நேசத்தோடு அவளின் உச்சியில் உதடுகளை ஒற்றி எடுத்தான். அவள் முகத்தை இரு கரங்களினாலும் பற்றி தன் முத்தங்களால் நிறைத்தான். “மாமா எங்களை நம்பித்தானே அனுப்பி வச்சவர். வெளில போவமா?” என்றான் கனிந்த குரலில் அவளின் காதோரமாக.
அவளுக்கும் விளங்காமல் இல்லை. ஆனாலும், அவனை அங்கேயே பிடித்துவைக்கச் சொல்லி மனம் சொன்னது. முடியாது என்பதுபோல் மறுத்துத் தலையை அசைத்துவிட்டு, “என்னத்துக்கு இப்பிடி ஓடி ஓடி வேலை செய்றீங்க?” என்று வினவினாள்.
“அந்த வீட்டுக்கு ஆம்பிளை பிள்ளை நான்தானே. நான் செய்யாம?” அவள் கன்னத்தை வருடியபடி சொன்னான் அவன்.
“அப்பிடித்தான் அவேயும் உங்கள நினைக்கினமா கிருபன்?” அவனின் கன்னம் தாங்கி மென்மையாய் வினவினாள் அவள்.
அவன் வருடல் நின்றுபோயிற்று. விழிகளில் வலியைத் தேக்கி அவளைப் பார்த்தான். “கிருபன்?” மனம் துடிக்க அவள் அழைக்கவும் வேகமாகப் பார்வையை அகற்றினான். மெல்ல அவளிடம் இருந்து விலகினான்.
அவளுக்குக் கோவம் வந்தது. ‘அவைய பற்றிக் கேட்டா என்ன விட்டு விலகுவியா நீ?’ என்று முறைத்தாள்.
“என்ன?” அவளின் கோபம் புரியாமல் கேட்டான்.
“ஒண்டுமில்ல. கேட்டதுக்குப் பதிலை சொல்லுங்கோ.”
“அவே எப்பிடி நினைச்சாலும் எனக்கு நன்றிக்கடன் இருக்கு. கடமை இருக்கு. பாசம் இருக்கு. அதைத்தான் செய்றன்.” என்றான்.
“அதுதான் போதுமான அளவு காசு குடுக்கப் போறீங்களே. சின்னவளுக்கும் செய்யப் போறீங்களே.”
“இது கணக்குப் போடேலாத கடமை. அப்ப எல்லாம் உன்ர வீடு எங்க எண்டு யாராவது கேட்டா சொல்லுறதுக்கு எண்டு எனக்கும் ஒரு வீடு இருந்தது. பசிச்ச நேரம் சாப்பாடு தந்தவே. படுக்கிறதுக்கு இடம் தந்தவே. என்னை நான் வளத்துக்கொண்டதே அங்கதான். இதுக்கெல்லாம் நான் எவ்வளவும் செய்யலாம்.” என்றவன் அவளருகில் வந்து அவள் முகம் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தான்.
“நான் இதுவரை உழைச்சது எல்லாத்தையும் குடுக்கிறதுல உனக்குக் கோபம் ஏதுமா?” அதனால் தான் இப்படியெல்லாம் கேட்கிறாளோ என்கிற தவிப்புடன் கேட்டான்.
“நான் செய்ய வேண்டாம் எண்டு சொன்னா என்ன செய்வீங்க?”
சின்ன அதிர்வு ஒன்று அவன் விழிகளில் வந்து போனது. “குடுக்கமாட்டன். ஆனா கவலைப்படுவன்.” என்றான்.
“ஏன்?”
“இது நான் பள்ளிக்கூடம் படிக்கிற காலத்திலேயே முடிவு செய்தது. அவே என்னைப்பற்றி என்ன நினைச்சாலும், அவளவே ரெண்டுபேரும் எனக்குத் தங்கச்சிமார், அவேக்குச் செய்யவேண்டியது என்ர கடமை எண்டு.”
“அப்ப எனக்கு நகைநட்டு, உடுபுடவை, நான் ஆசைப்படுறது எல்லாம் கிடைக்குமா கிடைக்காதா? கலியாணத்த வேற ஆறுமாதம் கழிச்சு எண்டு சொல்லிட்டீங்க.”
“தங்கச்சியா நினைக்கிறவளுக்கே இவ்வளவு செய்றவன். ஆசைப்பட்டுக் கட்டுறவளுக்கு எவ்வளவு செய்வன்?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
அவன் பேசிய அழகில் அவன் உதட்டினில் மென் முறுவல் மலரப்பார்த்தது. அடக்கிக்கொண்டு, “வரவர நல்லா கதைக்கப் பழகிட்டிங்க சிம்ரன்.” என்றாள்.
“நீதான் பழக்கிவிட்டிருக்கிறாய். உன்ன பழகிறதுக்கும் ஆசையா இருக்கு. பழகவா?” என்றான் அவளின் முகத்தோடு நெருங்கி.
அவள் இதழ்களில் முறுவல் மலர்ந்தது. முத்துப்பற்கள் மின்னச் சிரித்தாள்.
விழிகள் அவளின் இதழை மொய்க்க, “இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?” என்றான் அவன்.
“ஓ.. சிரிக்கிறதுக்கு எல்லாம் உங்களுக்கு நான் விளக்கம் சொல்லவேணும் போல.”
“கேட்ட கேள்விக்கு பதில் இல்ல. ஆனா வாய் என்ன?” கேட்ட வேகத்திலேயே அவளின் இதழ்களைச் சிறை செய்திருந்தான் கிருபன்.
முதலில் விடுபட முயன்றவள், அவனுடைய வலுவான பிடியில் தயங்கி, அவனின் ஆளுகையில் மயங்கி மெல்ல அவனுக்கு இசைந்தாள்.
“சாறி கசங்குது.”
கிடைத்த இடைவெளியில் அவள் சொல்ல, “கழட்டி வச்சிட்டு வாறியா?” என்றான் அவன் குறும்புடன்.
“உங்கள.. என்னவோ மாமா எங்களை நம்பித்தானே அனுப்பி வச்சவர் எண்டு பெரிய நல்லவன் மாதிரி சொல்லிப்போட்டு என்ன வேலையெல்லாம் பாக்கிறீங்க?” அவள் அடிக்க அவன் தேகம் சிரிப்பில் குலுங்கிற்று.
சிவந்து, மலர்ந்து, பூரித்திருந்த அவளின் பூமுகம் இன்னுமே அவனை ஈர்க்க ஆசையோடு மீண்டும் இதழ்களை இணைத்தான் கிருபன். கமலி தடை விதிக்கவில்லை. அவன் ஆசைக்கு இணங்கி நின்றாள்.
மனம் நிறைய மெல்ல அவள் இதழ்களை விடுவித்தான் கிருபன். மார்போடு அவளை அரவணைத்துக்கொண்டு, “கோபம் இல்லையே?” என்றான் அவளின் முகம் பார்த்து.
கண்களை சிமிட்டிவிட்டு மலர்ந்த சிரிப்புடன் இல்லை மறுத்துத் தலை அசைத்தாள் கமலி.
“தேங்க்ஸ் செல்லம்.”
எம்பி அவன் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “நீங்க உங்களுக்கு விருப்பமான மாதிரி என்ன எண்டாலும் செய்ங்கோ கிருபன். ஆனா, அதை அவே உணரவேணும். உங்களை விளங்கிக்கொள்ள வேணும். என்ன செய்தலும் செய்திட்டு போ எண்டுற அலட்சியம் கூடாது. உங்களுக்கு எப்படியோ எனக்கு என்ர மனுசன ஆரும் மதிப்பில்லாம நடத்துறது பிடிக்கேல்ல.” என்றாள் கமலி.
அவளின் வார்த்தைகள் மனதுக்கு இதம் சேர்த்தபோதிலும் கேள்வியாக அவளைப் பார்த்தான் அவன். அப்போதுதான் இந்த அறைக்குள் வருகையில் அவளிடம் இருந்த கோபமும் நினைவில் வந்தது. என்னவோ நடந்திருக்கிறது என்று மனம் சொன்னது.
“நாங்க இங்க நிக்கப்போறது இண்டைக்கு மட்டும் தான். அவே என்ன வேணுமெண்டாலும் நினைக்கட்டும். என்னை எப்பிடி வேணுமெண்டாலும் நடத்தட்டும். நான் பெயருக்காக இதை செய்யவும் இல்ல. பெருமைக்காக செய்யவும் இல்ல. எனக்காகத்தான் செய்றன். அதால எதைப்பற்றியும் யோசிக்காத நீ. சரியா?” என்றவன் அவளையும் அழைத்துக்கொண்டு மண்டபத்துக்கு நடந்தான்.
கமலிக்கு அந்த அறைக்குள் வரும்போது இருந்த கோபம் இப்போது இல்லைதான். இருந்தாலும் அவனைப்போல அவர்கள் என்னவாவது செய்யட்டும், கதைக்கட்டும் என்று இருக்க முடியவில்லை. அவளாகவே அவனையும் அழைத்துக்கொண்டு மேடை ஏறி போட்டோவுக்கு நின்றாள். எடுத்து முடித்ததும், துளசியிடம் கொடுக்கச் சொல்லி அவளிடம் கொடுத்திருந்த கவரை எடுத்து நீட்டி, “இதுல காசு இருக்கு துளசி.” என்று தொகையைச் சொன்னாள்.
கேட்ட துளசிக்கு விழிகள் விரிந்து போயிற்று. அந்தளவில் பெரிய தொகை கமலி சொன்னது. வாங்கவே பயந்தவளின் கையில் அதைத் திணித்தாள். சோமசுந்தரத்தின் புறம் திரும்பி, “அவரை உங்கட சொந்தமே இல்லை எண்டு நினைக்கிற நீங்க என்ன உரிமையில வேலைய மட்டும் வாங்குறீங்க? வளத்து விட்டிருக்கிறன், அதுக்குப் பதிலா செய் எண்டா? அல்லது, எவ்வளவு எட்டி உதைச்சாலும் காலை சுத்துற நாய்க்குட்டி மாதிரி மாமா மாமா எண்டு உங்களையே சுத்தி சுத்தி வாறார் எண்டுற அலட்சியமா? பாசம் இருக்கப்போய்த்தானே வாறார். நான் வளந்திட்டன், படிச்சிட்டன், நல்ல வேலையும் இருக்கு இனி நீங்க எனக்கு தேவையில்லை எண்டு உதறிப்போட்டு போக அவருக்கு எவ்வளவு நேரமாகும்? அப்பிடி செய்யாம பாசமா வந்து நிக்கிறவரை ஏன் அங்கிள் விலக்கி நிப்பாட்டுறீங்க?” என்றவள் கேள்வியில் சோமசுந்தரத்துக்கு கோபத்தில் முகம் சிவந்து போயிற்று.
மாப்பிள்ளை வீட்டினரும் அங்கு நின்றதில் தன் ஆத்திரத்தை எல்லாம் அடக்கி, “அவனைப் பத்து வயதில இருந்து வளத்து ஆளாக்கிவிட்டவன் நான். நேற்று வந்த நீ மேடையில வச்சு கேவலப்படுத்திறியா?” என்று அடிக்குரலில் சீறினார்.
கிருபனும் இப்படி அவள் கதைப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. இருவீட்டு நெருங்கிய உறவுகள் எல்லாம் மேடையைச் சுற்றித்தான் நின்றிருந்தனர். இந்தப் பேச்செல்லாம் நிச்சயம் அவர்களின் காதுகளில் விழும். குரலை உயர்த்தவில்லையே தவிர மேடையில் இருக்கிற எல்லோருக்கும் கேட்கும் வகையில் தான் கமலி பேசினாள். அதில், கிருபனுமே அசூசையாகத்தான் உணர்ந்தான். மேடையில் வைத்து இதென்ன பேச்சு என்று அவளைப் பார்த்தான். மற்றவர்களின் முன்னே அவளை எதுவும் சொல்லப் பிடிக்காமல், ‘வேண்டாம், நிப்பாட்டு.’ என்றும் விழிகளால் இறைஞ்சினான். உணர்ந்தாலும் அவள் நிறுத்தவில்லை.
“உங்கள கேவலப்படுத்த இல்ல அங்கிள். நீங்க அவருக்குச் செய்ததையும் நாங்க மறக்க இல்ல. நீங்க தாராளமா வேல வாங்குங்கோ. ஆனா வேலைக்காரனா இல்ல. உங்கட தங்கச்சின்ர மகனா, மருமகனான நினைச்சு பாசத்தோட உரிமையோட வேல வாங்குங்கோ எண்டுதான் சொல்லுறன். அவரும் பொறுப்பா நிண்டு எல்லாம் செய்து தருவார். இப்ப அவர் தந்த காசும் அவர் பட்ட கடனை திருப்பித் தர இல்ல. தன்ர பாசத்தை காட்டி இருக்கிறார். உங்கட சின்னவளுக்கும் நீங்க கூப்பிடாட்டியும் வருவார். இதே மாதிரி அவளுக்கும் செய்வார். உங்கட வீட்டு மூத்த ஆம்பிளை பிள்ளையா நிண்டு வேலைகளையும் பாப்பார. அதை பாசத்தோட ஏற்றுக்கொள்ளுங்கோ எண்டுதான் சொல்லுறன்.” என்றவள், சுற்றி இருந்தவர்களை எல்லாம் பார்த்து, “நான் ஏதாவது பிழையா கதைச்சிருந்தா சொறி. ஆனா கிருபன் பாவம். பாசத்துக்காக சொந்தங்களுக்காக நிறைய ஏங்குறார். அதை வெளில சொல்லத் தெரியாத மனுசன். அதுதான் அதை நானாவது சொல்லுவம் எண்டு நினைச்சன்.” என்றவள், “நீங்க வாங்கோ!” என்று அழைத்துக்கொண்டு வெளி வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள் கிருபனின் கமலி.
முற்றும்.