நாதனின் கடையில் இருந்து வீட்டுக்குச் சென்றவன், தாயிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. பேச மனம் வரவும் இல்லை.
அப்பாவின் நினைவில் இருக்கும் வீடு என்பதாலும், தங்கைக்காகவும் தான் அம்மா அப்படிச் சொன்னார் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாலும், தாய் தன் மேல் நம்பிக்கை வைக்கவில்லையே என்பது அவன் மனதை ரணமாக்கி விட்டிருந்தது.
அமைதியாக இரவு உணவை உண்டு கொண்டிருந்தவனின் தட்டில் குறைந்தவைகளைப் பார்த்து இட்டவாறே நின்ற இராசமணிக்கு அவன் கோபம் புரிந்தது.
“அந்தக் கடையை எடுக்கப் போகிறாயா?” என்று மெல்லக் கேட்டார்.
அவரின் கேள்விக்கு மறுமொழி சொல்லாது உண்பதில் கவனம் செலுத்தினான் ரஞ்சன்.
தாயையும் தமையனையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பதாக உணவை உண்டாள் நித்யா.
சற்று நேரம் அமைதியில் கழிய, “நான் வீட்டை அடவு வைக்கச் சம்மதிக்காததில் உனக்கு என் மேல் கோபம் போல. ஆனால் ரஞ்சன், மதியம் சொன்னது போல உங்கள் அப்பாவோடான நம் வாழ்க்கைக்கு அடையாளமாக நம்மிடம் இருப்பது இது ஒன்றுதான். அதோடு, இப்போதே நம்மை நம் சொந்தங்கள் யாரும் மதிப்பதில்லை. இதில் இந்த வீட்டுக்கும் ஒன்று என்றால், இன்னுமின்னும் நம்மைக் கேவலப் படுத்துவார்கள்.” என்றவர், அப்போதும் அமைதியாகவே உணவை உண்டபோதிலும் இறுகிப் போன மகனது முகத்தைப் பார்த்துவிட்டுப் பேச்சை நிறுத்தினார்.
மீண்டும் அங்கே ஒருவித நிசப்தம்!
ஒரு நெடிய மூச்சினை இழுத்து விட்டுவிட்டுத் தொடர்ந்தார் அவர். “உன் அப்பா நம்மை விட்டுப்போய், நீ படிக்க என்று யாழ்ப்பாணம் சென்றபோது, காசுக்குத் தட்டுப்பாடு வந்தபோது கூட, பத்து வீட்டுக்குப் பத்துப் பாத்திரம் தேய்க்க வேலைக்குப் போவோமா என்றுதான் யோசித்தேனே தவிர, இந்த வீட்டை எதுவும் செய்ய நான் யோசிக்கவே இல்லை. என்னால் அப்படி யோசிக்கவும் முடியாது.” என்றவரின் விழிகள் ஏக்கத்தோடும் வேதனையோடும் அந்த வீட்டை அளந்தது.
கணவனின் நினைவுகளைச் சுமந்தனவோ அவரது விழிகள்.
நீர் திரளப் பார்த்த விழிகளைப் பெரும் பாடு பட்டு அடக்கிக் கொண்டு தொடர்ந்தார். “இந்த வீட்டில் நிறைந்திருப்பது உன் அப்பாவின் மூச்சுக் காற்றுடா. ஒவ்வொரு இடமும் அவரின் நினைவுகளைச் சுமந்து இருக்கிறது. இதற்கு ஒன்று என்றால் என்னால் தாங்கவே முடியாது” என்று குரலடைக்கச் சொன்னவர் எழுந்து சென்றுவிட்டார்.
செல்லும் தாயையே திரும்பிப் பார்த்தவனுக்கும் நெஞ்சை அடைத்தது. ஆனால், அவரைப் போலத்தானே அவனுக்கும் அது அவனது அப்பாவின் வீடு. அதை அவன் விளையாட்டுப் பொருளாக்குவானா என்று ஏன் அவர் யோசிக்கவில்லை? மகன் மீட்டுத் தருவான் என்று ஏன் நம்பவில்லை? மனம் கசந்தது அவனுக்கு. பசியும் பறந்துவிட கைகழுவ அவன் எழவும், தாயார் அங்கே மீண்டும் வரவும் சரியாக இருந்தது.
“இந்தா, வங்கிப் புத்தகம். இதில் இருக்கும் காசை என்ன வேண்டுமானாலும் செய். இன்னும் வேண்டும் என்றால் சொல்லு, என்னிடமும் நித்தியிடமும் மிஞ்சி இருக்கும் நகைகளையும் தருகிறேன். விற்றோ அடவு வைத்தோ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்.” என்றபடி வங்கிப் புத்தகத்தை நீட்டினார்.
கை கழுவிவிட்டு வந்தவன் அதை வாங்கிக் கொண்டான். பின் அவரை நிமிர்ந்து பார்த்து, “நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான். ஆனால், இதெல்லாம் என் மனதிலும் இருக்கும் என்று ஏன் உங்களால் யோசிக்க முடியாமல் போனது? என் மகனால் முடியும் என்று உங்களாலேயே நம்பமுடியவில்லையா?” என்று நிதானமாகக் கேட்டான்.
ஒருவித அதிர்ச்சியோடு அவர் அவனைப் பார்க்க, “பரவாயில்லை விடுங்கள். இந்தப் பணத்தையும் நான் கடனாகவே வாங்கிக் கொள்கிறேன். பிறகு வட்டியோடு சேர்த்துத் திருப்புகிறேன்.” என்றான் உணர்ச்சிகள் அற்ற குரலில்.
அதைக் கேட்டு விக்கித்துப் போனார் இராசமணி. தான் சொன்ன விஷயம் மகனை இந்தளவு பாதிக்கும் என்று அவரே எண்ணவில்லை. இதைவிட மேலாக வராவிட்டாலும் பரவாயில்லை, இந்த நிலையை விட்டுத் தாழ்ந்து விடக் கூடாது என்பதே அவர் எண்ணமாக இருந்தது.
அதுவரை மனம் விட்டு அவரிடம் பேசியிராத மகனின் மனதில், என்னென்ன ஆசைகள், கனவுகள் உண்டு என்பதை அவர் அதுநாள் வரை அறியவும் இல்லை. அதற்கு முயலவும் இல்லை. அதை அவன் அவரிடம் சொன்னதும் இல்லை. அப்படியிருக்க அவன் மனநிலையை அவர் எப்படி அறிவார்?
“என்னடா இப்படிச் சொல்கிறாய்? அம்மாவிடமே கடனா?” என்று அடைத்த குரலில் கேட்க, பதிலேதும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றான் ரஞ்சன்.
அடுத்தநாள் காலை, அன்று சனிக்கிழமை என்பதால் நித்யாவுக்குப் பள்ளிக்கூடம் இல்லை. ரஞ்சன் தனியாக வேலைக்குப் புறப்பட்டான்.
‘ரிபோக்’ கடையின் முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றவனின் விழிகள் அவனை அறியாது சித்ராவைத் தேடியது. சனி, ஞாயிறுகளில் சந்தானத்துடனேயே அவளும் வந்துவிடுவதுதான் அதுநாள் வரையிலான வழக்கமாக இருந்தது.
இன்றோ அவளைக் காணோம். ஏன்?
நேற்று நடந்தவைகள் அவளைப் பாதித்திருக்கலாம் என்று எண்ணியவனுக்கு, அவளால் இன்று தொல்லை இல்லை என்பதை உணர்ந்து நிம்மதியாகவும் இருந்தது.
இல்லாவிட்டால் ‘இனி உன்னை விடமாட்டேன்’ என்று சொன்னவள் என்ன வம்பை எப்போது இழுப்பாளோ என்று அவனல்லவா எப்போதும் கவனமாக இருக்கவேண்டும்.
அன்று மட்டுமல்ல அடுத்த நாளும் அவளின் வரவு இன்றியே அந்தக் கடையின் பொழுது அமைதியாகக் கழிந்தது.
திங்கள் காலையே பரபரப்பாகிப் போனான் ரஞ்சன். கடையை வாடகைக்கு அவன் பெயரில் மாற்றுவதற்கான ஆவணங்களுடனும், வங்கிப் புத்தகத்துடனுமே வேலைக்குச் சென்றான்.
ஒன்பது மணி என்றதும் வங்கிக்குச் சென்று பணத்தை எடுத்தான். ஆறு லட்சத்துக்குக் குறைய வந்தால் மீதிப் பணத்துக்கு வண்டியை விற்று விடலாம் என்கிற எண்ணத்தில் இருந்தவனுக்கு, அங்கே ஆறு லட்சமும் இன்னும் கொஞ்ச சொச்சமும் இருந்ததில் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
வண்டியை விற்பதில் அவனுக்குக் கவலை இல்லைதான். ஆனால், அதை விற்றுவிட்டு எல்லாத் தேவைகளுக்கும் நடந்தோ ‘பஸ்’சிலோ சென்று எப்போது எதை முடிப்பது?
பணம் கையில் கிடைத்ததும், நாதனுடன் கதைத்து அடுத்தநாளே செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து, வியாழன் அன்று அவன் பெயரில் நாதனின் கடை வாடகைக்கு என்று மாற்றி எழுதப் பட்டது.
கையெழுத்துப் போட்டுவிட்டு நிமிர்ந்தவனுக்கு, அப்போதே வென்றுவிட்டதைப் போன்ற சந்தோசம்!
இனித்தான் கஷ்டமே என்பது புரிந்தாலும், என்ன வந்தாலும் அதை எதிர்கொள்ளலாம் என்கிற தெம்பும் கூடவே வந்தது.
வென்றுவிட்டேன் என்று கத்த வேண்டும் போல், வென்றுவிடுவேன் என்று எல்லோரிடமும் அடித்துச் சொல்லவேண்டும் போல் ஒருவித வேகமே எழுந்தது.
தன்னைத் தானே அடக்கிக் கொண்டான். வெளியே சாதுவாக, முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டாமல் நின்றவனின் மனதில் பலப்பல கற்பனைகள், திட்டங்கள் எல்லாம் மிக மிக வேகமாக உருவாகின.
கண்ணனும் நாதனும் சொன்ன வாழ்த்துக்களை பணிவாகவே பெற்றுக் கொண்டான்.
கடையை அவன் பெயரில் எழுதியது அவனது மதிய உணவு நேரத்தில் என்பதால், சந்தானத்துக்கும் எந்தவிதச் சந்தேகமும் தோன்றவில்லை. சொன்னது போலவே கண்ணனும், நாதனும் யாரிடமும் இந்த விசயத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இல்லை. இனியும் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டான் ரஞ்சன்.
“அதெப்படி? எப்படியும் தெரிய வரும்தானே?” என்று கண்ணன் கேட்டபோது, “இல்லை, நீங்கள் இருவரும் சொல்லாவிட்டால் தெரிய வராது. நானும் தொடர்ந்து ‘ரிபோக்’க்கு வேலைக்கு வருவேன்.” என்றவனைக் கேள்வியோடு பார்த்தார்கள் இருவரும்.
“இப்போதைக்கு என் நண்பர்களை வைத்துக் கடையை நடத்தப் போகிறேன்.” என்றான் ரஞ்சன்.
“அதெப்படி? நீ இருந்து பார்ப்பது போல் வருமா? சிறு பிள்ளைத் தனமாக எதையாவது செய்து காசை அநியாயம் ஆக்கிவிடாதே.” என்றார் நாதன், அனுபவம் உள்ள மனிதராய்.
“நிச்சயமாக அப்படி விடமாட்டேன் நாதன் அண்ணா.” உறுதியான குரலில் சொன்னவனிடம் அதற்கு மேல் அவர்கள் எதுவும் சொல்லவில்லை.
அவன் அப்படிப் பொறுப்பற்றவன் என்றும் அவர்களுக்குத் தோன்றவில்லை. தங்கள் வாயால் யாரிடமும் சொல்லமாட்டோம் என்று மட்டும் உறுதியளித்தார்கள்.
அவரது பான்சிப் பொருட்களை அகற்ற, கடையை ஒதுக்கிக் கொடுக்க என்று நிறைய வேலைகள் இருந்ததால் அடுத்த மாதத் தொடக்கத்தில் இருந்து அவனுக்கு அந்தக் கடையைத் தருவதாகச் சொல்லியிருந்தார் நாதன்.
அந்தக் கால அவகாசமும் அவனுக்குத் தேவையாகத்தான் இருந்தது. எனவே சம்மதித்தான்.
அடுத்தநாள் வெள்ளிக்கிழமை எப்போதும் போல சந்தானாம் கொடுத்த, அந்த வாரத்துக்கான வியாபாரப் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் சென்று கொண்டிருந்தவனின் மனதிலும் மூளையிலும் நிறைந்திருந்தது அவன் திறக்கப் போகும் கடையைப் பற்றிய எண்ணங்களே.
அந்த யோசனைகளுடன் சென்று கொண்டிருந்தவனில் பிழையா அல்லது அவனைக் கவனியாமல் வீதியைக் கடக்க முயன்ற அந்த வயதானவரில் பிழையா, அதை ரஞ்சன் அறியான். ஆனால் அவன் வண்டி அந்த நபரை மோதிவிட்டிருந்தது.
பதறியடித்து வண்டியை நிறுத்திவிட்டு ஓடிப்போய் விழுந்துவிட்ட அவரைத் தூக்கினான். “ஐயோ அங்கிள் சாரி. நான் உங்களைக் கவனிக்கவில்லை. எங்காவது வலிக்கிறதா?” என்று பதட்டத்தோடு கேட்டான்.
“காலில் லேசாக வலிக்கிறது. ஆனால், நான்தானப்பா உன்னைக் கவனியாமல் வந்துவிட்டேன்..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கவே மக்கள் அவர்களைச் சுற்றிச் சூழ்ந்துவிட்டனர்.
அவன் வண்டியின் முன் சில்லு ஏறியதில் அவர் காலில் இருந்து இரத்தம் வழிவதைக் கண்டுவிட்டு எல்லோரும் அவனைத் திட்டத் தொடங்க, “இல்லை. அந்தப் பிள்ளையின் மேல் தவறில்லை. என் மேல்தான் பிழை..” என்று அவர்களிடம் சொன்னவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது ரஞ்சனுக்கு.
கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பணம் பறிக்க முயலும் இந்தக் காலத்தில் அவரது நேர்மை அவன் மனதைத் தொட்டது. அதோடு அவரில் பிழையோ அவனில் பிழையோ, ஆனால் காயப்பட்டு நிற்பது அவரல்லவா.வரல்லவா.