என் பிரியமானவளே 15 – 2

மனதின் பாரத்தைத் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு விரித்துப் பார்த்தாள். சிவப்பில் தங்கக் கொடிகள் படர்ந்த அழகான பட்டுச் சேலைக்கு, மிகுந்த வேலைப்பாடுடன் தனிச் சிவப்பில் தைக்கப்பட்டிருந்த சாறி பிளவுஸ் அளவாயிருக்கும் என்று கண்கள் அளவெடுத்துக்கொண்டது.

 

“அளவாத்தான் இருக்கும் போல. இல்லாட்டியும் அம்மா அடிச்சுத் தருவா. மெசின் வீட்டை இருக்கு.” என்றவள், அருந்தி முடித்த தேநீர் கோப்பையையும் தட்டையும் சமையலறையில் கழுவி வைத்துவிட்டு, மீண்டும் ஜெயராணியிடம் நடந்தாள்.

 

“சீனி அரியதரத்த நான் போட்டு எடுக்கிறன். நீங்க வேற ஏதும் வேலை இருந்தா பாருங்கோவன்.” என்றவளை அதற்குமேல் தவிர்க்க முடியாமல், கைவேலையை அவளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் ஜெயராணி.

 

உண்மையில் அவளைக் கண்டதும் அவருக்குச் சினம்தான் பற்றிக்கொண்டு வந்தது. திருமணமாகியும் மகன் தனித்திருக்கிறான் என்கிற எரிச்சல் இன்னுமின்னும் மேலோங்கியது. மகளின் திருமண வேலைகளை இயல்பாகப் பார்க்கவும் முடியவில்லை. அந்தளவுக்கு மகனின் வாழ்க்கை மனதுக்குள் வந்து நின்று சஞ்சலப்படுத்திக்கொண்டிருந்தது. எல்லாவற்றையும் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு நடனமாடினார்.

 

அன்று, இரவாகி அவள் புறப்படுகிற வரைக்கும் அவன் வரவேயில்லை. பார்த்துப் பார்த்து ஏமாந்தே போனாள். அவனுடைய காலடிக்கு வந்துவிட்டும் அவனைப் பாராமலேயே போவதென்றால் எப்படி? வந்துவிட மாட்டானா, பார்த்துவிட மாட்டேனா என்று மனம் கிடந்து அலைபாய்ந்தது.

 

அவருக்கு உதவியாக இருக்குமே என்று சொல்லி, இரவு இங்கேயே தங்கவா என்று ஜெயராணியை மெதுவாகக் கேட்டும் பார்த்தாள்.

 

“இல்லையம்மா. ஏற்கனவே ஆக்கள் நிரம்பி இருக்கு. போயிட்டு நாளைக்கு வந்தாக் காணும்.” என்று அவளை விடவும் கெட்டித்தனமாகப் பதிலுரைத்தார் அவர்.

 

இனி நிற்கவும் முடியாது. வந்துவிடுவான் என்றால் நின்று பார்த்துட்டே போகலாமே என்று தொண்டை அடைக்க அவனுக்கு அழைத்தாள். அவன் எடுக்கவில்லை. வேறு வழியற்று, சாம்பவனை வரச்சொல்லி அவனோடு புறப்பட்டவளுக்கு வீதி கலங்கித் தெரிந்தது.

 

அடுத்த நாளும் பெரும் ஆவலோடு ஓடி வந்தவளை அவன் ஏமாற்றவில்லை. ஹாலில் அமர்ந்திருந்தான். அப்படியே நின்றுவிட்டாள் பிரியந்தினி. அவளுக்கு அவனை விட்டு விழிகள் அகலமாட்டேன் என்றது. அதிகப்படியான வேலையினாலும் ஒழுங்கற்ற உறக்கத்தினாலும் விழிகள் சிவந்துகிடந்தது. தலை கலைந்திருந்தது. ஆனால், அவளின் உயிரையே கவர்ந்திழுக்கும் அந்தக் காந்த முகத்தில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. ஓடிப்போய் அப்படியே மார்போடு ஒன்றிக்கொள்ளும் வேகம் எழுந்துவந்து அவளையே பயமுறுத்திற்று.

 

ஆட்களின் முன்னிலையில் எதையும் பேச முடியவில்லை. கண்கள் கலங்கியது. அவள் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அவன் எழுந்து உள்ளே போனான். விழியோரம் கரிக்க அவள் பார்வை அவனைத் தொடர்ந்தது. அவனின் அறையாக இருந்து அவர்களின் அறையாக மாறிப்போன அதே அறைதான். அவளும் பின்னால் போனால் ஏதும் சொல்லுவானா? அல்லது, வெளியே போ என்று அவமானப்படுத்திவிடுவானா?

 

“அம்மா, ஒரு தேத்தண்ணி தாங்கோ.” என்று அவன் குரல் கொடுத்தான்.

 

அவளின் கால்களுக்கு அப்படி ஒரு வேகம் எப்படி வந்ததோ தெரியவில்லை. ஜெயராணியை முந்திக்கொண்டு ஓடிப்போய்த் தண்ணீரைக் கொதிக்க வைத்து, இஞ்சி தட்டிப்போட்டு, அவனுக்குப் பிடித்த பதத்தில் ஊற்றினாள். நேற்றுச் செய்த சீனி அரியதரத்திலும் கொஞ்சத்தைக் குட்டிக் கிண்ணம் ஒன்றில் எடுத்துவைத்தாள். இரண்டையும் ஒரு ட்ரேயில் வைத்துத் தூக்கிக்கொண்டு அவன் அறைக்கு விரைந்தாள். அவள் செய்வதையெல்லாம் கவனித்தாலும் கவனிக்காததுபோல் விலகிச் சென்றார், ஜெயராணி.

 

“தேத்தண்ணி..”

 

தனக்குப் பின்னிருந்து தயக்கத்தோடு ஒலித்த குரலில் வேகமாகத் திரும்பினான் கோகுலன். தேநீர் கோப்பையும் பலகாரமுமாக நின்றிருந்தாள் அவள். அவளையும் அவள் கையில் இருந்த தட்டையும் மாறி மாறிப் பார்த்தான்.

 

“மாமி வேலையா நிக்கிறா. அதுதான்..” வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.

 

அவன் தேநீரை மட்டும் எடுத்துக் கொண்டான். ஏதாவது சொல்லுவானா என்று காத்திருக்க, தேநீரைப் பருகியபடி கைபேசியில் கவனமாக இருந்தான்.

 

“சீனி அரியதரம்?”

 

தயக்கத்துடன் வந்த அவளின் கேள்வியை அவன் பொருட்படுத்தவில்லை.

 

“ஒரு ரெண்டு மட்டும் சாப்பிடுங்கோ. நல்லாருக்கு..” மெல்லிய கெஞ்சலோடு சொன்னவளை நிமிர்ந்து பார்த்தான் அவன். அவளின் பேச்சு அப்படியே நின்று போயிற்று.

 

அதற்குள், “பிரியா வந்த மாதிரி இருந்ததே. அதுக்கிடையில எங்க போயிட்டா? இந்த லட்டு எல்லாத்தையும் ஒரு பெட்டில போட்டுக் கட்டி வச்சிட்டா மண்டபத்துக்குக் கொண்டுபோக ஈஸியா இருக்கும் எண்டு பாத்தன்.” என்று உறவுக்காரப் பெண்மணி ஒருவரின் குரல் கேட்டது.

 

தவித்துப்போனாள் பிரியந்தினி. அவனோடு பேசக் கிடைத்த இந்தப் பொன்னான நேரத்திலா அவளைத் தேடவேண்டும்? அவளுக்கு அவனை விட்டு விலக மனமேயில்லை. ஆனால், வேலைகள் நிறைந்து கிடக்கும் விசேச வீட்டில் வேறு வழியும் இல்லை. வாசலையும் அவனையும் தவிப்புடன் மாறிமாறிப் பார்த்தாள். அவன் அவளையேதான் கவனித்துக்கொண்டு இருந்தான்.

 

கையிலிருந்த தட்டை மேசையில் வைத்துவிட்டு, “சாப்பிடுங்கோ பிளீஸ்!” என்று அவன் முகம் பார்த்துக் கெ

ஞ்சல் குரலில் சொல்லிவிட்டு வெளியே போனாள்.

error: Alert: Content selection is disabled!!