அப்போதும் பூச்சி ஊர்ந்த நினைவில் அருவருப்பில் முகம் கோணியது. அப்போதுதான் வேந்தன் தன்னைப் பார்த்து நகைத்தபடி நிற்பதையும் உணர்ந்தாளவள்.
“இவருக்கு….இருக்கு இண்டைக்கு!” முணுமுணுப்போடு, வெளியில் எடுத்திருந்த டொயிலட் பையை உள்ளே வைத்துவிட்டு, “மா நீங்க நடக்கேல்லையோ?” கேட்டபடி, மீண்டும் வேந்தனை நோக்க, அவனிடமிருந்து கைபேசியை வாங்கிக் கொண்டிருந்தாள், கவி.
“இவள் எங்க இங்க நிக்கிறாள்?”
“தண்ணி ஏதாவது எடுக்க வந்தாவோ! வேந்தனிட அம்மாவோட கதைக்க வாங்கிறா போல!” என்றபடி, ஒருபோத்தல் நீரைக் கையில் எடுத்துகொண்டு, “காரை லொக் பண்ணலாம்.” வேந்தனுக்குக் கேட்கும் வகையில் சத்தமாகச் சொல்லிவிட்டு, “வாங்க அக்காவையும் கூட்டிக்கொண்டு போவம். சித்தப்பா ஆக்கள் அப்பிடியே நடக்கினம் போல!” தாயோடு சேர்ந்து நடந்தவள் மனதில் வேந்தனின் அன்னையோடு கதைத்துவிடும் ஆர்வமும் இருந்தது.
இவர்கள் நெருங்க, ஒற்றைப் புருவம் உயர்த்திக் கிண்டல் பார்வை பார்த்தவன் சீண்டிவிட, “பெரிசா எல்லாம் தனக்குத்தான் தெரியும் எண்டு அலட்டுற உங்களுக்கு இந்த இடத்தில இப்பிடி இருக்குமெண்டு தெரியாதா என்ன? வேணுமெண்டு எங்கள இப்பிடிச் சரியில்லாத இடமாப் பார்த்து இறக்கி விட்டிருக்கிறீங்க என்ன? யாழ் ட்ரவல்சில சொல்லி வேலைய விட்டுத் தூக்கப் போறன் பாருங்க!” படபடவென்று சொன்னபடி சென்றாலும், அவள் கண்களில் இருந்த சீண்டல் அவனைத் தாக்கி, குறும்பாகவே பதில் சொல்லிவிடும் முனைப்பை ஏற்படுத்தியது.
அதனிடையில், மிகுந்த கலகலப்போடு அவன் தாயோடு கதைத்துக்கொண்டு நின்ற கவிக்குத்தான் தங்கையின் வார்த்தைகள் நாரசரமாக இருந்தன. ஏனோ தங்கையின் செய்கை மிகவுமே எரிச்சல் கொள்ள வைத்தது. அதோடு, வேந்தனின் தாய் வேற, “என்ன நடந்திட்டம்மா? அது ஆர்? உங்களிண்ட தங்கச்சியோ! வேந்தனுக்கோ சொல்லுறா?” என்று வேறு கேட்டாரா? கவிக்குள் எரிச்சல் முளைவிட்டு வளரத் தொடங்கியே விட்டது.
“அது ஒண்ணும் இல்ல ஆன்ட்டி, தங்கச்சிதான், பகிடிக்கு. நீங்க வேந்தனோட கதையுங்கோ, நாம பிறகு கதைப்பம் என்ன.” என்றுவிட்டு, அவன் கையில் கைபேசியைத் திணித்துவிட்டு ஓரெட்டில் தங்கையருகில் சென்றிருந்தவள், “உனக்கு என்ன விசராடி?!” சொல்லிக்கொண்டே பட்டென்று ஒரு குத்து. அதுவும் இலக்கியாவின் தோள்ப்பட்டையில்.
“அக்கா!” விண்ணென்று இறங்கிய வலியில் கண்ணீர் திரண்டு முத்தென உருள, கண்ணிமைப்பொழுதில் கன்றிப்போன முகத்தோடு, தோள் பட்டையைப் பிடித்தபடி வேந்தனைத்தான் பார்த்தாள், இலக்கியா.
கவியின் கோபத்தின் காரணம் புரியாது அவனுமே திகைத்துப் போனான்.
“ஏய் கவி இது என்ன பழக்கம், சின்னப்பிள்ளைகள் போல?” சுகுணா கண்டிக்கவும், “அம்மா நான் இரவுக்கு எடுக்கிறன்.” தாயிடம் சொல்லிவிட்டு கைபேசியை வைக்க முனைய, “பிரச்சின ஒண்டுமில்லையேய்யா?” கதைத்தவற்றைக் கேட்டவர் வினவ, “இல்ல இல்ல, இனி வெளிக்கிடவும் வேணும்மா, இரவு எடுக்கிறன்.” என்று வைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாது நின்றானவன்.
இலக்கியாவின் கலக்கமும் கண்ணீரும் அவனுள் புகுந்து கொண்டது.
‘அவள் என்னோடதானே கதைச்சுக்கொண்டு வந்தாள்? அதுக்கு இப்பிடிக் கண்டிக்கிறது எண்டா என்ன அர்த்தம்?’ குழப்பம் ஒருபுறமென்றால், தன் கண்ணெதிரில் அவள் கலங்கி நிற்கையில் அமைதியாக நிற்கவேண்டியுள்ளதே என்ற வருத்தம் மறுபுறம் வாட்டியெடுத்தது.
அங்கே கவியோ, “ஆர் சின்னப்பிள்ள போல நடக்கிறதம்மா?” தாயிடம் கேட்டவள் குரலில் அப்பட்டமாகவே எரிச்சல்.
“அங்க வேந்தன்ட அம்மா லைனில நிக்கிறா, இவள் என்ன கதைச்சுக்கொண்டு வந்தவள்? அவர் கேட்கிறார், என்ன பிரச்சினை வேந்தனுக்கோ சொல்லீனம் எண்டு!” மீண்டும் தங்கையை முறைத்தாள்.
“நான் பகிடிக்கு…” ஆரம்பித்த இலக்கியா, தமக்கையின் கையுரவும் நிறுத்திவிட்டாள்.
“அதுக்கு அளவிருக்கு எண்டு உனக்கு எத்தனையோ தரம் சொல்லியாச்சு! உனக்குத்தான் காதில ஏறுதில்ல!” கண்டித்தாள்.
“அதுக்காக நீ குத்த வேணுமாம்மா? பிள்ளைக்கு நல்லா நொந்திட்டு.” இலக்கியாவின் தோளில் தடவியபடி சொன்னார், சுகுணா.
“இதான், எல்லாரும் அளவுக்கு அதிகமா செல்லம் குடுக்க குடுக்கத்தான் இவளுக்கு எல்லாமே பகிடியாக்கிடக்கு.” சீறலைத் தொடர்ந்தாள், கவி.
இப்போது இலக்கியாவின் நெற்றி சுருங்கியது. தமக்கையின் இந்தக் கோபத்தின் காரணத்தை விளங்கிக்கொள்ள முயன்றது, அவள் மனம், அதுதான் முடியவில்லை.
“பயணம் வெளிக்கிட்ட இடத்தில தேவையில்லாமல் கதைச்சு முகத்த நீட்டிக்கொண்டு பிரச்சினைப் படாமல் ரெண்டு பேரும் நடவுங்க! அங்க பாருங்க அவையள் எங்க வரப் போய்ட்டினம்! வாங்க நடவுங்க!” சற்றே அதட்டலாகச் சொல்ல, “நான் அவா சொன்னதப் பெரிசா எடுக்கவே இல்ல. பகிடி எண்டு விளங்காதா என்ன? எத்தினையோ தடவை இதைச் சொல்லிட்டன்.” என்றபடி அவர்களை அணுகினான், வேந்தன்.
ஒரு கணம், அவன் விழிகளில் தரித்து நின்ற கலங்கிய விழிகளை விலத்திய வேகத்தில் மாறன் ஆட்களை நோக்கி ஓடினாள், இலக்கியா.
கவியும் வேந்தனைப் பார்க்கவில்லை, விருட்டென்று நடக்கத் தொடங்கிவிட்டாள்.
“நீங்க விடுங்க தம்பி, அவையல் அக்காவும் தங்கச்சியும் இப்பிடித்தான் எப்பயாவது முட்டுப்படுவினம்; பிறகு கொஞ்ச நேரத்தில கட்டிப் பிடிச்சுக்கொண்டு நிப்பினம்; இலக்கிக்கு தமக்கையில சரியான பாசம், கதைக்காமல் இராள்.” என்றவர், அப்பவும் அவன் முகம் சுருங்கி நிற்கவும், “அவள் அப்பிடிக் கத்த எல்லாரும் என்னவோ ஏதோ எண்டு பயந்திட்டம் தம்பி. கவி அந்தக் கோவத்தில ஏசி இருப்பாள்.” என்றுவிட்டு, “நாமலும் போவம் வாங்க.” அவனோடு சேர்ந்து நடந்தார்.
அவன் பார்வை முன்னே ஓடிய இலக்கியில் தான். இடையில் நின்று கண்களை அழுந்தத் துடைத்துவிட்டே அவர்களோடு சேர்ந்து கொண்டாளவள்.