“அப்ப நாங்களும் இன்னொருக்கா வரவேணும், எல்லா இடமும் போக வேணும்.” என்றான், ஆரூரன்.
“அதுக்கென்ன, இளம்பிள்ளைகள், உங்களுக்கு காலநேரமா இல்ல? வருங்காலத்தில உங்கட மனிசி பிள்ளைகளோட வாங்கோவன்.” சுகுணா சொல்ல, “பெரியம்மா, அதுக்கு ஏன் மனிசியும் பிள்ளைகளும்! இந்தா வேந்தன் அண்ணா ஃப்ரெண்ட்சோட வரேல்லையா? அப்பிடி நாங்களும் வாறதுதான்.” ஆரூரன் சொல்ல, “சித்தி உங்கட மகன் பெரிசா அடிபோடுறான் கவனம்.” ரதியிடம் சொன்னாள் கவி.
“ஓமோம் விளங்குது. ஃப்ரெண்ட்சோட வெளிக்கிடுவார் வெளிக்கிடுவார்.” ரதி சொன்னவிதமே, ‘அதுக்கெல்லாம் உன்ன ஆரு விடுறதாம்?’ என்றதில், தாயை முறைத்தான், ஆரூரன்.
கலகலத்துக்கொண்டே வந்ததில் விரைவில் ‘எஸ்ட்ஸ் பார்க்’ வந்தடைந்தவர்கள், “இப்பிடியே ஒரு சுத்துச் சுத்திப் பார்த்திட்டுப் பார்க் பண்ணுவமே!” வேந்தன் சொன்னதை ஆமோதித்தார்கள்.
“ஏன் பட்டன் ரொக் டாமில நடந்து களைச்சிட்டிங்க போல! எங்களுக்கு இங்கயும் நடக்க விட்டா நடப்பம் சரியோ!” இலக்கியாவின் குரலுக்குத் திரும்பாது நகைத்தான். இன்று முழுநாளும் சீண்டிக் கொண்டேதானே இருக்கிறாள்.
“நல்லா நடந்திச்சீனம் தம்பி, எல்லாம் வாய்தான்.” சுகுணா சொல்ல, “அம்மா! என்ன நீங்க? எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல உங்களுக்குத் தான் நடக்கக் கஷ்டம் சரியோ!” இடையிட்டாள், கவி.
“சரி சரி, எல்லாரும் சூரிகள், நாங்கதான் வயசுபோன சனங்கள். காரிலயே பார்ப்பம்.” நாதன் சொன்ன விதமே கடியாக இருக்க, “அப்பா!” முறைத்தான் ஆரூரன்.
“எங்களைத்தானே கிழடுகள் என்றன்.”
“ஏற்றுக்கொண்டாச் சரிதான்.” மீண்டும் கவி.
இப்படிக் கலகலத்தாலும் எல்லார் பார்வையும் வெளிப்புறத்தில் தான். ஒவ்வொரு இடமும் வெவ்வேறு விதமான தோற்றத்தில் வசிகரித்து நின்றால் பார்வைகள் அங்குதானே போகும்!
‘தாம்சன் நதி’ இனிய சலசலப்பில் ஓடிக்கொண்டிருந்தது. இருகரைகளையும் நிறைத்திருந்த சிறிதும் பெரிதுமான வழுவழுப்பாறைகள் நதிக்கு மிகப்பொருத்தமான ஆரம்போன்று அழகு கொடுத்தன. நதிக்கரையோரமுள்ள விடுமுறை விடுதிகள் நிறைந்து வழிந்தன. பெரியோர் இளையோர் சிறியோர் என்ற வயது வேறுபாடின்றி ஆர்ப்பரித்தவர்களால் அவ்விடமே பூரித்துக் கிடந்தது.
அப்படியே சிறிது தூரம் சென்றுவிட்டுத் திரும்பி வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு கடைத்தெருநோக்கி நடந்தார்கள்.
“இப்பவே மூண்டு தாண்டிட்டு.” என்றாள் அஜி.
“சித்திக்கு இருட்டிட்டா வேந்தன் ஒழுங்கா கார் ஓட்டுவாரா எண்ட சந்தேகம்.” இடையிட்டது இலக்கியாவின் கேலிக்குரல்.
“உம்ம!” முறைத்தாள், அஜி.
திரும்பிப் பார்த்தான் வேந்தன். முறைப்பது போலிருந்தாலும் அவள் மீது பார்வை படும் போதெல்லாம் அவன் விழிகள் அவளில் தங்கி நிற்கவே பெரிதும் விரும்பின, அடம் பிடித்தன.
“அப்ப ஒண்டு செய்வம், திரும்பிப் போகேக்க இலக்கியாவே கார் ஓடட்டும்.” என்று சொல்லிவிட்டான்.
“நோ நோ, வேணாம்.” இளையவர்கள் கூவினார்கள்.
“தாயே! நான் இங்கயே எங்கயும் நிண்டுட்டுக் கனடா போறன்.” அஜி.
“ஹா..ஹா…” கவி பெரிதாகச் சிரிக்க, இலக்கியாவின் முகம் சிவந்து போயிற்று.
“ஹலோ! நான் என்ன ஓடமாட்டன் எண்டு நினைக்கிறீங்களோ? சரி, போகேக்க நானே ஓடுறன்.” படபடத்தாள்.
“சும்மா இரு இலக்கி!” சுகுணா.
“ஓகே ஓகே, நீங்க ஓடுவீங்க தான், நான் சும்மா சொன்னன்.” கடிக்குரலில் இழுத்தவன், “இந்த இடத்தில நிண்டு ஃபோட்டோ எடுக்கேல்லையா?” கதையை மாற்றிவிட்டான்.
சிறு நீர்த்தடாகத்தோடு பெரிய பாறைகள் கொண்ட கற்குன்றொன்று, உச்சியில் கழுகொன்று பறந்துகொண்டிருக்க அமைத்திருந்தார்கள். புகைப்படமெடுக்க அருமையான இடம்தான். அதன் பிறகு சிறு பொழுது, கழுகைத் தொட்டுவிடும்படி ஏறி நின்று புகைப்படங்களை எடுப்பதில் கழிந்தது. மறக்காது எல்லோரும் நின்றொரு செல்ஃபியும்தான்.
மக்கள் அதிக நடமாட்டமாக இருந்த தெருக்களில் இருபுறமும் கடைகளும் நிறைந்தே இருந்தன. நீட்டுக்கும் ஒரு ஒரு கடைகளுள்ளும் புகுந்து புகுந்து சுற்றத்தையும் பார்த்தபடி நடக்கத் தொடங்கினார்கள்.
“அப்ப ஒரு ஐஸ் குடிப்பமே!” ஆரூரன் கேட்க, “சரி அப்ப வாங்குங்க!” பாதையோரமாக மரநிழலில் போடப்பட்டிருந்த கல்லிருக்கையில் அமர்ந்துவிட்டார், நாதன். அவரைத் தொடர்ந்து பெரியவர்கள் அமர, கவி தலைமையில் இளையவர்கள் ஐஸ் வாங்கவென்று உள்ளே சென்றார்கள்.
“எனக்கு வாங்க வேணாம்.” வேந்தன் சொல்ல, “அது ஏனாம்? சும்மா சாப்பிடலாம்.” என்றபடி நகர்ந்தாள் இலக்கியா.
“இல்ல இல்ல, உண்மையாவே வேணாம்.”
“எனக்கும் தான், பிறகு சாப்பிடேல்லாது.” நாதனும் சேர, சுகுணாவும் ஆருரனின் அன்னையும் தமக்கு வேண்டாம் என்றுவிட்டார்கள். மாறனும் அவர்களோடு இணைந்துகொண்டான்.
இடுப்பில் கை வைத்து வேந்தனை முறைத்தாள், இலக்கியா.
“பேசாமல் இருந்தவே எல்லாரும் இப்பத் தங்களுக்கும் வேணாமாம். எல்லாம் நீங்கதான் தொடக்கிறது.” வெட்டும் விழி வீச்சுடன் சொல்லிவிட்டுச் செல்ல, “ஆரூரன் சொல்லுறது போல தம்பிக்கு ஏதாவது சொல்லாட்டி சரிவராது போல!” ரதி முறுவலோடு சொன்னார், சுகுணாவிடம்.
“அது சும்மா பகிடிக்குத்தானே ஆன்ட்டி.” என்றபடி நாதனருகில் அமர்ந்தான், வேந்தன்.
“ம்ம், அவள் எப்பயும் அப்பிடித்தான் தம்பி, எங்களுக்குள்ள சொந்த பந்தங்களோட கதைக்கேக்க எனக்குத் தெரியிறதில்ல, இப்ப உங்களோட…” என்று சொல்லிக்கொண்டு வந்தவர், அவன் பார்வையில் நிறுத்திவிட்டார். என்னதான் என்றாலும் ‘நீ வேற்றாள்’ சொல்லாமல் சொல்லிவிட்டதை உணர்ந்துகொண்டவர் சற்றே சங்கடப்பட்டுவிட்டார்.
நாதன் அதையுணரவில்லை. “பிள்ளைகள் எல்லாரும் நல்ல கலகலப்புத்தான் தம்பி. என்ன எண்டாலும் அவைக்கு லிமிட் தெரியும் எண்டு எங்களுக்கு விளங்கினாலும் நாங்க வளர்ந்த விதம் அடிக்கடி கண்டிப்போட சொல்லவும் வச்சிரும். அம்மா மட்டும் இருந்தா எங்களுக்குத்தான் பேசுவா. பேரப்பிள்ளைகளில அவாக்கு அவ்வளவு நம்பிக்கை! தன்ர வளர்ப்பு எண்டு பெருமை!” தொடர்ந்தார்.
“அது பார்க்கவே தெரியுது அங்கிள்.” மெல்லச் சொன்னாலும், இலக்கியாவும் தானும் விரும்புவதை இவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற யோசனை அவனுள். ‘கண்டதும் காதலா இதென்ன விசர்க்கதை?’ என்றேதும் சொல்லிவிட்டால்? மறுப்பு வராதென்ற திடம் முழுதாகவிருந்தாலும் சொற்ப நேரத்திலேனும் சில சொற்களிலேனும் எதிர்ப்பு வந்துவிட்டால் என்ற எண்ணம் குறுக்கிடுகின்றதே!
இப்படிப் போன அவன் சிந்தையைக் கணத்தில் மாற்றி அவன் விழிகளில் இரசனையை நிரப்பினாள், ஐஸ்கிரீமை ஏந்திக்கொண்டு வெளியே வந்தவள்.
சிறுபிள்ளைபோல் வலக்கர விரல்களின் பிடியிலிருந்த பெரிய கோனை ஆசையாகச் சுவைத்தபடி வந்தவள், “வேணாம் எண்ட ஆக்கள் கண் வைக்க வேணாம் சரியா?” வேந்தன் முன்னால் வந்து நின்றுகொண்டு தாய் ஆக்களைப் பார்த்துச் சொன்னாலும் தனக்குத்தான் சொல்கிறாளென்று அவனுக்கு விளங்காதா என்ன?
முறுவலோடு, கண்வெட்டாது பார்த்தவன், “இப்பிடி இவ்வளவும் சாப்பிட்டா பிறகு எங்க சாப்பிடுறது?” தன்னை மீறிச் சொல்லிவிட்டான்.
“அது பத்தி உங்களுக்குக் கவல தேவையில்ல, நாங்க அதையும் சாப்பிடுவம்.” வாயைச் சுழித்துவிட்டு, “அம்மா கொஞ்சம் வேணுமா? லார்ஜ் வாங்கினா இப்பிடி நாலு உருண்டை வச்சுத் தருவினம் எண்டு தெரியாது.” கெஞ்சியபடி தாயிடம் நகர்ந்தாள்.
“ஹா…ஹா…” வேந்தன் சிரித்துவிட்டான். மற்றவர்களுக்குமே சிரிப்புத்தான். அவள் முறைப்பு மட்டும் வேந்தனை நோக்கிச் சென்றது.
“அங்க என்ன முறைப்பு?” கடிந்து கொண்டார் சுகுணா. “இப்பத்தானே சாப்பிடத் தெரியும் எண்டு சொன்னனி, நீயே சாப்பிடு தாயே!” சொல்லவும் செய்தார்.