வேலை முக்கியம் தான். அதனால் உண்டாகிற திருப்தியும் முழுமையும் முக்கியம் தான். சுயமாக நிற்கிறோம் என்கிற உணர்வும் முக்கியம்தான். இந்த நிறைவான விடயங்களை எல்லாம் மகிழ்வோடு கொண்டாட மனத்துக்குப் பிடித்த துணை அருகினில் வேண்டும் என்பது மிக மிக முக்கியம் என்று, தோன்ற ஆரம்பித்து இருந்தது.
அதில், அவனோடு பேச எண்ணி, அந்த வார இறுதியே காலிக்குப் புறப்பட்டாள்.
வேலை முடிந்து வந்தவன் வீட்டு வாசலில் நின்றவளைக் கண்டு புருவங்களைச் சுருக்கினான்.
அவள் எதுவுமே பேசவில்லை. அவனையே பார்த்திருந்தாள். நெஞ்சு மட்டும் தடதடக்க ஆரம்பித்திருந்தது. மெதுவாக இதழ் பிரித்து முறுவலிக்க முயன்றாள். அவன் கதவைத் திறந்துவிட்டு, அவளை ஒரு பார்வை பார்த்தான். அந்தப் பார்வையையே அழைப்பாக ஏற்று, பின்னோடு சென்றாள்.
அவனுக்கே உரித்தான அத்தனை அம்சங்களையும் சுமந்து நின்றது அவனது அறை. பைக்கின் திறப்பை கொழுவியில் மாட்டினான். ஷூக்களை கழற்றி கதவின் அருகிலேயே இருந்த ஸ்டான்ட்டில் வைத்தான். லேப்டாப் பையை மேசையில் வைத்தான். எந்தப் பேச்சு வார்த்தையையும் ஆரம்பிக்க அவன் தயாராயில்லை என்று புரிந்தது.
அவளும் அவனைப் பிரதி செய்துவிட்டு, “நான் குளிக்கோணும்.” என்றாள்.
“பாத்ரூம் அந்தப்பக்கம்.” என்று காட்டினான்.
மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு அதற்குள் புகுந்தவளுக்குக் கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. எப்படி இருக்கிறாய்? ஏன் வந்தாய்? எதுவுமே இல்லை. இப்படி, அழையா விருந்தாளியாக உணரவைத்து விரட்டியடிப்பது. பிறகு நீ வரவில்லை, பேசவில்லை என்பது. ஆழ்ந்த மூச்சுக்களை இழுத்துவிட்டுத் தன்னைத் தேற்றிக்கொண்டாள். அவள் குளித்துமுடித்து வந்தபோது இரண்டு பார்சல்கள் மேசையில் வீற்றிருந்தன.
“நான்…”
“முதல் சாப்பிடு!” என்றான்.
அவனும் குளித்துவிட்டு வந்தான். இருவருமாகச் சேர்ந்து உண்டார்கள். அரைவாசி பார்சல் கூட முடிந்திராது. அவள் எழுந்துகொண்டாள். அவன் கேள்வியாகப் பார்க்க, “போதும். இதுவே கூடச் சாப்பிட்டன்!” என்று முணுமுணுத்தாள்.
அவளையும் மெலிந்து நலிந்து இதோ உடைந்து விடுகிறேன் என்று நின்ற உடலையும் பார்த்துவிட்டு, “சாப்பிடு!” என்றான் அவன்.
“இல்ல கா…” என்று சொல்லிக்கொண்டு வந்தவள், அவனுடைய பார்வையில் மீண்டும் அமர்ந்து சாப்பிட்டாள்.
உணவு முடிந்ததும் அவன் கேள்வியாகப் பார்த்தான்.
“சனி ஞாயிறு லீவு. அதுதான் வந்தனான்.”
“ஓ! இதுக்கு முதல் இப்பிடி ஒரு லீவு உனக்குக் கிடைச்சதே இல்லையோ?”
என்ன சொல்வது? உதட்டைக் கடித்துவிட்டு, “உங்களுக்கும் இருந்திருக்கும் தானே?” என்றாள்.
“இருந்த நேரமெல்லாம் நான் வந்திருக்கிறன். சனி ஞாயிறு மட்டும் இல்ல. அரைநாள் கிடைச்சாலும் வந்திருக்கிறன். பிறகு, இந்த வாழ்க்கை எங்க போய் முடியும் எண்டு தெரியாம வாறது சரியா வராது எண்டு விட்டுட்டன். ஒரு ஃபோன் இல்ல. வந்திட்டு போங்கோவன் எண்டு கூப்பிட இல்ல. நான் எப்பிடி இருக்கிறன் எண்டு கேக்கேல்லை. சோ நீயும் அப்பிடித்தான் நினைச்சிருக்கிறாய் எண்டு விளங்கினது. அதுதான் நானும் விட்டுட்டன்.” என்றான் அக்கறையற்றவன் போன்று.
பேச வந்தவள் அவள். ஆனால், அவன் தந்த விளக்கத்தில் அவளுக்கு வாயடைத்துப் போயிற்று. மீண்டும், இந்த வாழ்க்கை எங்கே போய் முடியும் என்று தெரியாது என்கிறான். இதயத்தில் வலித்தது.
மெதுவாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “சரி கோகுல். நடந்த எல்லாத்துக்கும் நானே காரணமா இருந்திட்டுப் போறன். இனி எந்தச் சண்டை சச்சரவும் வேண்டாம். அதுக்கு நான் என்ன செய்யவேணும் எண்டு சொல்லுங்கோ?” நடந்தவை முடிந்தவையாக இருக்கட்டும். இனி சமாதானம் ஆகுவோம் வா என்கிற அழைப்பிருந்தது அவளிடம்.
“நீ காரணமா? இல்லையே! நான் தான் காரணம். சொன்ன சொல்லக் காப்பாத்தாம விட்டது நான். என்னாலதான் இவ்வளவும். அதுதான், மன்னிப்பும் கேட்டு ரெண்டு வருசம் பொறுக்கவும் சொல்லி இருக்கிறன். இதுல நீ செய்ய என்ன இருக்கு?” நக்கல் தோய்ந்த குரலில் சொன்னவன் நடந்த எதையும் மறக்கமாட்டேன் என்று நின்றான்.
“வேணுமெண்டு குத்திக் காட்ட இல்ல கோகுல். அண்டைக்கு, அது கோபத்தில வாயில வந்திட்டுது. உண்மையா சொறி.” என்றாள் இறைஞ்சும் குரலில்.
அசையாமல் அமர்ந்து இருந்தவனின் தோற்றம், அவளின்
மன்னிப்பை அவன் ஏற்கவில்லை என்று காட்டிற்று.

