கையால் வாயைப் பொத்திக்கொண்டு அப்படியே நின்றுவிட்டான் சகாயன். அந்த ஆகாயத்தையே வசப்படுத்திவிட்டது போல் ஒரு உற்சாகம். முகம் தானாக மலர்ந்து சிரித்தது. அவள் போன திசையில் திரும்பிப் பார்த்தான். அவள் இருந்த சுவடே இல்லை.
‘இவள! பதில் சொன்னதே ரெண்டு வருசம் கழிச்சு. இதுல மின்னலே மாதிரி ஓடிட்டாள்!’ அடுத்த நிமிடமே பைக்கை வளைத்துத் திருப்பித் துரத்திச் சென்று, பைக்கை குறுக்கே விட்டு அவளை நிறுத்தினான்.
ஆரபி இதை எதிர்பார்க்கவில்லை. அவசரமாக பிரேக்கை அழுத்தி நிறுத்திவிட்டு நிமிர்ந்து, “என்ன வேலை பாக்கிறீங்க? நீங்க காயப்பட்டு நிக்கிறது காணாது எண்டு என்னையும் காயப்பட்ட வைக்கப் போறீங்களா?” என்று படபடத்தாள்.
அவள் கோபத்தைப் பொருட்டு கொள்ளும் நிலையில் அவன் இல்லை. “இப்ப நீ என்ன சொல்லிப்போட்டு வந்தனி?” என்றான்.
ஆரபிக்குப் பேச்சு மூச்செல்லாம் நின்று போயிற்று. “ஒண்டும் சொல்லேல்லையே!” என்றாள் முகத்தைத் திருப்பிக்கொண்டு. ஆனால், பார்வையின் தடுமாற்றமும் முகத்தின் சிவப்பும் என்ன சொல்லிவிட்டு வந்தாள் என்று சொல்லிற்று.
“ஒண்டும் சொல்லேல்லையா?”
சிரித்துச் சீண்டும் அவன் குரலே அவளை உதட்டைப் பற்ற வைத்தது.
“ஆரு!”
“…”
“நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம் எண்டு கேட்டனான்.”
கடவுளே! இவனிடம் மனத்தைச் சொல்லிவிட்டு அவள் படுகிற பாடு!
“பிடிச்சிருக்கா?” இலேசாக இவள் பக்கமாகச் சரிந்து இரகசியம்போல் வினவியவனைக் கண்டு படபடத்துப்போனாள் ஆரபி.
சற்று முன் வாடி வதங்கிப் பார்த்த முகமா இது என்றிருந்தது அவளுக்கு. அந்தளவில் விளக்குப் போட்டதுபோல் மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான் அவன். அவளின் ஒற்றைச் சம்மதம் அவனை இந்தளவு மகிழ்ச்சியில் ஆழ்த்துமா? நம்ப முடியாமல் அவனையே பார்த்தாள். அவன் படக்கென்று கண்ணைச் சிமிட்டினான்?
ஒரு நொடி நம்ப முடியாமல் விழிகளை விரித்தவள் வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டு, “நான் போகோணும்.” என்றாள்.
“அதானே. பாத்து இவ்வளவு நேரமாகியும் எங்கயடா உன்ர வாயில இருந்து இந்த வசனத்தைக் காணேல்ல எண்டு நினச்சு முடிக்க முதலே சொல்லிட்டாய்.” என்றான் அவன் கேலி இழையோடும் குரலில்.
வேறு என்ன செய்ய வேண்டுமாம்? ஊரே பார்க்க வீதியில் நின்று உரையாடி, இரு வீட்டிலும் மாட்டுப்பட வேண்டுமாமா அவனுக்கு? பொய்யாக அவனை முறைத்தாள்.
“அப்ப ஆரு இனி என்ர பைக்ல வருவா?” உற்சாகச் சிரிப்புடன் வினவியபடி பைக்கை உறுமவிட்டான்.
அவளுக்குப் பயம் பிடித்துக்கொண்டது. இவன் காதலைச் சொன்ன அன்றே வீட்டில் மாட்டிவிடப் போகிறான் என்று புரிந்துவிட, “என்ன செய்றீங்க ரோட்டில நிண்டு?” என்று அதட்டினாள்.
அவனுக்கும் தான் ஒரு நிலையில் இல்லை என்று புரிந்தது. வாயைக் குவித்துக் காற்றை ஊதித் தன் துள்ளலான மனநிலையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றான். முடியவே இல்லை.
“சந்தோசமா இருக்கு ஆரு. என்ன என்னவோ எல்லாம் செய்யோணும் மாதிரி இருக்கு. உன்னோட தனியா கதைக்கோணும், உன்னோட ஊரைச் சுத்தோணும் எண்டு நிறைய ஆசைகள் வருது…” என்று அவன் சொல்லிக்கொண்டு போக அவள் அரண்டுவிட்டாள்.
“நான் போறன்.” என்றவள் திரும்பவும் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டாள். இந்த முறை அவன் அவளைத் துரத்திக்கொண்டு போகவில்லை. அவள் தந்துவிட்டுப் போன அந்த அழகான நொடிகளை அனுபவித்து உள்வாங்குகிறவனாகச் சிரித்தபடி அந்த இடத்திலேயே நின்றிருந்தான்.
அவள் முகத்தில் வெட்கச் சிரிப்பு. உள்ளமெல்லாம் ஒரு பூரிப்பு. அவளுக்காக இந்தளவில் தவிக்கிறானா? அவளின் ஒற்றைச் சம்மதம் அவனைப் போன்ற ஒரு ஆண்மகனை இத்தனை மகிழ்ச்சியில் ஆழ்த்துமா? அவளால் நம்பவே முடியவில்லை.
எண்ணியெண்ணி மகிழ்ந்தாள். என்னவோ அவன் உலகில் அவள் ராணியாகிவிட்ட அந்த உணர்வு மிகவும் பிடித்திருந்தது. அவள் பயணித்துக்கொண்டிருந்தது என்னவோ ஸ்கூட்டியில். ஆனால், வானில் பறக்கும் உணர்வு.
அவன் பார்த்தது, சிரித்தது, பிடித்திருக்கிறதா என்று கேட்டது என்று மனத்தில் மாறி மாறி மின்னிக்கொண்டே இருந்தது. அதுவும் பிடித்திருக்கிறதா என்று அவன் கேட்கிற ஒற்றை வார்த்தை போதும் அவளை மொத்தமாக வீழ்த்த! அந்தளவில் மனத்தை மயக்கிவிடுவான்.
வீட்டுக்குச் செல்லவே பயந்தாள். அந்தளவில் அவளே அடக்க முயன்றாலும் முடியாமல் அவள் முகம் சிரித்துக்கொண்டே இருந்தது. தன் கன்னக் கதுப்புகள் எல்லாம் சூடாகிச் சிவந்திருப்பதைக் கண்ணாடி பாராமலேயே உணர்ந்தாள். நேராகக் கோயிலுக்குச் சென்று அம்மனின் முன் நின்றாள்.
இரு வீட்டிலும் பெரிய மறுப்புகள் வரும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஆனாலும், எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் அவன் கரம் சேர்ந்துவிட வேண்டும் என்று அம்மனை மனதார வணங்கினாள். கோயிலை விட்டு வெளியே வருகையில் அழைத்தான் அவன்.
கீழுதட்டைப் பற்றியபடி அவன் பெயரையே பார்த்தாள். நெஞ்சில் ஒரு படபடப்பு. அழைப்பை ஏற்பதா இல்லையா என்று ஒரு தடுமாற்றம்.
சற்று முன்னர்தான் மனத்தை வெளிப்படுத்தினாள். அந்த நொடியிலிருந்து அவள் மீது திணற திணற நேசத்தைக் காட்டிக்கொண்டிருந்தான் அவன். இதற்குள் மறுபடியும் அழைத்தான் அவன்.
மெல்ல அழைப்பை ஏற்று, “ஹலோ!” என்றவளுக்குக் குரல் எழும்பவே இல்லை. வெட்கமா, கூச்சமா, என்ன பேசப்போகிறான் என்கிற தடுமாற்றமா தெரியவில்லை. இயல்பாக இருக்க மிகவும் தடுமாறினாள்.
“ம்ஹூம்?”
‘டேய்!’ இவள் உதட்டில் தானாய் முறுவல் அரும்பிற்று. இவன் இன்னுமே ஒரு நிலைக்கு வரவில்லை என்று புரிந்தது.
“ஆரு!”
“ம்!”
“என்ன செய்றாய்?”
“கோயிலுக்கு வந்தனான்.”
“ஏய்! சொல்லியிருக்கலாமே. நானும் வந்திருப்பன்.” என்றான் சட்டென்று தொற்றிக்கொண்ட உற்சாகத்தோடு.
‘நல்லகாலம் சொல்லேல்ல!’ என்று ஆசுவாசமாகியபடி, “அது வாற வழிதானே. அதான்.” என்றாள்.
“சரி சொல்லு, என்ன கேட்டனி அம்மாளாச்சிட்ட?” அந்த வழியில் அம்மன் கோவில் மட்டுமே இருப்பதில் வினவினான்.
எந்தப் பிரச்சனைகளும் இல்லாது தாம் இருவரும் சேர்ந்துவிட வேண்டும் என்று வேண்டினேன் என்று சொல்ல வெட்கம் தடுத்தது. அவன் இருக்கிற மனநிலைக்கு அவளை ஓட்டியே தள்ளிவிடுவான்.
அது ஒரு சின்ன கோயில். சற்றுத் தள்ளி ஒரு மரம் இருந்தது. அதன் கீழே வந்து நின்றுகொண்டு என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள்
“இவனுக்கு ஆராவது இன்னும் நல்லா நாலு போடட்டும் எண்டு வேண்டினியோ?” சிரிக்கும் குரலில் அவளைச் சீண்டிப் பேசத் தூண்டினான்.
“என்ன நீங்க?” என்றாள் உடனேயே அவள்.
“அப்ப என்ன எண்டு சொல்லன்.”
“இல்ல. பயமா இருக்கு.”

