அன்று மட்டுமல்ல அதன் பிறகும் தினமும் ஏதோ ஒரு குறுஞ்செய்தி அவனிடமிருந்து வந்தது. அவனைப் பற்றியதாய், அவன் மனதில் இருக்கிற அவளைப் பற்றியதாய் என்று ஏதோ ஒன்றைச் சொல்லி, அவள் உலகத்தை அழகாக மாற்றிக்கொண்டிருந்தான். அவள் தனக்கு எவ்வளவு முக்கியம் என்று சொன்னான். அவளைத் தன் மனம் எந்தளவுக்குத் தேடுகிறது என்று சொன்னான். தன் தவறுகளை அவனே சுட்டிக் காட்டினான். இப்படி நிறைய நிறைய. இப்போதெல்லாம் இன்றைக்கு என்ன அனுப்பியிருக்கிறான் என்கிற எதிர்பார்ப்புடனேயே அவளின் நாட்கள் ஆரம்பித்தன.
“வேலையால வந்த களைப்பு இருந்தாலும், அவசரம் அவசரமா சமைச்சு எனக்குச் சாப்பாடும் தந்து, கட்டியும் தந்த என்ர யதிய இப்ப எல்லாம் மனம் நிறையத் தேடுது. காலிக்கு வந்த பிறகும் உன்ர கைப்பக்குவம் மாறவே இல்ல. ஆனா, எனக்கு ருசி தெரியவே இல்ல. பரிமாறுற சாப்பாட்டுல இருக்கிற டேஸ்ட்ட விட, பரிமாறுற ஆள் எங்கள்ல வச்சிருக்கிற பாசம் தான் ருசிய கூட்டும் போல.” என்று ஒருநாள் அவன் அனுப்பியதைக் கேட்டு கண்ணீரே வந்திருந்தது அவளுக்கு.
சில நேரங்களில் பதில்கள் கூட எதிரில் இருக்கிறவரை மனம் திறக்காமல் செய்துவிடும் என்பதில் எதற்குமே அவள் பதில் சொல்லப் போகவில்லை. அவனைப் பேசவிட்டாள், மனம் திறக்க வைத்தாள்.
வீடியோ கோலில் பார்க்கையில் இருவருமே மற்றவரைப் பார்த்துக் கண்ணால் சிரித்துக்கொண்டனரே தவிர, குறுஞ்செய்தி பற்றி வாயே திறக்கவில்லை. வாழ்க்கையில் இது ஒரு வித்தியாசமான அனுபவம். நன்றாக இருந்தது. அவர்களுக்கிடையிலான தூரம் நீண்டு கிடந்தாலும் மனதளவில் மிகவுமே நெருங்கிப் போயிருந்தனர்.
———————–
பாமினிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. அவளையும் குழந்தையையும் பார்ப்பதற்காகச் சாம்பவனோடு திருகோணமலைக்கு வந்திருந்தாள் பிரியந்தினி. மகளின் பிள்ளைப்பேற்றினைப் பார்ப்பதற்காகப் பாமினியுடனேயே வந்து தங்கியிருந்த ஜெயராணிக்கு, அவளைப் பார்த்ததும் ஒரு குற்றவுணர்ச்சி ஆட்கொண்டது. எவ்வளவு கதைத்தார், எப்படியெல்லாம் முகம் காட்டினார். இன்றைக்கு, மகன் அவளை விட்டுவிட்டு சிங்கப்பூர் சென்றும், தன்னிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருக்கும் அவளிடம், என்ன சமாதானம் சொல்லுவார்? தன்னால் முடிந்ததாக அக்கா, தம்பி இருவரையும் நன்றாகக் கவனித்துக்கொண்டார்.
இத்தனை நாட்களாகக் குழந்தை பற்றிய பெரிய கற்பனைகள் பிரியந்தினிக்கு இருந்ததில்லை. தன்னைக் குறித்தான பிரச்சனைகளே போதுமாக இருந்தது. இன்றைக்குப் பட்டுப்போன்ற துணியில், பஞ்சுக் குவியலாகக் கிடந்த, அந்தக் குழந்தையின் தேகம் அவளின் நெஞ்சில் மோதியபோது, உள்ளிருந்து ஒரு ஏக்கம் உருவாகிற்று. விலக மனமே இல்லாமல், அந்தக் குழந்தையுடனேயே நேரத்தைச் செலவழித்துக்கொண்டு இருந்தாள்.
கவனியாததுபோல் கவனித்துக்கொண்டிருந்த ஜெயராணிக்கு மிகுந்த சந்தோசம். இனியும் எப்போது பிள்ளை பெற்றுக்கொள்ளப் போகிறாய் என்று கேட்க அவருக்குத் தைரியமில்லை. இப்படி ஆசையை ஊட்டலாமே. அதில், அவருமே குழந்தை அவளிடமே இருப்பதுபோல் பார்த்துக்கொண்டார்.
எப்போதும் பாமினி செய்வதை இந்தமுறை சாம்பவன் செய்திருந்தான். வீடியோ கோலில் தன் அத்தானை அழைத்து, பிரியந்தினியிடம் பேசக்கொடுத்தான்.
பாமினியின் குழந்தையை மார்பில் தாங்கியபடி இருந்தவளையே அவன் விழிகள் ரசித்தன. இயல்பாய் மனம் தன் குழந்தையோடு அவளை இணைத்துப் பார்த்தது. கணவனின் பார்வையில் தெரிந்த மாற்றத்தில் அவனை நிமிர்ந்து பார்க்கத் தடுமாறினாள் பிரியந்தினி. மனம் இயல்பாய்த் தனக்கானதை தன்னவனிடம் இருந்து எதிர்பார்த்தது.
“எப்ப வந்தனீ?”
“இப்ப கொஞ்சத்துக்கு முதல்தான்.”
“பாமினி சுகமா இருக்கிறாளா?”
“ம்..”
இருவரின் உதடுகளும் இப்படிப் பேசிக்கொண்டாலும் கண்கள் நான்கும் வேறு பேசின.
அவனாக ஏதாவது சொல்வானா என்று பொறுத்து பொறுத்துப் பார்த்தாள் பிரியந்தினி. எல்லோரைப்பற்றியும் பேசியவன் அவர்களுக்கான ஒரு குழந்தையைப் பற்றி மட்டும் வாயே திறக்கவில்லை. அன்றைய அவளின் பேச்சினால், அவனாக அதை ஆரம்பிக்க மாட்டான் என்று தெரிந்து போயிற்று.
சாம்பவன் போகும்போது அறையின் கதவையும் சாற்றிவிட்டுச் சென்றிருக்க, “எனக்கும் இப்பிடி ஒரு குழந்தை வேணும்.” என்றாள் குழந்தையின் பட்டுக் கன்னத்தை விரல்களால் வருடிக்கொடுத்தபடி.
ஆனந்தமாக அதிர்ந்தான் கோகுலன். அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை. முகம் பார்த்துச் சிரிப்பதற்கே தடை போட்டவளாயிற்றே. “எனக்குக் கேக்க இல்ல.” என்றான் விழிகள் சிரிப்பில் மின்ன.
அவள் வாயைத் திறந்து சொன்னதே பெரிய விசயம். இதில், அவனுக்குக் கேட்கவில்லையாம். நிமிர்ந்து முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அவளின் அந்தக் கோபத்தை ரசித்தபடி, “ஒண்டு காணுமா?” என்றான்.
“ஏன், என்னைக் காலத்துக்கும் வீட்டிலயே இருத்தி வைக்கிற பிளானா?”
“ஆனா எனக்கு ரெண்டு வேணுமே.”
“ரெட்டைப் பிள்ளை வந்தாத்தான் உண்டு.” என்றாள் அவள் அவன் முகம் பாராமல்.
“ஏற்பாடு செஞ்சா போச்சு!” உல்லாசமாகச் சிரித்தபடி சொன்னான் அவன்.

