இது எல்லாவற்றையும் தனக்குள் போட்டுப் புதைத்துக்கொண்டு, அடுத்தநாள், ஒரு வேனை ஹயருக்கு அமர்த்தி, எல்லோரையும் அழைத்துக்கொண்டு ஊர் சுற்றிக் காட்டினான். காலிக் கோட்டை, கடற்கரை, சிவன் கோவில், கோட்டையின் அருகிலேயே அமைந்திருக்கும் பெரிய மைதானம், ஹிக்கடுவை பீச், காலி டவுன் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. உணவையும் வெளியிலேயே முடித்துக்கொண்டனர். துருவனுக்கும் சாம்பவனுக்கும் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லாமல் போயிற்று. நாள் முழுக்கக் கோகுலனின் மடியையே தன் இருப்பிடமாக்கிக் கொண்டிருந்தான் துருவன். இத்தனை காலமாகச் சித்தியின் செல்லமாக இருந்தவன், இப்போது, சித்தப்பாவின் செல்லமாகவும் மாறிப்போனான்.
கஜேந்திரன், அற்புதாம்பிகை, தியாகு, சாந்தினி என்று அனைவருக்குமே கோகுலன் மீது மிகுந்த திருப்தி. இத்தனை நாட்களும், அவனைக் குறித்து, ஒருவிதப் பயமும் பதட்டமும் அவர்களைச் சூழ்ந்துதான் இருந்தது. இந்த இரண்டு நாட்களும் பக்கத்திலேயே இருந்து பார்த்ததில் அதெல்லாம் அகன்றிருந்தது. இவ்வளவு காலமாக, உறவின்படி சொந்தமாய் இருந்தவன், இப்போது, அவர்களின் மனதிற்குள்ளும் உறவினனாக நெருங்கியிருந்தான்.
மனதில் நிறைவுடனேயே புறப்பட்டுச் சென்றனர்.
…………
அன்று, பிரியந்தினி அவனின் நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் நாள். இருவரும் ஒன்றாகவே தயாராகிப் புறப்பட்டனர். பைக்கில் செல்கையில், ஒரு மெல்லிய படபடப்பு அவளுக்குள் தொற்றிக்கொண்டது. வேலை எப்படி இருக்குமோ, சகபாடிகள் எப்படி அமைவார்களோ, இவன் வேறு அங்கே இருக்கிறானே என்று, முதல் நாள் பள்ளிக்குப் போகும் மாணவியின் நிலையில் இருந்தாள் அவள்.
பைக்கின் கண்ணாடி வழியே அவளைக் கவனித்தான் கோகுலன். உதட்டின் மேலே முத்து முத்தாய் அரும்பியிருந்த வியர்வை அவளின் நிலையைச் சொல்லிற்று. பைக்கைக் கொண்டுபோய் அதற்கான இடத்தில் நிறுத்தினான். அவள் இறங்கியதும், “பயப்பிடுறதுக்கு ஒண்டும் இல்ல. கொழும்பில, ஆரையும்(யாரையும்) தெரியாத இடத்திலேயே தைரியமா வேலைக்குப் போன உனக்கு, இங்க என்ன தடுமாற்றம்? இங்க இருக்கிறவன் எல்லாரையும் எனக்குத் தெரியும். நீ என்ர வைஃப் எண்டு அவேக்கும் தெரியும். அதவிட, எல்லாருமே நல்ல பிரெண்ட்லிதான்.” ஹெல்மெட்டை கழற்றி அவளுடையதோடு சேர்த்துப் பைக்கில் வைத்தபடி சொன்னான் அவன்.
பதில் எதுவும் சொல்லாதபோதும் அவளுக்கு மனதின் படபடப்புக் குறைந்து போயிற்று.
அலுவலகம் சென்று, முறைப்படியான அலுவல்களை முடித்துக்கொண்டு, அவளுக்கான பிரிவுக்கு அழைத்துச் சென்றான். அது, முதல் மாடியில் இருந்தது. படியேறி, இடப்பக்கமாகத் திரும்பி, நீண்ட கொரிடோரில் நடந்து செல்கையில், எதிர்ப்பட்டவர்களின் விசாரிப்பும், முகமன்னும் அங்கே அவனுக்கான மதிப்பைச் சொல்லிற்று.
பெரிய கதவு ஒன்று விரியத் திறந்துகொண்டதும், கேபின்களாக பிரிக்கப்பட்ட அவளுக்குப் பழக்கப்பட்ட உலகம் ஒன்று கண்முன்னே விரிந்தது.
அடுத்த வினாடியே, கேபின்களுக்குள் புதைந்துகிடந்த அத்தனை உருப்படிகளும் ஒன்றாய்ச் சேர்ந்துவந்து அவளின் முன்னே நின்றனர். “வரவேண்டும் வரவேண்டும் மகாராணியார் வரவேண்டும்! இந்த மகிழ்மதி உங்களுக்காய் நீண்ட வருடங்களாகத் தன் சோபையை இழந்து காத்திருக்கிறது!” என்றபடி அவளின் முன்னே பூங்கொத்தை நீட்டினர்.
இனிமையாய் அதிர்ந்து பயந்தவள் கோகுலின் கையைப் பற்றினாள். அவளின் அதே கையைத் தானும் பற்றி அழுத்தம் கொடுத்துவிட்டு, “டேய்! ஏன்டா பயப்பிடுத்திறீங்க அவளை.” என்றான் சிரிப்பும் அதட்டலுமாக.
“எங்கள் மகாராணியை நாங்கள் வரவேற்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத இந்த அற்ப பதர் யார்?” என்றபடி முன்னே வந்தான் ஒருவன்.
“ம்.. அவளின்ர மனுசன்!” என்றான் இவன் பல்லைக் கடித்துக்கொண்டு. “காட்டுமிராண்டிகள் மாதிரி கோரஸ்பாட்டு பாடிப்போட்டு வரவேற்றவையாம்.” என்று அவன் முதுகிலேயே ஒன்று போட்டான்.
இவளிடம் திரும்பி, “இவன்தான் உனக்கு ஹெட். பெயர் அஸாம். அநியாயத்துக்கு நல்லவன். என்ன சும்மா அதட்டுவான். அதையெல்லாம் நீ காதிலேயே விழுத்தாத.” என்றுவிட்டு, அப்படியே அங்கிருந்த எல்லோரையுமே ஒவ்வொருவராய் அறிமுகம் செய்துவைத்தான். முதல் வருடத்து மாணவிக்குப்போல், நடப்பதே தெரியாமல் குட்டி ரேக்கிங் ஒன்று நடந்துமுடிந்தது, அவளிடத்தில் முகம் கொள்ளாப் புன்னகையை மலர வைத்தது. பயமும் அகன்று ஆசுவாசமானாள்.
“ஓகே கைஸ்! ஓபி அடிச்சது போதும். வேலைய ஆரம்பிங்க!” என்ற அஸாமின் குரலில், தேனீக்கள் தமக்குள்ளேயே ரீங்காரமிட்டபடி கலைந்துபோயின.
“பிரியந்தினி, நீங்க வாங்க நாங்க ஒரு கோப்பி குடிச்சிட்டு வருவம்!” என்று அவளை அழைத்தான் அஸாம்.
“அவள் உன்னைவிடச் சின்னப்பிள்ளைதான். வா போ எண்டே கதை. முதல், அவளை வேலை செய்ய விடு. அதுக்கு முதல் கேபின காட்டு.” என்றான் கோகுலன்.
“கோப்பி குடிக்கிறது தான்டா முதல் வேலையே. முதல் உனக்கு இங்க என்ன அலுவல்? வெளில போ வெளில போ!” என்று அவனை விரட்டி அடித்தான் அஸாம்.

