ரோசி கஜனின் இயற்கை – 28 – 4

இப்படியே ‘லொஸ் வேகஸ்’ வந்தடைய மதியம் ஒன்றைத் தொட்டிருந்தது. சுகுணாவின் பெரியதாயார் வீட்டுக்குச் செல்லும் வழியில், நவீன கட்டிடங்களோடு பரபரப்பாகவிருந்த லொஸ் வேகசின் வண்ணமயமான கட்டிடங்களின் அழகை இரசித்தபடியே சென்றார்கள்.

“இரவு நேரத்தில கண்கொள்ளாக் காட்சியாக  இருக்கும்.” வேந்தன் ஆரம்பிக்கவே, ” அது நாங்களும் கூகிளில பாத்திட்டம், வேற ஏதாவது புதுசாத் தெரிஞ்சா சொல்லுங்கோ!” இலக்கியா.

பட்டென்று திரும்பியவன் முகம் முழுதும் முறுவல். காலையிலிருந்து இதற்காகவே காத்திருந்தானே!

“எங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவும் தான், நீங்களே மிச்சத்தச் சொல்லுங்கவன்.” என்றான், கிண்டலோடு.

“ஹலோ! இப்ப என்ன சொல்ல வாறீங்க? எனக்கு லொஸ் வேகேஸ் பற்றி ஒண்டும் தெரியாது எண்டா? இங்க பாருங்க, இதுக்கு முதல் கன தரம் வந்திட்டம் சரியோ! அம்மாட ஒண்டுவிட்ட அண்ணா…அதான் இப்ப போய்க்கொண்டிருக்கிறமே அவேட்ட வந்திருகிறம். அதால நீங்க சொல்லுற கதை ஒண்டும் இங்க எடுபடாது.” என்றவள், தமக்கை திரும்பி முறைத்ததையும் கணக்கில் எடுக்கவில்லை. 

அவள் சொன்ன விதத்தில் எல்லோர் முகத்திலும் சிரிப்பு!

“இவ்வளவு தூரம் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு இடமாக் காட்டிக்கொண்டு வர அவேட கதையைப் பாருங்கோ தம்பி.” என்றார் நாதன். 

“சித்தப்பா, இவரோ ஒவ்வொரு இடமும் காட்டினவர்? டரைவ் பண்ணினதுதான் இவர். ஆர் வந்திருந்தாலும் நாங்க பார்த்துத்தான் இருப்பம்.” அவள் சொல்லி முடிக்கவில்லை, “இந்தா திரும்பத் தொடங்கீட்டாள்.” வெளிப்படையாகவே முணுமுணுத்தாள் கவி. 

அதேநேரம், “இந்தா வந்திட்டம், அண்ணி உங்கட பெரியம்மா வெளில நிக்கிறா பாருங்க!” என்றபடி அந்தப் பெரிய வீட்டின் முன்னால் காரை  நிறுத்தினான், மாறன். அதன் பிறகு, வேறு கதைகளுக்கு இடமின்றி சிலகாலங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட சொந்தங்கள் நலவிசாரிப்புகளில் இறங்கிவிட்டார்கள்.

“சரி சரி, முதல் சாப்பிட்டுப்போட்டு மிச்சக் கதைகள் கதைக்கலாம்.” என்றார், சுகுணாவின் பெரியன்னை. வெள்ளை வெளேரென்ற தலைமுடியோடு முகத்தில் கண்டிப்போடு இருந்தாரவர். 

“ஓம் ஓம், என்னதான் விதம் விதமாச் சாப்பிட்டாலும் நாக்குச் செத்துப் போய்க் கிடக்கு!” நாதன் சொல்ல, “அதான், நம்மட சாப்பாடுகளுக்குப் பழகின ஆட்களால இலேசில மாறேலாது. பழக்க வழக்கங்களும் அப்பிடித்தான்.” என்ற பெரியன்னையின் பார்வை, வேந்தனில்.

“இவர் தான் உங்கட டிரைவரோ?” ஆராய்ச்சியாகப் பார்த்திருந்தவர் கூர்மையோடு கேட்டார். அவர்கள் வீட்டிலும் கவி, ஆரூரன் வயதையொட்டி ஆணொன்று பெண்ணொன்று என இளையவர்கள் இருக்கவே,  வந்ததிலிருந்து ஆரூரனும் கவியும் வேந்தனோடுதான் வளவளத்துக்கொண்டிருந்தார்கள். கவின் கூட அவன் மடியில்.

“ஓம் பெரியம்மா, தம்பி வந்தபடியாத்தான் பயணம் இவ்வளவு சுகமாப் போச்சு! பாதுகாப்பா உணர்ந்தம்.” தாமதிக்காது சொல்லியிருந்தார், சுகுணா.

 “ஓ! எந்த ஊர் நீர்?” நேரடியாகவே விசாரணையில் இறங்கிவிட்டாரவர். தொடர்ந்து, துருவி துருவி அவன் பற்றி விசாரிக்க விசாரிக்க, கேட்டிருந்தவர்களுக்கு உண்மையாகவே ஒரு மாதிரிப் போயிற்று. பெரியவர் சுபாவம் தெரிந்தவர்களால் ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லை.

எப்போதும் அவர் கதைகளைக் காதில் வாங்காது சென்றுவிடும் கவியால், இன்று அப்படி இருக்க முடியவில்லை. விருட்டென்று எழுந்து தாயிடம் வந்தவள், “அம்மா! இப்ப இவாக்கு ஏன் இந்த விடுப்பு எல்லாம்?” சிடுசிடுத்தாள்.

“பச்! சும்மா இரம்மா, பெரியம்மாக்குக் கேட்டிரப் போகுது.” மெல்லச் சொன்னார் சுகுணா.

“கேட்டா இப்ப என்ன?” என்றவள், “முதல் முதல் வந்திருக்கிற ஒருத்தரிட்ட இவ்வளவு விசாரணை என்னத்துக்குப் பாட்டி? வெளிநாடு வந்து இத்தின வருசமாச்சு, இன்னும் உங்கட விடுப்புக் குணம் மாறேல்ல!” படபடவென்று சொல்லிவிட்டு விசுக்கென்று உள்ளே  சென்றுவிட்டாள். 

பெரியவர் இதையெதிர்பார்க்கவில்லை; முகம் சுருங்கிப் போனார்; சுகுணாவை குற்றச்சாட்டோடு பார்த்தார். சுகுணா மட்டுமில்லை, நாதன் ஆட்களுமே அந்தரப்பட்டுப் போனார்கள். பெரியவர்,  என்னதான் வேண்டாத கதைகள் விடுப்பு என்று கதைத்தாலும் முகத்திலடிப்பது போல் கவி கதைத்ததை அவர்கள் கொஞ்சமும் இரசிக்கவில்லை, எதிர்பார்க்கவுமில்லை. 

அத்தருணத்தில், நிலைமை பிழையோ என்றுணர்ந்த பெரியவரின் மருமகள் தான், “வாங்கோ சாப்பிடலாம்; சமைச்ச சாப்பாடு திரும்பச் சூடாக்கி அதும் ஆறப் போகுது.” அவசரமாக வந்தழைத்து நிலைமையைச் சீராக்கினார். 

“இப்பத்தைய பிள்ளைகளுக்கு வாய் மட்டும் பெரிசு! சரி சரி வந்து சாப்பிடுங்கோ, ஆறுதலாப் பிறகு கதைப்பம்.” பெரியவரும் எழுந்தார்.

அவர் அப்பால் சென்றதும், “தம்பி குறையா நினைச்சிராதீங்க…” வேந்தன் கரத்தைப் பற்றியபடி ஆரம்பித்தார் நாதன்.

 “ஐயோ அங்கிள் நான் ஒண்டும் குறையா நினைக்கேல்ல. நம்மட ஆக்களத் தெரியாதா?” என்று இடையிட்டு, அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளியிட்டாலும், அதன் பிறகு, அங்கு அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. காரணம், அடிக்கடி பெரியவர் பார்வை அவனையே வலம் வந்தபடி இருந்ததுதான்.

எப்படா வெளிக்கிடுவோமென்ற உணர்வோடு சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்து நிற்க, “என்ன வேந்தன் இங்க வந்து நிக்கிறீங்க?” ஃப்ரூட்  சாலட் கிண்ணத்தை நீட்டினாள், கவி.

“இல்ல, வீட்டுக்கு ஒரு கோல் எடுக்க வேணும் அதான் வந்தன், தேங்க்ஸ்.” வாங்கிக் கொண்டவன், இடது கையிலிருந்த கைபேசியைத் தட்டிக் கொண்டிருக்க, “உங்கட அம்மாவுக்கோ, எடுத்துத் தாங்கோ, ஆன்ட்டிக்கு ஒரு ஹாய் சொல்ல.” என்றாளவள். 

 முறுவலித்தான் வேந்தன். “அதான் எடுத்துப் பார்த்தன், அம்மா எடுக்கேல்ல. வேற வேலையா நிக்கிறா போல, கொஞ்சத்தில பார்ப்பம்.” கைபேசியை அரைக்காற் சட்டைப்பைக்குள் வைத்துவிட்டு, “இன்னும் கொஞ்சத்தில நாம வெளிக்கிடச் சரியா இருக்கும்.” என்றவாறே பழக்கலவையை வாயில் வைக்க, “வேந்தன்…” அழைத்துப் பார்வையைத் தன்புறம் திருப்பியிருந்தாள்.

“ம்ம்…” என்று திரும்பியவனில் பார்வையிருக்க, “பாட்டி எப்பவும் இப்பிடித்தான் வேந்தன். குறை நினையாதீங்க.” ஆரம்பிக்க, மெல்லச் சிரித்தவன், “உண்மையாவே நான் ஒண்டும் பிழையா நினைக்கேல்ல…” சொல்லி முடிக்கவில்லை,  “நீங்க மட்டும் இங்க நிண்டுகொண்டு என்ன செய்யிறீங்க கவி? ரோட்டில நிண்டா சாப்பிடுறது, உள்ள போயிரு!” அதட்டல் போட்டபடி வந்து நின்றார், பெரியவர்.

“ஏன் பாட்டி, ரோட்டில நிண்டு சாப்பிட்டா சாப்பிடுப்படாதோ!?” அவள் வம்படியாகக் கேட்க, வேந்தனோ அமைதியாக உள்ளே நகர்ந்துவிட்டான். முறைப்போடு பின்னால் நடந்தாள், கவி.

பெரியவரோ,  தன் மருமகளோடு கதைத்தபடி நின்ற சுகுணாவை நோக்கிச் சென்றவேகத்தில், “இங்க பாரம்மா, உன்ர நன்மைக்குத்தான் சொல்லுறன் என்னதான் பிள்ளைகளில நம்பிக்க இருந்தாலும் கவனமா இரு!” என ஆரம்பித்தார், அங்கு நின்று பார்த்திரங்களை ஒதுக்க உதவிக்கொண்டிருந்த தன் பேத்தியையும் இலக்கியாவையும் பார்த்தபடி.

“பார், இவையள் இங்க நிண்டு  உதவி செய்ய, உன்ர மகள் அங்க வெளிவாசலில அந்த ட்ரைவரோட நிண்டுகொண்டு ஐஸ் குடிக்கிறாள். அவனும் பார்க்க நல்லா இருக்கிறான் சுகுணா, கவனம் சொல்லிப் போட்டன். ஆரோ எவரோ…பிறகு கண்ணீர் விட்டு ஒரு பிரயோசனமும் இல்ல.” படபடவென்று கொட்டினார்.

“அச்சோ என்ன பெரியம்மா நீங்க! அந்தத் தம்பி சரியான நல்ல பெடி!” அவசரமாகச் சொல்லியிருந்தார், சுகுணா.

“அட! அதுதான் நானும் என்ன ஏதெண்டு விபரம் தெரிஞ்சு கொள்ளக் கேட்டனான். அது பெடி பிடிகொடுக்கேல்ல பாத்தியோ! ஒண்ணும் தெரியாமல் மாட்டுப்பட்டுப்போட்டு பிறகு இருந்து யோசியாத!” அவர்களிடையே ஏதோ இருக்குது என்றபடியே தொடர்ந்தார். சுகுணாவோ திகைத்துப்போனார்.

 “நான் அந்தப் பெடியோட கதைக்கேக்க நீங்க எல்லாருமே வாய மூடிகொண்டுதானே இருந்தீங்க? அப்பிடியிருக்க, உன்ர மோளுக்கு வந்த கோவம் பார்த்த தானே? நானும் இந்தக் கொஞ்ச நேரத்தில கவனிச்சத வச்சுப்பார்த்தா அவைக்குள்ள ஏதோ இருக்கு எண்டு தான் மனம் சொல்லுது!   அதும் உன்ர  மோளிட பார்வை எந்த நேரம் அந்த டிரைவரில தான்!”

அவர் அழுத்தம் திருத்தமாகச் சொன்னதில் சுகுணா வாயடைத்து நின்றாரென்றால், இலக்கியாவோ,  நெருப்பலைகளுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் உணர்வில் தவித்துப் போனாள்.

error: Alert: Content selection is disabled!!