அதுதான் சொறி சொல்லுறேனே கோகுல்..” கெஞ்சும்போதே அவளின் மனம் முரண்டியது. உண்மையைத்தான் சொன்னாள். ஆனாலும் கூட, அவனிடம் மன்னிப்பைக் கேட்டும் இறங்கமாட்டேன் என்கிறவனிடம் இன்னும் எந்தளவுக்குக் கெஞ்சுவது? இப்படி இரந்து வாழ்வதும் ஒரு வாழ்வா? அவள் என்ன தவறிழைத்தாள் என்று இப்படித் தாழ்ந்து போகிறாள்?
அவன் அதற்குமேல் பேச மறுத்தான். அவளின் தன்மானம் விழித்துக்கொண்டதில் அவளாலும் அதற்குமேல் இறங்கிப்போக முடியாமல் போயிற்று. மீண்டும் அமைதி.
அவன், அங்கிருந்த தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு அதிலேயே பார்வையைப் பதித்துக்கொண்டான். அவளும் அப்படியே இருக்க, அடக்க முடியாத கோபம் ஒன்று அவனுக்குள் கனன்றுகொண்டு வர ஆரம்பித்தது. இவ்வளவு நடந்தும் இங்கே வருகிறேன் என்று சொல்ல அவளால் முடியவில்லை தானே. அவனைக் காட்டிலும் அவளின் வேலையைத்தானே நேசிக்கிறாள். பிறகு என்னத்துக்கு அவனைத் தேடி வந்தாளாம்?
எலும்புத் துண்டைப் போட்டதும் வாலாட்டுமே நாய், அதைப்போல அவளின் பிரசன்னம் கிடைத்ததும் பல்லைக் காட்டிக்கொண்டு வந்துவிடுவான் என்று நினைத்தாளா? இருக்கும்! அவளுக்காகக் கொழும்புக்கும் காலிக்கும் முல்லைத்தீவுக்கும் என்று நாயாக அலைந்தவன் தானே!
இங்கேயே இருந்தால் வார்த்தைகளை விட்டுவிடுவோம் என்று பயந்து, வேகமாக எழுந்துகொண்டான். அவன் பர்சையும் திறப்பையும் எடுப்பதைப் பார்த்துவிட்டு அவள் கேள்வியாகப் பார்த்தாள்.
“கொஞ்சம் வேல, வெளில போயிட்டு வாறன்!” என்றவன் அவளின் பதிலை எதிர்பாராது அறையை விட்டு வெளியேறினான்.
இருந்த இடத்திலேயே சுருண்டிருந்தாள் பிரியந்தினி. கண்ணீர் வரவா என்று நின்றது. இன்னும் என்ன செய்ய என்று விளங்கவில்லை.
போனவன் இரவு ஒன்பது தாண்டித்தான் வந்தான். கையில் மீண்டும் ஒரு பை. அதை மேசையில் வைத்துவிட்டு, “கேக், மிக்ஸர் எல்லாம் இருக்கு.” என்றான் மொட்டையாக.
இதைச் சாப்பிடுவதற்கா மெனக்கெட்டு அங்கிருந்து வந்தாள்.
உடையை மாற்றிக்கொண்டு வந்தவன், “நீ கட்டில்ல படு!” என்றுவிட்டு, அங்கிருந்த இருக்கையில் சரிந்துகொண்டான்.
“நீங்களும் இங்க படுக்கலாம்!” அது இருவர் அமரக்கூடியது தான் என்றாலும் பிரம்பு நாற்காலியின் மீது குஷன் போட்டிருந்தது. அது அவனுடைய அரை உடம்புக்கே இட்டுமுட்டாகத்தான் இருக்கும் என்பதில் அவசரமாகச் சொன்னாள் பிரியந்தினி.
“நீயும் நானும் வாழ்க்கையில சேருவோமா எண்டே தெரியேல்ல. இதுல கட்டில்ல சேர்ந்து படுத்து என்ன காணக்கிடக்கு?” என்று சுள்ளென்று பாய்ந்துவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டான் அவன்.
இப்படி, தேளாகக் கொட்டுகிறவனை எப்படி நெருங்குவது. சற்று நேரத்துக்கு அப்படியே நின்றுவிட்டாள் பிரியந்தினி. மூச்சுக்கூட வரமாட்டேன் என்றது. வேதனை போய்க் கோபம் எழுந்தது. இதென்ன எப்போது பார்த்தாலும் இப்படியே சொல்வது? மிரட்டுகிறானா? அல்லது, இதைச் சொல்லிக்காட்டி அவளைப் பணிய வைக்கப் பார்க்கிறானா? அடுத்தநாள் காலையிலேயே கொழும்பு செல்ல ஆயத்தமானாள்.
இரண்டு நாட்களுக்கு என்று எடுத்துக்கொண்டு வந்த ஆடைகள் எல்லாம் பல்லைக் காட்டின. போகிறாயா நிற்கலாமே என்று ஒரு வார்த்தை சொல்லாமல் இருந்தவனின் செய்கை வேறு இன்னுமே அவளை நோகடித்தது. அழக்கூடாது என்கிற ஒற்றை வைராக்கியத்துடன் புறப்பட்டாள்.
காலி, கோட்டைக்கு முன்னால் இருந்த பஸ் ஸ்டான்ட்டில் அவன் தான் கொண்டுவந்து இறக்கிவிட்டான். நேற்று, அவன் அப்படிச் சொன்னபிறகு அவனது தோளைக் கூடப் பற்றாமல், பைக்கிலும் தள்ளியே அமர்ந்து வந்தாள். பஸ்ஸில் ஏறுவதற்கு முதல், “நீயும் நானும் சேருவோமா தெரியாது எண்டு சொன்னீங்க. அப்பிடிச் சேர விருப்பம் இல்லாத ஒருத்தரின்ர அறைக்குத் தனியா
வந்திருக்கவும் மாட்டன்; ரெண்டு நாள் தங்கிப்போட்டுப் போவம் எண்டு நினைச்சும் இருக்க மட்டான். எனிவே, உங்களைத் தேடி வந்தவளுக்கு நல்ல சந்தோசத்தைத் தந்து இருக்கிறீங்க. அதுக்கு நன்றி!” என்றுவிட்டு உள்ளே சென்று அமர்ந்துகொண்டாள்.

