கடலைப் பார்த்தபடி, காலிக் கோட்டையின் மதிற்சுவரில் நின்றிருந்தான் கோகுலன். பரந்து விரிந்து கிடந்த கடலும், கடலின் காற்றும், அவன் மனதின் கொதிப்பை அடக்கவே மாட்டேன் என்றது. மீண்டும் மீண்டும் அவளின் வார்த்தைகளே வந்து வந்து மோதின.
‘என்ர வாழ்க்கை பிழைச்சிடுமோ எண்டுற பயம் வந்திட்டுது’
‘நீங்க என்னை விட்டுட்டு இன்னொரு வாழ்க்கையத் தேடிப் போயிடுவீங்களோ எண்டுற சந்தேகம் வந்திட்டுது.’
‘என்ர மனுசன் எனக்காக நிப்பார் எண்டுற நம்பிக்கை போயிட்டுது’
அத்தனையும் அவன்மீதான அவநம்பிக்கையின் அறிவிப்புக்கள்.
‘குழந்தை தேவை எண்டா வாங்க!’ என்பது அவமானத்தின் உச்சம்.
அவனுடன் வாழ வரமாட்டேன் என்கிறாள் என்பதுதான் அவனுடைய கோபம். அவளைப் பிரிந்து இரண்டு வருடங்கள் தனியாக இருக்க முடியவில்லை என்பதுதான் அதன் அர்த்தம். இதில், எந்த இடத்தில் வாழ்க்கை பிழைத்துவிடும் என்கிற பயம் வந்ததாம்? எந்த இடத்தில் அவன் அவளை விட்டுவிட்டு இன்னொரு வாழ்க்கையைத் தேடிப்போய்விடுவான் என்கிற சந்தேகம் வந்ததாம்? குழந்தை வேண்டுமென்றால் வா என்றாளே. அவன் என்ன.. அதற்குமேல் சிந்திக்க முடியாமல் நெஞ்சமெல்லாம் கசந்து வழிந்தது. தலையை உலுக்கிக்கொண்டு அதிலிருந்து வெளியே வர முயன்றான். முடியவே இல்லை.
சூரியன் கடலுக்குள் சென்று கரைந்தபிறகும் வீட்டுக்குச் செல்ல மனமில்லை. இனி என்றாவது அவள் முகம் பார்த்து அவனால் சிரிக்கமுடியுமா? பேச முடியுமா? ஒரு கணவனாக நெருங்கத்தான் முடியுமா?
வெறுப்பும் கசப்பும் நெஞ்சு முழுக்கப் பரவியது.
என்னவோ தான் மிகவும் தரம் தாழ்ந்து நடந்துவிட்டது போன்றும், அதை அவள் முகத்துக்கு நேராகவே கேட்டுவிட்டது போன்றும் தோன்றி, குன்றல் ஒன்று உண்டாவதைத் தடுக்க முடியாமல் நின்றான்.
கோட்டையின் காவலாளி எல்லோரையும் விரட்டிக்கொண்டு வருவது தெரிய, வேறு வழியற்று அவனும் புறப்பட்டான்.
அதன்பிறகான நாட்களில், அவர்கள் இருவருக்குமான பேச்சு வார்த்தைகள் முற்றாக நின்று போயிருந்தது. அவள் அவளின் வேலையைப் பார்த்தாள். அவன் அவனது வேலையைப் பார்த்தான். இருவருமே மற்றவரின் முகம் பார்க்க மறுத்தனர். அதுவும் கோகுலன் அவள் இருந்த திசைக்கே திரும்புவதில்லை. அந்தளவுக்கு ஆழமாய்க் கீறியிருந்தது அவளின் வார்த்தைகள்.
அன்று, அவளுக்கான வேலை நியமனத்தை, அவளின் முன்னால் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனான் அவன்.
எடுத்துப் பார்த்தாள். அவனுடைய அலுவலகம். சம்பளம் பாதிதான். மனதில் ஒரு வலி எழுந்து அடங்கியது. இன்னும் பத்து நாட்களில் சேரவேண்டும்.
……………………
அன்று, அவளைப் பார்த்துவிட்டுப் போகப் பெற்றோரும் சாந்தினியும் குடும்பமாக வந்து இறங்கினார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரியந்தினியின் முகம் மலர்ந்து விகசித்தது. அதுவும், இவளைக் கண்டதும், “சித்தீ…” என்றபடி ஓடிவந்து தாவிய துருவன், அவளின் சிரிப்பை மீட்டுத் தந்தான். அவர்கள் நிற்கப்போகிற அடுத்த இரண்டு நாட்களுக்கும் விடுமுறை எடுத்திருந்த கோகுலன், எதையும் காட்டிக்கொள்ளாமல் இன்முகமாகவே அவர்களை வரவேற்றுக் கவனித்தான்.
தங்களின் செல்ல மகள், குடும்பமாக வாழ ஆரம்பித்திருப்பதைப் பார்த்தபோது, பெற்றவர்களின் விழிகள் மெலிதாகக் கசிந்துதான் போயிற்று.
ஆனால், மற்றவர்களால் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், பிரியந்தினியின் பார்வையை நேருக்கு நேர் சந்திக்காமல் தவிர்க்கும் மருமகனை,
வந்த கொஞ்ச நேரத்திலேயே அற்புதாம்பிகை கவனித்திருந்தார். என்னவோ சரியில்லை. மனதினில் மெல்லிய கவலை அப்பிக்கொண்டது. தம் பக்கத்திலிருந்து என்ன செய்யலாம் என்று யோசித்தார். அதன்படி, சில விசயங்களைக் கணவரின் காதினுள் போட்டுவிட்டார்.
“பிறகு? புது வீடு, புது இடம் எல்லாம் எப்பிடிப் போகுது?” வந்த களையாறி, பிரியந்தினி சமைத்து வைத்திருந்த உணவையும் முடித்துக்கொண்டு, விசாரித்தான் தியாகு.
“எல்லாமே ஓகே தான்! அடுத்தக் கிழமை தானே அத்தான் வேல தொடங்குது. வீட்டிலேயே இருந்து ஒரே போர். ஒவ்வொரு நாளும் கோட்டை வரைக்கும் நடந்திட்டு வருவன்.” என்று, முறையாகப் பதிலிறுத்தவளைக் கண்களில் கேலி மின்னப் பார்த்தான் தியாகு.
கேட்கிற கேள்விக்கு, அதுவும் அவன் கேட்கிற கேள்விக்கு இப்படி நல்ல பிள்ளையாகப் பதிலளிக்கும் பிரியந்தினி புதிதாகத் தெரிந்தாள். அவளைச் சீண்ட மனம் உந்தியது. “உன்ர தங்கச்சி வளந்திட்டாளோ சாந்தி?” என்றான் மனைவியிடம்.
“இவ்வளவு நாளும் என்ன சின்னப்பிள்ளையாவா இருந்தனான்? இப்ப திடீரெண்டு வளந்து நிக்க?” கண்களில் முறைப்புடன் கேட்டாள் பிரியந்தினி.
அவளுக்குப் பதிலைச் சொல்லாமல், “கோகுல் நீங்க சொல்லுங்கோ? ஆள் வளந்த அளவுக்கு அறிவு வளர இல்ல தானே?” என்றான் வேண்டுமென்றே கண்ணில் சிரிப்புடன்.

