கிருபனின் கமலி – 15(1)

துளசியின் திருமணநாள். மணப்பெண்ணான துளசிக்கு முதலே கிருபன் எழுந்திருந்தான். அந்தளவுக்கு அவனுக்குள் உற்சாகமும் துள்ளலும் வியாபித்திருந்தது. அவனின் கமலியை அவனின் உறவுகளுக்கு முன்னே நிறுத்தப் போகிறானே!

அன்று, அவளுக்குச் சேலை எடுத்துக்கொடுத்து, உணவகம் ஒன்றில் உணவையும் முடித்துக்கொண்டு, அவளை அரவிந்தனிடம் ஒப்படைத்துவிட்டு அப்போதே கிளிநொச்சிக்குத் திரும்பியவனின் உடம்பில் மருந்துக்கும் களைப்பில்லை. அந்தளவில் மனதினுள் மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகித்துக் கொண்டிருந்தது.

அந்த மகிழ்ச்சியோடு அந்த வீட்டின் ஆண்பிள்ளையாக அனைத்துக் காரியங்களையும் முழு மனதோடு செய்து கொடுத்துவிட்டு கமலியை அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்பதற்காக முதல்நாள் இரவுதான் மீண்டும் மன்னாருக்கு வந்திருந்தான்.

இதோ, இந்த அதிகாலையில் வேக வேகமாய்க் குளித்து, ஒரு ஜீன்ஸ், டீ ஷேர்ட்டில் தயாராகி, கமலியிடம் வருவதாகச் சொன்ன நேரத்துக்கு முதலே அவளின் வீட்டு வாசலில் சென்று நின்றான்.

பெரியவர்களின் உறக்கத்தைக் கெடுத்துவிட வேண்டாம் என்கிற அக்கறையோடு அரவிந்தனுக்குக் குறுஞ்செய்தியைத் தட்டி விட்டுவிட்டு வாசலுக்குச் செல்ல, கமலிதான் வந்து கதவைத் திறந்தாள்.

பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டான் கிருபன்.

அவன் எடுத்துக்கொடுத்த சேலையில், மனதை நிறைக்கும் அலங்காரத்தோடு, பூச்சூடி நின்றவளின் பிரசன்னம் அவன் மனதை நிறைத்தது. வார்த்தைகள் வரவே மாட்டேன் என்றது.

அவன் நிலை கண்டு கமலியின் உதட்டினில் மெல்லிய சிரிப்பு. தன் தோற்றத்தை தானே காட்டி, ‘எப்படி?’ என்று புருவம் உயர்த்தி வினவினாள். என்னென்னவோ சொல்லத்தான் அவனுக்கும் ஆசை. ஒன்றும் சொல்லாமல் வேறு யாரும் தம்மைக் கவனிக்கிறார்களா என்று வீட்டுக்குள் அவன் விழிகளைச் சுழற்றினான்.

அப்போது, “வாடா!” என்று கொட்டாவி விட்டபடி எழுந்து வந்தான் அரவிந்தன்.

அதற்குமேல் ஒன்றும் சொல்ல முடியாமல் போனது கிருபனுக்கு. கமலியும் உள்ளே சென்று தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து கொடுத்தாள்.

மூவரும் அருந்தி முடித்ததும், “வெளிக்கிடுவமா?” என்றாள்.

“ம்.. நீ வெளில போ! நான் இப்ப வாறன்.” அவளின் விழிகளைப் பாராமல் சொன்ன கிருபன் அரவிந்தனை இழுத்துக்கொண்டு அவன் அறைக்குள் புகுந்தான்.

“என்னடா?” தேநீர் அருந்தியும் முற்றிலும் அகலாத உறக்கக் கலக்கத்தோடு வினவினான் அவன்.

“டேய் மச்சான், எனக்கு வேட்டி கட்டத் தெரியாதடா. கெதியா கட்டிவிடு.” என்றான் கையோடு கொண்டுவந்த பைக்குள் இருந்து வேட்டி சட்டையை வெளியே எடுத்தபடி.

பக் என்று சிரித்தான் அரவிந்தன். “வேட்டி கட்டி விடுறதோ? எனக்கே அப்பா அல்லது கமலிதான் கட்டி விடுறதே. நீ அவளையே கேள்!” என்றவனின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து நிமிர்ந்தவன், கைகளைக் கட்டிக்கொண்டு வாசல் கதவில் சாய்ந்து நின்று, இவர்கள் கதைப்பதைக் கேட்டுக்கொண்டு நின்றவளைக் கண்டு இன்னுமே அதிர்ந்துபோனான்.

அவளைத் தவிர்த்துவிட்டு அவர்களை எதையாவது கதைக்க விடுவாளா அவள்?

அவன் பார்வையைத் தொடர்ந்து திரும்பிப் பார்த்த அரவிந்தன், “இவனுக்கு வேட்டி கட்டத் தெரியாதாம். கட்டிவிட்டு கமலி!” என்றான் அவளிடம்.

“விசராடா உனக்கு?” என்று அவனை அதட்டிவிட்டு, “நான் அங்க மண்டபத்தில ஆரையும் கேட்டு கட்டுறன். நீ வா, நாங்க போவம்!” என்றபடி வேகமாக வேட்டியை பையினுள் மீண்டும் அடைத்தவனிடம் இருந்து பையைப் பறித்தாள் கமலி.

வேட்டியை எடுத்துப் பிரித்தபடி, “ஜீன்ஸை கழட்டுங்க!” என்றாள்.

“என்னது?” என்று அதிர்ந்து விழித்தான் கிருபன்.

“ஜீன்ஸை கழட்டட்டாம் மச்சி!” கொடுப்புக்குள் சிரித்தபடி, கேலி இழையோடும் குரலில் அழுத்திச் சொல்லிவிட்டு கட்டிலில் விழுந்தான் அரவிந்தன்.

அவனை முறைத்தான் கிருபன். “நேரமாகுது கமலி, போவம்!” அவளிடம் இருந்து தப்பிக்கும் நோக்கோடு வேகமாக வாசலுக்கு நடக்க, அவன் கையைப் பற்றி நிறுத்தினாள் கமலி.

“ஜீன்ஸை கழட்ட சொன்னனான்.”

“விசரா உனக்கு?”

“கழட்டுங்க!”

“பிளீஸ்மா! வேண்டாம் விடு.” சத்தம் வராமல் கெஞ்சியும் பார்த்தான் கிருபன்.

அவள், ‘கழட்டு!’ என்கிற ஒற்றைப் பார்வையோடு அசையாமல் நின்றாள்.

“எப்பிடியும் ஷோர்ட்ஸ் போட்டுக்கொண்டுதானே வந்திருப்பாய். வெக்கப்படாம கழட்டடா.” என்று குரல் கொடுத்தான், கட்டிலில் குப்புறக் கிடந்த அரவிந்தன்.

‘இவன வெளுக்க வேணும் முதல்.’ ஆத்திரம் வந்தது அவனுக்கு. ஷோர்ட்ஸ் அணிந்து இருந்தாலும் அவள் முன்னே எப்படி ஜீன்ஸை கழற்றுவது.

“சிம்ரன், இண்டைக்கு நீங்க வேட்டி கட்டாம இந்த அறையை விட்டு வெளில போக மாட்டிங்க! சோ கழட்டுங்க!” கையைக் கட்டிக்கொண்டு வெகு நிதானமாகச் சொன்னாள் கமலி.

இனி விடமாட்டாள். அவனுக்குத் தெரியும். வேறு வழியற்று, “திரும்பி நில்லு.” என்றான்.

ஒற்றைப் புருவத்தைக் கேலியாக உயர்த்திவிட்டு திரும்பி நின்றாள் கமலி. அப்போதே முகம் சிவந்துவிடும் போலாயிற்று அவனுக்கு. ‘வெட்கம் கெட்டவள்!’ செல்லமாகத் திட்டியபடி கழற்றினான்.

உள்ளே ஷோர்ட்ஸ் இருந்தாலும் ஒரு கூச்சம் தாக்க, “ம்” என்றான்.

அவனை நெருங்கி கைகள் இரண்டையும் அவனுக்குப் பின்னால் கொண்டுபோய் அவள் வேட்டியைச் சுற்றவும் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான் கிருபன். அவள் என்னவோ இயல்பாய்த்தான் தன் காரியத்தைப் பார்த்தாள். அவனுக்குத்தான் அவளின் விரல்கள் உரசிய இடமெல்லாம் கூசியது. அவள் முகம் பார்க்கவே முடியவில்லை. அவளிடம் இருந்து தன்னைப் பறித்துக்கொண்டு ஓடினால் என்ன என்று தோன்றிய எண்ணத்தை அடக்கிக்கொண்டு நின்றான்.

அவன் படுகிற பாட்டையெல்லாம் கவனிக்காததுபோல் கவனித்த கமலிக்கு அடக்கமுடியாத சிரிப்பு. காட்டிக்கொள்ளாமல் நேர்த்தியாகச் சுற்றிக்கொண்டு வந்த வேட்டியின் நுனியை இடுப்பில் செருகப்போக அவன் பதறிப்போனான்.

“விடு விடு. நானே செய்றன்.” என்றான் அவசரமாக.

“இவ்வளவும் செய்த எனக்கு இது தெரியாதா?” என்றுவிட்டு தானே செருகியவள், வேண்டுமென்றே அவன் இடையில் தன் விரல்களால் வருடியபடி, “பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி” என்று பாடினாள்.

கிருபனின் முகம் சிவந்தே போயிற்று. “கேவலப்படுத்தாதயடி!” என்றபடி, வேகமாக அவளின் வாயைப் பொத்தினான்.

அதற்குள்,
“இளையவளின் இடை ஒரு நூலகம்
படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம்” என்று இசைப்பாட்டுப் பாடினான் அரவிந்தன்.

கழற்றிப் போட்டிருந்த ஜீன்ஸினாலேயே அவனுக்கு ஒன்றைப் போட்டுவிட்டு கமலியை இழுத்துக்கொண்டு வெளியேறினான் கிருபன். அரவிந்தனின் சிரிப்புச் சத்தம் அவர்களைத் துரத்தியது.

பைக்கில் சென்றுகொண்டிருந்த இருவரின் முகங்களும் முகம் கொள்ளா சிரிப்பில் மலர்ந்து இருந்தது. பெரிதாக ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. பேசிக்கொள்ளத் தோன்றவில்லை. இருள் பிரியாத பொழுதும், அந்தப் பொழுதுக்கே ஏற்ற சில் என்ற குளிரும் அவர்களை வியாப்பித்திருந்த மனதினுள் நிறைந்திருந்த கிறக்கம் அந்தப் பயணத்தை மிகவுமே அழகாக்கிற்று.

——————————————–

திருமண மண்டபம் நிறைந்துபோய் இருந்தது. இந்தளவில் கமலி நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. ‘இந்தச் சிடுமூஞ்சிக்கு ஆர் வரப்போயினம்?’ என்றுதான் சோமசுந்தரத்தின் குணத்தை வைத்து எண்ணியிருந்தாள். ஆனால், இவ்வளவு சனத்தை எதிர்பார்த்ததால் தான் கிருபனும் அவளை அழைத்துவர விரும்பியிருக்கிறான் என்று இப்போது புரிந்தது.

அவளை அவனோடு கண்டதும் சோமசுந்தரத்தின் முகம் இறுகியதையும் ஜெயந்தி பதட்டமானதையும் கவனித்தாலும் காட்டிக்கொள்ளவில்லை அவள். அதேபோல, உள்ளே நுழைகிறவரைதான் அவன் அவள் வசத்தில் இருந்தான். அதன்பிறகு, வேலை அவனைப் பிடித்துக்கொண்டது. ஒரு ஓரமாக அமர்ந்து அவனைக் கவனிப்பதைத் தவிரக் கமலிக்கு வேறு வேலையே இருக்கவில்லை.

அடுத்தடுத்த சடங்குகளுக்கான தேவைகளைப் பார்ப்பது, ஐயா கேட்பவற்றை உடனேயே செய்வது, யார் என்ன கேட்டாலும் அதை என்ன என்று பார்ப்பது என்று அவர்களின் வீட்டின் தலைச்சம் பிள்ளையாய் பொறுப்புள்ள மகனாய் ஓடி ஓடி செய்தவனைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை கமலிக்கு.

உறவுகள் நிறைந்து வழிந்தனர். பலரை அப்போதுதான் கிருபனே முதன் முதலில் பார்த்தான். இவ்வளவு சொந்தங்களா என்று மலைப்பாய் இருந்தது. அவன் ஓடி ஓடி வேலை செய்வதைக் கவனித்த சிலர் அவனையே அழைத்து விசாரித்து, அவன் யார் என்று அறிந்துகொண்டனர். சிலருக்கு மகிழ்ச்சி. சிலருக்கு வியப்பு. சிலருக்கு தாய் தந்தையற்று ஆளாகி நிற்கும் அவன் மீது மிகுந்த ஆதூரம். அவனிடம் பேச்சுக் கொடுத்த எல்லோருக்கும் அவளையும் தன் வருங்காலத் துணைவியாக அறிமுகம் செய்து வைத்தான். அப்படி அறிமுகம் செய்கிற பொழுதுகளில் அவன் முகத்தில் தெரியும் பிரகாசத்தைப் பார்த்தவளுக்கு மனதுக்கு நிறைவாய் இருந்தது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock