பாமினியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முதலே வந்து இறங்கி இருந்தாள் பிரியந்தினி. அன்னை வீட்டில் தங்கவே இல்லை. வந்ததும் குளித்து, உடையை மாற்றிக்கொண்டு, கோகுலனின் வீட்டுக்குப் புறப்பட்டாள். அன்று, கோகுலனோடும் ஜெயராணியோடும் பேசி மூன்று மாதங்கள் ஓடி இருந்தது. அதன்பிறகு, எத்தனையோ முறை அவருக்கு அழைத்து, நான் ஏதாவது செய்ய இருக்கிறதா, வரவா என்று கேட்டும் அசையாமல் இருந்து, தான் கோகுலனின் அன்னை என்று நிரூபித்தார், ஜெயராணி.
இதோ, இப்போதும் அவளை யாரும் அழைக்கவில்லை. ஆனால், அவளின் வீட்டினருக்கு முறையான அழைப்பு வந்திருந்தது. அந்தளவே போதும் என்பதுபோல் அவர்களின் மருமகளாகப் போய் இறங்கியவளின் மனம் முழுக்க நிறைந்திருந்தது கலக்கமும் பயமும் தவிப்பும் தான். மாமி என்ன சொல்லுவாரோ? பாமினி அவளை எப்படி எதிர்கொள்வாளோ? முக்கியமாக அவளின் கணவன். அவனைப் பார்த்து எத்தனை நாட்களாயிற்று? நினைக்கையிலேயே விழியோரம் கரித்தது. இந்தக் கலக்கம் எல்லாவற்றையும் தாண்டிக்கொண்டு வீட்டுக்குள் மெல்லப் பிரவேசித்தவளின் விழிகள், தன்னவனின் பிரசன்னத்தைத் தேடியது.
அவனைக் காணவில்லை. தங்கையின் திருமணம் என்றால் சும்மாவா? இருக்க நிற்க நேரமில்லாமல் அலைவானாக இருக்கும்.
வீட்டில் உறவினர் நிறைந்திருந்தனர். எல்லோருமே அவளை வித்தியாசமாகப் பார்ப்பது போலொரு தோற்றம். அவர்களிடம் மெல்லிய முறுவலோடு நலன் விசாரித்துக்கொண்டு ஜெயராணியைத் தேடிப் போனாள்.
வீட்டின் பின்புறத்தில் இன்னும் இரண்டு பெண்களோடு சேர்ந்து கல்லடுப்பு மூட்டி, விறகு வைத்து எரித்து, சீனி அரியதரம் செய்துகொண்டிருந்தார், அவர்.
“இந்த வீட்டு மருமகளே இப்ப வந்தா மற்ற ஆக்கள் எப்ப வாறதாம்?” என்றார் அங்கிருந்த பெண்மணி ஒருவர்.
சங்கடமான சூழ்நிலை ஒன்று உருவாகிப் போயிற்று. அதை மெல்லிய முறுவல் சிந்திச் சமாளித்துவிட்டு, “நான் ஏதாவது செய்யவா, மாமி?” என்று கேட்டாள்.
இந்த வீட்டின் மருமகள். தானாக எல்லாவற்றையும் எடுத்துச் செய்திருக்க வேண்டியவள். யாரோ மூன்றாம் மனிதர் போன்று வந்து நின்று, ‘நான் என்ன செய்யவாம்’. எரிச்சலும் சினமும் தான் வந்தது ஜெயராணிக்கு. உறவுகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததில், ஒன்றுமே சொல்லாமல், “முதல் இதைக் குடி.” என்று பலகாரத் தட்டு ஒன்றோடு தேநீரையும் எடுத்துக் கொடுத்தார்.
அதன்பிறகு, அங்கிருந்து என்ன செய்ய என்று தெரியாமல், “பாமினிய பாத்துக்கொண்டு வாறன் மாமி.” என்றபடி பலகாரத் தட்டும் தேநீருமாக அவளின் அறைக்குள் நுழைந்தாள்.
“வாங்கோ அண்ணி!” என்று புன்னகையுடன் வரவேற்றாள் அவள். இருவர் முகத்திலும் ஏதோ ஒரு தயக்கம். இடையில் விழுந்திருந்த இடைவெளி அவர்களுக்குள்ளும் பெரும் பள்ளத்தை உருவாக்கிவிட்ட உணர்வு.
என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறிவிட்டு, “நான் ஏதாவது உனக்குப் பிழை செய்திருந்தா சொறி பாமினி. குறை நினைக்காத.” என்றாள் விழியோரம் கரிக்க.
இப்போதெல்லாம் அவளுக்கே அவள் மீது சந்தேகம் வந்திருந்தது. மனத்திடம் ஆட்டம் காண ஆரம்பித்திருந்தது. எல்லோரும் அவளையே குற்றம் சாட்டுகிறார்களே, உண்மையிலேயே அவள் தான் சரியான முடிவுகளை எடுக்க வில்லையோ? தவறு அவள் பக்கம் தானோ என்றெல்லாம் தனக்குள் அலச ஆரம்பித்திருந்தாள். அதில், அவளுக்கும் மனம் நோகிறபடிக்கு ஏதும் செய்தோமா என்று தெரியாதபோதும் மன்னிப்பைக் கேட்டாள்.
பாமினிக்கு அவளைப் பார்க்கப் பரிதாபமாயிற்று. ஓடிவந்து அணைத்துக்கொண்டாள். “அச்சோ அண்ணி, என்ன இது? உங்கட நிலம எனக்கும் விளங்குது. நடக்கிறது எல்லாம் உங்கட மாமி மருமகள் பிரச்சனை. நடுவுக்க என்னைக் கொண்டு வராதீங்கோ. நீங்க என்ர அண்ணி. நான் உங்களுக்கு மச்சாள். எனக்கு உங்களில் எந்தக் கோபமும் இல்ல.” என்றவளின் அன்பு, காயப்பட்டிருந்த பிரியந்தினியின் மனத்துக்குப் பெரும் அருமருந்தாய் மாறிப்போயிற்று.
அதன்பிறகு, தடையகன்று இருவரும் உரையாடினர். வாங்கிய நகைகள், போடப்போகிற திருமண ஆடைகள், சமையல் யார், மண்டபம் எது என்று சந்தோசமாகவே கழிந்தது பொழுது. பிரியந்தினிக்கு மனம் சற்றே ஆறி, நிதானத்துக்கு வந்திருந்தது.
அதில், தைரியம் வரப்பெற்று, “உன்ர அண்ணா எங்க?” என்று, அவ்வளவு நேரமாக மண்டைக்குள் குடைந்துகொண்டிருந்த கேள்வியைக் கேட்டாள்.
“அண்ணா, யாழ்ப்பாண டவுனுக்குப் போயிட்டார் அண்ணி. இப்பதான் நீங்க வாறதுக்கு அரை மணித்தியாலத்துக்கு முதல் தான் வெளிக்கிட்டவர்.” என்றவள் நினைவு வந்தாற்போல், “உங்களுக்கு எடுத்த சாறி அண்ணி. இந்தாங்கோ.” என்று, தன் அலமாரிக்குள் இருந்து எடுத்துக் கொடுத்தாள்.
நிச்சயம் அவன் தான் எடுத்திருப்பான். என்ன, அதை அவனாகத் தருவதற்கு மனமிருந்திருக்காது. இன்று, அவள் வருவது அவனுக்கும் தெரியும். குறுந்தகவல் அனுப்பியிருந்தாள். ஆனாலும், ஒன்றுமே சொல்லவில்லை. சோகமும் சுகமும் சேர்ந்து ஒன்றாக அவளை வாட்ட, அந்தச் சேலையை மென்மையாக வருடிக்கொடுத்தாள். என்னவோ கணவனின் ஸ்பரிசத்தை அனுபவிக்கும் உணர்வு.
“உங்கட சாறி பிளவுஸ் இங்க இருந்தது எண்டு அண்ணாதான் எடுத்துத் தந்தவர். அதைக் குடுத்துத் தச்சனா
ன். அளவா இருக்கா எண்டு பாருங்கோ.”

