இடையில் ஒருதடவை இறங்கி ஏறினாலும் பதினொரு மணிக்கு முன்னரே லியோன்ஸ் வந்திருந்தார்கள். அங்கே, லியோன்ஸ் சிட்டியில் மீண்டுமொருமுறை வோஷ் ரூம் சென்றுவிட்டு, அடுத்த அரைமணித்தியாலத்தில் ‘பட்டன் ரொக் டாம் ட்ரெயில் ஹெட்’ வந்து சேர்ந்து, கிடைத்த இடத்தில் வாகனத்தையும் நிறுத்திவிட்டார்கள்.
“இண்டைக்கு நல்ல வெயில் கொளுத்துது. வரேக்க பெரிசா நிழல் இல்லாத வழி. தண்ணி, ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்க. சாப்பிடவும் லைட்டா எடுங்கோ!” வேந்தன் சொல்லி முடிக்கவில்லை, “சரி பொஸ்!” அவன் முதுகின் பின்னாலிருந்து முணுமுணுத்துவிட்டு, “இண்டைக்கு ஒராள், கவினையும் தூக்கிக்கொண்டு தண்ணிப்போத்தல் ஒரு கேசும் சேத்துத் தூக்கிக்கொண்டு வரப்போறார்!” கிண்டலடித்தபடி, முதுக்குப்பையை மாட்டிக்கொண்டாள், இலக்கியா.
“இப்பிடியே ஆளாளுக்குப் பகிடி பண்ணிக்கொண்டு நடந்தோமோ போறதும் வாறதும் தெரியாமல் வந்திரலாம்.” என்ற வேந்தன் பார்வையோ, ‘நான் ரெடி நீ ரெடியா?’ கேட்டு நின்றது.
“அதுக்கெண்டு எங்கள பகிடி பண்ணுற வேலையெல்லாம் வேணாம், சொல்லிப்போட்டன்.” சுதாகரிப்போடு சொல்லிவிட்டாள், இலக்கியா.
“பிள்ள கதையை விட்டுட்டு நட பார்ப்பம்!” சுகுணா கடிந்துகொள்ளும் குரலில் சொன்னபிறகே அசைந்தாள், “ம்மா! சும்மா பகிடிக்குத்தானே? அவரே ஒண்ணும் நினைக்கேல்ல நீங்க இப்பிடிச் சொல்லத்தான் ஒரு மாதிரிக்கிடக்கு.” தாயிடம் செல்லம் கொஞ்சியபடி.
“அதுக்காக ஆருரனோட அடிபடுறதுபோல அவரோட கதைக்கிறது எல்லாம் பிழை. என்ன நினைப்பார் சொல்லு பார்ப்பம்?” என்றார் சுகுணா.
“அதோட சித்தப்பாட்ட பேச்சு வாங்கினா உங்களுக்குத்தான் வெக்கம்.” தாய் தொடர, “ம்மா! சின்னதா பகிடிக்குக் கதைக்கிறதை இவ்வளவு பெரிசாக்காதீங்க, ப்ளீஸ்!” இலக்கியா கெஞ்சலாகச் சொல்ல, “இப்பிடி நாம கலகலப்பாக் கதைக்க கதைக்கத் தான் அவரும் சந்தோசமாக் கதைக்கிறார் மா. ரெண்டு கிழமை நம்மளோட இருக்கப் போறவரோட நீ டிரைவர் எண்ட மாதிரிப் பழகிறது கஷ்டம் தானே?” தங்கைக்கு உதவிக்கு வந்தாள், கவி.
“அதானே? அதுவும் இலக்கியா இருக்கிற இடத்தில ஒரு ஆள் கதைக்காமல் பேசாமல் இருக்கிறது எண்டது சரியாவா இருக்கும் சொல்லுங்கோ பார்ப்பம்?” அவனை டிரைவர் என்று தமக்கை சொன்னது மனதைக் கோண வைத்தாலும், தாயைச் சமாதானம் செய்யும் விதத்தில், அவர் தோளில் கரம்போட்டுத் தன்னோடு அணைத்தபடி கேட்டவளை முறுவலோடு பார்த்தார், சுகுணா.
“சரி சரி, ஆனால் எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு! அந்தத் தம்பிக்குப் பிடிக்காமலும் இருக்கும், அதான் சொன்னன். பார்த்து…” அவர் சொல்லிக்கொண்டிருக்கையில், “எல்லாம் எடுத்தாப் போகலாம்.” என்றபடி வந்தான் வேந்தன்.
“இங்க பாருங்க, நான் சும்மா பகிடிக்குக் கதைக்கிறது பிடிக்காட்டி சொல்ல வேணும் சரியா? இங்க அம்மா ஒரே பேசுறா!” அவனிடமே சொன்னவளை சுகுணா முறைத்தார் என்றால் வேந்தனோ, விழிகள் சுருங்க முறுவலோடு பார்த்தான். அவள் விழிகளிலுமே மின்னி மறைந்த இரகசிய பாசை அவனுள் மளுக்கென்று இறங்கியது. ‘நான் கதைக்கிறது பிடிக்காதா என்ன?’ விழி வீச்சு வினவியதற்கு பதில் எப்படி எப்படியோ சொல்ல மனம் விளைந்தாலும் முடியுமா என்ன? அவனையும் மீறி ஏக்கப் பெருமூச்சுத்தான் வெளியேறியது.
அதை மறைக்க, “அப்ப நீங்க கதைக்கிறது எல்லாமே பகிடியா?” சமாளிப்போடு கேட்டுக்கொண்டே அவள் விழிகளை அவன் பார்வை ஊடுருவிய வேகத்தில் அவள் சட்டென்று விழிகளை விலத்தி அவசரம் அவசரமாக தாயையும் தமக்கையும் பார்த்தாள், ‘கவனித்திருப்பார்களோ’ என்ற மனச்சஞ்சலத்தோடு! கவனித்தது போலத் தெரியவில்லை. இப்போது, இலக்கியாவின் தொண்டைகுழியால் மெல்ல விடுபட்டது, பெருமுச்சு.
“ஆன்ட்டி நான் எத்தின தடவைகள் சொல்லிட்டன் இதெல்லாம் பகிடிக்குக் கதைக்கிறது எண்டு தெரியாதா என்ன? விடுங்க விடுங்க.” என்றுவிட்டு, “போவமே.” என்று வந்த மாறன், நாதனோடு சேர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டான்.
“போய் வரும் வரை பெரும்பாலான இடங்களில ஆற்று நீர் சலசலப்புக் கேட்டுக்கொண்டே இருக்கும்.” சுற்றத்தை இரசித்தபடி சொன்னான், வேந்தன்.
“போவம் எண்டு சொல்லீட்டாலும் மனசுக்க யோசனை இருந்தது வேந்தன்; எப்பிடி எண்டாலும் கவின் சின்னவன், அது பாத்தா இங்க சின்னப்பிள்ளைகளோட வந்து போகினம்.” என்றார் நாதன்.
“ஓம் அங்கிள், அப்பிடியே கிரவல் ரோட்டால போனாக் கெதியாப் போகலாம். வேணுமெண்டா நாமளும் அந்த வழியாப் போகலாம். ஏறியிறங்கிறது கஷ்டம் எண்டு நினைச்சா!” என்றபடி பின்னால் திரும்பிப் பார்த்தவன் ரதி, சுகுணாவைத்தான் பார்த்தான்.
“எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. இனி எஸ்டஸ் பார்க் போய் அங்கனேக்க சுத்திட்டுச் சாப்பிட்டுட்டு அப்படியே ஹொட்டல் போறதுதானே! இங்க பார்ப்பம்.” என்றார் சுகுணா.
“யாரோ நேற்றுக் கவின தோளில வச்சுக் கூட்டிக்கொண்டு போவன் எண்டு சொன்னவே, என்ன இப்பக் கத மாறுது!” கடைசியாக ஆரூரனோடும் ராஜியின் மகளோடும் வந்து கொண்டிருந்த இலக்கியா உரக்கச் சொன்னாள்.
வேந்தனைப் பதில் சொல்லவிடவில்லை, கவின். “நோநோநோ! கவின் நடப்பான்!” கீச்சுக்குரலில் அவசரமாகச் சொன்னபடி தாயின் கையை உதறிவிட்டு ஓடிச் சென்று தகப்பன் கரத்தைப் பற்றிக்கொண்டு நிமிர்ந்து நிற்க, எல்லோருக்கும் முறுவல் அரும்பியது. நடையும் தொடர்ந்தது.
‘சின்னதா ஒரு சந்தர்ப்பம் கிடைச்சாலும் இண்டைக்கு என்னட்ட ஒராள் வாங்கப் போறா!’ குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டே நடந்தான் வேந்தன்.
‘வாங்கிற எங்களுக்குத் திருப்பிக் குடுக்கவும் தெரியும்.’ தட்டிய வேகத்தில் அனுப்பிவிட்டு உதட்டைக் கடித்தபடி அவனைப் பார்த்தவள், திரும்பி அவன் பார்த்த பார்வையில் சட்டென்று விழிகளை விலக்கிக்கொண்டுவிட்டாள். ‘இந்தாள் என்ன மாட்டித்தான் விடப்போறார்! நாங்க பார்த்துக்கொண்டத கவிக்கா கண்டிருப்பாவோ!’ மனம் தடதடப்பில் வேகமாகத் துடித்தது. கூடவே, அவன் பார்வையின் தாக்கம் முகத்தில் மலர்வின் பளபளப்பைப் பூசிச் செல்லவும் மறக்கவில்லை. அதன் பிறகு கொஞ்சநேரம் அவள், அவன் புறமே திரும்பவில்லை.
‘உண்மையா நான் சும்மா தான் எழுதினன். வித்தியாசமா ஒண்டும் நினைக்க வேணாம், சரியோ!’ கொஞ்ச நேரத்தால் இன்னொரு குறுஞ்செய்தியனுப்பினாள்.
“பிள்ள, ஃபோனப் பாக்கிறதுக்குக் காருக்க இருந்திருக்கலாமே!” சுகுணாவின் அதட்டல் அதற்கும் வேட்டு வைக்க, இயற்கையில் தொலைந்தபடி நடை தொடர்ந்தது.
ஓங்கி வளர்ந்து பரந்து கிளைபரப்பி நின்ற மரக்குடைகள் கொழுத்தும் ஆதவன் அருகாமையை விரட்டிட மேற்கொள்ளும் பிரயத்தனம் வெற்றி கொண்டதில், மென் சாமரமாய் இதமான காற்று மோத, கால்களைவிட வேகமாகச் சுழன்றடித்தன அவர்களின் விழிகள்.
பெரியதும் சிறியதுமான வழுவழுப்பானதும் கரடுமுரடானதுமான கற்பாறைகள் அவ்விடத்துக்கு வித்தியாசமானதொரு சோபையளித்து நின்றன. அதுமட்டுமின்றி, கிழக்கேயிருந்து மேலேறி வந்துகொண்டிருந்த காலைச் சூரியனிடமிருந்து தன்னை இரசிப்போரைப் பாதுக்காக்கும் இறுமாப்போடு நிமிர்வாய் நிண்டன.
பல்வேறு வகைகளில், நிறங்களில் மலர்ந்து கிடக்கும் காட்டு மலர்கள் தம்மை இரசிப்போர் விழிகளை மென்மையாக வருடி உற்று நோக்க வைத்தது மட்டுமின்றி, சளைக்காது புகைப்பட ஒளிகளையும் தாங்கி நின்றன.
கரடுமுரடான மனிதருள்ளும் கனிவொட்டி இருப்பதுபோலவே ‘கக்டஸ்’ வகை முள்ளுச்செடிகளில் பூத்து நின்ற மலர்கள், ஒவ்வொருவர் விழிகளையும் தம்மீது இரசனையோடு தரித்து நின்றுவிட்டே செல்ல அனுமதித்தன.
இடையிடையே பரந்து விரிந்து கிடந்த வெளியான நிலங்கள் கூட ஒருவகை அமைதியான அழகோடே காணப்பட்டன.