மெல்ல மெல்ல மலைப்பகுதியில் கார் உள்ளிட, “ஆரூரன் வடிவா வீடியோவ எடு, இல்லையோ என்னை முன்னுக்கு விடு!” என்றாள் கவி.
“கவலப்படாதீங்கக்கா, அதெல்லாம் நாங்க வடிவா எடுப்பம். நீங்க கடைசிச் சீட்டிலையே இருங்கோ! இண்டைக்குக் கண்டீன் சேர்விஸ் நீங்கதான். கொறிக்க ஏதாவது இருந்தா முன்னுக்கு அனுப்புங்க பார்ப்பம்.” ஆரூரன்.
“டேய் உன்ன…” என்று சொன்னாலும் சிப்ஸ் பாக்கெட் ஒன்று முன்னால் நகர்ந்தது.
“அம்மாடியோவ்!” ஆச்சரியத்தில் வாயைப் பொத்திக்கொண்டாள், அஜி.
எல்லோர் பார்வையும் வெளிப்புறத்தில்! அதுவும், முன்னால் தெரியும் கண்ணாடியால் பார்க்கையில் இயற்கை அன்னையின் கெட்டித்தனத்துக்கு முன்னால் எவராலுமே நிற்க முடியாதென்பது மீண்டுமொருமுறை தெள்ளத் தெளிவாகிற்று.
“வாவ்! இது வேற ஒரு உலகம்! அங்க டாம்க்குப் பின்னால தெரிஞ்ச மலைப்பகுதிகள் எண்டு நினைக்கிறன்.” இலக்கியா சொல்ல, பட்டென்று திரும்பிப் பார்த்தான் வேந்தன்.
“ஐயோ! நீங்க இங்கால திரும்பாம ஓடுங்கோ!” கன்னமிரண்டிலும் கைகளை அழுந்த முட்டுக்கொடுத்துக்கொண்டு அவளிருந்த விதம் அவன் உதடுகளில் மலர்வைக் கொடுத்தது.
‘பயப்படுறாளோ!’ மனம் நினைக்க, “தம்பி கொஞ்சம் பார்த்துப் போங்கோ! கொட்டிக் கிடக்கிற வடிவ ரசிக்க விடுதில்ல மனம். திக்கு திக்கெண்டு இருக்கு” என்றார் ரதி.
“அதான்..” இலக்கியாவோடு, சேர்ந்து கொண்டன இன்னும் சில குரல்கள்.
“பயப்படாமல் இருங்கோ ஆன்ட்டி!” வேந்தன். அவளையும் ஒருதடவை திரும்பிப் பார்த்தான்.
“தம்பி பார்த்து.” மீண்டும் நாதன் சொல்லிவிட, அதன் பிறகு பின்புறம் திரும்ப முடியவில்லை. ‘நிச்சயமாக அவளோடு மட்டுமாக இங்க வரவேணும்.’ அவள் தன் தோள் சாய்ந்திருக்க, அவளின் சிறுசிறு பயம் கலந்த படபடப்பையும் தனதருகாமையால் விரட்டியபடி இச்சொர்க்கலோக யௌவனத்தை துளித்துளியாக இரசிக்க வேண்டுமென்ற அவா அளவின்றியெழுந்தது.
‘நாலைஞ்சு நாட்கள் இங்கயே தங்கி நிண்டு அவள்ட கையைப் பிடிச்சுக்கொண்டு மலையேறி நடந்து எண்டு களைக்க களைக்கச் சுத்தித்திரியோணும்.’ மனதில் குறித்துக்கொண்டவன் முன்னே விரிந்த இயற்கையை, பின்னால் ஒலித்த அவர்களின் பேச்சை என்று உள்வாங்கிக்கொண்டே வாகனத்தைச் செலுத்துவதில் கவனம் குவித்தான்.
“காது சரியா அடைக்குது!” ராஜியின் மகன் காதுகளிரெண்டையும் பொத்திக்கொண்டே சொன்னான்.
“ம்ம்…உயரத்தில போகப் போக அப்பிடித்தான்.” அவனை அணைத்துப் பிடித்துக்கொண்டார், சுகுணா.
“இப்ப இந்த மலைகளில இருந்து ஒரு பாறை விழுந்தா…இல்லாட்டி நிலநடுக்கம்…” ஆரம்பித்த ஆரூரன், “தம்பி!” சுகுணாவின் அதட்டலில் நிறுத்திவிட்டான்.
மேலே வானைத் தொடுமளவுக்குப் பரந்து கிடந்த செந்நிற மலைத்தொடர் அதன் பிறகு இலேசாகப் பயமுறுத்தவும் தொடங்கிவிட்டது. தெள்ளத்தெளிந்த நீல வானோடு, பச்சையில் குளித்திருந்தாலும் செந்நிறத்தை மறைக்க முடியாதென்ற இறுமாப்போடு பளிச்சென்றிருந்த மலைமுகடுகள் எந்தளவுக்கு மகிழ்வித்ததோ அதேயளவுக்கு இதயத்தைத் தடதடக்கவும் செய்வித்தன.
கரங்கள் மென் வியர்வையில் கசிந்து கிடந்தன. நெளிந்து வளைந்து ஒடுங்கிக் கிடந்த வளைவுகளில் இலாவகமாக வழுக்கிச் சென்ற வாகனமும் அருகால் அடிக்கடிச் சீறிச்சென்ற வாகனங்களும் நெஞ்சுள் மென்னதிர்வுகளை உண்டுபண்ணவும் மறக்கவில்லை.
சில இடங்களில், கற்பாறைகளைக் குடைந்தும் பாதைகளை அமைத்திருந்தார்கள். உயர்ந்து நின்ற பாரிய பாறைகளை ஊடுறுத்து வாகனம் செல்லும் உணர்வு விரிந்த விழிகளைச் சிமிட்ட வைக்கவில்லை.
“கடவுளே! இரவு நேரம் இந்த ரோட்டால போறதெண்டா என்னால முடியாதப்பா. வேந்தன், பின்னேரம் திரும்பிப் போகேக்க இந்த வழியாலயா போக வேணும்?” அஜி கேட்டவிதத்தில், “ஹா…ஹா…” சிரித்துவிட்டான் அவன்.
“இப்பிடி ரோட்டு எண்டா நேரத்துக்கே இருட்ட முதல் வெளிக்கிட்டிற வேணும்.” அவள் தொடர, “என்ன நக்கல் சிரிப்பு? எல்லாரும் உங்களப்போல துணிஞ்ச பயில்வான்களாக இராயினம் சரியோ!” வேறு யார்? இலக்கியாதான்.
“ஏதோ நீங்க சரியான பயந்த பிள்ள போல கதைக்கிறிங்க? அண்டைக்கு அவ்வளவு காத்துக்கையும் மழேக்கேயும் கானோவ எடுத்துக்கொண்டு போற துணிச்சலான நீங்களே இப்படிச் சொன்னா!” வேந்தன் கடித்தான்.
“ஹா…ஹா…அண்ணா அத நீங்க மறக்கேல்ல என்ன? இலக்கியா அக்காவ சரியா டமேஜ் பண்ணின விசயம் அது! ஹா…ஹா…” ஆரூரன்.
இதற்கு அவள் முகத்தில் பிரதிபலிக்கும் உணர்வுகளை இரசித்திட முனைந்தது அவனுள்ளம். திரும்ப முடியவில்லை. ‘ச்சே! எப்பவும் போல ஆகப்பின்னால இருந்திருக்க ரிவர் வியூ மிரரால் பார்த்திருக்கலாமே’ ஏக்கத்தோடு நினைத்துக்கொண்டான். அவள் பார்வை அவனில் ஒட்டி நின்றுவிட்டு, “உனக்கு…” ஆரூரன் தலை மீண்டும் ஒரு தட்டை வாங்கிக் கொண்டது.
“உண்மையைச் சொன்னாச் சனத்துக்குக் கோபம் வருது.” வம்பிழுத்தான், சகோதரன்.
“டேய் டேய்! முன்னுக்கு இருந்து கொண்டு ரெண்டுபேரும் அலட்டாமல் பேசாமல் இருங்க பார்ப்பம்.” கவி இடையிட, “அக்காவுக்குத் தன்ன முன்னுக்கு விடேல்ல எண்ட கோபம்.” அவளையும் சீண்டினான்.
“போடா விசரா!” என்றுவிட்டு, “இப்ப நாம நேர ‘எஸ்டஸ் பார்க்’ தானே போறம் வேந்தன்?” வினவினாள், கவி.
“ஓமோம்… ஒரு நாப்பது நிமிச ஓட்டம் தான். இதில நிண்டு போட்டோ எடுத்திட்டுப் போவமே.” சொல்லிக்கொண்டே, அந்த வளைவில் காரை நிறுத்தினான், அவன்.