பெரியவர் கதைக்க முடியாது திண்டாடி நின்றாரென்றால், எல்லோருக்குமே அதிர்ச்சி தான்!
இலக்கியாவோ கணப்பொழுது சுவாசிக்கவும் மறந்து நின்றாள். ஏரியில் முதன் முதல் அவனைக் கண்டதிலிருந்து ஒவ்வொன்றும் நினைவில் வர, உண்மையாகவே சாரதி இல்லாததால் வந்தானோ என்றதிலும் சந்தேகம் வந்திட்டு.
“தம்பி என்ன நீங்க? ஒரு வார்த்த சொல்லாமல்.” நாதனுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை.
“அங்கிள் அங்கிள்… இப்ப என்ன நடந்திட்டு, முதல் இதில என்ன இருக்கு? டிரைவரா வந்தாலும் உங்களில ஒருவரா நடத்தினிங்க. அதுதான் எனக்கும் பிடிச்சிருக்கு. யாழ் ட்ரவல்ஸ் என்ர தாத்தா தொடங்கினது. அதை வச்சு உங்களோட அறிமுகம் செய்யிறத விட இப்பிடி அறிமுகம் ஆனதுதான் எனக்குச் சந்தோசம்.” என்றவன் பார்வை தவறாது இலக்கியாவை நாடியது. அவளும் இவனையே தான் பார்த்துக்கொண்டு நின்றாள்.
சாதாரண நிலையில் உள்ளவனாக அறிமுகமாகி அவளிதயத்தை வசப்படுத்தியிருந்தானே! அதில் அவனுக்கு வெகுவான திருப்தி! தன்னை, தனக்காகவே ஒருத்தியோ ஒருவனோ விரும்பி ஏற்பதென்பது கசந்திடும் விசயமா என்ன?
அவளில் நிலைத்த பார்வை விலகேன் என்று நிற்க அவன் பார்வையைத் தொடர்ந்து எல்லோர் பார்வையும் இலக்கியின் பக்கம் திரும்பியது. சட்டென்று தன் பார்வையைக் கையிலிருந்த பேசிக்குத் தணித்துவிட்டு நின்றாளவள். என்றாலும் படீர் படீரென்று அடித்த இதயம் அருகில் நின்றவருக்கு அவளைக் காட்டிவிடுமோ என்ற அச்சம் வேறு!
அவளின் தத்தளிப்பு இவன் உதடுகளில் மலர்வை உற்பத்தியாக்கிச் சென்றது. அது போதாதென்று, “அட! தம்பியும் அப்ப நம்மட ஆக்கள்! ராசா!” பெரியவர், வேந்தனின் கன்னத்தை வருடியபடி சொல்ல, வாய்விட்டே சிரித்துவிட்டான்.
கொஞ்சம் முதல் வரை அவனைத் தீண்டத்தகாத பிறப்புப் போல் பார்த்தாரே!
“ஹா…ஹா…பாட்டி… பாட்டி!” என்றவன், அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை.
பெரியவர் சட்டென்று அப்படிச் சொன்னதில் மற்றவர்களுக்குமே சிரிப்புதான்.
“திவி…” பெரியவர் பேத்தியை தன்னருகில் வரும் படி அழைத்த வினித், “ஃபோட்டோல காட்டச் சொன்ன ஆள் இவாதான்!” வருங்காலத் துணையை அறிமுகம் செய்துவைக்க, முறுவலோடு சில வார்த்தைகள் கதைத்தான், வேந்தன்.
“வீட்ட வந்து நிண்ட இவ்வளவு நேரத்துக்கு ஒரு வார்த்தை கதைக்கேல்ல, அது மட்டும் இல்ல, ஏதோ நெருப்பில நிக்கிறது போல நிண்டவர், பெரிசா சாப்பிடவும் இல்ல. சாப்பிட்ட கையோட வெளிக்கிட வச்சதும் இவர்தான்.” அவள் குற்றப்பத்திரிக்கை வாசித்ததில், தன்னை எல்லோரும் கவனித்திருப்பது புரிந்தது, வேந்தனுக்கு.
அவள் சொன்ன தோரணையில் வாய்விட்டே சிரித்தவன் பார்வை பெரியவரில்.
“அப்ப நீங்க ஆர் எண்டு எனக்கும் தெரியாது.” விசமமாகச் சொல்லவும் செய்தான்.
பெரியவரோ, “தம்பி பொல்லாதது!” சிரித்தார்.
“நான் எத்தின தரங்கள் உங்கட அம்மாவோட…ஆன்டியோட கதைச்சன். அவரும் சொல்லேல்லையே!” இப்படிச் சொன்னாலும் அவன் பற்றி அறிந்ததில் மிகவுமே மகிழ்ந்து போயிற்று, கவியின் உள்ளம்.
வேந்தன் பதில் சொல்லவில்லை; முறுவலோடு நாதனைப் பார்த்து, “வெளிக்கிடுவம் அங்கிள்.” என்றுவிட்டு, “டோய் நீயும் வாற தானே?” வினித்திடம் கேட்க, “ஓமோம், அதுக்குத்தானே அவசரம் அவசரமா வந்தன்.” என்றவன், “உங்கட காரிலேயே போகலாம்.” பெரியவர் மகனிடம் சொல்ல, “அப்ப இலக்கியாவும் ஆருரனும் இதிலேயே வாங்க.” இயல்பாகச் சொல்லிவிட்டுச் சாரதியாசனத்தை நிறைத்தான், வேந்தன்.
அவளுக்காக மட்டுமே வரிசை கட்டி நின்ற அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு வந்தால், சிறு பொழுதேயென்றாலும் வேறு வாகனத்தில் வருவதா என்ற முனகலில் கிடந்த மனம் இபோதுதான் அமைதி கொண்டது.
“நல்ல சம்பந்தம்…கவிக்குப் பேசலாம்!” பெரியவர் சுகுணாவின் காதில் குசுகுசுத்தார்.
“பா…பாப்பம்…நீங்க கவனமா இருங்க பெரியம்மா, உடம்பப் பாத்துக்கொள்ளுங்க!” விடை பெற்ற சுகுணாவின் பார்வை, ஆருரனைப் பிடித்திழுத்துவிட்டு முன்னால் ஏறியமர்ந்த பெரிய மகளில்!