என் பிரியமானவளே 22 – 2

ஒரு பிடிவாதத்துடன் அவனைச் சற்றே தள்ளி வைத்துவிட்டு, குளித்து, சாப்பிட்டு, வீட்டினரோடு பேசி, ஒரு பிரச்சனையும் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறார்களா என்று ஜெயராணிக்கு அழைத்துக் கேட்டுவிட்டு, அவள் உறங்கி எழுந்தபோது, அவன் அழைத்தான். என்னவோ இன்றுதான் அவனிடம் முதன் முதலாகப் பேசப்போவது போன்று படபடப்புத் தொற்றிக்கொண்டது. திருமணம் நிச்சயம் செய்த அந்த நாட்கள் நெஞ்சில் மின்ன ஆரம்பிக்க, அழைப்பை ஏற்றவளுக்கு அவன் விழிகளைச் சந்திக்கச் சிரமமாயிருந்தது.

 

“வீட்டை போயிட்டியா?” என்றான் தன் பார்வையை அவள் முகத்திலேயே மொய்க்க விட்டபடி.

 

“வந்து நித்திரையயும் கொண்டு எழும்பிட்டன்.”

 

“இப்பிடி வீடியோ கோல்ல கதைக்கப் பழைய ஞாபகம் எல்லாம் வருது.” என்றான் அவன். அவள் உதட்டைப் பற்றித் தன் உணர்வுகளை அடக்க முயன்றாள். அவன் பார்வை ஒருமுறை அவளின் இதழ்களுக்குச் சென்று வந்தது.

 

“பிறகு?” என்றான் எதிர்பார்ப்புடன்.

 

ஸ்கூட்டியை பற்றி அவளாகவே சொல்லவேண்டும் என்று அவன் எதிர்பார்ப்பது புரிந்தது. சொல்லாமல் செய்தவனுக்கு அவள் மட்டும் அவன் கேட்காமலேயே சொல்ல வேண்டுமோ? மனம் சிலுப்பிக்கொள்ள, “பிறகு என்ன?” என்று திருப்பிக் கேட்டாள்.

 

அவளின் மிதப்பான பாவனையில் அவன் கண்கள் சிரித்தது. கண்களோடு சேர்ந்து உதட்டிலும் மென்னகை மலர்ந்தது. பிரியந்தினியின் மனம் தடுமாற ஆரம்பித்தது.

 

‘இப்பிடிச் சிரிக்காதடா! இந்தச் சிரிப்பில மயங்கி நான் பட்ட பாடெல்லாம் போதும்!’ என்று சொல்ல நினைத்தவளுக்கு வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டன.

 

“பிடிச்சிருக்கா?” என்றான் மனதை மயக்கும் ஆழ்ந்த குரலில்.

 

அவள் விழிகள் தானாகவே தரை நோக்கித் தழைந்தன. தலை இல்லை என்று ஆடியது.

 

“ஸ்கூட்டியை தானே.”

 

“நீங்க எதைக் கேட்டீங்களோ அதை.”

 

அவன் முகம் வாடிப்போயிற்று. “உண்மையாவே பிடிக்க இல்லையா யதி? வெறுத்திட்டியா?” என்றான் கரகரத்த குரலில்.

 

அவள் விழிகள் தானாகவே கலங்கிற்று. அவனை வெறுக்க முடியுமா என்ன? அவளை அவன் புரிந்துகொள்ளவில்லையே என்கிற ஆதங்கம் தானே தவிர வெறுப்பு? அவனை வெறுத்துவிட்டு அவளால் எப்படி வாழமுடியும்?

 

“நான் கொஞ்சம் கோவக்காரன் தான். ஆனா கெட்டவன் இல்ல யதி. சுயநலக்காரன் இல்ல. இப்ப இங்க வந்தது கூட எனக்கும் உனக்கும் எண்டு ஒரு சொந்த வீடு வாங்கவேணும் எண்டுற ஆசையில தான். உனக்கான தனி உலகத்தைப் பற்றி நான் யோசிக்காம விட்டுட்டன் தான். ஆனா எனக்கான உலகத்தையும் நான் யோசிக்க இல்ல. நமக்கு நல்லம் எண்டு நினைச்சுத்தான்..” என்றவன் மேலே பேச முடியாமல் தன் கேசத்தைக் கோதிவிட்டுக்கொண்டான்.

 

மனத்தைக் கொட்ட முடியாமல் தடுமாறுகிறவனை ஒரு திகைப்புடன் பார்த்தாள் பிரியந்தினி. ஏனோ அவள் விழிகள் கலங்கின. அதைக் கவனித்துவிட்டவன், “நான் இருக்கிற வீட்டை பாக்கப் போறியா?” என்று கேட்டுச் சுற்றிக் காட்டினான். அவள் கொழும்பில் இருந்தது போன்ற ஒரு குட்டி வீடு. பாத்ரூம் கிட்சன் எல்லாம் தனித்தனியாக இருந்தது.

 

“வசதியா இருக்குதானே?”

 

“ம்! நீயும் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் எண்டு சொல்ல ஆசைதான். இருந்தா மட்டும்..” என்றுவிட்டு அவன் நிறுத்த, அவள் முறைத்தாள்.

 

“என்ன முறைப்பு? குழந்தை வேணும் எண்டா வா எண்டு கூப்பிட்டவள் தானே நீ. என்னைப் பாத்தா அவ்வளவு கேவலமானவனா இருந்ததா யதி? உன்னில ஆச கடலளவு இருக்குத்தான். அதுக்காக?” என்றான் குமுறலாக. “இல்ல கிடைக்கிற நேரமெல்லாம் உன்னட்ட ஓடி வந்ததால அப்பிடி நினைச்சியா?”

 

அவளுக்கு முகம் கன்றிப் போயிற்று. “சொறி!” என்றாள் முணுமுணுப்பாக. அவன் பேசாமல் இருக்கவும், “என்னையும் கொஞ்சம் யோசிங்கோ. மனதில நிம்மதி இல்ல, கட்டினவரோட சந்தோசமா வாழ வழி இல்ல. எப்ப கதைக்க ஆரம்பிச்சாலும் சண்டை மட்டும் தான் மிஞ்சுது. இதுல அம்மாவும் மகனும் பிள்ளை வேணும் பிள்ளை வேணும் எண்டு நிண்டா நானும் என்ன சொல்ல? உண்மையிலேயே நான்தான் பிழையோ எண்டு எனக்கு என்னிலேயே சந்தேகம் வந்திட்டுது. வாழ்க்கையே வெறுத்துப் போயிட்டுது. என்னத்துக்கடா கலியாணத்தைக் கட்டினேன் எண்டு நிறையத்தரம் யோசிச்சு இருக்கிறன். தனியா இருந்திருக்க நிம்மதியா வாழ்ந்து இருப்பேனோ எண்டு எல்லாம் நினைச்சிருக்கிறன். எதுக்காகவும் விட்டுடக்கூடாது எண்டு நினைச்ச வேலையையும் விட்டுட்டு வந்த கோபத்தில..” என்றவளுக்கு இப்போது மேலே பேசமுடியாமல் குரல் கரகரத்துப் போனது.

 

இருவருக்குள்ளும் நிறையக் காயங்கள். பிரிவு மனதை நெகிழ்த்தியிருந்தாலும் காயங்களைக் கடந்து வரமுடியாமல், இருவரிடம் இருந்தும் கோபங்கள் குமுறல்களாக வெளிவர ஆரம்பித்து இருந்தது.

 

சற்று நேரம் இருவராலும் மேலே பேச முடியவில்லை.

 

“அதாலதான் என்ன வெறுத்திட்டியா?” என்றான் அவன் மெல்ல.

 

கலங்கிய விழிகளோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் அவள்.

 

எதை உணர்ந்தானோ காதல் பொங்க காற்றில் ஒரு முத்தத்தைப் பறக்கவிட்டான். அவளின் முகம் மெதுவாய்ச் சிவக்க ஆரம்பித்தது.

 

 

 

 

error: Alert: Content selection is disabled!!