கோகுலன் அமைதியாகச் சிரித்தான்.
“பாத்தியா, அந்தப் பெடியன் வாயே திறக்கிறார் இல்ல. அந்தளவுக்குப் பயப்படுத்தி வச்சிருக்கிறாள்.”
“அக்கா, என்ர வாயக் கிண்டாம உன்ர மனுசனக் கொஞ்சம் பேசாம இருக்கச் சொல்லு! வந்திட்டார் ஆள் வளர இல்ல, அறிவு வளரேல்ல எண்டு சொல்லிக்கொண்டு! அவருக்குத்தான் தல நரைச்சும் தலைக்குள்ள ஒண்டும் இல்ல!”
“நீயாச்சு! உன்ர கொத்தானாச்சு! ரெண்டு பேரும் என்ன விடுங்க!” இவர்களின் குணம் அறிந்தவளாக, சற்றே சரிந்துகொள்ள எண்ணி, அன்னை படுத்திருந்த அறைக்குள் புகுந்துகொண்டாள் சாந்தினி.
ஆனால், சாந்தினிக்குப் பதிலாகச் சாம்பவன் அவளோடு கூட்டுச் சேர்ந்தான். “தலைக்குள்ள மட்டும் இல்ல வெளிலலையும் அத்தானுக்கு ஒண்டுமில்லாம போகுது அக்கா.”
“அதுதான்! கிழவருக்கு நக்கலும் நையாண்டியும்!” என்று, அவளும் தலையைச் சிலுப்பிவிட்டுப் போனாள்.
அதை ரசித்துச் சிரித்தான் தியாகு. “ஆளை வச்சு எப்பிடிச் சமாளிக்கிறீங்க கோகுல்? சும்மா இருக்க விடாம இருத்தி எழுப்புவாளே.” என்று கேட்டான்.
கோகுலனுக்கு மெய்யாகவே இதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அப்படியான பிரியந்தினியை அவன் உணர்ந்தது குறைவு. ஆரம்ப நாட்களில், தன் சேட்டையை அவள் காட்ட ஆரம்பித்தது உண்மைதான். ஆனால், அவர்களுக்குள் சின்னதும் பெரிதுமாய் உண்டான பிரச்சனைகளில், அது வெளிவந்த வேகத்திலேயே காணாமல் போயிருக்க வேண்டும் என்று, இப்போது தோன்றிற்று.
அவனுக்குப் பதில் சொல்லும் சிரமத்தைத் தராமல், “சித்தாப்பா, கடற்கரைக்குக் கூட்டிக்கொண்டு போறீங்களா?” என்று, உறங்கவைக்க முயன்ற தாயிடமிருந்து தப்பித்துக்கொண்டு ஓடிவந்தான் துருவன்.
“ஓ.. போவமே. குளிக்கிறது எண்டாலும் குளிக்கலாம்.” என்றபடி, அவன் துருவனோடு புறப்பட, சாம்பவனும் சேர்ந்துகொண்டான். “நீங்களும் வாங்கோவன் அண்ணா.” தியாகுவையும் அழைத்தான்.
“நீங்க போயிட்டு வாங்கோ கோகுல். நானும் கொஞ்சம் சரிஞ்சு எழும்பப் போறன்.” என்று அவனுக்குப் பதிலளித்துவிட்டு, “துருவன், குழப்படி(குறும்பு/ சேட்டை) செய்றேல்ல. சித்தப்பாவோட கவனமாப் போயிட்டு வரவேணும்.” என்று மகனையும் அனுப்பிவைத்தான்.
“நானும் வாறன். சும்மா காலாற நடப்பம்.” என்று தானும் சேர்ந்துகொண்டார் கஜேந்திரன்.
அவரால் வேகமாக நடக்க முடியாது என்பதில், சாம்பவனும் துருவனும் முன்னே சென்றுவிட, அவருக்கேற்ப தன் நடையை மெதுவாகப் போட்டான் கோகுலன்.
அவனுக்கு என்னவோ அவர் தன்னிடம் தனியாகப் பேசப் பிரியப்படுவதுபோல் தோன்றியது.
அது சரியே என்பதுபோல், “அண்டைக்கு உங்கள சங்கடப் படுத்திற மாதிரி நான் ஏதாவது கதைச்சிருந்தா மனதில வச்சிருக்காதீங்கோ தம்பி. ஒரு தகப்பனா, அதுவும் ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர தகப்பனா, அவவின்ர வாழ்க்கை நல்லாருக்கோணும் எண்டுற ஆதங்கத்தில ஏதாவது கதைச்சிருப்பன். ஒரு காலும் இல்ல. நல்ல வருமானமும் இல்ல. அதாலயோ என்னவோ மனதில தைரியமும் இல்ல. பிள்ளையின்ர வாழ்க்கை என்னாகுமோ எண்டு ஒரே யோசனையும் கவலையும்.” என்றவரின் வார்த்தைகளைக் கேட்டவனுக்கு மனதில் கஷ்டமாயிற்று.
அவனுக்கும் அவளுக்குமிடையில் தான் ஆயிரம் பிரச்சனைகள் என்றால் அவர்கள் இருவராலும் அவர்களைப் பெற்றவர்களுக்கும் கவலையும் யோசனையும்.
“விடுங்கோ மாமா. அதெல்லாம் ஒண்டும் இல்ல.” என்றான் ஆறுதலாக.
“இப்ப ஒரு கவலையும் இல்லை தம்பி. ஆனா, அண்டைக்கு உங்களிட்ட வந்திட்டுத் திரும்பி வரேக்க, ‘இந்த வாழ்க்கை எனக்கு நிலைக்கும் எண்டுற நம்பிக்கை இல்லை அம்மா’ எண்டு பிள்ளை சொல்லி அழவும் துடிச்சுப் போனோம் தம்பி. தைரியமான பிள்ளை. லேசுல கலங்க மாட்டா. அவவே அப்படிச் சொன்னா எங்கட நிலமைய யோசிச்சுப் பாருங்கோ. பிறகு தாய்க்காரிதான் ஆளைச் சமாளிச்சு, புத்தி சொன்னவா. பிள்ளையும் கெட்டிக்காரி. விளங்கிக்கொண்டு நல்ல முடிவும் எடுத்திட்டா. இப்பதான் எங்களுக்கு நிம்மதியா இருக்கு.” என்று அவர் பாட்டுக்குச் சொல்லிக்கொண்டு போக, அவன் நடை ஒருமுறை தடுமாறி அடங்கிற்று.
இந்த வாழ்க்கை நிலைக்காது என்றெண்ணிக் கலங்கும் அளவுக்கு, அவளை மனதளவில் துன்புறுத்தியிருக்கிறானா அவன்? அவனால் நம்பவே முடியவில்லை. அப்படி அவளைத் துன்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டு எதையும் செய்யவில்லை என்பது அவனுக்குத் தெரியும். அது அவனால் முடியாத காரியமும் கூட! ஆனால், அவனறியாமலேயே அவளை அந்த நிலைக்குக் கொண்டு வந்தானோ?
அடிப்பதும் குத்துவதும் தான் கொடுமையா? மனதளவில் வதைப்பதும் தானே? அதனால்தான், அவள் இங்கு வருகிற முடிவையும் எடுத்திருக்க வேண்டும். அதனால் தான், அப்படியான வார்த்தைகளையும் அவனிடம் கொட்டியிருக்கிறாள். தலை வெடித்துவிடும் போலிருந்தது. தன்னைச் சாதாரணமாக வைத்திருக்க மிகவுமே சிரமப்பட்டான்.
கோட்டையின் மீதும் கடலின் மீதும் கவனம் இருந்ததில், அவனிடம் தெரிந்த தடுமாற்றத்தைக் கவனிக்கத் தவறினார் கஜேந்திரன்.

