மனதில் பெரும் பரவசத்துடன், பரபரப்புடன், பல எதிர்பார்ப்புக்களுடன் அந்த ஞாயிறு இரவு கடந்தது ரஞ்சனுக்கு.
இவ்வளவும் நடந்தபோதும், ஜீவனினதும் சுகந்தனினதும் வீடுகளுக்குச் சென்று எல்லோரையும் திறப்புவிழாவுக்கு வரவேண்டும் என்று அழைத்தபோதும், தன் தாயாரிடம் எதுவுமே சொல்லவில்லை ரஞ்சன். அந்தளவுக்கு கோபமும், பிடிவாதமும் அவனிடம் ஆழப் பதிந்திருந்தது.
திங்கட்கிழமை அன்று காலையில் நேரத்துக்கே எழுந்து தயாரானவன், அப்போதும் தாய் தங்கையிடம் எதுவுமே சொல்லாமல் கிளம்பி கோவிலுக்குச் சென்று மனமாரக் கும்பிட்டான்.
பரபரப்புடன் கடைக்குச் சென்றவனை, மங்களத்தை ஏந்தி நிற்கும் பொன்மஞ்சள் நிறச் சுடிதாரில் புன்னகை நிறைந்த முகத்துடன் எதிர்கொண்டவள் சித்ரா.
அவளைக் கண்டதும், ஆனந்தமாக அதிந்தவனின் உதடுகள், “யா..ழி!” என்று அவள் பெயரைச் சத்தமில்லாமல் உச்சரித்தன தன்னாலே.
இவளுக்கு எப்படித் தெரியும் என்கிற பதட்டமோ, சந்தானத்திடம் சொல்லிவிடுவாளோ என்கிற பயமோ இன்றி அந்த நொடியில் ரஞ்சனின் மனதில் தோன்றிய உணர்வு மகிழ்ச்சியே!
நண்பர்கள் மூவருமாகச் சேர்ந்து அந்தக் கடையை உருவாக்கியபோதும், வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு அடியெடுத்து வைத்திருக்கும் அவனை வாழ்த்தவோ, பாராட்டவோ அல்லது அவனைப் பார்த்து மகிழவோ யாருமே இல்லை என்கிற வேதனை அவன் உள் மனதில் அரித்துக்கொண்டே இருந்தது.
அவளைக் கண்டதும் அந்த வேதனை மறைந்தது.
இனி நன்றாக வந்துவிடுவோம் என்கிற நம்பிக்கை இருந்தாலும், நம் கடைக்கு யாராவது வருவார்களா, வியாபாரம் நடக்குமா என்கிற மெல்லிய பயம் கூட இருந்தது அவனுக்கு.
கடையின் திறப்பு விழாவின் ஆரம்பமாக சுவாமிக்கு வைக்கப் பட்டிருந்த குத்துவிளக்கை ஏற்றக் கூட ஒருவர் இல்லாமல் தாங்களே எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தவனுக்கு அவளது வரவு பேரானந்தத்தையே கொடுத்தது.
வேகமாக அவளை நெருங்கியவன் முகம் பளீரிட, “ஹேய் யாழி! வாவா..” என்று சந்தோசமாக வரவேற்றான்.
அதைக் கேட்டவளோ இனிதாக அதிர்ந்தாள். விழிவிரிய அவனையே பார்த்தவளின் மனதில் தோன்றிய ஆனந்தத்துக்கு அளவே இல்லை!
அதுநாள் வரை அவளைச் ‘சித்ரா’ என்றுகூட அழைத்திடாதவனின் ‘யாழி’ என்கிற அழைப்பு பரவசத்தை கொடுத்தது.
அந்த அழைப்பிலேயே தன்னை மறந்தவள், வரிசைப் பற்கள் தெரிய அவன் சிந்திய பளீரிடும் புன்னகையில் மயங்கியே போனாள்.
அவனது கோபப் பார்வையையே காதலித்தவளை, மலர்ந்த முகமும், அதில் நிறைந்திருந்த மகிழ்ச்சியும் சொக்க வைத்தது.
அவன் முகத்தில் இருந்து பார்வையை அகற்ற முடியாது நின்றவளின் மோன நிலையைக் கலைத்தது ஜீவனின் குரல்.
“யாருடா இந்த மாரியாத்தா..” சுகந்தன் சைக்கிளை மிதிக்க முன்பக்கம் அமர்ந்திருந்த ஜீவன் கேட்டான். அவளின் மஞ்சள் நிற உடை, அவனுக்கு அம்மனை நினைவு படுத்தியது போலும்.
நெஞ்சில் நிறைந்தவனின் முகத்தை ரசிக்க விடாது தடுப்பது யார் என்கிற கடுப்பில் திரும்பியவளின் விழிகள் ஜீவனை முறைத்தன.
“பாருடா, மாரியாத்தா முறைப்பதை..” என்றான் மீண்டும்.
கோவிலுக்குச் சென்று வந்ததன் அடையாளமாக நெற்றி முழுவதும் திருநீறும், பெரிய சந்தனப் பொட்டும் தாங்கி நின்ற ஜீவன், கையில் வேறு தட்டு வைத்திருந்தான்.
“இதயன், யார் இந்தப் பிச்சைக்காரன்?”
சித்ரா கேட்ட கேள்வியில் பொங்கிவிட்டான் ஜீவன்.
“என்னது? பிச்சைக்காரனா? நானா? டேய் என்னடா, உன் நண்பனை யாரோ ஒருத்தி அவமானப் படுத்துகிறாள். பார்த்துக் கொண்டிருக்கிறாய்.”
பதில் சொல்லாது புன்னகையோடு ரஞ்சன் நிற்க, ஜீவனை ஏற இறங்கப் பார்த்தாள் சித்ரா. “பார்த்தால் அப்படித்தானே தெரிகிறது.”
தன் கையில் இருந்த தட்டைச் சட்டென்று சுகந்தனின் கையில் திணித்துவிட்டு, “அது திருநீறு சந்தனம் வைக்க எடுத்துவந்த தட்டு.” என்றான் ரோசத்துடன்.
“ஓ…!” என்று இழுத்தவளின் இழுவையே அவனைச் சீண்டியது.
“டேய், யாருடா இவள்?” மீண்டும் கேட்டான் ஜீவன்.
“இவள்தான்டா அவள்…” என்றான் ரஞ்சன்.
“எவள்?”
“சித்ரா..” என்றான் ரஞ்சன், ஜீவனின் காதருகில் குனிந்து.
“என்னது?” என்று கேட்டவனின் கை ஒரு கன்னத்தைப் பற்றியது.
அவனின் செய்கையிலேயே ரஞ்சனை அவள் அடித்தது அவனுக்கும் தெரிந்திருகிறது என்பதை ஊகித்தவள், “என்ன? நான் யார் என்று தெரிந்துவிட்டதா?” என்று கேட்டாள்.
ஜீவனின் தலை பூம்பூம் மாடு போன்று ஆடியது.
“அது! அந்தப் பணிவு எப்போதும் இருக்கட்டும்.” என்று அவனிடம் சொன்னவள், “கடையைத் திறவுங்கள் இதயன்..” என்றாள் ரஞ்சனிடம் உரிமையாக.
“என்னது இதயனா?” அப்போதுதான் அதைக் கவனித்தான் ஜீவன்.
“ஆமாம், என்னுடைய இதயன்..” என்றவளின் பேச்சில், “என்னது?!?” என்று மறுபடியும் அதிர்ந்தான் ஜீவன்.
“ஏன்டா, போயும்போயும் உனக்கு இந்தச் சண்டிராணி தான் கிடைத்தாளா? இதை நீ எங்களிடம் சொல்லவே இல்லையே..”
நண்பர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற ரஞ்சனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உங்கள் விசாரணையைப் பிறகு வைத்துக் கொள்ளுங்கள்! இப்போது கடையைத் திறவுங்கள்.” என்று அதட்டினாள் சித்ரா.
ஏதோ அவள்தான் அந்தக் கடையின் முதலாளி போன்றும் அவர்கள் அங்கு வேலைக்கு வந்தவர்கள் மாதிரியும் இருந்த அவளது அதட்டலில் சற்று அசந்துதான் போனான் ஜீவன்.
அவளைப் பார்த்தபடி நின்றவனின் முதுகில் தட்டி, “அவள் அப்படித்தான். நீ வாடா..” என்று சிரிப்போடு சொன்ன ரஞ்சன் கடையைத் திறந்தான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நின்ற சுகந்தன் யோசனையாக ரஞ்சனைப் பார்த்தான்.
அவன் கடை திறப்பது சந்தானத்துக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கிறான். அப்படியிருக்க அவர் மகள் வந்திருக்கிறாள். இதை எதையும் அவன் யோசிப்பது போன்று தெரியவில்லை சுகந்தனுக்கு. அவள் முன் அதைக் கேட்க முடியாது என்பதால் மௌனமாகவே நின்றான்.
ரஞ்சனுக்கு அடுத்த ஆளாக கடைக்குள் நுழைந்த சித்ராவின் பார்வை கடையை ஆவலுடன் வலம் வர, “விளக்கை ஏற்று..” என்றான் ரஞ்சன் அவளிடம்.
முகம் மலர அவனைப் பார்த்துத் தலையை அசைத்தவள் சுவாமிப் படங்களின் அருகே சென்றாள். ஒரு மோடா போன்ற ஒன்று போடப்பட்டு சுவாமிப் படங்கள் வைக்கப் பட்டு அவற்றின் முன்னே ஒரு சின்னக் குத்து விளக்கு ஒன்று வைக்கப் பட்டிருந்தது.
உரிமையோடும், ஒருவித சொந்தத்தோடும், ஒரு குடும்பத் தலைவியின் பாங்கோடும் அந்த விளக்கை ஏற்றினாள் சித்ரா. கண்களை மூடிக் கைகளைக் கூப்பி வணங்கியவளின் மனம், கடவுளிடம், ‘என் இதயன் இன்னுமின்னும் முன்னேற வேண்டும்’ என்று பிரார்த்தித்தது.
மூன்று ஆண்களும் அவளுக்குப் பின்னால் நின்று கண்மூடித் தங்கள் வேண்டுதல்களையும் பிரார்த்தனையையும் கடவுளிடம் முன்வைத்தார்கள்.
விபூதித் தட்டில் இருந்து திருநீறைக் கைகளில் தாங்கியவள், “கொஞ்சம் குனியுங்கள் இதயன்..” என்றாள் ரஞ்சனிடம்.
முகம் மலர சற்றே அவன் குனிய, அவன் நெற்றியில் திருநீறை இட்டவள் அப்படியே சந்தனம் குங்குமத்தையும் இட்டாள்.
கண்களில் காதல் மின்ன அவளையே பார்த்திருந்தான் ரஞ்சன்.
அவனுக்கு மட்டுமல்ல சுகந்தனுக்கும் ஜீவனுக்கும் கூட அவள் அதைச் செய்யத் தவறவில்லை. அதை எதிர்பாராத அவர்கள் இருவருக்கும் மனம் நெகிழ்ந்துவிட, கண்கள் மெலிதாகக் கலங்கின.
“நன்றிமா..” நெகிழ்ந்த குரலில் சொன்னான் சுகந்தன்.
“எதற்கு அண்ணா நன்றி. என் அண்ணாவுக்கு நான் செய்ய மாட்டேனா..” என்றவள் ஜீவனை முறைத்துக்கொண்டே, “ஆனால் இந்தப் பிச்சைக்காரனை மட்டும் என் அண்ணாவாக ஏற்றுக் கொள்ள முடியாது.” என்றாள்.
சட்டென்று ஜீவனின் முகம் வாடி விடவும், “சரி சரி, போனால் போகிறது என்று உங்களையும் என் அண்ணாவாக ஏற்றுக் கொள்கிறேன்..” என்றாள் சித்ரா.
உடனே முகம் பளீரிட, “நானும் போனால் போகிறது என்று இந்த மாரியாத்தாவைத் தங்கையாக ஏற்றுக் கொள்கிறேன்..” என்றான் அவன்.
“மாரியாத்தாவுக்குக் கலை வந்து பார்த்ததில்லையே நீங்கள்? உங்கள் நண்பனிடம் கேளுங்கள். சொல்வார்..” என்றாள் ரஞ்சனைக் கண்ணால் காட்டி.
“கேட்காமலேயே அவன் எல்லாம் சொல்லிவிட்டான்..” என்ற ஜீவனின் பார்வை இப்போது அவளைப் பயபக்தியுடன் பார்த்தது.
மலர்ந்த புன்னகையுடன், “எப்போதும் இந்தப் பயம் இருக்கட்டும்.” என்றாள் மிரட்டலாக.
கடையில் எஞ்சியிருந்த சின்னச் சின்ன வேலைகளைப் பார்த்தபடி இருந்த ரஞ்சனின் விழிகள், முதன் முதலாக வரப்போகும் வாடிக்கையாளருக்காக வாசலிலேயே தவம் கிடந்தது.
முதல் வியாபாரம் செய்வதற்கு விசேசமாக யாருக்கும் அவர்கள் அழைப்பு விடவில்லை என்பதை விட அப்படி அழைப்பதற்கு யாரும் இல்லை என்பதுதான் உண்மை!
நாதன், ரஞ்சனுக்குக் கடையைக் கொடுத்துவிட்டு கொழும்புக்குச் சென்றுவிட்டிருந்தார். ரஞ்சனும் அன்று கடைக்கு விடுமுறை என்பதால் கண்ணனால் கடை திறக்கும் போதே வரமுடியாது. மதிய உணவு வேளையில் வருவதாகச் சொல்லியிருந்தார் அவர்.
சுகந்தன், ஜீவனின் குடும்பங்கள் வரும்தான். ஆனால் எப்போது என்று தெரியாது. எனவே முதல் வியாபாரம் எப்போது, யாருக்கு நடக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் அவன் காத்திருக்க, ஒரு சோடிச் செருப்புக்களுடன் வந்தாள் சித்ரா.
“இதயன்! வாருங்கள், வந்து பில் போடுங்கள்..” என்றாள்.
“ஹே யாழி! உனக்கு பில் போடுவதா? போடி! உனக்கு விருப்பமானதை நீ எடு.” என்றான் அவன் சந்தோசமாக.
“அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீர்கள் இதயன். பிறகு, நான் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வேன்..” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, “பார்த்தியாடா, கடை திறந்து ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் மூடுவிழா கொண்டாடப் பார்க்கிறாள் இவள்.” என்றான் ஜீவன்.
அவனைப் பார்த்து முறைத்துவிட்டு, “ஒன்று எடுத்தால் இன்னொன்று இலவசம் என்பது மாதிரி ஏதும் கொடுக்கிறீர்களா இதயன்? அப்படி ஏதும் இருந்தால் இந்தச் செருப்புக்கு இலவசமாக அவரை எனக்குத் தாருங்கள். என் ஸ்கூட்டி நடுரோட்டில் பழுதாகி நின்றுவிட்டால் தள்ளிக்கொண்டு போக ஆள் வேண்டும்.” என்றாள் சித்ரா.
அதைக் கேட்ட சுகந்தனும் ரஞ்சனும் சிரிக்க, அவர்கள் மூவரையும் முறைத்தான் ஜீவன்.
பிறகு ரஞ்சன் மறுத்தபோதும் விடாது ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து அந்தச் செருப்புக்களை வாங்கி, அவர்களது கடையின் வியாபாரத்தை நல்லபடியாக ஆரம்பித்து வைத்தாள் சித்ரா.
நண்பர்கள் மூவரின் முகத்திலும் அது சந்தோசத்தைக் கொடுத்தது.
கடைக்கு வருபவர்களை வரவேற்க சுகந்தன் கடை வாசலில் நின்றுகொள்ள, ஜீவன் கடைக்குள் நிற்க, ரஞ்சன் சித்ராவோடு நின்றிருந்தான்.
“உங்கள் கடையில் முதல் ஆளாக செருப்பு வாங்கியிருக்கிறேன். குடிக்க ஏதாவது தரமாட்டீர்களா இதயன்?” என்றவள், அங்கே நின்ற ஜீவனைக் காட்டி, “வேலைவெட்டி இல்லாமல் சும்மாதானே நிற்கிறார். அவரை அனுப்பி ஏதாவது வாங்கி வரச் சொல்லுங்கள்.” என்றாள்.
“டேய்! அவளைச் சும்மா இருக்கச் சொல்லு. இல்லையென்றால் நான் பொல்லாதவன் ஆகிவிடுவேன்..” என்றவனை இன்னும் சீண்டினாள் சித்ரா.
“இப்போ மட்டும் நல்லவராக இருப்பதாக நினைப்போ..?”
“டேய்!” என்று பல்லைக் கடித்தான் ஜீவன்.
“விடு மச்சான்..” என்று ஜீவனைச் சமாளித்த ரஞ்சன், சித்ராவை எதுவுமே சொல்லவில்லை என்பதைக் கவனிக்காமல் இல்லை ஜீவன்.
நண்பர்கள் தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதை உணராத ரஞ்சன், “தாகமாக இருக்கிறதா? குளிர்பானம் இருக்கிறது, பொறு எடுத்து வருகிறேன்..” என்றபடி கடையின் பின்பக்கம் சென்றான்.
அவனைப் பின்தொடர்ந்தாள் சித்ரா.
அங்கே, குட்டியாக ஒரு அறை இருந்தது. அங்கு நண்பர்களின் குடும்பத்தவர்கள் வந்தால் கொடுப்பதற்கு என்று குளிர்பானங்கள் வாங்கி வைத்திருந்தான் ரஞ்சன்.
அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு திரும்பியவனின் கழுத்தில் தன் கைகளை மாலையாக்கினாள் சித்ரா.
அதை எதிர்பாராததில் அதிர்ந்து நின்றவனின் கழுத்தைத் தன் பக்கமாக இழுத்து, கன்னத்தில் தன் இதழ்களைப் ஆழப் பதித்தாள் சித்ரா.
சில்லென்று கன்னத்தைத் தாக்கிய அவள் இதழ்களின் இனிமையில் மயங்கி நின்றவனின் விழிகளையே பார்த்து, “இந்தக் கடை இன்னும் இன்னும் பெரிய கடையாக வரவேண்டும் இதயன். கட்டாயம் வரும்! நீங்களும் முன்னுக்கு வருவீர்கள். அதற்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்!” என்றவள், அவன் மறு கன்னத்திலும் தன் இதழ்களைப் பதித்தாள்.
அதிலே திக்கு முக்காடிப் போனவன், தன்னை மறந்து அவள் இடையை வளைத்தான். “ஹேய் ராட்சசி, என்னடி இதெல்லாம்?” என்று கிசுகிசுத்தவனின் குரலில் இருந்தது கிறக்கம் மட்டுமே.
தலையை ஒரு பக்கமாகச் சரித்து, புருவங்களை உயர்த்தி, விழிகளில் குறும்பு கொப்பளிக்க, “என்னவென்று தெரியாத உங்களுக்கு?” என்று கேட்டவளின் அழகில் சொக்கிப் போனான் ரஞ்சன்.
இடையைப் பற்றியிருந்தவனின் விரல்களின் அழுத்தம் கூட, வேகமாக அவள் முகம் நோக்கிக் குனிந்தவன், சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டான்.
“வெளியே இரண்டுபேர் நிற்கிறான்கள்.” என்றான், விலகலுக்கான காரணம் போல்.
அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதை உணர்ந்த சித்ராவும் அவன் கழுத்தில் இருந்து தன் கைகளை விலக்கிக் கொண்டு, அந்த அறையை விட்டு வெளியே செல்லத் திரும்பவும், அவள் கையைப் பற்றி இழுத்தான் ரஞ்சன்.
என்ன என்பதாக அவள் திரும்பிப் பார்க்க, அவளை இழுத்துத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்தான். அந்த அணைப்பு, நெகிழ்ந்து இருந்தவனின் மனதில், அவளது வரவால் உண்டான நிறைவைச் சொல்வது போல் இருக்க, எதுவுமே கேட்காத சித்ரா குறும்புச் சிரிப்போடு செல்லமாக அவன் தலையில் குட்டினாள்.
சின்னச் சிரிப்புடன் அவளை விடுவித்தான் அவன்.