மகனுக்கு விளையாட்டுக் காட்டியபடி அவர்களை விட்டு விலகி வந்திருந்தாலும் வினோதினியின் மனமும் சரியில்லை.
ஆரபியைப் பார்க்கிற வரையில் அவள் மீது கோபம் இருந்தது உண்மை. மூன்று வருடங்கள் கழித்து வந்த நேரம், உனக்கும் அண்ணாக்கும் என்னடி பிரச்சனை என்று கேட்டப்போதாவது அவள் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்தாள்.
கிரி சொன்னவரையில், அதை அவள் புரிந்துகொண்ட வரையில் ஆண்கள் இருவர் பக்கம்தான் தவறு என்று அவளுக்கும் புரியாமல் இல்லை. அவள் தன்னை ஒரு நண்பியாக நம்பவில்லையே என்பதுதான் வலியைக் கொடுத்தது.
தமையனோடு வருகையில் கூட ஆரபி மீதான ஆதங்கத்தைச் சுமந்துகொண்டுதான் வந்தாள். காரினுள் அமர்ந்து, அவள் கரம் பற்றிப் பேச முயன்றவளின் செய்கையும் அவள் கண்ணீரும் இவளைக் கரைத்திருந்தன. ஆனாலும் விலகியே நின்றுவிட்டாள்.
தன் தலையீடு இல்லாமல் அவர்கள் இருவரும் பேசி முடிவெடுக்கட்டும் என்றுதான் விலகி வந்தாள். நல்லதாக முடிந்துவிட வேண்டும் என்று அவள் வேண்டியபடி இருக்கையில் சகாயன் அழைத்தான்.
“என்ன அண்ணா, எல்லாம் ஓகேயா?”அழைப்பை ஏற்றதும் ஆர்வ மிகுதியில் அவனை முந்திக்கொண்டு கேட்டாள்.
ஒரு நொடி அமைதி காத்துவிட்டு, “குணால வரச் சொல்லி இருக்கிறன். மூண்டு பேரும் அவரோட போங்கோ.” என்று மட்டும் சொன்னான் அவன்.
ஒரு கணம் ஒன்றும் புரியாமல் நின்றாள் வினோ. அவன் குரலின் பேதமும் மெல்ல விளங்க, “அண்ணா, என்னன்னா. ஆரபி என்னவாம்?” என்று மென் குரலில் விசாரித்தாள்.
“எல்லாம் முடிஞ்சுது வினோ.” என்றான் அவன் அந்தப் பக்கமிருந்து கனத்த குரலில்.
“அண்ணா!” சட்டென்று அவளுக்கு தொண்டை அடைத்து, விழிகள் கரித்தன. எல்லாம் முடிந்துவிட்டது என்றால்? உடைத்துக் கேட்கப் பயந்தாள்.
“வினோ, அவளிட்ட ஒண்டும் கேக்காத. கோவப்படாத. என்னால உன்னட்ட எல்லாத்தையும் சொல்ல ஏலாது. ஆனா பிழை முழுக்க என்னிலதான். அவளுக்கு ஆறுதலா இரு ப்ளீஸ்!” என்றுவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
புரிந்தும் புரியா நிலை அவளுக்கு. மகனையும் தூக்கிக்கொண்டு ஆரபியைத் தேடி ஓடி வந்தாள். அங்கே கோட்டையின் சிதிலமடைந்த ஒரு சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்து அழுகையை அடக்குவதில் மும்முரமாக இறங்கி இருந்தாள் அவள்.
“ஆரு!” என்றபடி வந்து மகனோடு அவளெதிரில் அமர்ந்தாள்.
திரும்பி இவளைப் பார்த்தவளுக்கு இன்னும் கண்ணீர் பொங்கிக்கொண்டு வந்தது. கூடவே ஒரு கோபமும். “உனக்கும் என்ன விளங்கேல்ல என்ன? நாங்க நேசிக்கிற மனுசரிட்ட என்ன எதிர்பாப்பம்? அன்பை, ஆதரவை, அவருக்கு நான் முக்கியமானவள் எண்டுற சந்தோசத்தை, மரியாதையத்தானே? குணால் அண்ணா உன்னட்ட உன்ர வீட்டு ஆட்களுக்கு முன்னால வச்சு உன்னை மதிக்காம நடந்தா ஏற்பியாடி? உன்ர அண்ணா உன்ர கலியாண வீட்டில வச்சு அதைத்தான் எனக்கு செய்தவர்.” என்று பொங்கினாள்.
“அந்த நேரம் அவர் தந்த காயம் அவ்வளவு பெருசா இருந்தது. அதுக்கு அவர் சம்மந்தப்பட்ட எல்லாரிட்டை இருந்தும் விலகி நிக்க நினைச்சன். பிறகு பிறகு உன்னோட கதைச்சா நீ உன்ர அண்ணாவப் பற்றி கதைப்பாய். அதுதான் கதைக்கேல்ல. அதுக்கு நீ என்ன எல்லாம் சொல்லுறாய் என்ன?” என்றவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்பதாக இல்லை.
“விளங்குதடி. நீ அழாத. அது எல்லாத்தையும் மறைச்சிட்டியே எண்டுற கோவத்துல. சொறியடி!”
அவளும் கண்களைத் துடைத்துக்கொண்டாள். மகனுக்கு என்று கொண்டுவந்த பழரசத்தை எடுத்து அவளுக்கு அருந்தக் கொடுத்தாள்.
“தம்பிக்கு?”
“இவர் வாறாராம். கடைல வாங்குவம். நீ குடி.”
“அப்ப அவர்?”
“எவர்?” புரிந்தாலும் வினவினாள்.
“உன்ர அண்ணா?” அவளைப் பாராமல் முணுமுணுத்தாள்.
“தெரியா. நான் கேக்கேல்லை.”
அதற்குமேல் உடைத்துக் கேட்க அவளுக்கு வரவில்லை. கையில் இருந்த பழரசத்தையே கண்ணீருடன் வெறித்தாள். காதினுள் அவன் சொல்லிவிட்டுப் போன்றவையே எதிரொலித்துக்கொண்டிருந்தன. அவளை நெறுக்கியதற்கு, காதலிக்க வைத்தது எல்லாம் மன்னிப்புக் கேட்ட்கிறானாம். இந்த நிலைக்கா அவர்கள் நேசம் வந்து நிற்க வேண்டும்? பிடிச்சிருக்கா என்று எப்படிக் கேட்டான்? அவள் மணத்தைச் ஸ்பொன்ன அன்று எவ்வளவு மகிழ்ந்தான்? இனி அதெல்லாம் வேண்டாமாம் அவனுக்கு.
கண்ணீர் வழிவது அவளுக்கு நிற்பதாக இல்லை.
அதைக் கவனித்துவிட்டு, “அம்மா, ஆரு அன்ட்ரி ஏன் அழுறா?” என்று கேட்டான் சின்னவன்.
“அது அன்ட்ரிய அம்மா பிழையா நினைச்சிட்டன். அந்தக் கோவமாம்.”
“இப்ப சரியா நினைச்சிட்டீங்களா? ஆரு அன்ட்ரியோட கதைக்கிறீங்க.”
அவன் கேட்ட விதம் சிறு முறுவலை தோற்றுவிக்க, “ஓம். அது அம்மாதான் பிழையா நினைச்சிட்டன்.” என்று சொன்னாள் வினோ.
“அன்ட்ரி உங்களை அம்மா சரியா நினைச்சிட்டாவாம். நீங்க நல்ல ஃபிரெண்ட்தானாம்.” என்று அவளைச் சமாதானம் செய்தான் அவன்.
இப்போது ஆரபி முகத்திலும் மெல்லிய முறுவல். அழுத தடங்களைச் சுமந்தபடி முறுவலித்தாள்.
அவனைத் தன்னிடம் கொண்டுவந்து அணைத்து உச்சி முகர்ந்தவளுக்கு இந்தச் சின்னவன் தொற்றிக்கொண்டு செல்லும் பைக்கும் பைக் காரனும் நினைவில் வந்தார்கள்.
குணால் அண்ணா வருகிறார் என்றால் அவன் எப்படிப் போவான்? கிரியை வரவழைத்தோ? அந்தளவில் அவள் முகம் பார்க்கவும் பிடிக்காமல் போய்விட்டதா என்ன? இல்லை முறைப்படி உறவை முறித்துக்கொண்டாயிற்று என்பதால் முற்றிலுமாக விலகி நிற்கிறானா? திரும்பவும் விழிகளைக் கண்ணீர் சூழ ஆரம்பித்தது.
“அழுதது காணலாம் ஆரு. ஜூச குடி!” என்று மெல்லிய அதட்டல் குரலில் சொன்னாள் வினோ.
சின்னவனுக்கும் பருகக் கொடுத்துவிட்டுத் தானும் பருகினாள் ஆரபி. ஓரளவிற்கு மனமும் சிந்தனையும் தெளிந்தாற்போல் இருந்தன.
“இப்ப என்ன முடிவு எடுத்திருக்கிறீங்க?” என்று வினவினாள் வினோ.
மீண்டும் அவளுக்கு விழிகள் கரித்தன.
“என்னடி? இனியாவது எதையும் மறைக்காம வாயத் திறந்து சொல்லு!”
“பிரேக்கப்பாம்.”
அதிர்வுடன் பார்த்தாள் வினோ. மறுபடியும் முட்டிக்கொண்டார்கள் என்று நினைத்தாளே தவிர இப்படி யோசிக்கவில்லை.
“என்னடி சொல்லுறாய்?”
அழுகையில் துடிக்கும் இதழ்களை இறுக்கி மூடிக்கொண்டு முகம் திருப்பி அமர்ந்திருந்தாள் ஆரபி.
அவளும் வேண்டாம் என்று சொல்லிவிட்டுத்தான் போனாள். அப்போதெல்லாம் இப்படி நடந்தானே, என்னை என் உணர்வுகளை மதிக்க மாட்டேன் என்கிறானே என்றுதான் அழுத்திருக்கிறாளே தவிர்த்து, தம் உறவு முறிந்துபோயிற்றே என்று அழுததில்லை.
அதற்கு விடமாட்டான் என்று ஆழ் மனத்தில் அவன் மீதிருந்த அளப்பரிய நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அந்த அவனே அப்படிச் சொன்னபோது உயிர் போகும் வலி கண்டது உள்ளம்.
இதற்குள் குணால் வந்திருந்தான். அவன் வருவதைத் தூரத்திலேயே கண்டுவிட்டு முகத்தை நன்றாகத் துடைத்துக்கொண்டாள் ஆரபி.

