இணைபிரியா நிலை பெறவே 23 – 2

அபிசா கூட வார இறுதிக்குக் கொழும்புக்கு வரச் சொன்னாள். இவள் போகவில்லை. தன்னைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று பயம்.

அவனுக்கும் அவளுக்குமிடையில் இனி எதுவுமே இல்லையா? உண்மையாகவே எல்லாம் முடிந்துவிட்டதா? அவன் வேறு ஒரு பெண்ணுடனும் அவள் வேறு ஒரு ஆணுடனும்… அதற்கு மேல் யோசிக்க முடியாமல் கண்ணீர் வழிந்துவிட வேகமாக துடைத்துக்கொண்டாள்.

நமக்கு மிக மிகப் பிடித்த ஒன்று நம்மை விட்டுப் போகாது என்கிற வரையில் இருக்கிற அலட்சியம், இனி அது நமக்குச் சொந்தமில்லை என்றதும் அப்படியே மாறி, என்ன செய்தாவது நம் கைக்குள் பொத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு வெறி வருமே. அந்த நிலையில் இருந்தாள் ஆரபி.

அன்றைய நாளையும் பணியிடத்தில் எப்படியோ கடத்திவிட்டுப் புறப்பட்டாள். அலுவலகத்திலிருந்து அரை மணி நேரப் பயணத் தூரத்தில் அமைந்திருந்தது அவளின் அறை. பஸ் பிடித்துப் போவதை நினைக்கவே உடலும் உள்ளமும் துவண்டன.

பேருந்து நிலையம் இருக்கும் திசையை நோக்கி அவள் நடக்க ஆரபிக்க, “ஆரபி!” என்று கேட்டது ஒரு குரல்.

இது அவன் குரல். அவள் உள்ளம் ஆர்ப்பரித்துச் சொல்ல வேகமாகத் திரும்பி குரல் வந்த திசையை நோக்கினாள். அவள் நம்பிக்கை பொய்க்கவில்லை. அவன்தான். ஸ்டாண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு பக்கமாக அமர்ந்திருந்தான்.

அவன் முன்னே சென்று நின்றவள் உள்ளம் ஒரு நிலையாய் இல்லை. வந்துவிட்டானா, அவளைத் தேடி வந்துவிட்டானா என்று ஆர்ப்பரித்தது. அது கண்ணீர்ச் சுரப்பிகளைத் திறந்துவிட, பேச இயலாமல் அவனையே பார்த்து நின்றாள்.

அவன் பார்வையும் அவளிலேயேதான். “இனி எனக்கும் உனக்குமிடையில ஒண்டுமே இல்லையா ஆரபி?” என்று கேட்டான்.

அவளுக்கு மூக்கு விடைத்து இதழ்கள் நடுங்கின.

“அப்பிடித்தான் நீயும் சொன்னாய். நானும் சொன்னனான். எண்டாலும் இன்னொருக்கா கேட்டுக்கொண்டு போவம் எண்டு வந்தனான்.”

வேகமாகப் பார்வையைத் திருப்பிக்கொண்டாலும் வழியும் கண்ணீரையும் நடுங்கும் இதழ்களையும் அவளால் கட்டுப்படுத்தவே இயலவில்லை.

“பொருத்தமில்லாத இடத்தில மனதை விட்டதால வாற கண்ணீரா இது?” வழியும் அவள் கண்ணீரையே பார்த்து வினவினான்.

என்ன சொல்வாள்? என் உயிரைப் பிரிந்து நிற்கும் வலியைத் தாங்க இயலாமல் உகுக்கும் கண்ணீர் என்றா?

இமைக்காது அவளையே பார்த்தான். அவளிடமிருந்து பதிலே இல்லை என்றதும், “என்னவோ உன்னைப் பாத்து இதையெல்லாம் கேக்கோணும் மாதிரி இருந்தது. அதான் வந்தனான். வாறன்!” என்று பைக்கில் ஏறி அமர்ந்தான்.

அப்போதுதான் அது புரிய அதிர்ந்துபோனாள். “பைக்லயா வந்தனீங்க?” என்றாள் அந்த அதிர்ச்சி விலகாமலேயே.

“வர எண்டு இருக்கேல்ல. திடீரெண்டு வரோணும் மாதிரி இருக்கவும் வெளிக்கிட்டுட்டன்.”

இவனுக்கு என்ன விசரா என்று பார்த்தாள் ஆரபி. அங்கிருந்து இங்கு வரை பைக்கிலேயே வருவது என்பது சின்ன காரியமா என்ன? அப்படி வர வைத்தது அவள் மீதான அன்பா? இமைக்க மறந்து அவனையே பார்த்தாள். என்னவோ அவனைக் கட்டிக்கொண்டு அழவேண்டும் போலாயிற்று அவளுக்கு.

அவன் பைக்கை உதைத்துக் கிளப்பவும், “எங்க வெளிக்கிட்டீங்க?” என்றாள் வேகமாக.

அவளுக்கு அவனைத் தடுக்க வேண்டும். போக விடக்கூடாது. “வீட்டுக்கு வாங்க.” என்றாள் தன்னை மீறி.

வேகமாகத் திரும்பிப் பார்த்தான் அவன். அவள் தடுமாறி, “இல்ல அது… களைப்பா இருக்கும் எல்லா. அதான் நான் தங்கியிருக்கிற அறைக்கு வந்திட்டுப் போங்க எண்டு சொன்னனான்.” என்று மெல்லச் சொன்னாள்.

இப்போதும் அவன் பார்வை அவளிலேயே தங்கி நின்றது. இதற்குமேல் என்ன சொல்லி அவனைத் தடுப்பது என்று தெரியவில்லை அவளுக்கு. நெஞ்சு படபடத்தாலும் அவனைப் பாராமல் சென்று, அவன் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டாள்.

இதை அவனும் எதிர்பார்க்கவில்லை. திரும்பி அவளைப் பார்த்தான். “என்ன பாக்கிறீங்க? உங்கட பைக்ல நான் ஏறக் கூடாதா?” என்றாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

அப்போதும் அவள் பார்வையைச் சந்தித்துவிட்டு பைக்கைக் கிளப்பினான். அவள் வழிகாட்ட அவன் பைக் சென்று ஒரு வீட்டின் முன்னே நின்றது. அது ஒரு இரண்டு மாடிக் கட்டடம். கீழே விசாலமான வீடு ஒன்று இருந்தது. மேலே இவளைப் போன்றவர்களுக்கு வாடகைக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்கவே தெரிந்தது.

வெளிப்புறமாக இருந்த மாடிப்படிகளில் ஏறி, அவள் அறையின் கதவைத் திறந்துவிட்டுத் திரும்பி அவனைப் பார்த்தாள்.

உள்ளே அழைக்கிறாள். அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனாலும் அவன் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. “ஆரோ ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர அறைக்க சும்மா கூட நான் வரக்கூடாது ஆரபி.” என்றான் அவளையே பார்த்து.

ஒரு கணம் உதட்டைக் கடித்தாலும், “என்ர அறைக்க நீங்க வரலாம்.” என்றுவிட்டு உள்ளே சென்றாள் அவள்.

தானும் நுழைந்து கதவைச் சாற்றிய கணத்திலேயே அவளைத் தன் அணைப்பினுள் கொண்டு வந்திருந்தான் சகாயன்.

error: Alert: Content selection is disabled!!