அத்தியாயம்-20
சித்ரா வெளியேறிச் சென்ற பிறகும் இறுகிய முகத்தோடு கடை வாசலையே வெறித்தபடி நின்ற மகனிடம் கோபத்தோடு விரைந்தார் இராசமணி.
“என்னடா நடக்கிறது இங்கே? அவளாக வந்தாள். அவளாக விளக்கை ஏற்றுகிறாள். ஏதோ பெண்டாட்டி மாதிரி உன் நெற்றியில் பொட்டை வைக்கிறாள். நீயும் பார்த்துக்கொண்டு நிற்கிறாய். என்ன இதெல்லாம்?” என்று ஆத்திரத்தோடு கேட்டார்.
சொந்தங்கள் எல்லோரும் வெளியேறி இருக்க, நகுலனின் பெற்றோரும் சென்றுவிட்டதில் இராசமணியின் குரல் கோபத்தில் நன்றாகவே உயர்ந்திருந்தது.
“அம்மா! முதலில் மெல்லக் கதையுங்கள். இது கடை!” என்று அதட்டினான் ரஞ்சன்.
“இது கடைதான். யார் இல்லை என்று சொன்னது? ஆனால் இந்தக் கடையில் நம் வீட்டுச் சொந்தங்கள் எல்லோரும் கூடி நிற்கையில் மானம் மரியாதை எல்லாவற்றையும் வாங்கி விட்டாயே. இதற்கு நீ இந்தக் கடையைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம். நம் மரியாதையாவது மிஞ்சியிருக்கும். இனி எல்லோரும் என்னைத்தான் சொல்வார்கள். அதுதான் உன் அத்தை ஏற்கனவே சொல்லிவிட்டாளே.. அப்பா இல்லாததில் ஆடுகிறோம் என்று..” என்று பொரிந்தார் அவர்.
“என்ன பெரிய சொந்தம்? நாம் கஷ்டப் படும்போது எங்கே போனார்கள் இவர்கள் எல்லோரும்? நான் படிப்பை விட்டபோது வராதவர்கள், செருப்புக் கடையில் வேலைக்குச் சேர்ந்தபோது வராதவர்கள், கடை திறப்பதற்குக் காசு இல்லாமல் அலைந்தபோது வராதவர்கள் நாம் முன்னேறியதும் வந்து நிற்கிறார்களே.. அவர்களை மதிக்கவேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை!” என்றான் அலட்சியமாக.
பின்னே, அவன் இந்த நிலைக்கு வரப் பட்டபாடு என்ன, அதற்காக செய்த வேலைகள் எத்தனை, அவனைக் குற்றம் சாட்டும் மனச்சாட்சியைக் கூட கொன்றுவிட்டு அல்லவா நடமாடுகிறான். அவன் அம்மாவோ ஒரே நிமிடத்தில் ‘நீ இந்தக் கடையைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்’ என்றுவிட்டாரே!
“என்னடா இப்படிச் சொல்கிறாய். என்ன இருந்தாலும் அவர்கள் உன் அப்பாவின் சொந்தங்கள். சாதனா உன் வருங்கால மனைவி. நவீன் நித்தியின் கணவனாகப் போகிறவன். அங்கே பார் உன் தங்கையை, அழுதுகொண்டு நிற்கிறாள். நவீன் அவளைப் பார்த்து முறைத்துவிட்டு போகிறான். உன் வாழ்க்கையை நீ கெடுத்ததும் அல்லாமல் அவள் வாழ்க்கையையும் சேர்த்துக் கெடுக்கப் பார்க்கிறாய். இப்போது திருப்தியா உனக்கு. கணவர் போனாலும் என் பிள்ளை இருக்கிறான் என்று இருந்தேன், என் நம்பிக்கையை மிக நன்றாகக் காப்பாற்றி விட்டாய்…” என்றவரின் பேச்சு அவன் மனதைத் தைத்தபோதும்,
“நித்தியின் கல்யாணத்தை நடத்துவது என் பொறுப்பு. நீங்கள் தேவை இல்லாததுகளை உளறாதீர்கள்!” என்றான் எரிச்சலோடு.
“எப்படி? இன்று நடந்துகொண்டாயே அப்படியா? ஒரு தங்கையை வைத்திருக்கிறோமே, அவளுக்கு முன் மாதிரியாக நடந்து கொள்ள வேண்டுமே என்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லாது அவளோடு ஜோடி போட்டுக்கொண்டு நின்றாயே, அப்படியா?”
மீண்டும் மீண்டும் அவர் அதையே சொல்லிக் காட்டியதில் சினம் உண்டானபோதும், எதையும் வாய்விட்டுச் சொல்ல முடியாமல், “இங்கே நின்று கத்தாதீர்கள். எல்லாவற்றையும் வீட்டுக்குப் போய்க் கதைக்கலாம். நீங்கள் கிளம்புங்கள்.” என்று தான் தப்பிக்கும் விதமாக அவரை அதட்டினான் .
“இப்படி அதட்டி என் வாயை அடைத்தால் எல்லாம் சரியாகி விடுமா? எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடமே உங்கள் மகனைக் கேளுங்கள் என்று சொல்வாள். அந்தத் துணிவை அவளுக்கு யார் கொடுத்தது? நீ ஒழுங்கானவன் என்றால், அவளைப் பிடித்து கடைக்கு வெளியே தள்ளியிருக்க வேண்டாமா? நீ யாரடி என் கடையைத் திறக்க என்று கேட்டிருக்க வேண்டாமா? வாயை மூடிக்கொண்டு நிற்கிறாய் என்றால், உனக்கும் அவளுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது!” என்று சொன்னவரை,
“இப்போது எதற்கு இந்தக் குதி குதிக்கிறீர்கள்? அவள் விளக்கை ஏற்றினால் என்ன? உங்கள் குடியா முழுகிப் போகும். சும்மா இங்கே நின்று கத்தாமல் பார்க்கிற வேலையைப் பாருங்கள்.” என்று அதட்டினான் அவர் மகன்.
அவன் சித்ராவின் விசயத்தில் எதையோ மறைக்கிறான் என்று பிடிபடவே, “என்னடா என்னை விரட்டுவதிலேயே குறியாக நிற்கிறாய். ஏன், அவளைப் பற்றிக் கேட்டால் உன்னால் வாயைத் திறந்து உண்மையைச் சொல்ல முடியவில்லையோ?” என்று கேட்டார் அவர்.
“அவளின் அப்பாவிடம்தான் கடனாகப் பணம் வாங்கி முதலில் கடையை ஆரம்பித்தேன். நீங்களே பெற்ற மகனுக்குக் காசு தரப் பயந்தபோது அவர்தான் என்னை நம்பித் தந்தார். அப்படியிருக்க அவளை எப்படி வெளியே போ என்று சொல்லமுடியும்.” என்று, தன் பிழையை மூடி மறைக்க தாயின் பிழையைச் சுட்டிக் காட்டினான்.
இராசமணிக்கு ஆத்திரத்திலும் அவமானத்திலும் முகம் கன்றிக் கருத்தது. “உன்னை ஒன்று சொன்னால் நீ என்னிலேயே பிழை கண்டு பிடிக்கிறாயா? அப்படி உன்னைப் பெற்ற தாயை விட அவள் உனக்கு முக்கியமோ? அந்த மனிதர் கைமாற்றாகப் பணத்ததைத் தானே தந்தார். தன் மகளைத் தரவில்லையே.” ஆத்திரத்தில் பட்டெனக் கேட்டுவிட்டார் இராசமணி.
“அம்மாஆ!!” என்று, கிட்டத்தட்டக் கத்தினான் ரஞ்சன்.
பாறையாகிவிட்ட முகத்தோடு, ஆத்திரத்தில் சிவந்த கண்களோடு ருத்ரமூர்த்தியாக நின்றவனைப் பார்த்து இராசமணியே பயந்துபோனார் என்றால், நித்யாவின் உடல் நடுங்கியது. தாய்க்குப் பின்னால் மறைந்துகொண்டாள்.
ஆட்காட்டி விரலை நீட்டி, “அவளைப் பற்றி நீங்கள் எதுவும் கதைக்கக் கூடாது. சொல்லிவிட்டேன்! எனக்குக் கோபத்தை வரவைக்காமல் மரியாதையாக வீட்டுக்குப் போங்கள்! நான் இந்தளவுக்கு வருவதற்கு நீங்கள் எதுவுமே செய்யவில்லை. நானாகத்தான் வந்தேன். அதேபோல இனியும் என் பிரச்சனைகளைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்.” என்று அழுத்தமான குரலில் சொன்னவன், “வீட்டுக்குப் போங்கள்!” என்றான் வாசலைக் கையால் காட்டி.
திகைத்து நின்றவர்களை அதற்கு மேலும் பொருட் படுத்தாது, வேகமாக அங்கிருந்து நகர்ந்து, கடையின் உட்பக்கம் சென்றுவிட்டான் ரஞ்சன்.
அங்கே செருப்புக்களை அடுக்கிக் கொண்டிருந்த நகுலனிடம், “நீ முன்னுக்குப் போய் நில்லு. கொஞ்ச நேரத்தில் புதிதாக இன்னும் மூவர் வேலைக்கு வருவார்கள்.” என்று அவனை அனுப்பியவனின் கைபேசி சத்தமிட, அதை எடுத்துப் பார்த்தவனின் முகம் இன்னுமே இறுகியது.
அதில் சந்தானத்தின் இலக்கங்கள் மின்ன சிலநொடிகள் அதையே வெறித்தான்.
பின் அதைக் காதுக்குக் கொடுத்து, “ஹலோ..” என்றான், எதையும் காட்டிக் கொள்ளாத தொனியில்.
“ரஞ்சன், என்னப்பா இதெல்லாம்?” என்றார் அவர் எடுத்த எடுப்பிலேயே.
அந்தளவுக்கு மகளின் பிரச்சினை அவரின் மனதை அழுத்திக்கொண்டிருந்தது. சம்பிரதாயமாக பேச்சை ஆரம்பிக்கவோ, அல்லது இலை மறை காயாக விசாரிக்கவோ முடியவில்லை.
ஒருநொடி அமைதியாக இருந்தான் ரஞ்சன். பிறகு, “என்ன அங்கிள்?” என்றான் அப்போதும் உணர்வுகளைக் காட்டாமல்.
“என்ன ரஞ்சன், நீ பாட்டுக்கு அமைதியாக என்ன அங்கிள் என்று கேட்கிறாய்? இங்கே சித்ரா, நீங்கள் இருவரும் விரும்புவதாகச் சொல்கிறாள். இதை நீயே என்னிடம் சொல்லியிருக்கலாமே ரஞ்சன். எல்லாவற்றையும் முறையாக நான் செய்திருப்பேனே. உங்கள் கல்யாணத்தை நானே முன்னின்று நடத்தியிருப்பேனே. அதை விட்டுவிட்டு இப்படி எதற்குத் தப்புக்கு மேலே தப்பைச் செய்தீர்கள்?” என்று, மகள் தாய்மை அடைந்த விஷயத்தை வெளிப்படையாகக் கேட்க முடியாமல் கேட்டார்.
என் மகளோடு ஏன் நெருங்கிப் பழகினாய் என்று ஒரு தந்தையால் கேட்க முடியாதே! அதோடு, எது எப்படி நடந்திருந்தாலும் இனி அவரது மருமகன் அவன்தானே. அவனிடம் மரியாதையாகத்தானே கதைக்கவேண்டும்.
“சரி விடு. நடந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். சொல்லு, எப்போது கல்யாணத்தை வைக்கலாம். முடிந்தவரை விரைவாக வைக்கவேண்டும் ரஞ்சன். இல்லாவிட்டால் இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிய வந்துவிடும். நானே உன் அம்மாவிடம் வந்து கதைக்கவா? எடுத்துச் செய்ய அப்பா இல்லை என்று நீ எதற்கும் கவலைப் படாதே. எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்கிறேன்..” என்று நயமாகவே பேசினார் சந்தானம்.
மனதில் அவன்மேல் கோபம் இருந்தபோதும் அதை மறைத்துக்கொண்டார். இந்த நிலையில் முக்கியமானது அவர்களது கல்யாணத்தை முடிப்பது அல்லவா. அதற்காகவே அவனுடன் தன்மையாகக் கதைத்தார்.
அப்போதும் ரஞ்சனிடம் இருந்து பதில் வராமல் போக, அதுவரை தான் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தார் சந்தானம்.
“ரஞ்சன்? ஏன் அமைதியாக இருக்கிறாய்?” என்றவரின் மனதில் இனம்புரியா கலவரம் தோன்றியிருந்தது.
“பின்னே வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? உங்கள் மகளுக்கும் எனக்கும் கல்யாணம் என்கிறீர்கள். அது இது என்று ஏதேதோ சொல்கிறீர்கள். நான் கேட்டேனா உங்கள் மகளை எனக்குக் கட்டிவையுங்கள் என்று. அல்லது உங்கள் மகளிடம் என்றாவது சொன்னேனா உன்னை நான் கல்யாணம் செய்கிறேன் என்று?” என்று நிதானமாகக் கேட்டான் அவன்.
சந்தானத்துக்கு ஒருநிமிடம் ஒன்றுமே புரியவில்லை. இவன் என்ன சொல்கிறான்? தான் சரியாகத்தான் கேட்டோமா? என்று தடுமாறியவர், அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் மகளையும் கையிலிருந்த கைபேசியையும் மாறி மாறிப் பார்த்தார்.
அதுவரை அவரையே பார்த்திருந்த லக்ஷ்மி, அவரின் பார்வையில் கலவரமாகி கணவரின் அருகில் வேகமாக வந்து, “என்ன, என்னவாம் அவன்? என்ன சொல்கிறான்? ஏன் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்?” என்று அவரின் கைகள் இரண்டையும் பிடித்து உலுக்கினார்.
சட்டென அதிர்ச்சி நீங்கியவராக, “பொறு. நீ கொஞ்சம் அமைதியாக இரு..” என்றுவிட்டு, கைபேசியை மீண்டும் காதுக்குக் கொடுத்து, “ஹ..லோ ரஞ்சன்..” என்றவரை இடைமறித்தான் அவன்.
“அங்கிள், இங்கே பாருங்கள். உங்கள் மீது எனக்கு நிறைந்த மரியாதை இருக்கிறது. அதற்காக நீங்கள் சொல்வதை எல்லாம் என்னால் செய்ய முடியாது. எனக்கு என் அத்தையின் மகள் தயாராக இருக்கிறாள். நீங்களும் உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகக் கேள்விப் பட்டேன். அப்படியே நல்லவனாகப் பார்த்துக் கட்டிவையுங்கள்.” என்று சொன்னவன், வைப்பதாகச் சொல்லிக் கைபேசியை வைத்தும் விட்டிருந்தான்.
மீண்டும் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாது நின்ற இடத்திலேயே சிலையாகி நின்றார் சந்தானம்.
நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது அவருக்கு. இத்தனை வருடகால வாழ்க்கையில் அவர் அனுபவித்திராத, சந்தித்திராத நிலைமை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாது நிற்கும் நிலை.
அவர் விழிகள் தன்னாலே மகளை நாடி ஓடின. ‘இப்படிச் செய்து விட்டாயேம்மா? இனி என்ன செய்து உன் வாழ்க்கையை நேராக்குவேன்’ என்கிற தவிப்பு இருந்தது அவர் விழிகளில்.
அவரின் விழிகளைப் பார்த்ததுமே ரஞ்சன் என்ன சொன்னான் என்று தெரியாதபோதும் சித்ராவின் விழிகள் கண்ணீரை மீண்டும் ஆறாகக் கொட்டத் தொடங்கின.
கணவரின் நிலையைப் பார்த்துப் பயந்த லக்ஷ்மி, “கடவுளே! என்னவென்றுதான் சொல்லித் தொலையுங்களேன். ஏன் இப்படி பிடித்துவைத்த கொழுக்கட்டை மாதிரி நிற்கிறீர்கள். எனக்குப் பெற்ற வயிறு பற்றி எரிகிறது. என்னவாம் அவன்? என்ன சொன்னான்?” என்று, ஆற்றாமையோடு பதறினார்.
அங்கிருந்த சோபாவில் தொப்பென்று தொய்ந்து சரிந்தவர், “அவன் அத்தை மகளைக் கட்டப் போகிறானாம். சித்துக்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்துக் கட்டிவைக்கட்டாம்.” என்றார் ஈனஸ்வரத்தில்
சித்ராவுக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. எப்படி? எப்படி முடிந்தது அவனால்? என்று அவள் தவிக்க,
“என்னது??” என்று அதிர்ந்த லக்ஷ்மி, “ஐயோ என் மகளின் வாழ்க்கை போச்சே. இனி என்ன செய்யப் போகிறோம்?” என்று வேதனை தாங்க முடியாமல் வெடித்து அழுதார்.
கண்களில் கண்ணீர் வடிய தகப்பனையே பார்த்துக் கொண்டிருந்த மகள் கண்களில் பாடவும், “எல்லாம் இவளால் வந்தது..” என்றபடி ஆவேசத்தோடு அவளை நெருங்கியவர் மீண்டும் அடிக்கத் தொடங்கினார்.
ஒருபக்கம் பிள்ளைச் சுமை போதாக்குறைக்குத் தாயின் கைகளினால் கிடைத்த அடி என்று ஏற்கனவே ஓய்ந்துபோய்க் கிடந்தவளை தகப்பன் சொன்ன விஷயம் முற்றாக ஒடுக்கியது.
இப்படி எல்லாம் சொன்னானா என்று நெஞ்சு உள்ளே கதறிக் கண்ணீர் வடிக்க, சுவரோடு சுவராக ஒண்டிக் கிடந்தவளை தாயார் அடிக்க, அதைத் தாங்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் கிடந்தாள் சித்ரா.
“கேட்டியாடி, அவன் சொன்னதைக் கேட்டியாடி. கடவுளே இனி ஊரே காறித் துப்புமே.. உன் வாழ்க்கையை நீயே நாசமாக்கி விட்டாயே.. உன் தலையில் நீயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாயே. வயிற்றில் சுமையோடு நிற்கும் உன்னை இனி எவன் கட்டுவான். எத்தனை தரம் சொல்லியிருப்பேன் பெண் பிள்ளையாக வீட்டில் அடங்கி ஒடுங்கி இரு என்று. கேட்டாயா?”
ஏற்கனவே எதற்கு எடுத்தாலும் சற்று அதிகமாகவே தன் உணர்ச்சிகளைக் கொட்டும் லக்ஷ்மியின் நிதானத்தை நடந்துகொண்டிருந்த விடயங்கள் முற்றாக அழித்ததில், மகளின் தாய்மை நிலைகூட அவருக்கு மறந்து போயிருந்தது.
இந்தமுறை மகளை அடிக்கும் மனைவியைத் தடுக்கத் தோன்றாமல் சிதைந்துபோய் நின்றார் சந்தானம். தடுப்பது என்ன நடப்பதை அவர் உணர்ந்ததாகவே தோன்றவில்லை.
ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் தானும் மகளருகில் தொய்ந்து விழுந்தார் லக்ஷ்மி. “அவன் நல்லாவே இருக்க மாட்டான். நாசமாத்தான் போவான். என் பிள்ளையின் வாழ்க்கையைக் கெடுத்தவன் கடைசி வந்தாலும் நன்றாக இருக்கமாட்டான். கடவுளே அவனுக்கு எதையாவது காட்டு. என் பிள்ளையின் வாழ்க்கையை அழித்தவன் அழிந்து போகட்டும்.” என்று ஆவேசத்தில் ரஞ்சனையும் திட்டித் தள்ளியது அந்தத் தாய்மனம்.
அப்படியே ஒரு பக்கமாகச் சரிந்து கிடந்த லக்ஷ்மி தன் பாட்டுக்கு அரற்ற, மற்றப் பக்கமாக நிலத்தில் கிடந்த சித்ராவின் விழிகளில் இருந்து கண்ணீர் தன் பாட்டுக்கு வழிய, எங்கே என்றில்லாது விழிகளை இலக்கற்று பதித்திருந்த சந்தானத்தின் முகம் இறுகிக் கிடந்தது.