“பரவாயில்ல. நீ பேப்பர் போடு. ஏதும் பே பண்ணவேணும் எண்டு சொன்னாலும் அத நான் குடுக்கிறன். ஆனா, நீ இங்க வா, பிளீஸ்.” என்றான் அவன் கெஞ்சலாக.
எவ்வளவு இலகுவாகப் பேப்பர் போடு என்கிறான். அதை ஜீரணிக்க மிகவுமே சிரமப்பட்டாள் பிரியந்தினி. பேசினால் நிச்சயம் வார்த்தைகள் தடிக்கும் என்று தெரிந்து பதில் சொல்லாமல் அமைதி காத்தாள்.
அதிலேயே அவனுக்கு அவளின் மறுப்புத் தெளிவாகத் தெரிந்தது. அதில், “வா யதி!” என்றான் அழுத்தி. “உன்னைப்பற்றியோ உன்ர வேலையப் பற்றியோ நான் யோசிக்காம கதைக்க இல்ல யதி. இங்க வந்தும் நீ சும்மா இருக்கப் போறேல்ல. என்ர ஒபீஸ்லேயே வேல கிடைக்கும். என்ன, சம்பளம் கொஞ்சம் குறைவா இருக்கும். இந்த அக்ரிமெண்ட்ல நான் சைன் பண்ணினா இப்ப எங்க ரெண்டுபேருக்கும் வாற சம்பளத்தை விடக் கூடுதலாவே எனக்கு வரும். அது எவ்வளவு பெரிய விசயம் சொல்லு? நாளைக்கு பேபி எண்டு வந்து நீ வீட்டில இருக்கேக்க கூட எங்கட வாழ்க்கை எந்த இடத்திலயும் பாதிக்காது. தரம் குறையாது. உன்ர வேலைய விடுறதைத் தவிர மற்ற எந்தப் பக்கத்தால யோசிச்சாலும் எங்களுக்கு இது நல்ல சொயிஸ் எண்டுதான் நான் சொல்லுவன்.” என்றான் அவன்.
அவளின் வேலையை அவன் வெறும் வேலையாக மாத்திரமே பார்க்கிறான். ஆனால், அவளுக்கு? அது அவளின் விடா முயற்சி. அந்த முயற்சியினால் உண்டான முன்னேற்றம். அவளின் வாழ்க்கையில் அவளாகச் சாதித்த ஒன்று. அவளைத் தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக உணரவும், சுயமாக வாழ்கிறேன் என்று சந்தோசம் கொள்ளவும், தலை நிமிர்ந்து நடக்கவும் வைத்தது. இன்று வரையிலும், என் பெற்றவர்களுக்கும் என் தம்பிக்கும் என் அக்காவுக்கும் எல்லாம் நான் செய்திருக்கிறேன் என்கிற நிறைவையும், என் திருமணத்துக்கான செலவை நானே பார்த்தேன் என்கிற பெரும் சந்தோசத்தையும் தருவது. அப்படியான வேலையை விட்டுவிட்டுப் போவது என்றால்? பதில் சொல்ல முடியாமல், தெரியாமல் நின்றாள் அவள்.
அவனுக்கோ அவளின் தொடர் மௌனம் பிடிக்கவில்லை. அவனும் என்ன வேண்டுமென்றா செய்கிறான். வேறு வழி இல்லாமல் தானே என்கிற கோபத்தை உண்டாக்கியது.
“எங்களுக்குக் கலியாணம் ஆகி ஐஞ்சு மாதமாச்சு. ஆனா, என்ன வாழ்க்கை வாழுறோம் எண்டு சொல்லு? நீ அங்க. நான் இங்க. விழுந்தடிச்சு உன்னட்ட ஓடிவந்து இரவுல மட்டும் தங்கிப்போட்டு விடியக்காலம திரும்ப ஓடிவாறது சிலநேரங்கள்ல வெறுத்துப்போகுது யதி. நீயாவது அங்கேயே இருக்கிறாய். எனக்கு இங்கயும் அங்கேயும் எண்டு ஒரே அலைச்சல். ஒழுங்கான நித்திரை இல்ல, ஒழுங்கான ஓய்வு இல்ல. சில நேரம் மனமே விட்டுப்போகுது. இவ்வளவு நாளும் நானும் கொழும்பில ட்ரை பண்ணாம இல்லையே. அது உனக்கும் தெரியும். இது நல்ல ஓபர் எண்டுறபடியாத்தான் உன்ன இங்க வரச்சொல்லிக் கேக்கிறன்.” என்று தன்னால் முடிந்தவரைக்கும் அவளுக்கு விளக்கினான். “இவ்வளவு காலமும் தனியா எப்பிடி வாழ்ந்தனான் எண்டு தெரியவே இல்ல. இப்ப எல்லாம் நீ இல்லாம எரிச்சலும் சினமும் தான் வருது. எனக்கு நீ என்னோடயே பக்கத்திலேயே வேணும்.” என்று தன் மனதையும் சேர்த்துச் சொன்னான்.
“எனக்கு விளங்குது கோகுல். உங்களை நான் பிழை சொல்ல இல்ல. என்னால வேலைய விடேலாது எண்டுதான் சொல்லுறன். பேப்பர் போட்டாலும் என்ன நடக்கும் எண்டு சொல்லத் தெரியேல்ல. கோர்ட் கேஸ் எண்டு போனா என்ர கரியரே பாலா போயிடும். உங்களிட்ட நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தம்பிய பாக்கிற கடமை எனக்கும் இருக்கு. துருவனுக்கும் ஏதாவது செய்ய வேணும். அதுக்கு எனக்கு என்ர சம்பளம் முக்கியம்.” என்று தன்னை விளக்கினாள் அவள்.
“என்ன நீ? அதையெல்லாம் நான் செய்ய மாட்டனா? நீ வேற நான் வேறயா? நீ இங்க வா! நீ செய்ய நினைக்கிற எல்லாத்தையும் நான் செய்றன்.”
அவளுக்கோ அதில் உடன்பாடில்லை. “நான் இருக்கேக்க நீங்க ஏன் செய்யவேணும்? அதைவிட, நல்ல ஒபீஸ், நல்ல வேல, நல்ல சம்பளம் எண்டு எனக்கும் இங்க இருந்து வெளில போக விருப்பம் இல்லை கோகுல். இப்ப நீங்க இங்க வாங்கோ. பாமினிக்கு எப்பிடியும் ரெண்டு வருசம் கழிச்சுத்தான் மாமி கலியாணத்துக்குப் பாப்பன் எண்டு சொன்னவா. அதுக்கிடையில வேற நல்ல இடத்தில வேல கிடை
க்கும் தானே.”

