காலிக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள் பிரியந்தினி. நெஞ்சுக்குள் தாங்கொணா பாரம் கிடந்து அழுத்தியது. அவர்களின் பார்வைக்கு மறைய முதல், மனமே இல்லாமல் கையை ஆட்டி விடைபெற்றுப் போனவனிலேயே அவளின் எண்ணங்கள் நின்றது. பெற்றவர்களும் பக்கத்திலேயே நின்றதில், “போயிட்டு வாறன். கவனமா இரு என்ன.” என்று அவளின் கரத்தைப் பற்றி அழுத்தியவனின் தேகச்சூடு, இன்னுமே, அவள் கையிலிருந்து அகன்று போயிருக்கவில்லை.
உள்ளங்கையைப் பிரித்துப் பார்த்தாள். ஏனடா என்னைப்போட்டு இந்தப்பாடு படுத்துகிறாய் என்று கத்தவேண்டும் போலிருந்தது. அவளருகில் வெறுமையாகக் கிடந்த சீட்டில்தான் சிலமணி நேரங்களுக்கு முன் அமர்ந்திருந்தான். அன்னை தந்தையிடம் கூடப் பெரிதாகப் பேசவில்லை. என்னவோ, முதல் நாள் பள்ளிக்கூடத்துக்குப் போகவே மாட்டேன் என்று சிணுங்கும் மகனைப்போன்று, அவளின் கையை மட்டும் பிடித்துக்கொண்டு வந்தான்.
இந்த மனம் என்பது விசித்திரங்களால் மாத்திரமே கட்டமைக்கப்பட்டதுதான் போலும். இல்லாமல், அவன் அருகில் இருக்கிறவரை அவன் மீதான மனஸ்தாபங்களைச் சுமந்து திரிந்தவள், பிரிந்து சென்ற கணத்தில், அவனுக்காக ஏன் இப்படித் துடிக்கிறாள்? நான் நினைத்ததைத்தான் நீ செய்ய வேண்டும் என்று அடம்பிடித்துச் செய்ய வைத்தவன் அவன். கோபம் என்பது அவனுடைய மிகப்பெரிய குறை. கோபம் வந்துவிட்டால் வார்த்தைகளால் வதைத்துவிடுவான். இத்தனை குற்றச்சாட்டுகள் அவன் மீது இருந்தும், இப்படி, அவனுக்காகத் துடிக்கிற அவளை என்ன செய்ய?
மெல்லிய குலுக்களுடன் வாகனம் நின்றபோதுதான் வீட்டுக்கு வந்துவிட்டதை உணர்ந்தாள். இனி, பழையபடி தனிமையில் கிடந்து வேகவேண்டும். ஒரு பெரிய மூச்சுடன், தன் கைப்பை சகிதம் இறங்கிக்கொண்டாள். அவனே வாகனத்துக்கான பணத்தைக் கொடுத்துவிட்டதில் ஒரு தலையாட்டலுடன் விடைபெற்று வீட்டுக்கு வந்தவளை, வாசலில் நின்ற புத்தம் புது ஸ்கூட்டி ஒன்று சிரித்தபடி வரவேற்றது.
ஒருநொடி நடை நிற்க விழிகளை விரித்தாள். மறு வினாடியே அதனருகில் விரைந்தாள். யார் இதை இங்குக் கொண்டுவந்து வைத்தது? அவனாகத்தான் இருக்கும் என்று மனம் பரபரப்புடன் அடித்துச் சொன்னது. எப்படிச் செய்தான் என்றுதான் புரியவில்லை. அதன் தலையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ரிப்பனில் ஒற்றை ரோஜாவும் ஒரு கார்ட்டும் தொங்கியது. காதல் கடிதம் அனுப்பி இருக்கிறானோ? உதட்டோரம் நெளிந்த சிறு சிரிப்புடன் அதை எடுத்துப் பிரித்தாள்.
ஹாய் யதி,
ஸ்கூட்டியை பாத்ததும் சந்தோசமா இருக்கா? வேலைக்குப் போய்வர உனக்கு ஈஸியா இருக்கும் எண்டுதான் வாங்கினான்.
பிடிச்சிருக்குத்தானே………?
கோகுலன்
என்று எழுதியிருந்தான்.
அவ்வளவுதானா என்று ஏமாற்றம் ஒன்று அவளைத் தழுவியது. விழிகளில் கண்ணீரின் பளபளப்பு. ‘பிடிச்சிருக்குத்தானே’ என்பதற்குப் பக்கத்தில் அத்தனை புள்ளிகள் எதற்குப் போட்டானாம்? பிடித்திருக்கிறதுதானே என்று எதை அல்லது யாரைக் கேட்டானாம். அன்புடன், நேசத்துடன், காதலுடன் குறைந்த பட்சமாய், ‘வித் லவ்’ கூட இல்லாமல் வெறும் கோகுலன் ஏன்?
‘பிடிச்சிருக்கு கோகுல்’ என்றவளின் விரல்கள் நடுக்கத்துடன் அவன் பெயரை மெல்ல வருடின. திறப்பு எங்கே? முதல் இதை யார் கொண்டுவந்து வைத்திருப்பார்கள் என்று அவள் யோசிக்கையிலேயே பதிலைச் சொல்வதுபோல், அஸாம் என்கிற பெயருடன் அவளின் கைபேசி சிணுங்கிற்று.
“உங்கட வேலைதானே இது?” என்கிற கேள்வியோடுதான் அழைப்பையே ஏற்றாள்.
“இல்லமா. உன்ர மாப்பிள்ளையோட வேலை.” சிரித்துக்கொண்டு சொன்னான் அஸாம்.
‘ம்க்கும்! என்ர மாப்பிள்ளை செய்றதை எல்லாம் செய்துபோட்டு நல்ல பிள்ளைக்கு நடிப்பான்.’ என்று தனக்குள் நொடித்துக்கொண்டாலும், மனதில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கிற்று. வேலைக்கு எப்படிப் போய்வருவேன் என்று அவளே யோசிக்கவில்லை. ஆனால், அவன் யோசித்து அதற்கான ஏற்பாட்டைச் செய்திருக்கிறான்.
“ஸ்கூட்டின்ர திறப்பு உன்ர ஹாண்ட் பேக்கிலேயே இருக்காம். இன்னும் ஒண்டு என்னட்ட இருக்கு. நாளைக்கு ஒபீஸ் வா, தாறன். வேற என்ன உதவி தேவை எண்டாலும் யோசிக்காமச் சொல்லு.” என்று அவன் சொல்லிக்கொண்டு போக, ‘அடப்பாவி, எனக்கே தெரியாம என்ர ஹாண்ட் பேக்ல வச்சவனா?’ என்கிற திகைப்புடன் பரபர என்று தேடினாள். அங்கே, உள்ளே இருந்த சிப்புக்குள், சிவப்பு நிற இதயத்தைக் கைகளில் ஏந்தி நிற்கும் குட்டி டெடிபேர் கீச்செயினுடன், ஸ்கூட்டியின் திறப்பு அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது.
“தேங்க்ஸ் ப்ரோ!”
“வெல்கம் டார்லிங்!” என்றான் அவன் பொங்கி வழியும் சிரிப்புக் குரலில்.
“காணும்! வைங்க!” என்று அதட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். இந்த நொடியே அவனோடு பேசவேண்டும் போலிருந்தது. முடியாது, இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டும் என்று, அவளின் கைக்கடிகாரம் சொல்லிற்று.
ஆசையாக அந்த ஸ்கூட்டியை வருடிக்கொடுத்தாள். அவளுக்கு எப்போதுமே கண்ணைப் பறிக்கும் நிறங்கள் பிடிப்பதில்லை. எப்படியோ அவன் அதைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். இல்லாமல், அவளுக்குப் பிடித்த சாம்பலும் கருப்பும் கலந்த வண்ணத்தில் ஸ்கூட்டி வாங்கியிருக்க மாட்டான். அவன் மீது பொங்கிய நேசத்தை அந்த ஸ்கூட்டிக்கு முத்தமாய் மாற்றினாள்.
கண்ணீர் சற்றே அடங்கியிருக்க வீட்டின் கதவைத் திறந்தாள். வெறுமை வந்து முகத்தில் அறைந்தது. மீண்டும் துளிர்க்கப் பார்த்த கண்ணீரை அடக்கிக்கொண்டு அறைக்குள் ஓடினாள். அங்கே, அவனுடைய பிம்பங்கள் தான் வரவேற்றன. அவன் படுத்து எழும்பிய கட்டில், குளித்துவிட்டுத் துடைத்துப் போட்டிருந்த டவல், வீட்டுக்கு அணிந்திருந்த ஷோர்ட்ஸ் என்று மீண்டும் பார்வையைக் கலங்களாக்கினான்.

