என் பிரியமானவளே 20 – 1

பெண்கள் மூவரும் இவர்களின் படுக்கை அறையைப் பிடித்திருக்க, துருவனும் சாம்பவனும் விருந்தினர் அறைக்குச் சென்றிருந்தனர். கஜேந்திரன், தியாகு, கோகுலன் மூவரின் படுக்கையும் விறாந்தைக்கு வந்திருந்தது. மற்ற இருவரும் உறங்கிப் போயிருந்தனர். கோகுலன் மட்டும் மனதுக்குள் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான்.

 

இந்த வாழ்க்கை நிலைக்காது என்றெண்ணிக் கலங்கும் அளவுக்கு அவளைக் கொண்டுபோயிருக்கிறான் என்கிற அதிர்ச்சி இன்னுமே நீங்க மாட்டேன் என்றது. இப்போது, யோசிக்க யோசிக்க, தான் முதலில் இருந்தே அப்படித்தான் நடந்திருக்கிறோம் என்பது புலனாகியது.

 

கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, வார்த்தைகளை விட்டு, அவளை அழவைத்து என்று நிறையச் செய்திருக்கிறான். அவனிடம் பேசுகிறபோதெல்லாம் தயங்கித் தயங்கித்தானே பேசுவாள். தியாகுவிடம் போல் சண்டைக்கு நிற்பதோ, மல்லுக்கட்டுவதோ இல்லையே.

 

முதன் முதலாக அவனோடு பேசியபோது, ‘பெருசா ஒண்டும் இல்ல. எனக்குச் சில விசயங்கள் உங்களிட்ட முதலே சொல்லவேணும். கலியாணம் முடிஞ்சபிறகு சொல்லி, அது பிரச்சனை ஆகக்கூடாது தானே.’ என்று, தன் எதிர்பார்ப்பை, விருப்பை அவ்வளவு தெளிவாகச் சொன்னவளை,

 

‘அது.. அப்பிடிச் சொல்லுறவையத்தான் நீங்க போய்க் கேக்கவேணும். உயிர் வாழுறதுக்கு அத்தியாவசியமான முதல் விசயமே சாப்பாடுதான். குறைஞ்சது ஒரு நாளைக்கு மூண்டு தரம் சாப்பிடுறோம். அப்பிடி, எங்கட அத்தியாவசியத் தேவையான சாப்பாட்டையே சமைக்கத் தெரியாம, ஒரு நாளைக்குக் குறைஞ்ச பட்சம் மூண்டு தடவைக்கு இன்னொருத்தரத் தங்கி வாழ்ந்துகொண்டு, நான் சொந்தக்காலில நிக்கிறன், சுயமா வாழுறன் எண்டு பெண்ணியம் பேசுறது எல்லாம் எவ்வளவு கேவலம் சொல்லுங்கோ? என்ர அடிப்படைத் தேவைகளையாவது என்னால பூர்த்தி செய்ய முடிஞ்சாத்தான் அதுக்குப்பெயர் சொந்தக்காலில நிக்கிறது. சுயமா வாழுறது. நான் சொந்தக் காலில நிக்கிற ஆள்.’ என்று ஆணித்தரமாகத் தன் கருத்தை எடுத்து வைத்தவளை,

 

‘சிறப்பான காரியம் தானே செய்து இருக்கிறீங்க. அதுவும் பள்ளிக்கூடத்தில படிச்ச காலத்தில. அதுதான் பெருமையாச் சொல்லுறீங்க போல!’ என்று தைரியமாக அதட்டியவளை, என்ன நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறான்.

 

திருமணமான அன்று, அவன் கொழும்புக்கு உடனேயே வரமுடியவில்லை என்றபோது, ‘என்னால வேலைய விடேலாது எண்டுதான் சொன்னனான் கோகுல். மற்றும்படி நீங்க உடனேயே கொழும்புக்கு வரவேணும் எண்டு இல்ல. எனக்கும் தெரியும் தானே எங்கட வேலைகளைப் பற்றி’ என்று எவ்வளவு இதமாக அவன் நிலையைப் புரிந்துகொண்டாள்.

 

அன்று, அவள் கோபம் கொண்டிருந்தால்? அதையே ஒரு பிரச்சனையாக மாற்றியிருந்தால்? அப்படிச் செய்யாமல், அவனை விளங்கி இணக்கமாக நடந்தவளைத்தான் திருமணமாகி மூன்றாம் நாளே கண்ணீர் வடிக்க வைத்தான். அன்றிலிருந்து ஆரம்பித்திருக்கிறது அவனுடைய ஆட்டம். எப்போது குளிர்வான், எப்போது சுடுவான் என்றே தெரியாமல் அவளைப் படுத்தியிருக்கிறான். என்னைவிட உனக்கு வேலை முக்கியமா, நான் சொல்வதை நீ கேட்க மாட்டாயா, நான் என்ன உன் கெடுதிக்கா சொல்கிறேன் என்று எல்லாவற்றிலும் நான் நான் நான் என்று நின்றவன், அவளைப் பற்றி, அவளின் உணர்வுகளைப் பற்றி யோசிக்கவே இல்லையே?

 

அதற்குமேல் முடியாமல் மனம் புழுங்கத் தொடங்க, சத்தமில்லாமல் எழுந்து வெளியே வந்தான். பனி பொழிந்துகொண்டு இருந்தது. ஈரலிப்பைச் சுமந்திருந்த காற்றுக்கூட அவன் நெஞ்சத்தின் புழுக்கத்தை ஆற்றமாட்டேன் என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு போனது.

 

என் கணவன் எனக்காக நிற்கமாட்டான், என் வாழ்க்கைக்காக நான் தான் போராட வேண்டும் என்று ஒரு பெண் முடிவு எடுக்கிறாள் என்றால், அங்கே, அந்தக் கணவன் பேருக்கான கணவனாக அல்லவோ மாறிப்போகிறான். தன்னை மிகவும் மோசமானவனாக உணர்ந்தான் கோகுலன்.

 

இப்படிச் சுடுநீராக வார்த்தைகளைக் கொட்டிவிட்டாளே, இனி எப்படி அவளின் முகம் பார்ப்பேன் என்று நினைத்திருந்தான். அவளுக்குத்தான் அவன் முகம் பார்க்கப் பிடிக்காத அளவுக்கு வெறுத்துப் போயிருக்கிறது. என்னவோ, அவன் மிகவுமே சிறுத்துப்போனதுபோல் ஒரு உணர்வு. அவர்கள் யாரின் முகத்தையும் பார்க்க முடியும் போலில்லை. இவ்வளவு நடந்தும் எவ்வளவு நாசுக்காக அவனைக் கையாண்டார் கஜேந்திரன்.

 

இயற்கையின் நிறங்களைத் தனக்குள் விழுங்கி, கருமையைப் போர்த்தியிருந்த அந்த இரவைப்போலவே, அவன் மனமும் முகமும் இருண்டு கிடந்தது.

 

 

error: Alert: Content selection is disabled!!