அவ்வளவு பெரிய இடமில்லையென்றாலுமே அங்கு பல கார்கள் நின்றிருந்தன.
“ ‘எஸ்டஸ் பார்க்’ ஆரம்பம் இதுதான். பார்த்து இறங்குங்க. கவின பிடிச்சுக்கொள்ளுங்க கவனம். பக்கத்திலேயே ரோட்டு எண்டதால நாம கொஞ்சம் கவனமாக இருந்திட்டாச் சரி!”
ஒவ்வொரு இடமாக நிறுத்தி நிறுத்தி அவர்களின் புகைப்படக்கருவிகளில் அழகிய நினைவுகளைப் பிடிக்க வைத்திருந்தான். இவ்வளவுக்கும் அவர்கள் சொல்ல வைக்காமல் தானே பார்த்துப் பார்த்து.
“எவ்வளவு குடுத்தாலும் தகும். தம்பி போல ஒரு ஆள் கிடைச்சது நம்மட நல்ல நேரம்.” மாறனிடம் சொன்னபடி இறங்கினார், நாதன்.
“உண்மைதான். இல்லயோ இந்தளவுக்கு இந்தப் பயணத்த அனுபவிச்சுச் செய்திருக்க முடியாதுதான். இளம் பெடி எண்டாலும் நல்ல மரியாதையானவரும் கூட!” அவனைப்பற்றி அவர்கள் கதைத்தவற்றைக் கேட்டுக்கொண்டே இறங்கினாள், இலக்கியா.
அவன் தன்னை விரும்புறான் என்பது தெரியவந்த பின்னரும் அவர்கள் மனநிலை இதுவாகவே இருக்குமா? ஒரு வார்த்தை எதிர்ப்பாக வந்துவிட்டாலும் அவளால் அவர்களை மீறிட முடியுமா என்ன? மனதோரம் கவலை ஒட்டிக்கொண்டது. அதையும் தூசென்று தட்டிவிட வைத்தது, அவ்விட அழகு.
அந்த வளைவு, போக வரவுள்ள பாதையின் ஒருபுறம் உயர்ந்திருந்த பாறை மலையும் மறுபுறம் பாதையின் அருகாக வாகனங்கள் நிறுத்தவென சிறு பகுதியோடு பெரியதும் சிறியதுமாக கற்பாறைகள் கொண்ட சரிவுமாக இருந்தது. பாதையில் போகவரவென்று வாகன நடமாட்டத்துக்கும் குறைவிருக்கவில்லை.
காரை விட்டிறங்கியதுமே, “பாக்கேக்கக் கொஞ்சம் பயமா இருக்கு!” என்றபடி தான் மெல்ல நகர்ந்தாள், கவி. ராஜியின் மகளை இறுகப் பற்றியிருந்தது அவள் கரம்.
பெரியவர்களுமே, “பிள்ளைகள் பார்த்து…கவனம்.” எச்சரித்தாலும், ஒவ்வொரு அடியையும் மெல்லவே எடுத்து வைத்தாலும் எல்லோர் விழிகளுமே அவசரம் அவசரமாக சுற்றிலும் கொட்டிக்கிடந்த இயற்கை அதிசயத்தைப் பருகவும் தவறவில்லை.
முன்னே, மிக்க கம்பீரமாக கூராக உயர்ந்து நின்ற பீச் நிறத்திலான கற்பாறையில் ‘எஸ்ட்ஸ் பார்க்’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. முதல் ஆளாக ஓடிச் சென்று அதிலேறி நின்றுகொண்டான், ஆரூரன். பின்புறமாகப் பரந்துகிடந்த மலைமுகடுகளுக்குச் சரிசமமாகத் தானும் உயர்ந்து நின்றதையுணர்ந்தவனுள் ஏகப்பட்ட பரவசம்.
“வேந்தன் அண்ணா, ஃபோட்டோ எடுத்து விடுங்க!” போஸ் குடுத்தான்.
“பிள்ளைகள் கவனம்.” சுகுணா. அவர்களும் சுற்றிக்கிடந்த எழிலோடு கலந்துநின்று புகைப்படங்களைத் தட்டிக் கொள்ளத் தவறவில்லை.
ஆருரனைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் கற்பாறையில் ஏறி நின்று புகைப்படங்களை எடுக்க, வேந்தனருகில் நின்று அவர்களைத் தன் கைபேசிக்குள்ளும் அடக்கிக் கொண்டிருந்த இலக்கியா, “ரெண்டு பேரும் நிண்டு ஒண்டு எடுப்பமா?” கிசுகிசுத்தாள். அவள் குரலிலிலிருந்த ஏக்கத்தில் திரும்பிப் பார்த்தானவன். அதேவேகத்தில், “வா எடுப்பம்.” சொல்லிவிட்டு, அவள் கரத்தைப் பற்ற முயன்றான்.
“டோய்! துணிச்சல்தான் என்ன?” பட்டென்று விலகிவிட்டாள். வார்த்தைகள் செல்லமாக கண்டிப்போடு வந்தாலும் விழிகளில் தெறித்த நேசத்தில் தன்னைக் கட்டுபடுத்தத் திண்டாடிப்போனான், வேந்தன். அவள் மனதிலுதித்த சிறு ஆசையைப் பூர்த்தி செய்யமுடியவில்லையே என்ற எண்ணம், அதுவரை இருந்த சந்தோசத்துக்கு வேட்டு வைத்து முகத்தில் திரை போட்டுவிட்டது.
மீண்டும் அவனருகில் வந்தவள், “என்ன நீங்க கோவிச்சிட்டிங்களா?” கவலையாகக் கேட்க, “விசரி!” முணுமுணுத்தான்.
“நாம பிறகு இந்த எல்லா இடமும் வருவம் சரியா?” அவன் சொல்ல, முகத்திலடித்த வெயிலில் அவள் முகம் மேலும் மின்னியது. சட்டென்று, “சரி இனி என்னயும் எடுத்து விடுங்க!” விறுவிறுவென்று சென்று ஏறத் தொடங்க, “பாத்து பாத்து…” அவன் சொல்ல, “அவா வீரி அண்ணா!” கடித்துவிட்டு, “இலக்கி அக்காவுக்குப் பிறகு நீங்களும் போய் நில்லுங்கோ நான் எடுத்துவிடுறன்.” தாயாரானான், அவர்களை நெருங்கி வந்த ஆரூரன்.
“இல்ல தேவையில்ல, எல்லாருமே நிண்டு செல்ஃபி எடுப்பம்.” வேந்தன்.
“ஓமோம், அதுக்குள்ள…” சொல்லிக்கொண்டே அந்தச் சரிவில் சற்றே இறங்கி ஒரு பாறையில் இருந்தபடி, “இப்படியே இன்னும் ஒரு நாலைந்து தட்டி விடுங்கோ அண்ணா!” அவன் தொடக்க, அடுத்து கவி, இலக்கியா, ராஜியின் பிள்ளைகள், அஜி மாறன் சோடி என்று எல்லோரும் அப்படியும் எடுத்துக்கொள்ள, கவின் தானும் என்று அழவே தொடங்கியிருந்தான்.
“டோய்! அப்படியே உருண்டு கீழ போனா பிறகு கதை சரி!” வெருட்டினான், ஆரூரன்.
“சரி சரி ஒரு செல்ஃபி எடுத்திட்டு போவம் வாங்க. கவின, அந்தப் பாறையில நிக்க வைக்கிறன் சரியா? அப்ப எல்லாரையும் விட கவின் தான் உயரம்!” தூக்கிச் சென்று ‘எஸ்ட்ஸ் பார்க்’ கல்லுக்கு முன்னால் உயரமான கல்லில் அவனை இருத்திப் பிடித்துக்கொண்டான், வேந்தன். மற்றவர்களும் நிற்க, ஆரூரன் செல்ஃபியை கிளிக்கிக் கொண்டான். எடுத்துமுடிய, கவினைத் தூக்கிக்கொண்டு நகர்ந்தவன் அப்போதுதான் அருகில் நின்றுவிட்டு விலகி நடந்த இலக்கியாவைக் கண்டான். உதடுகளில் முறுவலொட்டிக்கொண்டது. மனம் சட்டென்று இலேசாக வாகனத்தை எடுத்தவன் ‘எஸ்டஸ் பார்க்’ நோக்கிச் செலுத்தினான்.
“இப்ப நாம போகப் போறதும் ‘ரொக்கி மவுன்டன்’ல ஒரு பகுதிதான் என்ன?” சந்தேகம் கேட்டாள் அஜி.
“இல்ல, ரொக்கி…” வேந்தனிடமிருந்தே முதல் வார்த்தை வந்து விழுந்தது. அவனைத் தொடரவிடாது, “எக்ஸ்பர்ட் சொல்லத் தொடங்கிட்டார், எல்லாரும் கவனமாக் கேளுங்கோ!” தாழ்ந்த குரலில் விழிகள் குறும்போடு நகைக்கச் சொல்லியே விட்டாள், இலக்கியா.
“நீ என்னட்ட இனி வாங்கத்தான் போறாய் மா.” அருகிலிருந்த நாதன். என்றாலுமே அவருக்குமே சட்டென்று முறுவல் அரும்பிற்று. அவருக்கு என்றில்லை அனைவர் முகத்திலும் சிரிப்பு. ரிவர் வியூ மிரர் புண்ணியத்தால் அதைப் பார்த்த வேந்தன் பக்கவாட்டில் திரும்பி இலக்கியாவைப் பார்த்தவன் ஒற்றை விரலால் கவனம் காட்டினான். அதை எல்லோருமே அவதானித்தார்கள். இலக்கியாவினுள் மெல்லிதாக தடுமாற்றமும் அவஸ்தையும்.
“அதுதான் தம்பி, இப்பத்தைய பிள்ளைகளுக்கு எல்லாத்துக்கும் பகிடி சேட்டை. நீங்க பெரிசா எடுக்காதீங்க!” சமாளிப்பாகச் சொன்னார் நாதன்.
“ஏனெண்டா அண்ணா இலக்கிக்கா ஒரு சின்னபிள்ள.” ஆரூரன் முடித்துவிட்டு, ஹா..ஹா…பெரிதாகச் சிரித்து இலக்கியாவின் முறைப்பை வாங்கிக் கட்டிக்கொண்டான்.
“அவள் எப்பவும் அப்பிடித்தான் தம்பி, கலகலப்பு. அதும் நீங்க எங்கட வீட்டு ஆள் போல பழக பிள்ளைகளுக்குச் சும்மா தெரியாதா, குறையா எடுகாதீங்க.” என்றுவிட்டு, “சரி நீங்க சொல்லவந்ததைச் சொல்லுங்கோ!” என்றார், சுகுணா.
“அதான், இவையள் கூகிள பார்த்துச் சொல்லுறத வேந்தன் சும்மாவே சொல்லுறார் எண்ட எரிச்சல் எல்லாருக்கும்.” அஜியும் அவன் பக்கம் சேர, “சித்தி வேணாம்.” என்ற கவி, “சந்தடி சாக்கில நாதன் சித்தப்பா வேந்தனக் கிழவன் ஆக்கிட்டார்.” கேலியாகச் சொல்லி நாதனின் முறைப்பை, தான் வாங்கிக்கொண்டாள்.
“சுத்தி சுத்தி தம்பிய பகிடி பண்ணியே பொழுது போகுது இவைக்கு!” என்ற ஆருரனின் தாய், “இவையிட கதய விட்டுட்டு நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்கோ.” என்றதும் முறுவலோடு சொல்லத்தொடங்கினான், அவன்.
“ரொக்கி மவுன்டன் ஐஞ்சு பார்வையாளர் மையங்களா இருக்கு. ஒண்டு நஷனல் ஹிஸ்டோரிக் லாண்ட்மார்க், ‘பீவர் மேடோஸ் பார்வையார் மையப்பகுதி’ (Beaver Meadows Visitor Center); அடுத்தது தேசிய வனப்பகுதிகள் வடக்கு மற்றும் கிழக்கில, ‘ரோசவெல்ட் தேசிய வனப்பகுதி’(Roosevelt National Forest); வடக்கு மற்றும் மேற்கில, ‘ரவ்ட் தேசிய வனப்பகுதி’ (Routt National Forest); மேற்கு மற்றும் தெற்கில, ‘அரபஹோ தேசியவனப்பகுதி’ (Arapaho National Forest ); நேரே தெற்கில, ‘இந்தியன் பீக்ஸ் வனப்பகுதி’ (Indian Peaks Wilderness) என்றிருக்கு.”
“இதை நாங்களும் கூகிளில பார்த்திட்டம்.” அடக்கப்பட்ட முறுவலோடு சொன்னாள் இலக்கியா.
அவன் கன்னம் அசைந்ததில் முறுவலிக்கிறான் என்றறிந்து கொண்டாள். தொடர்ந்தான் அவன்.
“இப்ப நாம போற ‘எஸ்டஸ் பார்க்’ ரொக்கி மவுன்ட்டன் நஷனல் பார்க் மேற்கு வாசலுக்குப் பக்கத்தில இருக்கு.” என்றவன், “யுனி ல படிக்கேக்க ஃப்ரெண்ட்சோட வந்து ஒரு கிழமை தங்கியிருந்தம். அப்ப ஐஞ்சு மையங்களுக்கும் போனம். அதோட பட்டன் ரொக் டாமுக்கும் போனம்.” என்றவன்,
“மலைகள், லேக்குகள், இங்க நிலவுற ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்ப வாழுற காட்டு விலங்குகள் எண்டு மட்டுமில்ல பசிய காடுகள், காட்டு மலர்களோடு சேர்த்து, பாலைவனத் தாவரங்கள், அற்புதமான பூக்கள் எண்டு மலைகள் தொடங்கி தன்ரா (Tundra) வரை எல்லாமே உள்ள இடம் இது!” அவன் சொன்ன விதமே எவ்வளவு இரசித்திருகிறான் என்று தெரிந்தது.