அதே நேரம், உனக்குக் கிடைத்த வளமான எதிர்காலத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அவளிடம் போ என்று மகனிடம் சொல்லவும் மனம் வரமாட்டேன் என்றது. எல்லோரும் ஓடி ஓடி உழைப்பது இந்தக் காசுக்காகத்தானே. பாமினியின் திருமணம் வேறு பெரும் செலவொன்றை விழுங்கக் காத்திருக்கிறதே. மருமகளிடம் பேசிப்பார்ப்போம் என்று அவளுக்கு அழைத்து, கோகுலன் சொன்னவற்றையே அவரின் வார்த்தைகளாக மெல்ல எடுத்துரைத்தார் ஜெயராணி.
“உங்கள் ரெண்டுபேரின்ர பக்கமும் நியாயம் இருக்கம்மா. நான் அதைப்பற்றிக் கதைக்க வரேல்ல. ஆனாம்மா, இன்னும் ரெண்டு வருசம் இப்பிடியே ஆளுக்கொரு இடமா பிரிஞ்சு இருக்கிறது சாத்தியமா எண்டு யோசிங்கோ. அதுவரைக்கும் பிள்ளை குட்டி வேண்டாமா? காலா காலத்தில பிள்ளை பிறந்தாத்தான் அந்தப் பிள்ளையை நீங்க தெம்போட இருக்கிற காலத்திலேயே வளத்து படிப்பிச்சு ஆளாக்கிடலாம். எங்களுக்கும் பேரப்பிள்ளையைப் பாக்கிற ஆசை இருக்கும் தானேம்மா.”
இருக்கிற பிரச்சனைகள் போதாது என்று பேரப்பிள்ளைப் பிரச்சனையா என்று சலிப்பாயிற்று பிரியந்தினிக்கு. அதில், “அதுக்காக அவசரம் அவசரமா பிள்ளையைப் பெற ஏலாது தானே மாமி. முதல், நான் அதுக்கு மனதளவிலயும் உடம்பு அளவிலயும் தயாரா இருக்கவேணும். இப்பவே வேலைய விட்டுட்டு அங்க வா எண்டுறார் கோகுல். இதுல பிள்ளையையும் பெத்தா? இப்போதைக்கு எனக்கு அந்த எண்ணமே இல்ல மாமி.” அவள் என்னவோ தன் மனநிலையைத்தான் தெளிவாகச் சொன்னாள். இந்தளவு தூரத்துக்கு, இன்றைய காலத்துக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்திராத ஜெயராணிக்கு, அவளின் வார்த்தைகள் சுருக்கென்று தைத்தது.
“இப்போதைக்கு இல்லை எண்டா அப்ப எப்பயம்மா பெறப்போறீங்க? மனுசன் மனுசி சேர்ந்து சந்தோசமா வாழவும் இல்ல. பிள்ளையும் இப்போதைக்கு வேண்டாம் எண்டா என்னத்துக்கு இந்தக் கலியாணம் நடந்தது? இப்பிடி ஆளுக்கொரு திசைல இருக்கவா?”
“இதுல என்ர பிழை என்ன இருக்கு எண்டு இந்தக் கேள்வியை என்னட்டக் கேக்கிறீங்க மாமி?” என்று திருப்பிக் கேட்டாள் பிரியந்தினி.
அதுதானே. கொழும்பை விட்டு நகரமாட்டேன் என்று சொல்லித்தானே அவள் திருமணத்துக்கே சம்மதித்தாள். ஆக, என் மகனோடு போயிருந்து வாழ் என்று சொல்லும் உரிமை அவருக்கு இல்லை. கூடவே, பேரப்பிள்ளைக்கு ஆசைப்படவும் கூடாது. அப்படியானால், அவர் யார் அவளுக்கு? அதற்குமேல் எதுவும் பேசாமல், “சரியம்மா.” என்றுவிட்டு வைத்தாலும், அவர் மனதில், அவள் மீதான மெல்லிய விரிசல், அந்த இடத்தில் விழுந்தது.
இதையெல்லாம் தனக்குள் வைத்து மருகினாலும், கோகுலனிடம் சொல்லவில்லை. ஆனால், அவர் அவளோடு கதைக்கப் போவதை முதலே அறிந்திருந்தவன், அம்மாவின் பேச்சைக் கேட்டாவது தன் முடிவை மாற்றிக்கொண்டிருக்க மாட்டாளா என்கிற நப்பாசையோடு, அவருக்கு அழைத்து என்ன சொன்னாள் என்று விசாரித்தான்.
தன்னால் இன்னுமொரு சண்டை அவர்களுக்குள் வேண்டாம் என்று பூசி மெழுகித்தான் சொன்னார் ஜெயராணி. ஆனால், இதமான வார்த்தைகளைக் கொண்டு பேசினாலும், தன் முடிவிலும் பேச்சிலும் தெளிவாக இருப்பவள் என்று அவனுக்குத்தான் அவன் மனைவியைப் பற்றித் தெரியுமே.
கோபமேற உடனேயே அவளுக்கு அழைத்தான். “உனக்கு வேலையா நானா எண்டு வந்தா வேலைதான் முக்கியம் எண்டு எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனா, பிள்ளைக்கும் இதே பதில்தான் எண்டு இப்பதான் தெரியும்.” என்றான் குத்தலாக.
ஒருமுறை தன் விழிகளை இறுக்கி மூடித் திறந்தாள் பிரியந்தினி. நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டவளுக்குத் தலை விண் விண் என்று வலித்தது. “இது நீங்களும் நானும் சேர்ந்து எடுத்த முடிவுதான் கோகுல். இப்ப என்னை மட்டுமே குற்றவாளியாக்கிறது நியாயமில்லை.” என்றாள் சோர்ந்த குரலில்.
“ரெண்டுபேரும் சேர்ந்துதான் எடுத்தோம். நீ இங்க வந்தா இன்னும் தள்ளிப்போடவேண்டிய அவசியம் இல்லையே. இப்ப தள்ளிப்போடுறதுக்குக் காரணம் நீ மட்டும் தான்.” என்று நின்றான் அவன்.
அதற்குமேல் வாதாடப் போகவில்லை அவள். வேலையை விட்டுவிட்டுக் காலிக்குப் போகிறவரைக்கும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு வரவே போவதில்லை. அது தெரிந்தபின் வாதாடுவதில் அர்த்தமில்லை.
அந்த வாரம், அவன் முல்லைத்தீவுக்கும் வரவில்லை, கொழும்புக்கும் வரவில்லை. எதிர்பார்த்து ஏமாந்துபோனவளுக்கு அழுகைதான் வந்தது. அழைத்து, ஏன் வரவில்லை என்று கேட்கவும் முடியவில்லை. அவளாக அவனைத் தேடிப்போகவும் தயங்கினாள். இவ்வளவு காலமும் அப்படி அவள் போனதில்லை. அதற்கான சந்தர்ப்பத்தை அவன் தந்ததில்லை. அதுதான் மெய். அரைநாள் கிடைத்தால் கூட அவளிடம் ஓடி வந்துவிடுவான். இப்போது போக, அதற்கும் என்ன சொல்லுவான் என்று தெரியாது.
ஒருமுறை அவளிடம் சொல்லாமல் அவன் முல்லைத்தீவுக்கு வந்தபோது, அவனைத் தனியே சந்தித்தார் அவளுடைய தந்தை கஜேந்திரன். முகத்தில் இறுக்கத்துடன் அவரை ஏறிட்டான் கோகுலன். அதுவே, அவரின் வாயைக் கட்டிப்போட முயன்றது. இது தன் மகளின் வாழ்க்கை. பயந்தோ ஒதுங்கியோ போக முடியாது என்று துணிவைத் திரட்டிக்கொண்டு பேசினார்.
“அவவும் ஆசையா படிச்சு தேடின வேலை தம்பி. என்னைவிட உங்கட வேலைகளைப் பற்றி உங்களுக்குத்தான் கூடுதலா தெரியும். இப்ப இருக்கிற பொசிஷனுக்கு வாறதுக்குப் பிள்ளை கடுமையா உழைச்சவா. ‘அங்க வேலை செய்ற ஆம்பிளைகள் நூறு விகிதம் உழைச்சா நாங்க இருநூறு விகிதம் உழைக்கவேணும் அப்பா. அப்பதான் முன்னுக்கு வரலாம்.’ எண்டு நெடுகச்(எப்பவும்) சொல்லுவா. அதாலதான் அவவுக்கு அத விட்டுட்டு வர முடியேல்ல.” என்று, தன்மையாக மகளின்
மனதை விளக்கினார் தகப்பன்.

