துளசியின் திருமணத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. சோமசுந்தரம் எதற்கும் கிருபனுக்கு அழைக்கவும் இல்லை; திருமணத்துக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. அன்று, கமலியின் வீட்டுக்கு வந்துவிட்டுப் போனதன் பிறகு அவன் திருமணம் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவும் இல்லை.
“மாமா ஏதும் சொன்னவரா மாமி?” என்று ஜெயந்தியிடம் கேட்டும் பார்த்தான்.
“என்ன சொல்லக்கிடக்கு? நீ வளந்த பிள்ளை. உன்ர நல்லது கெட்டதுகளை முடிவெடுக்க உனக்கே தெரியும் தானே. கலியாணம் எப்ப எண்டு சொல்லு. நாங்க வருவோம்.” என்று, தான் சோமசுந்தரத்தின் மனைவி என்று காட்டினார் அவர்.
கிருபனிடம் சத்தமே இல்லாமல் போயிற்று. அவன் எவ்வளவுதான் நெருங்கிப்போனாலும் விலக்கியே நிறுத்துகிறவர்களை இன்னும் எப்படி அணுகுவது என்று புரியவே இல்லை.
ஏன் இப்படி? பொருளாதார ரீதியாக அவன் எதற்கும் அவரிடம் வந்து நின்றுவிடுவான் என்று நினைக்கிறாரா? அல்லது, அவனை இன்னுமே சுமையாகக் கருதுகிறாரா? அவன் தான் ஒன்றுக்கும் வரமாட்டேன் என்று சொன்னானே. பிறகும் ஏன்?
ஒன்றுமே விளங்கவில்லை அவனுக்கு. ஒரு பெருமூச்சுடன் அவனுக்குள் எழுகிற அனைத்துக் கேள்விகளையும் தள்ளி வைத்தான். ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்று நின்று அந்த வீட்டுப் பிள்ளையாக அனைத்து வேலைகளையும் பார்த்தான்.
அவனுக்கான வேலைகள் குறையாமல் இருந்தது. ஜெயந்தியை முன்னிறுத்தி ஏவுவதில் அவர் குறை வைக்கவே இல்லை. அதில், அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், அவனை யாரோ ஒருவனாக விலக்கி நிறுத்தினார். பொருட்டாக மதிக்கவே மறுத்தார். திருமண அலுவல்களாக வந்துபோன அவனை அறியாத உறவுகளிடம் அவனைத் தங்கையின் மகனாக அறிமுகப் படுத்தவே இல்லை. அதுதான் அவனை மிகவுமே காயப்படுத்தியது.
ஏன்? மாமா ஏன் இன்னுமே இப்படி இருக்கிறார்? ஏன் அவனை ஒதுக்கி வைக்கிறார்? அந்தச் சிறு பராயத்தில் இருந்த அதே கேள்வி இன்றும் அவன் முன்னே வந்து நின்றது.
என்னவோ மனம் பாராமாகிப்போனது. ஒருவித சலிப்பும் வெறுமையும் அவனை ஆட்கொண்டது. கமலியை அப்போதே பார்க்கவேண்டும் போல் ஒரு உணர்வு. “மன்னாருக்கு ஒருக்கா போயிட்டு வாறன் மாமி.” என்றுவிட்டு உடனேயே புறப்பட்டான்.
அவன் வீட்டுக்குக் கூடச் செல்லவில்லை. நேராக அவளின் வீட்டின் முன்னேதான் பைக்கைக் கொண்டுவந்து நிறுத்தினான். திருமணப் பேச்சுக்குப் பிறகு அங்குச் செல்வது சரியல்ல என்று அவர்கள் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தவன், இன்று வந்து நின்றபிறகுதான் அங்கே போவது சரியா என்று யோசித்தான்.
பைக்கை திருப்புவோமா என்று நினைக்கையில், “டேய்! என்னடா வந்திட்டு வாசல்லையே நிக்கிறாய்? நல்ல சகுனம் பாக்கிறியோ?” என்றபடி வந்தான் அரவிந்தன்.
“அது.. உன்ன பாக்க..” எனும்போதே இடையிட்டு, “ஓ…! உன்ர மாமா வீட்டு காலியாண வேலை எல்லாத்தையும் விட்டுட்டு என்னைப் பாக்கிறதுக்காகக் கிளிநொச்சில இருந்து மன்னாருக்கு வந்திருக்கிறாய் நீ. இத நான் நம்போணும்?” என்று கேட்டான் அரவிந்தன்.
கிருபனுக்கு மாட்டிக்கொண்டது புரிந்தது. உதட்டோரச் சிரிப்பை அடக்கவும் முடியவில்லை. “ஏன்டா, உன்ன பாக்க நான் இந்த வீட்டுக்கு வந்ததே இல்லையாடா?” என்று அதட்ட முயன்றான்.
“அது கா.மு காலம் மச்சி. நாங்க இப்ப இருக்கிறது கா.பி காலம். இப்பவும் நீ என்னத்தான் பாக்க வந்தியோ?” அரவிந்தனும் அவனை விட மறுத்தான்.
பதில் சொல்ல முடியாமல் அவனை முறைத்துவிட்டு வேகமாகப் பார்வையைத் திருப்பிக்கொண்டான் கிருபன். இப்படி இவனிடம் மாட்டி முழிப்பதற்குப் பேசாமல் அவளோடு கைபேசியிலேயே பேசியிருக்கலாம் போலும். ஆனால், அவனுக்குள் எழுந்து நிற்கிற அந்தத் தாகமும் ஏக்கமும் அவளைப் பாராமல் தீராதே!
அரவிந்தன் விடவில்லை. “என்னைப் பாரு மச்சி. என்ர முகத்தைப் பாத்து சொல்லு, நீ என்ன பாக்கத்தான் வந்திருக்கிறாய் எண்டு.” என்று அவன் முகத்தைத் தன் புறமாகத் திருப்பினான்.
கிருபனுக்கு முகம் சிவந்துவிடும் நிலை. அவன் கையைத் தட்டி விட்டுவிட்டு, பைக்கில் இருந்தபடியே ஹெல்மெட்டை கழற்றி வைத்தான். தலையைக் கோதிச் சரி செய்தான். உதட்டினில் நெளியும் சிரிப்பை என்ன முயன்றும் மறைக்க முடியவில்லை.
“அட அட அட! என்ன வெக்கம்? என்ன சிரிப்பு? கண் ரெண்டும் அலைபாயுது. மீசை கிடந்து துடிக்குது. வாய் இளிக்குது. சூப்பர் மச்சி!” என்றவனை அதற்குமேல் விட முடியாமல் பைக்கில் இருந்தபடியே எழும்பி அவன் வாயைப் பொத்தினான்.
“ப்ளீஸ்டா! என்னை விட்டுடு. எனக்கு அவளைப் பாக்கோணும் மாதிரி இருந்தது. அதுதான் வந்தனான்.” என்றான் இனியும் மறைக்க முடியாது என்று தெரிந்து.
அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான் அரவிந்தன்.
கிருபன் முறைக்க, “அதுக்கு அவளை வெளில கூட்டிக்கொண்டு போயிருக்க வேணும். வீட்டுக்கு வரக்கூடாது.” என்றான் நக்கலாக.
“நீ அவளின்ர அண்ணா. கொஞ்சமாவது பொறுப்போட கதை.”
“அது, ‘அவளைப் பாக்கோணும் மாதிரி இருக்கடா’ எண்டு சொல்லேக்க நினைவு வரேல்லையோ?”
அதுதானே? இதற்குமேல் அவனிடம் மல்லுக்கட்ட முடியாமல், “இப்ப என்னடா நான் வரவா வேணாமா?” என்றான்.
“தாராளமா வா. என்ன, நீ ஆசைப்பட்டது நடக்காது. கமலி வீட்டில இல்ல.” என்றபடி அவனை அழைத்துப்போனான் அரவிந்தன்.
கிருபனின் முகம் சோர்ந்து போயிற்று. “எங்க போயிட்டாள்?” என்றான் தன் மனதின் வாட்டத்தைக் காட்டிக்கொள்ளாமல்.
“கரனுக்குக் காய்ச்சலாம். அவனைப் பாக்க சித்தி வீட்டை போயிட்டாள்.”
வீட்டினில் பரந்தாமன் இருந்தார். இன்முகமாய் வரவேற்று துளசியின் திருமணம் பற்றி விசாரித்தார்.
அதுபற்றிய விபரங்களை எல்லாம் சொல்லிவிட்டு, “அங்கிள்.. நான் கமலியையும் துளசின்ர கலியாணத்துக்குக் கூட்டிக்கொண்டு போகட்டுமா?” என்று நயமாய் வினவினான்.
விழிகளில் கேள்வியோடு அவனைப் பார்த்தார் பரந்தாமன். “கலியாணத்துக்கு முதல் அப்பிடி போறது நல்லாருக்காதே தம்பி.”
“உண்மைதான் அங்கிள். ஆனா, எனக்கு எவ்வளவு சொந்தபந்தம் இருக்கு எண்டு எனக்கே தெரியாது. தெரியாத அவைய(அவர்களை) என்னால என்ர கலியாணத்துக்குக் கூப்பிடவும் ஏலாது. ஆனா, மாமா வீட்டு கலியாணத்துக்கு எல்லாரும் வருவினம். அங்க வச்சு எல்லாருக்கும் என்னையும் எனக்குத் துணையா வரப்போறவளையும் அறிமுகப்படுத்தலாம் எண்டு நினைச்சன். இது சரியா பிழையா எண்டு தெரிய இல்ல அங்கிள். ஆனா, விருப்பமா இருக்கு. அம்மான்ர மகன் ஒண்டும் சோரம் போகேல்ல, நல்லாத்தான் இருக்கிறான் எண்டு அம்மான்ர சொந்தங்களுக்குச் சொல்ல எனக்குக் கிடைச்ச ஒரு சான்ஸா இத பாக்கிறன் அங்கிள்.” என்றான் கிருபன்.
“உங்கட விருப்பம் எனக்கு விளங்குது தம்பி. ஆனா, அண்டைக்கே உங்கட மாமா தேவையில்லாம கதைச்சவர். அதேமாதிரி எல்லாரும் கூடியிருக்கிற சபைல வச்சும் என்ர பிள்ளையைப் பாத்து அவர் ஏதும் கதைச்சிட்டார் எண்டா பிறகு அது பெரும் பிரச்சினைல தான் போய் நிக்கும். எல்லா நேரமும் நானும் பொறுமையா போக மாட்டன். அதனாலதான் யோசிக்கிறன்.”
அவர் தயங்குவதும் சரி என்றே அவனுக்கும் பட்டது. சபையில் வைத்து அவனுடைய மாமா அப்படி ஏதாவது சொல்லிவிட்டால் அவனாலும் பெரிதாக எதிர்வினையாற்றிவிட முடியாது. அப்படியே, எதிர்வினையாற்றுவதாக இருந்தாலும் அதற்குமுதல் அவர் வார்த்தைகளை விட்டிருப்பாரே. அது அவளைக் காயப்படுத்திவிடும்.
அவனுடைய கமலி கலங்கிப்போனால் அவனால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அன்று ஒருநாள் அவளை அப்படிப் பார்த்ததே போதும். அதில், “விளங்குது அங்கிள்.” என்றான் அவரைப் புரிந்துகொண்டவனாக.
அரவிந்தனுக்கு நண்பனின் விருப்பமும் புரிந்தது. அதேநேரம் தகப்பனின் மறுப்பில் இருக்கிற நியாயமும் விளங்கியது. அதில், அந்தப் பேச்சினில் அவன் தலையிடவில்லை. சுகுணாவுக்கும் கணவரின் தரப்பில் மாற்றுக்கருத்தில்லை என்பதில் அவனை உபசரிப்பதை மாத்திரம் பார்த்துக்கொண்டார்.
ஆனால், இவர்களின் அத்தனை எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் அப்பாற்பட்டவள் கமலி. அவன் வீட்டுக்குச் சென்ற சற்று நேரத்திலேயே அரவிந்தனோடு அங்கு வந்து நின்றிருந்தாள் அவள்.
ஆனந்த அதிர்ச்சியில் திகைத்து நின்றவனை, “டேய் சிம்ரன்! இப்பிடி கடைசி நேரத்தில வந்து கலியாணத்துக்கு வா எண்டா நான் சாரி எடுக்கிறேல்லையா? இல்ல, பிளவுஸ் தைக்கிறேல்லையா? கெதியா வாங்க. இண்டைக்கே சாரி எடுத்து சித்திட்ட குடுத்தா இண்டைக்கு இரவே பிளவுஸ் தைச்சு தந்திடுவா.” என்று அவனை யோசிக்கவே விடாமல் இழுத்துக்கொண்டு போனாள்.
கிருபனுக்கு நம்பவே முடியாத அதிர்ச்சி. அவளின் கையோடு இழுபட்டுக்கொண்டு அரவிந்தனைத்தான் கேள்வியோடு பார்த்தான்.
“என்னை ஏன் பாக்கிறாய்? அப்பாவோட சண்டை பிடிச்சு, ஒற்றைக் காலில நிண்டு சம்மதம் வாங்கி இருக்கிறாள். போ, போய் அவளுக்குச் சாரி எடுத்துக்குடு!” என்று, நண்பன் அப்போது கேட்ட அவளுக்கும் அவனுக்குமான தனிமையை இப்போது வழங்கினான் அரவிந்தன்.
கிருபனுக்கு நடப்பவற்றை நம்பவே முடியவில்லை. தன் வண்டியில் தன் பின்னே அமர்ந்து வந்தவளிடம் அவன் பார்வை ஓடிற்று. பரந்தாமனின் மறுப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்தே இருந்தாலும் அவன் மனம் வாடிப்போனது என்னவோ உண்மைதான். பரவாயில்லை, இன்னுமொரு சந்தர்ப்பம் அமையாமலா போய்விடும் என்றுதான் தன்னைத் தானே தேற்றியிருந்தான். அதற்கு அவசியமே இல்லாமல் செய்துவிட்டாளே அவனுடைய கமலி.
“இங்க என்ன பார்வை? ஒழுங்கா ரோட்டை பாத்து ஒட்டுங்கோ. இல்ல, காலியாண வீட்டுக்குப் பதிலா க..” என்றவளை மேலே செல்லவிடாமல், “நோ!” என்று வேகமாகப் பிரேக்கை அழுத்தி பைக்கை நிறுத்தினான் கிருபன்.
ஏதும் விபத்தோ என்று பயந்துபோனாள் கமலி. பதட்டத்துடன், “என்ன? என்ன நடந்தது?” என்றாள் அவன் தோள்களை இறுக்கிப் பற்றியபடி.
அவள் புறம் திரும்பி, “பிளீஸ், ஏதாவது அபசகுனமா சொல்லிடாத. எனக்கு உன்னோட நிறையக்காலம் வாழோணும் கமலி. அப்பாவோட வாழாத வாழ்க்கைய, அம்மாவோட வாழாத வாழ்க்கைய எல்லாம் சேர்த்து எனக்கு உன்னோட வாழோணும். நீ பகிடிக்குத்தான் கதைக்கிறாய் எண்டு தெரியும். ஆனாலும் இந்த விசயத்தில பகிடி கதைக்காத, பிளீஸ்!” என்றான் கெஞ்சலாக.
அவன் விழிகளில் தெரிந்த தவிப்பில் கமலிக்குப் பேச்சற்றுப் போனது. தொண்டைக்குள் வந்து என்னவோ சிக்கிக் கொண்டது. இந்தளவு தீவிரத் தன்மையோடு வாழ்க்கையை அவள் எதிர்நோக்கியதில்லை. ஆனால், அவனுக்கு அது அப்படியில்லை என்பது புரிந்தது. மனம் கனத்துவிட, அவன் கைப்பற்றி அழுத்திக்கொடுத்தாள்.
“இல்ல, இனி இப்பிடி கதைக்க மாட்டன். எனக்கும் உங்களோட நிறையக்காலம் சந்தோசமா வாழவேணும் கிருபன்.” என்றாள் இதயத்தில் இருந்து.


