என் பிரியமானவளே 23 – 1

கோகுலன் சொன்ன அந்தச் சிங்கள ஆச்சி, அன்று இரவே இவளோடு தங்குவதற்கு ஆயத்தமாக வந்து சேர்ந்திருந்தார். தனியாக இருக்கிறோம் என்கிற பயம் அகன்றிருந்தபோதும், அவன் இல்லாமல் பிரியந்தினிக்கு இரவிரவாக உறக்கமே இல்லை. அதேபோல, காலையில் நேரத்துக்கே விழிப்பும் வந்திருந்தது.

 

நேரத்தைப் பார்ப்போம் என்று கைபேசியை எடுத்தபோது, கோகுலனிடம் இருந்து நிறையக் குறுஞ்செய்திகள் வந்திருப்பதாக, கைபேசித் திரை காட்டியது. புருவங்களை உயர்த்தினாள். நேராகவே பேசாமல் எதற்கு மெசேஜ்? அவளைக் காட்டிலும் அவனுக்கு இரண்டரை மணித்தியாலங்கள் முன்னே செல்வதால், அவன் எழுந்த நேரத்துக்கு அவள் உறங்கிக்கொண்டு இருப்பாள் என்று குறுந்தகவல் அனுப்பினானோ? இப்போது, அவன் வேலைக்குப் போயிருப்பானாயிருக்கும் என்று எண்ணங்கள் அதன்பாட்டுக்கு ஓட, புலனத்தைத் திறந்தாள்.

 

சாதாரண மெசேஜ் அல்ல வொயிஸ் மெசேஜ். காலை நேரத்துச் சோம்பல் போன இடம் தெரியாமல் ஓடி மறைந்தது. எழுந்து, கட்டிலில் சாய்ந்து அமர்ந்துகொண்டு முதலாவது மெசேஜை பிளே செய்தாள்.

 

“குட் மோர்னிங் யதி! எழும்பிட்டியா?”அவன் குரலில் தெரிந்த அதிகாலை நேரத்துக் கரகரப்பு அவளின் தேகத்தில் சிலிர்ப்போட வைத்தது.

 

“இங்க கிளைமேட் சில் எண்டு இருக்கு. வீட்டிலேயே இருந்த கோப்பி மெஷின்ல ஒரு கோப்பி ஊத்தினன். நல்லாவே இல்ல. கசந்து வழியுது. வேற வழி இல்லாம குடிக்கிறன்.” அதைக் குடித்துக்கொண்டே பேசுகிறான் என்று புரிந்துகொண்டவளின் உதட்டோரோம் மெல்லிய முறுவல்.

 

“முதல்நாள் வேல. எப்பிடி இருக்குமோ தெரியாது. போனாத்தான் தெரியும். இன்னும் அரை மணி நேரத்தில வெளிக்கிட வேணும்.” எதையோ சொல்ல வந்துவிட்டு முடியாமல் சுற்றி வளைக்கிறான் என்று புரிந்தது.

 

“என்னடா புதுசா வொயிஸ் மெசேஜ் எண்டு யோசிக்கிறியா? வேற வழி? எனக்கு என்ர மனுசின்ர கண்ணப் பாத்துக் கதைக்கத் தைரியம் இல்லை எண்டு வையேன்.” என்றபோது அவன் குரலில் தெரிந்த சிரிப்பு, அவள் உதட்டோரமும் அதை மலர வைத்தது. இதை அவள் நம்ப வேண்டுமாமா? நடிக்கிறான்!

 

“நிறைய விசயம் உன்னோட மனம் விட்டுக் கதைக்கவேணும் எண்டு நினைப்பன். சிலநேரம், நான் நினைக்கிறதை சரியான முறைல எனக்குச் சொல்லத் தெரியறது இல்ல. சிலநேரம் நான் சொல்லுறதை நீ எப்பிடி எடுப்பியோ எண்டுற தடுமாற்றம். நீ வேற முகத்தைப் பாக்காத, சிரிக்காத, கதைக்காத எண்டு சொல்லிட்டியா, அது வேற என்ர வாய அடச்சிட்டுது. உன்ன விட்டுட்டு இங்க வரவே விருப்பம் இல்ல. ஆனா, இந்தப் பிரிவு உன்னை நானும் என்னை நீயும் விளங்கிக்கொள்ள, எங்களுக்க இருக்கிற மனஸ்தாபங்கள் தீர நல்ல வழியோ எண்டு மனதில பட்டது. எப்பவுமே பிரிவுதான் அன்பை ஆழமா வளக்கும். அப்பிடி எங்களுக்கும் நடக்கட்டுமே. அதுதான், உயிரையே பிரியிர மாதிரி வலிச்சாலும் வந்து சேர்ந்திட்டன்.” என்றதோடு முதல் மெசேஜ் முடிந்திருந்தது.

 

அடுத்ததை அழுத்தமுதல் தன்னைக் கொஞ்சம் சமன்படுத்திக்கொள்ள அப்படியே விழிகளை மூடிக்கொண்டாள். அவனுடைய குரலும் பேச்சுக் கடத்திய உணர்வுகளும் அவளுக்குள் புகுந்து, அவனது அலைவரிசையோடு அவளை இணைக்க முயன்றது.

 

ஒரு பெருமூச்சுடன் அடுத்ததை அழுத்தினாள்.

 

“சீதனம் தரமாட்டாளாம் எண்டு ஒரு பொம்பிளைப் பிள்ளையே துணிஞ்சு சொல்லியிருக்கிறாள் எண்டுற ஒரு விசயத்திலேயே உன்னப் பாக்காம, நீ எப்பிடி இருப்பாய் எண்டு தெரியாமலேயே உன்னப் பிடிச்சிட்டுது யதி. இதுவரைக்கும் சொன்னது இல்ல. ஆனா, மனதுக்க ஒரு குறுகுறுப்பு. நீ எப்பிடி இருப்பாய்? திமிர் பிடிச்சவளா? இப்பவே இவ்வளவு ரூல்ஸ் போடுறவள் நாளைக்குக் கட்டி வந்து என்னை இருத்தி எழுப்ப மாட்டாளா எண்டு நிறைய..” எனும்போதே, இங்கே யார் யாரை இருத்தி எழுப்பினார்களாம் என்கிற கேள்வி உண்டாகி அவளின் உதட்டோரத்தில் மீண்டும் ஒரு சிரிப்பைத் தோற்றுவித்தது.

 

“உன்ர ஃபோட்டோ பாத்ததும் நான் சத்தமா சிரிச்சிட்டன். பள்ளிக்கூடக் காலத்திலேயே உன்ன பெரிய எடுப்பு பிடிச்சவள் எண்டு நினைச்சிருக்கிறன். ஏனோ அந்த, ‘எடுப்பு பிடிச்சவள’ தவற விட மனம் இல்ல. ஓகே சொல்லிட்டேன். நீயும் எனக்கு ஓகே சொல்லுற வரைக்கும் நான் நானாவே இல்ல. எல்லாமே சரிவந்து உன்ன பாக்க வந்தனான்..” என்றதோடு அந்த மெசேஜ் முடிந்திருந்தது.

 

அவன் குரலைப்போலவே அவள் மனமும் கனத்துப் போயிற்று. உண்மையிலேயே அன்று அவள் செய்தது மிகப்பெரிய தவறு. இன்றுவரையான பிரச்சனைகள் அனைத்துக்கும் ஆரம்பப் புள்ளி அதுதான். இணைந்து பயணிக்க ஆரம்பித்த அவர்களின் பாதையின் முதல் தடைக்கல்லாக அதுதான் அமைந்து போயிற்று.

 

error: Alert: Content selection is disabled!!