்புடன்.
இதை எல்லாம் அவள் சொல்லவே தேவையில்லை. அவனுக்கும் தெரியும். அவளைக் காலிக்கு வா என்பதில் நியாயம் இல்லை என்பதையும் அறிவான். அதனால் தான், இத்தனை நாட்களாகக் கொழும்புக்கே வந்துவிட முயன்றான். அமையவில்லையே. வேறு வழியற்று, இருவரின் நல்ல எதிர்காலத்துக்காகவும் தானே கேட்கிறான். இதையெல்லாம் ஏன் அவள் புரிந்துகொள்ள மறுக்கிறாள்? என்னவோ அவளின் எதிர்காலத்தையே அவன் குழி தோண்டிப் புதைக்க முயல்வதைப்போல் ஏன் சித்தரிக்கிறாள்?
நேற்று மாதிரி மீண்டும் கோபப்படப்போகிறானே என்று அஞ்சியபடி, “பிளீஸ் கோகுல்! எங்களுக்காக, எங்கட எதிர்காலத்துக்காக, குழந்தைக்காக, எங்கட அம்மா அப்பாக்களுக்காக எண்டு யோசிக்கிற நீங்க என்னைப்பற்றிக் கொஞ்சமாவது யோசிக்கவே மாட்டீங்களா?” எனும்போதே அவள் குரல் தழுதழுத்தது.
அதோடு அவன் பொறுமை பறந்து போயிற்று. “நீ இப்ப சொன்னியே இதுதான் உண்மை. நான் நாங்க, எங்கட எதிர்காலம், பிறக்கப்போற பிள்ளை, ரெண்டு குடும்பத்தின்ர நல்ல வாழ்க்கை இப்பிடி எல்லாத்தையும் யோசிக்கிறன். ஆனா நீ உன்னைப்பற்றி மட்டுமே யோசிக்கிறாய். இதுதான் எனக்கும் உனக்குமான வித்தியாசம். நீ இவ்வளவு சுயநலக்காரியா இருப்பாய் எண்டு நான் கொஞ்சம் கூட நினைக்கேல்ல.”
பட்டென்று அவன் சொல்லவும் துடித்துப்போனாள் அவள். மளுக்கென்று விழிகள் நிறைந்து வழிந்தது. “கோகுல்..” என்றாள் அவன் சொன்னதை ஏற்க முடியாத துயருடன்.
“இங்கபார், உன்ன நான் வேலைக்குப் போகாத, வீட்டுக்கையே இரு, எனக்குச் சமைச்சுப் போடு, பிள்ளையைப் பெத்துப்போடு, எனக்கு அடங்கி இரு எண்டு சொல்லவே இல்ல. இங்க வந்தும் வேலை பார் எண்டுதான் சொல்லுறன். இதுக்குமேல எதை எப்பிடிச் சொல்லி உனக்கு விளங்கப்படுத்திறது எண்டு எனக்குத் தெரியேல்ல. உன்னால முடிஞ்சா இங்க வா. இல்லையா அங்கேயே இரு. உன் ஒருத்திக்காகக் கிடைச்ச நல்ல சந்தர்ப்பத்தை என்னால தூக்கி எறியேலாது!” என்றுவிட்டு இன்றும் அவனே அழைப்பைத் துண்டித்தான்.
அப்படியே அமர்ந்துவிட்டாள் பிரியந்தினி. அவளைச் சுயநலவாதி என்றுவிட்டானே. நினைக்க நினைக்க நெஞ்சு துடித்தது.
விசயம் அறிந்த நாகராஜன் ஜெயராணி தம்பதியினருக்கு மருமகளைக் குறை சொல்ல முடியவில்லை. திருமணத்தின்போதே வேலையை விடவோ மாற்றவோ மாட்டேன் என்று உறுதியாகச் சொன்னவள் அவள். அப்படியிருக்கையில் அவளின் முடிவில் தவறி
ல்லை என்றுதான் நினைத்தனர்.

