என் பிரியமானவளே 23 – 2

“எனக்கோ உனக்கோ எதிர்பாலினம் புதுசு இல்ல யதி. படிச்ச பள்ளிக்கூடத்தில இருந்து, கம்பஸ்ல இருந்து, இப்ப வேலை வரைக்கும் நண்பர்கள் நண்பிகள் எண்டு நிறைய இருக்கு. நிறையப்பேரோட சகஜமா பழகி இருக்கிறோம். நிறையப்பேரக் கடந்து வந்திருக்கிறோம். ஆனாலும், எனக்கே எனக்கு எண்டு கடவுள் உன்னப் படச்சு என்னட்டத் தந்திருக்கிறார் எண்டுற ஆசையோட உன்னப் பாக்க ஓடி வந்தனான். ஆனா அங்க நடந்தது, உண்மையாவே எனக்கு அது பெரிய அவமானமா இருந்தது. இண்டைக்கு வேணுமெண்டால் நான் அதை வேறமாதிரி கையாண்டு இருப்பேனா இருக்கும். ஆனா அண்டைக்குக் கண்மண் தெரியாத கோபம் வந்தது. நீ என்னை அவமானப்படுத்தின மாதிரி இருந்தது. நான் உனக்கு முக்கியமில்லையா, அவ்வளவு ஈஸியா உன்னால என்ன மறக்க முடிஞ்சதா? அந்தளவு சாதாரணமா போயிட்டேனோ எண்டு நிறையக் கேள்விகள். அவள் உன்ன ஒரு பொருட்டாவே நினைக்கேல்ல. நீயோ அவளைப் பாக்கிறதுக்கு ஓடி வந்திருக்கிறாய் எண்டு, எனக்கே என்னை நினைக்கக் கேவலமா இருந்தது. அது எனக்கு விழுந்த மிகப்பெரிய அடி யதி. அந்த நேரம் நான் உனக்கு ஒரு ஹீரோவா இருக்கவேணும் எண்டு என்ர மனம் எதிர்பார்த்திருக்க வேணும். உன்ர செய்கை நீ எனக்கு ஸீரோடா எண்டு சொன்னமாதிரி இருந்தது..” அதோடு முடிந்திருந்தது அந்தக் கிளிப்.

 

ஒருவித அதிர்ச்சி தாக்க, அசையக்கூட மறந்தவளாக அப்படியே அமர்ந்திருந்தாள் பிரியந்தினி. அன்றைய தன் செய்கை அவனைப் பாதித்திருக்கும் என்பது அவள் அறிந்ததுதான். ஆனால், இந்தளவுக்கு, அவனுடைய தன்மானத்தையே ஆழமாகச் சீண்டியிருக்கும் என்று நினைக்கவே இல்லை. பலமுறை அவன் கோபப்பட்டபோது, இவன் என்ன காரணமே இல்லாமல் இப்படி சிடுமூஞ்சியாக இருக்கிறானே என்று குழம்பி இருக்கிறாள். இன்று, காரணத்தைத் தெளிவாக உணர முடிந்தது.

 

அடுத்த கிளிப்பை அழுத்தவே பயந்தாள். கேட்காமல் அவனை விளங்கிக்கொள்ள முடியாதே.

 

“யதி, தயவு செய்து உன்ன நான் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்க நினைக்கிறதா நினைச்சிடாத. என்னை விளங்கப்படுத்தப் பாக்கிறன். என்னுடைய கோபங்களுக்கான காரணங்களைச் சொல்லப் பாக்கிறேன். அவ்வளவுதான்..” என்றதோடு ஆரம்பித்திருந்தது அந்தக் கிளிப். “நீ காலிக்கு வராதவரைக்கும் அவளுக்கு அவ்வளவு திமிரா எண்டுறது மட்டும் தான் மண்டைக்கப் பேய் மாதிரி நிண்டு ஆட்டினது. வேற நான் யோசிக்கவே இல்ல. அந்தக் கோபம் தான், பாமினின்ர கலியாணத்தில கூட உன்னை ஒதுக்க வச்சது. நீ வேலைய விட்டுட்டு வந்தது பெரிய அதிர்ச்சி. அதேநேரம் அளவே இல்லாத சந்தோசம். அதோட, எங்களுக்க இருந்த பிரச்சினை எல்லாமே முடிஞ்சுது. இனி நாங்க சந்தோசமா இருக்கலாம் எண்டு நினைச்சன். அப்பிடி இல்லை எண்டு நீ முகத்தில அடிச்ச மாதிரி சொன்னதும் தான் யோசிக்க ஆரம்பிச்சன். காலிக்கு வந்த நேரம் மாமாவும் என்னோட கதைச்சவர். அப்பதான், உன்ன மனதளவில் எந்தளவு காயப்படுத்தி இருக்கிறன், நோகடிச்சிருக்கிறன் எண்டு விளங்கினது.” அதோடு அந்தக் கிளிப் முடிந்திருக்கவில்லை. நீண்ட நெடிய மௌனத்தைச் சிரமப்பட்டுக் கடந்தபிறகு மீண்டும் கேட்டது அவன் குரல்.

 

“உன்ன விட வயசில பெரியவனா இருந்தாலும், கலியாண வாழ்க்கை எனக்கும் புதுசுதானே. அதுதான் கொஞ்சம் தடுமாறிட்டன். ஆனா, நீ என்ன விடச் சின்னவளா இருந்தாலும் எப்பவும் பக்குவமாத்தான் நடந்திருக்கிறாய் எண்டு இப்ப விளங்குது. ‘கொழும்புக்கு வந்தே ஆகவேணும்’ எண்டு எண்டைக்குமே நீ சண்டை பிடிச்சதே இல்ல. நீ காலிக்கு வந்ததும் நான் இப்ப இங்க வந்து நிக்கிறன். இப்பகூட, நீ என்னைப் போகக் கூடாது எண்டு சொல்லவே இல்ல. நான் தான் அவசரப்பட்டு, வார்த்தைகளை விட்டு, உன்ன காயப்படுத்தி.. உண்மையா சொறியடி.” என்றான் ஆழ்ந்த குரலில். அவளுக்குக் கண்கள் கலங்கிப் போயிற்று. இதுதானே அவன். தவறு என்று புரிந்துகொண்டால் வீம்பு பிடிப்பதில்லை. உடனேயே தன் கம்பீரம் குறையாமல் மன்னிப்பைக் கேட்டுவிடுவான்.

 

“இப்ப யோசிச்சு பாத்தா எல்லாத்தையும் வேற மாதிரி ஹேண்டில் பண்ணியிருக்கலாமோ எண்டு இருக்கு. நடந்தத மாத்த என்னால ஏலாது. ஆனா..” என்றவன் மெல்லச் சிரித்தான். அந்தச் சிரிப்பு அவளுக்குள் புகுந்து என்னென்னவோ மாயங்களை நிகழ்த்தும்போதே அவன் தொடர்ந்து பேசினான். “இப்ப சொன்னா கொஞ்சம் கேவலமாத்தான் இருக்கும். எண்டாலும் சொல்லுறன் கேளு யதி. சில்லென்று ஒரு காதல் படத்தில வாற சூர்யா மாதிரி, இங்க பாக்கிற இடமெல்லாம் கண் உன்னத்தான் தேடுது.” என்றவன் கடைசியாகப் பதித்திருந்த ஆழ்ந்த முத்தத்தில் உதட்டைக் கடித்துக்கொண்டு தலையணையில் முகத்தைப் புதைத்திருந்தாள் பிரியந்தினி.

 

மனமும் உடலும் அவனுடைய அருகாமையைத் தேடிற்று. காற்றோடு காற்றாகப் பறந்து, இப்போதே அவன் கைகளுக்குள் புகுந்துகொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

 

 

error: Alert: Content selection is disabled!!