ரஞ்சனின் கடைக்கு முன்னால் ஸ்கூட்டியை நிறுத்தும்போதே சித்ராவின் விழிகள் மெலிதாகக் கலங்கின. அவனைக் காணப்போகிறோம் என்று நினைக்கவே உடல் முழுவதும் ஒரு துடிப்பு ஓடியது. அந்தளவுக்கு அவளது உயிரோடு உயிராகக் கலந்துவிட்டிருந்தான் அவன்.
உள்ளம் நெகிழ, விழிகள் அலைபாய வேகத்தோடு உள்ளே நுழைந்தவளைப் பார்த்ததும், இவளிடம் எதை எப்படிச் சொல்லிச் சமாளிக்கப் போகிறோம் என்று எண்ணிய ஜீவன், சுகந்தன் இருவரினதும் முகங்களும் தயக்கத்தைக் காட்டின. அவர்களது விழிகளும் வேகமாகச் சந்தித்துச் சங்கேதமாக ஏதோ பேசிக்கொண்டன.
ரஞ்சனைக் காணப்போகும் ஆவலில் அதைக் கவனியாத சித்ரா, “சீவன் அண்ணா, எங்கே உங்கள் நண்பர்?” என்று, ஒன்றரை மாதத்துக்கு முதல் அவனிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்டாள்.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாமல் சட்டென்று சுகந்தனைத் திரும்பிப் பார்த்தான் ஜீவன்.
அவனிடம் ‘பொறு’ என்பதாகப் பார்வையிலேயே சொல்லிவிட்டு, “வா சித்ரா. எப்போது வவுனியாவில் இருந்து வந்தாய்?” என்று கேட்டான் சுகந்தன்.
“இப்போதுதான்.. இதயன் எங்கே?” என்று ஆர்வத்தோடு கேட்டவளின் விழிகள் அந்தக் கடைக்குள் வேகமாகச் சுழன்று அவனைத் தேடின.
அவனைக் காணாது, கடைக்குப் பின்னே இருந்த அந்தக் குட்டி அறைக்குள்ளும் எட்டிப் பார்த்தாள். உள்ளே ஒற்றைக் காலைக் கூட வைக்க முடியாத அளவுக்குச் செருப்புக்கள் பெட்டி பெட்டிகளாக நிறைந்து கிடந்தன.
“உன் தங்கையின் திருமணம் நல்லபடியாக முடிந்ததா?”
“ப்ச்! சுகந்தன் அண்ணா! உங்களுக்கு இப்போது என்ன தெரியவேண்டும்? அபியின் திருமணம் நன்றாக முடிந்தது. சித்தி சித்தப்பா நன்றாக இருக்கிறார்கள். நானும் நன்றாக இருக்கிறேன். போதுமா? அல்லது இன்னும் ஏதாவது தெரிய வேண்டுமா?” என்று படபடத்தாள்.
பதில் சொல்ல முடியாமல் அவன் நிற்க, “இப்போதாவது சொல்லுங்கள். எங்கேண்ணா இதயன்? இந்த ஒன்றரை மாதமாக என்னோடு கதைக்காமல் அப்படி என்னதான் வெட்டி முறிக்கிறார்? எங்கே போய்விட்டார்?” என்றாள் பொறுமையற்று.
அவனைக் காணும் ஆவலில் ஓடோடி வந்தவளுக்கு அவன் இல்லாத கடை பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.
அவளின் நிலையை உணர்ந்து கொண்டவர்களின் விழிகள் மீண்டும் சந்தித்துக் கொண்டன. இப்போது அதைக் கவனித்தாள் சித்ரா. அவர்களின் விழிகளில் தோன்றிய கவனமும், முகத்தில் இருந்த தடுமாற்றமும் வித்தியாசமாகத் தோன்றியது. அதோடு அவள் வந்து இவ்வளவு நேரமாகியும் அவளோடு ஒருவார்த்தை தன்னும் கதைக்காமல் நின்ற ஜீவனின் அமைதியும் புதிதாக இருந்தது.
வரும்போதே அவள் சொன்ன ‘சீவனுக்கு’ அவன் பதிலுக்கு ஏதாவது சொல்லியிருக்க வேண்டுமே! ஏன் சொல்லவில்லை?
புருவங்கள் சுருங்க அவனைக் கூர்ந்தாள் சித்ரா. “என்ன பிரச்சினை ஜீவன் அண்ணா?”
தங்கையாய்ப் பழகியவளிடம் விஷயத்தை எப்படிச் சொல்வது என்று அவர்கள் தடுமாறி நிற்க, அவர்கள் இருவரினதும் அமைதி இன்னுமின்னும் ஆத்திரத்தைக் கொடுத்தது அவளுக்கு.
“இப்போது சொல்லப் போகிறீர்களா இல்லையா? நான் எடுக்கும் போதெல்லாம் என்னென்னவோ சொல்லிச் சமாளித்தீர்களே, ஏன்? மிக மிக முக்கியமான விஷயம் என்று சொல்லியும் நீங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. இதயனும் என்னோடு கதைக்கவில்லை. ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறீர்கள்?” என்று கேட்டவளின் குரல் அடைத்தது.
“அங்கே அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார். இதயனிடம் அதைச் சொல்லி வீட்டில் வந்து கதையுங்கள் என்று சொல்லவந்தால், ஏன் இப்படி மூவருமாகச் சேர்ந்து என்னோடு விளையாடுகிறீர்கள்?” என்றாள் ஆற்றாமையோடு.
அதுவரை அவளிடம் எப்படிச் சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்த ஜீவனுக்கு வழி கிடைத்துவிட்ட வேகத்தில், “உன் அப்பா சொல்லும் மாப்பிள்ளையையே நீ கட்டிக்கொள் சித்ரா. அதுதான் உனக்கு நல்லது.” என்றான் பட்டென்று.
“என்னது?” என்று அதிர்ந்தாள் சித்ரா.
“என்ன கதைக்கிறோம் என்று உணர்த்துதான் கதைக்கிறீர்களா? காதலிப்பது உங்கள் நண்பரை கல்யாணம் செய்வது இன்னொருவனையா?” என்றாள் கோபத்தோடு.
அதற்குப் பதில் சொல்ல முடியாமல் திணறியபடி நின்றவனை முறைத்துவிட்டு, “உங்களோடு கதைக்கும் நிலையில் நான் இல்லை. எங்கே இதயன்? முதலில் அதைச் சொல்லுங்கள்!” என்றாள், ஆத்திரமும் அதிகாரமும் கலந்த குரலில்.
“அவனை இப்போது நீ பார்க்க வேண்டாம் சித்ரா. இப்போது மட்டும் அல்ல எப்போதுமே. ஜீவன் சொன்னது போல உன் அப்பா பார்க்கும் மாப்பிள்ளையையே கல்யாணம் செய்து சந்தோசமாக இரு.” என்ற சுகந்தன் கொஞ்சம் தயங்கி, “ரஞ்சன் உன்னைத் திருமணம் செய்யமாட்டான்.” என்றான் வேகமாக.
“சுகந்தன் அண்ணா!” அதட்டலில் ஓங்கி ஒலித்தது அவள் குரல். என்னதான் அவனை அதட்டியபோதும் அவன் சொன்னதைக் கேட்டு அவள் உடல் படபடக்கத் தொடங்கியது.
“இல்லை! என் இதயன் அப்படிச் செய்யமாட்டார். நீங்கள் சொல்வது பொய். நான் நம்பமாட்டேன்.” என்று, கட்டுப்பாட்டை இழந்து கிட்டத்தட்டக் கத்தினாள் சித்ரா.
“நான் சொல்வதைக் கொஞ்சம் அமைதியாகக் கேள் சித்ரா..”
“கேட்கமாட்டேன்!” என்று இடைபுகுந்தது அவள் குரல் வேகமாக.
“ஏதாவது பொய்யைச் சொல்லி எனக்குக் கோபத்தைக் கிளப்பாதீர்கள். நானே இதயனைப் பார்க்க முடியவில்லையே என்கிற ஆத்திரத்தில் இருக்கிறேன். இதில் நீங்கள் வேறு எரிச்சலைக் கிளப்பாதீர்கள். உங்கள் இருவரையும் பிறகு கவனித்துக் கொள்கிறேன். முதலில் இதயன் எங்கே என்று சொல்லுங்கள். இல்லையானால், என்ன ஆனாலும் சரி என்று நான் அவர் வீட்டுக்கே போய் அவரைப் பார்க்கிறேன்.” என்றபடி அவள் கடை வாசலை நோக்கி நடக்க, “இல்லையில்லை. வேண்டாம் பொறு.” என்றான் சுகந்தன் அவசரமாக.
நடை நின்றபோதும், அந்த இடத்திலேயே அசையாது நின்றபடி, தலையை மட்டும் திருப்பி, “அப்படியானால் அவர் எங்கே என்று சொல்லுங்கள்!” என்றாள் சித்ரா.
“அவன் புதிதாக எடுத்த கடையில் நிற்கிறான்.”
புருவங்கள் சுருங்க, “புதிதாக எடுத்த கடையா?” என்று கேட்டாள் சித்ரா.
“ம். இன்னொரு கடையும் வாடகைக்கு எடுத்திருக்கிறான். அங்கே வேலைகள் நடக்கிறது. அங்கேதான் நிற்கிறான்.”
சட்டென்று முகம் மலரத் திரும்பி வந்தவள், “உண்மையாகவா சொல்கிறீர்கள்? இன்னொரு கடையும் திறக்கப் போகிறாரா? எவ்வளவு சந்தோசமான விஷயத்தை ஏன் இவ்வளவு சோகமாகச் சொல்கிறீர்கள்?அவர் இரண்டாவது கடை திறப்பதில் உங்களுக்குப் பொறாமையோ?” என்று கண்களைச் சிமிட்டிக் கேட்டவளை முறைத்தான் சுகந்தன்.
அதுவரை அவள் மனதில் இருந்த கோபம் எங்கேயோ ஒரு மூலைக்குச் சென்றது. அவன் வாழ்க்கையில் அடுத்த உயரத்தை எட்டுகிறான் என்று தெரிந்ததும் தன்னையே மறந்தாள் சித்ரா.
“சரிசரி விடுங்கள்! நீங்கள் நல்ல நண்பர் என்று எனக்குத் தெரியும். சும்மா சொன்னேன்..” என்று புன்னகையோடு சொன்னவள், “அதுதான் நேரமே இல்லாமல் வேலைகள் நடக்கிறதா? அதற்காக ஒரு நாள் கூடவா என்னோடு கதைக்க முடியாமல் போனது. அவருக்கு இருக்கிறது பொறுங்கள்.” என்று தன் பாட்டுக்குச் சொன்னவள், “அந்தக் கடை எங்கே இருக்கிறது?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
“அடுத்த வீதியில்..” என்ற சுகந்தன், அவளைப் பார்த்துக் கொஞ்சம் அயர்ந்துதான் போனான்.
சற்று முதல் ஆவலோடு வந்தவள், அவனைக் காணாத கோபத்தில் அவர்களிடம் கத்தியவள், அவனுக்கு நல்லது ஒன்று நடந்திருக்கிறது என்று தெரிந்ததும் அனைத்தையும் மறந்துவிட்டு இவ்வளவு சந்தோசப்படுகிறாளே. என்னமாதிரியான பெண் இவள்?
வியப்போடு அவன் அவளையே பார்த்திருக்க, “வருகிறேன்..” என்று அவர்களிடம் பொதுவாகச் சொல்லிவிட்டுச் சிட்டெனப் பறந்தாள்.
போகும் அவளையே பார்த்திருந்த ஜீவன், “இவளென்னடா இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள் அவன் மேல்..” என்றான்.
“அது எனக்கும் உனக்கும் தெரிந்து என்ன பிரயோசனம். அந்த விசரனுக்குத் தெரியவில்லையே. எவ்வளவு சொல்லியும் கேக்காமல், அந்தப் பணத்தாசை பிடித்த பிசாசைக் கட்டப் போகிறேன் என்கிறான்..” என்றான் சுகந்தன் எரிச்சலோடு.
“எவ்வளவு நல்ல பெண். பாவம்டா. எல்லாம் தெரிந்தால் என்ன செய்யப் போகிறாளோ தெரியவில்லை.” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள், அப்படியே தங்கள் வேலைகளையும் பார்க்கத் தொடங்கினர்.
இங்கே ரஞ்சனின் அடுத்த கடைக்குச் சென்றுகொண்டிருந்த சித்ராவின் மனம் மீண்டும் ஆர்வத்தில் துடிக்கத் தொடங்கியிருந்தது.
முதலில் அவனைத் தேடி வருகையில், ஒன்றரை மாதத்துக்குப் பிறகு காணப்போகும் ஆர்வத்தில் வந்தவளுக்கு இப்போது அவன் புதுக்கடை திறக்கப்போகும் சந்தோசமும் சேர்ந்து கொண்டது.
சாதித்துக்கொண்டிருப்பது என்னவன் என்கிற பெருமிதத்தோடு முகத்தில் சந்தோசம் மின்ன சென்று கொண்டிருந்தவளின் உடலும் மனமும் அவனைக் காணப் பரபரத்தது.
அதுவரை அவள் மனதில் இருந்த கோபம், அவளை அவன் தவிர்த்ததினால் உண்டான குழப்பம் எல்லாமே பின்னுக்குத் தள்ளப் பட்டிருந்தது.
அந்த நிமிடம் அவள் மனதில் இருந்ததெல்லாம் அவனைக் காணவேண்டும், கண்டதும் இந்த சந்தோசத்தை அவனைக் கட்டிக்கொண்டு கொண்டாடவேண்டும் என்பது மட்டுமே!
அடுத்த வீதியில், சுகந்தன் சொன்ன கடை பூட்டப் பட்டிருந்தது. உள்ளே வேலை நடக்கிறது போலும் என்று எண்ணியபடி, ஸ்கூட்டியை அங்கே நிறுத்திவிட்டு கடையின் கதவருகே சென்று கதவை இழுத்துப் பார்த்தாள்.
அது பூட்டப் பட்டிருந்தது.
உட்பக்கமாக பூட்டிவிட்டு வேலை செய்கிறான் போலும் என்று எண்ணியபடி, அவன் கைபேசிக்கு அழைத்தாள்.
ம்ஹூம்! அவன் அப்போதும் அதை எடுக்கவில்லை.
என்ன இவன், வேலையாக இருந்தால் என்ன, அவளுடன் கைபேசியில் ஒருவார்த்தை பேசினால் குறைந்து போவானா என்று மனம் புகையக் கதவில் தட்டினாள்.
அலறிக்கொண்டிருந்த கைபேசியை ஒரு கையில் பிடித்தபடி மற்றக் கையால் கடையின் கதவைத் திறந்த ரஞ்சன் வெளியே நின்ற சித்ராவை எதிர்பார்க்கவில்லை என்று அவன் முகத்தைப் பார்க்கையிலே தெரிந்தது.
“என்ன? என்னை எதிர்பார்க்கவில்லையா?” என்று அதட்டலாகக் கேட்டபடி அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் சித்ரா.
ஒரு பெண் பூட்டியிருக்கும் கடைக்குள் நுழைவதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று பதறிக் கதவை அடைத்தான் ரஞ்சன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளைக் கண்டத்திலேயே நிலை தடுமாறியவன், அவனைத் தொட்டுத் தள்ளியவளின் தொடுகையிலும், மயிலிறகாய் வருடிய அவளது அருகாமையிலும் நிலை குலைந்து கொண்டிருந்தான்.
அவளை அங்கிருந்து வேகமாக அகற்றச் சொல்லி மூளை சொல்ல, மனமும் உடலும் அவளை அணைத்துக்கொள்ளத் துடித்தது.
அவளைக் காணாத வரை அவன் எடுத்த முடிவுகளில், செயல்களில், எண்ணங்களில் எல்லாம் உறுதியாக நின்றவனின் உறுதியை, அவளின் காதல் கொண்ட ஒற்றைப் பார்வை ஒன்றுமில்லாமல் ஆக்கியது.
அவனது கட்டுப்பாட்டையும் மீறி விழிகள் அவள் விழிகளோடு கலக்க, வேகமாக அவனை நெருங்கிய சித்ரா, “ஏன்டா என்னோடு இவ்வளவு நாளும் கதைக்கவில்லை. நான் என்ன செய்தேன்? ஏன் இப்படி என்னைத் தவிக்க விடுகிறாய். என்னைப் பார்க்காமல், என்னோடு கதைக்காமல் உன்னால் இருக்க முடிந்ததா?” என்று கேட்டபடி, அதுநாள் வரை அனுபவித்த பிரிவின் வலியைக் குறைக்க எண்ணி அவன் முகத்தைத் தன்னருகே இழுத்து, ஆவேசம் கொண்டவளாக அவன் முகமெங்கும் முத்தமழை பொழிந்தாள்.
கட்டுப்பாடுகள் நிறைந்த அவனை முத்தங்களால் மொத்தமாகக் கட்டியிழுத்தாள் சித்ரா. சும்மாவே தடுமாறிக் கொண்டிருந்த ரஞ்சன், அவள் பதித்த வேக முத்தங்களால் மொத்தமாக நிலை குலைந்தான். அவனும் மனிதன்தானே. அதுவும் அவள் மேல் அவனே அறியாத அளவுக்குக் காதல் கொண்ட மனிதன்!
அவன் கைகளும் மிக வேகமாக அவளை அணைத்துக்கொள்ள, வேக மூச்சுக்களோடு முத்தங்களை அவனும் அவள் முகமெங்கும் பதிக்கத் தொடங்கினான். அணைப்பு இறுகி இறுகி ஒருகட்டத்தில் அவனது கைகளின் தேடல் வேறாகிப் போனபோது, அதுவரை ஒருவித மயக்கத்தில் மூழ்கி நெகிழ்ந்து நின்றவள் சட்டென்று விழிகளைத் திறந்து கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
அவனோ மிக வேகமாக அவளில் மூழ்கிக் கொண்டிருந்தான்.
அதை ஏற்க முடியாமல் உடல் கூச அவனிடமிருந்து அவள் விலக நினைக்க அதைத் தாங்க முடியாது இழுத்து அணைத்தவனின் வேகத்தில் அவள் திக்குமுக்காட, அவனோ மிக வேகமாக அவளுக்குள் முன்னேறிக் கொண்டிருந்தான்.
அவனைத் தடுக்கவும் முடியாமல் அனுமதிக்கவும் முடியாமல் தடுமாறி நின்றவளின் மேனி, அவனின் ஆக்கிரமிப்பில் அவளையும் மீறி இளகத் தொடங்கியது.
ஆனாலும், இது தவறு என்று மூளை உணர்த்த அவனிடமிருந்து விடுபட அவள் போராடத் தொடங்கவும், “யாழி ப்ளீஸ்..” என்று ஆழ்ந்த குரலில் ஒலித்த அவனது வேண்டுதல், அவளின் மொத்த எதிர்ப்பையும் தவிடு பொடியாக்கியது.
அவனுக்கு இல்லாதது என்று அவளிடம் ஒன்றுமே இல்லையே!
அவன் கேட்டு ஒன்றை அவளால் மறுக்க முடியுமா?
அவளது பெண்மையையே அவனுக்குப் பரிசளித்தது அவளது காதல் கொண்ட நெஞ்சம்!