என்ன சொன்னாலும் தன் முடிவிலேயே நின்றவளின் பேச்சுச் சினமூட்டியது அவனுக்கு. “எரிச்சல கிளப்பாத யதி. அப்பிடிக் கிடைக்கும் எண்டுறது எங்கட நம்பிக்கை. கிடைக்குமா தெரியாது. ஆனா, இங்க எனக்குக் கிடைச்சிருக்கு. கிடைக்குமா எண்டு தெரியாத ஒண்டுக்காகக் கிடைச்சிருக்கிற இந்தச் சான்ஸ விடச் சொல்லுறியா? பாமினிக்கும் அம்மா நல்ல இடம் வந்தா இப்பவே பாக்கலாம் எண்டுதான் சொன்னவா. எனக்கு வீடு வாங்கோணும். பேபி வந்திட்டா நீ வேலைக்குப் போகேலாது. சும்மா வறட்டுப் பிடிவாதம் பிடிக்காம அதுக்கெல்லாம் இந்தச் சம்பளம் எவ்வளவு பெரிய உதவியா இருக்கும் எண்டு யோசி.” என்றான் அவன் தன் முழுப் பொறுமையையும் தொலைத்துவிட்ட குரலில்.
அவன் சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனாலும், அவளால் அவளின் வேலையை விடமுடியாது. அது அவளின் சொத்து. அவளின் தன்னம்பிக்கை. அவளின் அடையாளம். அவளை அவளாக அவளுக்கே அடையாளம் காட்டுவது. அதை எப்படி உதறுவாள்? அங்குப் போனாலும் அது அவன் வாங்கித் தரப்போகிற வேலை. சம்பளம் பாதியாகிவிடும். அவளின் வீட்டுக்குச் செய்வதற்கு அவனை எதிர்பார்க்க வேண்டும். கோபத்தில் ஏதாவது ஒரு வார்த்தை குத்துவதுபோல் அவன் சொல்லிவிட்டால் அவளால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது. இதையெல்லாம் எப்படி அவனிடம் விளக்குவது என்று தெரியாமல் நின்றாள் அவள்.
“பொறுமையைச் சோதிக்காத யதி. பேசாம போய்ப் பேப்பரை போடு! நீ சொல்லுற மாதிரி அவ்வளவு ஈஸியா எல்லாம் அவே கோர்ட் கேஸ் எண்டு போகேலாது. போனாலும் வேக்கர்ஸ் பக்கம் தான் எல்லாம் வெல்லும். அப்பிடி ஒரு பிரச்சனை வந்தா என்ன எண்டு நான் பாப்பன். நீ வா. வா என்ன வாறாய்! அவ்வளவுதான்!” என்று, கணவனாக அவளின் முடிவை அவன் எடுத்தான்.
பேச்சு கனத்த பக்கமாகத் திரும்புவதை உணர்ந்து அவளின் நெஞ்சு படபடத்தது. அவளைப்பற்றி, வேலை மீதான அவளின் பற்றுதலைப்பற்றி யோசிக்காமல் சம்பளம் குறைவு என்றாலும் பரவாயில்லை வா என்று கூப்பிடுகிறான். இதையே அவள் சொன்னால் அவன் செய்வானா? பாமினியின் திருமணத்துக்கு அவளும் சேர்ந்து லோன் போட்டுத் தருகிறேன் என்றால் சம்மதிப்பானா? நிச்சயம் சண்டை வரப்போகிறது என்று தெரிந்தாலும் அதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை அவளால்.
அந்தப்பக்கம் சற்றுநேரம் சத்தமே இல்ல.
“இப்ப என்ன? என்னை வேலையை விட்டுட்டு உன்னட்ட வரச் சொல்லுறியா? அது என்னத்துக்கு? பாதி நாள் லீவு கிடைச்சாலும் நாய் மாதிரி ஓடி வாறவன் தானே இவன். நான் இல்லாம இருக்கமாட்டான். அதால என்ன சொன்னாலும் கேப்பான் எண்டு நினைச்சியா? நீ வரவே வேணாம். அங்கேயே இரு! நானும் இங்கயே இருக்கிறன்.” என்றவன் பட்டென்று அழைப்பைத் துண்டித்தான்.
தடித்து விழுந்த வார்த்தைகளைக் கேட்டுத் துடித்துப்போனாள் அவள். விழியோரம் இரண்டு நீர் மணிகள் உருண்டு விழுந்தன. என்றுமே அவன் அவளைப் புரிந்துகொண்டதே இல்லை. அவன் சொல்கிற ஒன்றுக்கு மாறாக நடந்தால் போதும். அவள் சொல்வதில் இருக்கிற சரி பிழைகளை ஆராயாமலேயே வார்த்தைகளால் வதைத்துவிடுகிறவனை என்
ன செய்வது?

