என் பிரியமானவளே 13 – 2

அதற்குமேல் முடியாமல் அவள் மனது அமைதியிழந்து தவிக்கத் தொடங்கியது. அங்கே இருக்க முடியவில்லை. முள்ளின்மேல் அமர்ந்திருப்பது போல் ஆகிற்று. சற்று நேரம் இருந்துவிட்டுச் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.

 

வாசலுக்கு வந்து செருப்பை மாட்டியவளிடம், “இந்தக் காலத்தில வேல, சம்பளம் எல்லாம் முக்கியம் தான். அதுவும் பொம்பிளைப் பிள்ளைகள் சொந்தக் காலுல நிக்கிறது எனக்கும் சந்தோசம் தான். ஆனா, வாழ்க்கையைச் சிக்கலாக்கி, சந்தோசத்தை இழந்து, வேலையையும் காசையும் வச்சுக்கொண்டு என்ன செய்யப்போறீங்க எண்டு எனக்கு விளங்க இல்ல. ஆரம்பம் தெளிவும் நிமிர்வும் உள்ள பிள்ளை, கெட்டிக்காரி எண்டு நினைச்சன். ஆனா, இந்தளவுக்கு வரட்டுப் பிடிவாதம் இருக்கும் எண்டு நினைக்க இல்ல. இப்ப யோசிச்சுப் பாத்தா, கலியாணம் செய்து வைக்கிறன் எண்டு அவசரப்பட்டுத் தம்பின்ர சந்தோசத்தைக் கெடுத்துப்போட்டனோ எண்டு இருக்கு எனக்கு.” என்றார் ஜெயராணி.

 

துடித்து நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் பிரியந்தினி. அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுருக்கென்று அவள் இதயத்தைத் தைத்தது. தொண்டையில் அடைத்துக்கொண்டதைப் பெரும் பாடுபட்டு விழுங்கிக்கொண்டு, “வாறன் மாமி!” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.

 

முகமெல்லாம் வாடி, வதங்கி, கண்ணீரை உள்ளுக்கு இழுத்தபடி வீடு வந்த மகளைப் பார்த்த பெற்றவர்களுக்கு, நெஞ்சம் கலங்கிப் போயிற்று. ஜெயராணி சொன்னதை அறிந்தவர்களுக்குக் கோபம் வந்தது. மருமகனின் பேச்சில் நியாயம் உண்டுதான். அதற்கென்று அவர் விட்ட வார்த்தைகளில் எந்த நியாயமும் இல்லையே.

 

நீதானே திருமணத்தோடு கொழும்புக்கு வருவதாகச் சொன்னாய். சொன்னதைச் செய் என்று கடின வார்த்தைகளை அவர்களும் மருமகனிடம் வீசினால் என்ன ஆகும்? எதையுமே யோசிக்க மாட்டார்களா? இப்படித்தான் வீடு தேடிப்போன பெண்ணின் மனதை நோகடிப்பார்களா என்று மனம் கொதித்துப் போயிற்று. என்ன, கோபதாபங்களைக் கொட்டி உடைத்துக்கொண்டு போவதற்கு இது ஒன்றும் சாதாரண உறவில்லையே. மகளின் வாழ்க்கை ஆயிற்றே.

 

அதில், தம் மனதை மறைத்துக்கொண்டு, “பெத்த மகன் கலியாணம் ஆகியும் தனியா இருக்கிறானே எண்டுற கோபத்தில அவா ஏதும் சொல்லியிருப்பா மா. அதை நீ பெருசா எடுக்காத!” என்று மடியில் கிடந்தவளின் தலையை வருடியபடி சொன்னார், அற்புதாம்பிகை

 

பிரியந்தினி ஒன்றுமே சொல்லவில்லை. அவளுக்கு எதையுமே சிந்திக்க முடியவில்லை. தலை பாராங்கல்லைப் போன்று கனத்தது. கண்கள் இரண்டும் எரிந்தன. உடலும் மனதும் பலவீனப்பட்டுப் போயிருந்தது.

 

சற்று நேரம் மௌனத்தில் கழிய, “நீயும் கொஞ்சம் யோசி பிள்ளை. நான் முதலே சொன்னேன் தானே எண்டு நியாயம் பேசுறதை விட, வாழ்க்கையைச் சந்தோசமா வாழவேணும். அவர் ஒண்டும் நீ வேலை செய்றது பிடிக்காம சொல்ல இல்லை தானே? அவரின்ர இடத்தில இருந்து யோசிக்கேக்க அவர் சொல்லுறது சரியாத்தானேம்மா இருக்கு. ஒரு குழந்தை பிறந்தாலும் நீ எப்பிடியும் ஒரு வருசம் பிரேக் எடுக்கவேண்டித்தான் வரும். அதுக்கு இப்பவே மாறிப் போகலாம். யோசி, சில நேரங்கள்ல இறங்கிப் போறது கூடப் புத்திசாலித்தனம் தான்.” என்றவர் அவளை எதற்கும் வற்புறுத்தவில்லை.

 

ஒரு முடிவை, மனம் ஒப்பாமல் சுற்றியிருப்பவர்களின் தூண்டுதலில் எடுப்பதைக் காட்டிலும், அவளாகச் சிந்தித்து, அலசி, ஆராய்ந்து எடுக்கட்டும் என்று நினைத்தார் அற்புதாம்பிகை. அதுதானே நிரந்தரத் தன்மையோடும் இருக்கும்.

 

பெரியவர்கள் எதிர்பார்த்தது போல் அதன்பிறகும் எந்த மாற்றங்களும் நிகழவில்லை. நான் என்ன பிழை செய்தேன் என்கிற கேள்வி பிரியந்தினியைப் பிடித்து ஆட்டியது.

 

முல்லைத்தீவுக்குப் போவதையும் தவிர்த்தாள். கேட்பவர்களுக்கு வேலையைக் காரணம் காட்டினாள். அன்னை மடிக்கு மனம் ஏங்கியதுதான். ஆனால், அங்குப் போனால் பார்ப்பவர்கள் எல்லாம், ‘மனுசனோட கதைச்சியா? என்ன சொன்னார், நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய்’ என்பதைத்தான் சுழற்றி சுழற்றிக் கேட்பார்கள். அவர்களுக்கு அவளின் வாழ்க்கை ஒரு புதினம். அவளுக்கோ வலி.

 

ஆறுமாதங்கள் எப்படி என்றில்லாமல் ஓடிப்போனது. இவளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் அசையாமல் இப்படியே இருப்பாள் என்று, பிரியந்தினியின் மீதான கோபம் ஜெயராணியின் மனதில் ஆழமாக வேரூன்றிற்று. ‘கண்டறியாத பொம்பிளையைப் பாத்துக் கட்டி வச்சிருக்கிறன்.’ என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டார்.

 

இரு வீட்டினருக்கும் மற்றவர் மீது கண்ணுக்குத் தெரியாத கோபமும் அதிருப்தியும் உண்டாயிற்று. வார்த்தைகளை விடவில்லை. சண்டையிட்டுக்கொள்ளவில்லை. ஆனாலும், விரிசல்

பெரிதாக விழுந்து போனது.

 

error: Alert: Content selection is disabled!!