என் பிரியமானவளே 19 – 3

“தம்பி, மகன் மாதிரி நினைச்சு உங்களிட்ட நான் வைக்கிற கோரிக்கை ஒண்டே ஒன்றுதான். ரெண்டுபேரும் காலாகாலத்துக்கும் சந்தோசமா வாழவேணும் தம்பி. அந்தளவும் தான். எங்களுக்கு வேற ஒண்டும் வேண்டாம். நாங்க உங்கள எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டோம். இனி எங்களுக்குச் சாம்பவன் மட்டும் தானே. அவனைப் படிப்பிச்சு விட்டா அவனே அவனின்ர வாழ்க்கையைப் பாப்பான். அத நான் செய்வன். அதால பிள்ளைக்கு இனி ஒரு கடமையும் இல்ல.” என்று அவர் சொல்லவும் குன்றிப்போனான்.

 

அவன் நடையும் நின்றுபோயிற்று.

 

அவள் என்னவென்றால் இவனோடெல்லாம் வாழமுடியாது என்கிற அளவுக்குப் போயிருக்கிறாள். இவர் என்னவென்றால், ‘நீ எங்களுக்கு எதுவும் தரவேண்டாம், என் மகளோடு மட்டும் சந்தோசமாக வாழ்ந்துவிடு, அது போதும்’ என்கிறார்.

 

அதற்குமேல் முடியாமல், “மாமா பிளீஸ்! என்னைப் பாத்தா உங்களுக்கு அவ்வளவு பெரிய கொடுமைக்காரன் மாதிரி இருக்கா?” என்று வினவினான்.

 

“அச்சோ தம்பி, என்ன இது? நீங்க அருமையான பிள்ளை..” மீண்டும் தான் ஏதும் கூடுதலாகக் கதைத்துவிட்டோமோ என்று தடுமாறினார் அவர்.

 

“பிறகு ஏன் மாமா இப்பிடி எல்லாம் சொல்லுறீங்க? வாய்க்கு வாய் என்னை உங்கட மகன் மாதிரி எண்டு சொல்லிப்போட்டு இப்பிடிக் கதைச்சா? நான் கோபப்பட்டது உண்மைதான். கொஞ்சம் கடுமையாக் கதைச்சதும் உண்மைதான். அதுக்குக் காரணம் உங்கட மகள் என்னோட வந்திருக்கவேணும் எண்டுறதும், நானும் அவளும் சந்தோசமா வாழவேணும் எண்டுறதும் மட்டும் தான். மற்றும்படி, உங்களை ஒதுக்கி வைக்க நினைக்கேல்ல. என்ர மனுசின்ர குடும்பம் எனக்குச் சுமையும் இல்ல.” என்றவனுக்கு மனப்பாரம் அடங்கமாட்டேன் என்றது.

 

“நாளைக்குச் சாம்பவன் ஏதும் பிழை செய்தாலும் இப்பிடித்தான் ஒதுங்கிப் போவீங்களா மாமா?” என்றவனின் கேள்விக்கு அவரிடம் பதில் இல்லாது போயிற்று.

 

அவனுக்கும் மேலே என்ன பேசுவது, சொல்லுவது என்று தெரியாத அளவில் நெஞ்சம் கனத்துப் போயிற்று. அன்று, பிரியந்தினி அப்படி வெடித்தபிறகும் அவனைப் பார்த்து இப்படி வார்த்தைகளை விட்டுவிட்டாளே என்று நினைத்தானே தவிர, தன் பக்கத் தவறு என்ன, தான் எந்தளவில் அவர்களைக் காயப்படுத்தியிருக்கிறோம் என்பதை யோசிக்கவில்லை.

 

இன்றோ, அவனால் எதையும் யோசிக்கக்கூட முடியவில்லை.

 

இருவரும் அமைதியாகவே நடந்தனர். சாம்பவனும் துருவனும் கண்ணுக்குத் தெரியும் தூரம் வந்ததும், “உங்களை எல்லாம் நிறையப் பயப்படுத்தி இருக்கிறன் எண்டு தெரியுது மாமா. இனி அந்த நிலமை வராது. அதே மாதிரி யதி.. உங்கட மகள் என்ன எல்லாம் அவளின்ர குடும்பத்துக்குச் செய்ய ஆசைப்படுறாளோ அத்தனையும் நானும் சேர்ந்து செய்வன். நீங்க எத நினைச்சும் கவலைப்பட வேண்டாம்.” என்றதும், இப்போது அவரின் நடை நின்றுபோயிற்று.

 

கண்ணோரம் கசிந்துவிட, என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியாது தடுமாறினார். அவன் கையைப் பற்றிக்கொண்டு, “போதும் தம்பி. இந்தளவும் போதும் எனக்கு. நிம்மதியா இருக்கு. சந்தோசமா இருக்கு.” என்றார் மனம் நிறைந்து தளும்ப.

 

 

error: Alert: Content selection is disabled!!