லக்ஷ்மி அடங்காத ஆத்திரத்தோடு வெளியே சென்ற மகளின் வரவுக்காகக் காத்திருந்தார். தான் சொல்லச் சொல்லக் கேட்காமல் சென்றவளை நினைக்க, இவள் பட்டும் திருந்தவில்லையே என்றிருந்தது அவருக்கு.
எத்தனையோ அருமையான வரன்கள் எல்லாம் வந்திருந்ததில் மகளுக்கு யாரை மாப்பிள்ளை ஆக்குவது என்பதில் அவரே தடுமாறிப் போயிருந்தார், அப்படி இருந்த நிலை போய் இன்று எப்படி அவளைக் கரை சேர்க்கப் போகிறோம் என்கிற நிலை வந்துவிட்டதே என்று அவர் வருந்திக் கொண்டிருக்க, ஆட்டோவில் வந்திறங்கினாள் சித்ரா.
சோர்ந்த நடையில் தன் முகத்தை நிமிர்ந்து பாராது வரும் மகளை முறைத்தபடி “எங்கேடி போய்விட்டு வருகிறாய்?” என்று ஆத்திரத்தோடு கேட்டார்.
“ரஞ்சனின் கடைக்கு”
சொன்னதுதான் தாமதம், ‘பளார்’ என்று விழுந்தது அவள் கன்னத்தில் அறை. அதைத் தாங்க முடியாது தடுமாறியவள் தாயையே பற்றிக் கொண்டாள்.
“இன்னும் எதற்கடி அவன் கடைக்குப் போகிறாய். பட்ட அசிங்கம் போதாமல் இன்னும் படவா? எங்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயத்தை ஊருக்கே சொல்லப் போனாயா?”
வயிற்றில் பிள்ளையைக் கொடுத்துவிட்டு அவளைத் திருமணம் செய்யமாட்டேன் என்று சொன்ன கயவனின் கடைக்கு மகள் சென்று வந்திருக்கிறாள் என்பது பெரும் ஆவேசத்தைக் கொடுத்தது அவருக்கு.
“உனக்கு வெட்கமாக இல்லை? கொஞ்சமாவது சுயமரியாதை வேண்டாமா? அவன் உன்னை எச்சில் இலையாக்கித் தூக்கி எறிந்திருக்கிறான். அவனைப் போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிறாயே. வாழ்க்கைப் பிச்சை கொடு என்று கேட்கப் போனாயா?” என்று ஆத்திரத்தில் கத்தியவரை, விழி நீரை உள்ளுக்கு இழுத்தபடி பார்த்திருந்தாள் சித்ரா.
வாழ்க்கையை பிச்சையாகக் கேட்கும் நிலைக்கு வந்துவிட்டாளா அவள்?
“இனி நீ அவன் கடைக்குப் போகவும் கூடாது, அவனோடு கதைக்கவும் கூடாது! இந்த வீட்டுக்கு அந்த நன்றிகெட்டவன் மருமகனாக வரவேண்டாம். எங்களிடமே காசைக் கடனாக வாங்கிக் கடையைத் திறந்துவிட்டு, இன்று எங்களுகே வேலையைக் காட்டிவிட்டானே. அவனும் வேண்டாம். அவன் தந்த பிள்ளையும் வேண்டாம். அப்பா வரட்டும், வந்ததும் எல்லோருமாக லதாவிடம் சென்று இந்தப் பிள்ளையைக் கலைத்துவிடலாம்.” என்றவரின் பேச்சில், அதிர்ந்து, உறைந்து நின்றாள் சித்ரா.
அவள் செய்த பிழைக்கு அந்தச் சிசு எப்படிப் பொறுப்பாகும்?
“ஐயோ அம்மா! அப்படிச் சொல்லாதீர்கள். அது என் பிள்ளை, ஒரு உயிர். அதை அழிப்பது கொலைக்குச் சமம்.” என்று தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சொல்லும்போதே பதறியது சித்ராவின் உடல்.
அவன் அவளோடு எப்படிப் பழகினாலும், அவளும் அவளது நேசமும் உண்மையல்லவா! அந்த நேசத்தில் உருவான கருவை அழிப்பதா? நினைக்கவே நெஞ்சு நடுங்கியது.
“என்னடி கொலை அது இது என்கிறாய். ஆறுவாரக் கருதானே. இல்லாவிட்டாலும் அது பிறந்து அதன் வாழ்க்கையும் உன் வாழ்க்கையும் சீரழிவதற்கு இது எவ்வளவோ மேல். இனியாவது அம்மா சொல்வதைக் கேள்! கருவைக் கலைத்துவிட்டு வேறு ஒரு கல்யாணம் செய்து நல்லபடியாக வாழும் வழியைப் பார்!”
நெஞ்சம் துடிக்கத் தாயை நிமிர்ந்து பார்த்தாள் சித்ரா. “வேறு எது வேண்டுமானலும் சொல்லுங்கள் கேட்கிறேன். ஆனால் இதைச் செய்ய முடியாது. இது என் குழந்தை. அதைப் பெற்று நானே வளர்ப்பேன். அதேபோல இனிக் கல்யாணப் பேச்சும் பேசாதீர்கள். எனக்கு என் குழந்தை மட்டும் போதும்.” என்றவள், தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
லக்ஷ்மி அதிர்ந்து நின்றார். அவளுக்கு அவள் குழந்தை போதும் என்றாலும், என் குழந்தைக்கு அது மட்டும் போதாதே என்றது அவரது தாய் மனது. இனிக் கல்யாணப் பேச்சை எடுக்கக் கூடாதா? அப்படியானால் அவளின் எதிர்காலம்?
கணவன் இல்லாமல் இந்தக் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு, ஊரார் சிரிக்க கௌரவம் அற்ற வாழ்க்கை அவள் வாழ்வதா? அதற்கா இவ்வளவு சொத்தையும் சுகத்தையும் சேர்த்துவைத்து மகளைக் கண்ணுக்குள் வைத்து வளர்த்தார்கள்.
நினைக்க நினைக்க அழுகைக்குப் பதிலாக ஆவேசம் தான் எழுந்தது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்? எப்போதும் அவள் சொல்வதையே கேட்போம் என்றா?
இனியும் அவள் எண்ணப்படி நடக்க விடவே கூடாது என்று முடிவு செய்தார்.
அதுநாள் வரை கோபப்பட்டாலும் மகள் செய்ய நினைப்பவைகளை ஓரளவுக்கு மேல் அவரும் மறுத்ததில்லை. காரணம், அவள் மேல் இருந்த பாசமும், திருமணமாகும் வரைதானே இந்தச் சுதந்திரமும் என்கிற எண்ணமுமே.
அந்தச் சுதந்திரத்தினால் அவள் தன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்ட பிறகும் அமைதியாக இருக்க முடியவில்லை அவரால்.
கணவருக்கு மகளை ரஞ்சனுடன் இணைக்கும் எண்ணம் இருப்பதை அறிந்தாலும், அதற்காகத் தகுதி தராதரம் இல்லாதவனின் காலில் போய் விழுவதா? நன்றிகெட்டவன்!
இந்தக் கருவினால் தான் தன் கணவன் அவன் காலில் விழவேண்டிய நிலை என்றால், அந்தக் குழந்தையே தேவையில்லை!
அதேபோல, மகளின் நல்வாழ்க்கைக்கும் தடையாக இருக்கும் அது தேவையில்லை என்றே வாதிட்டது அவர் மனது!
கணவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாகச் சொல்லியிருந்தாலும், மனதில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த கோபமும் அவசர புத்தியும் அவரை ஒரு முடிவை எடுக்க வைத்தது.
ஆத்திரம் அறிவை மழுங்கடிக்க என்ன செய்யவேண்டும் என்று ஒருநொடி சிந்தித்தவர், லதாவுக்கு அழைத்தார்.
சிலபல வாக்கு வாதங்களின் பின்னர், அவரின் வேண்டுதலுக்கும் பிடிவாதத்துக்கும் சம்மதித்தார் லதா.
அடுத்ததாக சித்ரா! அவளுக்குப் பாலைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு அவளின் அறைக்குச் சென்றார்.
அங்கே கட்டிலில் பிடுங்கி வீசப்பட்ட கொடியாக வாடிக் கிடந்தவளின் தோற்றம் நெஞ்சை அறுத்தபோதும், “இந்தா, இந்தப் பாலைக் குடி..” என்று நீட்டினார்.
இப்போது எதற்குத் தருகிறார் என்று தோன்றியபோதும் குடிக்க மனம் இல்லாததில், “வேண்டாம்மா..” என்றாள் சோர்ந்த குரலில்.
“இதிலாவது அம்மா சொல்வதைக் கேள். இதைக் குடி!”
அவர் சொன்னது நெஞ்சைச் சுட, வங்கிக் குடித்தாள் சித்ரா.
சற்று நேரத்திலேயே, அந்தப் பாலோடு கலக்கப்பட்டிருந்த தூக்கமாத்திரையின் வீரியத்தில் அவள் விழிகள் மூடிக்கொள்ள, ஆழ்ந்து உறங்கிப் போனாள்.
அதன்பிறகு மிக வேகமாகச் செயல்பட்டார் லக்ஷ்மி.
அவரவருக்கு அவரவர் நியாயம் என்பது போன்று, அவருக்கு அவரின் மகளின் வாழ்க்கை ஒன்றே அந்த நிமிடத்தில் முக்கியமாகத் தென்பட்டது. அதற்கு எது தேவையோ அதை மிக வேகமாகச் செய்தார்.
செய்யத் தயங்கிய லதாவையும், சித்ராவின் எதிர்காலத்தின் மீதான பயமும், கலங்கும் கண்களைத் துடைத்தபடி நின்ற லக்ஷ்மியின் நிலையும் செய்ய வைத்தது.
எல்லாம் முடிந்து மயக்கத்தில் கட்டிலில் கிடந்த மகளின் கலைந்திருந்த முடிகளை ஒதுக்கியவரின் விழிகளில் கண்ணீர் வடிந்துகொண்டே இருந்தது.
இனியாவது உன் வாழ்க்கை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சந்தோசமாக அமையட்டும் கண்ணம்மா.. என்று எண்ணியது அந்தத் தாய்மனம்.
மகள் தாய்மை அடைந்திருக்கிறாள் என்கிற செய்தி ஒரு தாய்க்கு எவ்வளவு உவப்பானது?
மகளுக்குத் திருமணம் நடந்து அதன்பின் இப்படியொரு நிகழ்வு நடந்திருக்க சந்தோசத்தோடு ஊரையே கூட்டிக் கொண்டாடியிருப்பாரே!
எல்லாம் முறை தவறிப் போனதில், இப்படி ஒரு பாவகாரியம் செய்யவேண்டி வந்துவிட்டதே என்று ஊமையாக அழுதது அவர் மனம்!
ஆனாலும், அவள் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக எதையும் செய்யலாம் என்றும் எண்ணிக்கொண்டார்.
அவரது கைபேசி ஒலிக்கவும், அழைப்பது கணவர் என்று அறிந்ததும், நடந்ததைச் சொன்னால் என்ன சொல்லப் போகிறாரோ என்கிற பயம் நெஞ்சைக் கவ்வ, மகள் எழுந்துவிடப் போகிறாள் என்று எண்ணி அதை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தார் லக்ஷ்மி.
மெல்லக் கண்விழித்தாள் சித்ரா. நன்றாகத் தூங்கிவிட்டோம் போலவே என்று எண்ணிக்கொண்டு எழ முயன்றவள், தன் உடலில் ஏதோ வித்தியாசம் இருப்பதை உணர்ந்தாள்.
மெல்லிய பதட்டத்தோடு விழிகளைச் சுழற்றியவளுக்கு இருக்கும் இடத்தின் வித்தியாசம் புரிபட, உடல் வேதனையையும் பொருட்படுத்தாது வேகமாக எழுந்தமர்ந்தவள், கலவரம் நிறைந்த குரலில், “அம்மா!” என்று அழைத்தாள்.
அவளின் குரலில் உள்ளே ஓடிவந்த தாயையும் தந்தையையும் பார்த்தவளுக்கு நெஞ்சுக்குள் எதுவோ பிசைந்தது. அழுது வீங்கிய முகத்தோடு தாயையும், கடுத்த முகத்தோடு தந்தையையும் கண்டவளுக்கு, ஏதோ விபரீதம் நடந்துவிட்டதும், அது தனக்குத்தான் என்பதும் விளங்க, “என்னம்மா.. எனக்கு என்ன நடந்தது?” என்று பதறிக் கேட்டவளின் கைகள் தன் பாட்டுக்கு வயிற்றைத் தடவின.
துணிவோடு செய்ததை வாய்விட்டுச் சொல்லமுடியாமல் அவள் தாயார் தடுமாறி நிற்க, மனைவியைக் கடுமையாக முறைத்துப் பார்த்த சந்தானம், “கேட்கிறாள் இல்லையா. சொல்லு! நீ செய்த மகா நல்ல காரியத்தை உன் வாயாலேயே சொல்லு!” என்றார் கடுமையான குரலில்.
“என்னப்பா, அம்மா என்ன செய்தார்கள்? நான் ஏன் ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறேன்?” என்றவளுக்கு, தாய் மதியம் சொன்னது நினைவிலாட, “என்.. என் குழந்தைக்கு ஏதுமா?” என்றாள் குரல் நடுங்க.
ஊமையாக நின்ற பெற்றவர்களின் நிலையைப் பார்த்து நடந்தது அதுதான் என்று உள்ளம் அடித்துச் சொல்ல, ஐயோ அப்படி இருக்கக் கூடாது என்று மனம் பதற, கண்களில் கண்ணீர் வடியப் பெற்றவர்களை பார்த்தவளுக்கு நடந்த விபரீதம் மிக நன்றாகவே புரிந்தது.
புரிந்த நொடி அவளை விட்டு அவள் உயிரே பிரிந்தது போன்று வலித்தது. “ஏன்மா இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டுமுடிக்க முதலே பெரும் கேவல் வெடிக்க, முகத்தை மூடிக்கொண்டு கதறினாள்.
அவள் செய்த தப்புக்குக் குழந்தைக்குத் தண்டனையா? அவள் வயிற்றுக்குள் பத்திரமாக இருந்த பூச்செண்டு பிடுங்கி எறியப்பட்டு விட்டதா?
இந்தக் குழந்தை உருவாகாமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தாளே, அதில் கோபம் கொண்டுவிட்டதா அவள் செல்வம்?
குழந்தை உருவானதை எண்ணி ஒரு நிமிடம் தன்னும் அவள் மகிழவில்லையே, அதனால் ஆத்திரமோ?
கற்பிழந்த தாயின் முகத்தைப் பார்க்க என் பிள்ளைக்குப் பிடிக்காமல் போய்விட்டதோ? அதுதான் என் முகம் பாராமல், என் கைகளில் தவழாமல், என் உதிரத்தைப் பாலாக அருந்தாமல் சென்றுவிட்டானோ? அல்லது சென்று விட்டாளோ?
நினைக்க நினைக்க நெஞ்சு வெடிக்கும்போல் வலித்தது. கதறியவளின் நிலை பொறுக்கமுடியாமல், “சித்து, அழாதேம்மா.. நீ இப்போது இருக்கும் நிலையில் அழக்கூடாது..” என்ற தாயின் குரலில் ஆவேசமாக எழுந்தாள் சித்ரா.
“ஏன் அழக்கூடாது? அழுதால் என்ன செத்துவிடுவேனா? செத்தே போகிறேன். என்னையும் சேர்த்துக் கொன்றிருக்க வேண்டியதுதானே. எதற்கு என் பிள்ளையை அழித்தீர்கள்?”
மகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் தடுமாறினார் லக்ஷ்மி. அதைச் செய்யும் வரை ஒருவித ஆவேசத்தோடு செய்து முடித்தவரை இப்போது அவர் மனதே குத்தியது. போதாக்குறைக்கு நடந்ததை அறிந்த கணவர் காட்டிய கோபத்தில் நடுங்கிப் போனார்.
அதே கோபத்தோடு மகளும் கதற, “உன் நல்லதுக்குத்தான் சித்து..” என்றார் மெல்ல.
“என்ன என் நல்லதுக்கு? நான் கேட்டேனா உங்களிடம்? என் குழந்தை உங்களுக்கு என்ன பாவம் செய்தது? கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் எப்படிச் செய்ய முடிந்தது உங்களால்?”
“ஏய்! என்னடி? அம்மாவிடம் என்ன பேச்சுப் பேசுகிறாய்? இரக்கம் இருக்கப் போய்த்தான் இப்படிச் செய்தேன். உன் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டாமா? எனக்கு என் பிள்ளையின் வாழ்க்கை முக்கியம்!” தான் செய்தது பிழை என்பது புரிந்தாலும் மகளின் கேள்விகள் அவருக்குக் கோபத்தை வரவழைத்தன.
“உங்களுக்கு உங்கள் பிள்ளை முக்கியம் என்றால் எனக்கு என் பிள்ளை முக்கியம்! என் பிள்ளையைக் கொல்ல நீங்கள் யார்? நீங்கள் அதன் அம்மம்மா அம்மா. தன்னைக் கொன்றது தன் அம்மம்மா என்று அந்தக் குழந்தை எவ்வளவு அழுதிருக்கும். உங்கள் பேரக்குழந்தையை நீங்கள் அழித்திருக்கிறீர்கள்!” என்றதைக் கேட்டதும் லக்ஷ்மிக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.
என் பேரக்குழந்தையா? அதற்கு மேல் அவரால் சிந்திக்க முடியவில்லை.
அதுவரை ‘கரு’வாக மட்டுமே இருந்த அது, அவர் மகளின் வாழ்க்கைக்கு இடையூறாக அமையும் என்பது மட்டுமே அவர் கருத்தில் இருந்தது.
அது தன் பேரக்குழந்தை என்று சித்ராவின் வாயால் கேட்கையில், பெரும் பயங்கரமாக இருந்தது.
அதற்கு மேல் முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதார் லக்ஷ்மி.
சந்தானத்துக்குமே விழிகள் கலங்கின. அவர் உள்ளமும் பிறக்க முதலே மரித்துப்போன அவர் சந்ததியை எண்ணித் துடித்தது.
“இப்போது எதற்கு அழுகிறாய். எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன், எதற்கும் அவசரப் படாதே என்று. அப்போதெல்லாம் கேட்காமல் இருந்துவிட்டு இப்போது என்ன? அழுவதை நிறுத்து!” என்றார் கடுமையான குரலில்.
சித்ரா தாயின் முகத்தை நிமிர்ந்தே பார்க்கவில்லை. அந்தளவுக்கு அவர்மேல் கோபமும் வேதனையும் கலந்து கிடந்தது. நேற்று அவர் அடித்தபோது கூட இவ்வளவு வலிக்கவில்லை.
கைகளால் வயிற்றைத் தடவிப் பார்த்தாள், அது வெறுமையாகக் கிடந்தது. பாவப்பட்ட அம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறக்க அது விரும்பவில்லையோ என்று எண்ணிய மாத்திரத்தில் அவள் உடல் அழுகையில் குலுங்கியது.
மகளின் அருகே அமர்ந்த சந்தானம், அவளின் தலைய மெல்லத் தடவினார்.
அவரைத் திரும்பிப் பார்த்தவள், “நான்தானே அப்பா பிழை செய்தேன். பிறகு ஏன்பா அம்மா இப்படிச் செய்தார்கள். அது என் பிள்ளைப்பா.” என்று கேட்டு விம்மினாள்.
என்ன பதில் சொல்ல முடியும் அவரால்?
“விடுடா சித்து. இதெல்லாம் நமக்கு நடக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது போலும். நடந்ததைப் பேசி ஒன்றையும் காணமாட்டோம். நீ அழாமல் தூங்கு!!” என்று தேறுதலாக மெல்லிய குரலில் பேசியபடி இருந்தவரின் கை மகளின் தலையை இதமாகத் தடவிக்கொடுக்கத் தவறவில்லை.
ஆனால், அவள் மனமோ விண்டு விண்டு வலித்தது. ஏன் இப்படி எல்லாம் எனக்கு மட்டும் நடக்கிறது? என்ன தப்புச் செய்தேன்? ரஞ்சனைக் காதலித்ததா?
அவனை நினைத்ததும் அவள் உள்ளம் தீயாகத் தகித்தது! கடலுக்கடியில் நிகழும் நில அதிர்வுபோன்று வெளிப்பார்வைக்குச் சோர்ந்து கிடந்தவளின் உள்ளம் உள்ளே எரிமலையாக வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது.
கள்ளமில்லா மனதைப் பறிகொடுத்து, அவன் மேலிருந்த நம்பிக்கையில் உடலையும் கொடுத்து, இப்போது வயிற்றுச் சிசுவையும் பறிகொடுத்துவிட்டுக் கிடக்கிறாளே, அவன் மேல் கொண்ட காதலுக்கு அவளுக்குக் கிடைத்த பரிசு இதுதானா?
அவள் இங்கே வேதனையிலும் வலியிலும் துவண்டு கிடக்க, அவன் அங்கே புதுப் பெண்ணுடன் உல்லாசம் கொண்டாடப் போகிறானா? சாப்பிட்ட பிறகு தூக்கியெறியும் வாழையிலையைப் போன்று எறிந்துவிட்டானே, இப்போது அவள் என்ன செய்ய வேண்டும்? மூலையில் முடங்குவதா? எங்கிருந்தாலும் வாழ்க என்று அவனை வாழ்த்திவிட்டு ஒதுங்குவதா?
அல்லது அவன் அவளை ஏமாற்றியது போன்று இன்னொரு ஆணை அவள் ஏமாற்றித் திருமணம் செய்ய வேண்டுமா?
அதை நினைத்ததுமே அருவருப்பில் உடல் சிலிர்த்தது.
இல்லை! அப்படி விட்டுவிட முடியாது என்று அந்த வேதனையிலும் வெகுண்டெழுந்தது அவள் மனது!
“கண்டதையும் நினைக்காமல் தூங்கு சித்து..” என்றார் தந்தை, அவள் தேகத்தில் ஓடிய நடுக்கத்தை உணர்ந்து.
தூக்கம் வரும் என்று அவளுக்குத் தோன்றாதபோதும் தந்தைக்காகக் விழிகளை மூடிக் கொண்டாள்.
உள்ளமோ விழித்துக்கிடந்தது கதறிக் கொண்டிருந்தது.
சற்று நேரம் கழித்து, அவள் உறங்கிவிட்டதாய் நினைத்து, “நீங்கள் காலையிலேயே எங்கே போனீர்கள்?” என்று மெல்லக் கேட்டார் லக்ஷ்மி.
வந்ததும் வராததுமாக கணவர் திட்டியதில் அதைப் பற்றியே பேசாதவர், இப்போது கேட்டார்.
மகளை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “ரஞ்சனைச் சந்திக்க..” என்றார் அவர்.
“என்னவாம்?” வெறுப்போடு கேட்டார்.
“அவன் கடைக்குப் போனேன், அவன் அங்கே இல்லை.”
“கடைக்குள் இருந்துகொண்டே இல்லை என்று சொல்லியிருப்பான்..”
அதே எண்ணம் அவருக்கும் இருந்ததில் மறுப்பாக ஏதும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார்.
“ஆனால் இவ்வளவு நேரமும் என்ன செய்தீர்கள்?” என்று மேலும் துருவினார் லக்ஷ்மி. கணவர் மகளின் விசயத்தில் அதோடு நின்றிருப்பார் என்று அவருக்குத் தோன்றவில்லை.
“நாதன், ராஜன் எல்லோருடனும் கதைத்துவிட்டு வந்தேன்..” என்றவரிடம், “எதைப்பற்றி?” என்று உடனேயே கேட்டார் மனைவி.
மகளை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “சித்துவின் விஷயம் ஒன்றும் சொல்லவில்லை.” என்றவர், “ரஞ்சனின் இரண்டு கடைகளையும் நாமே வாங்கலாம் என்று இருக்கிறேன். அதோடு இனி அவன் கடைக்கு இந்த இலங்கையில் எந்த மூலையில் இருந்தும் செருப்புக்கள் வராது. நானாக மனம் வைத்தால் தான் உண்டு.” என்றார் அடக்கப்ப ஆத்திரத்துடன்.
“முடிந்தால் அவன் கடைகளை இழுத்து மூடுங்கள். இனிமேல் அவன் முன்னேறவே முடியாதபடி எதையாவது செய்யுங்கள். அதை விட்டுவிட்டு எதற்கு அந்தக் கடைகளை வாங்குகிறீர்கள். அதுவும் இந்த நேரத்தில்.”
மனைவியின் விழிகளையே பார்த்தார் சந்தானம். “நம் தொழிலைப் பெருக்கவோ அல்லது சம்பாதிக்கவோ அல்ல. அந்த ரஞ்சனை என்னிடம் வரவைக்கத்தான் இந்த ஏற்பாடு. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன்? என்னிடமே வேலை பழகி, என்னிடமே பணம் வாங்கி முன்னுக்கு வந்துவிட்டு, என் மகளையே ஏமாற்றுவான், அதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டிருப்பேன் என்றா? என் பிள்ளைக்கு ஒன்றைச் செய்துவிட்டு இந்த டவுனில் அவனால் வியாபாரம் செய்துவிட முடியுமா? மரியாதையாகப் பேசிப் பார்த்தேன். சம்மதிக்கவில்லை. நேராகப் போய்க் கதைக்கலாம் என்று நினைத்தேன் அதற்கும் அவன் இடம் தரவில்லை. இனி, எழ முடியாத அளவுக்கு அடித்தால் தான் அடங்குவான் என்றால், அதற்கான வழியைத்தான் செய்துவிட்டு வந்திருக்கிறேன். அவன் திறந்திருக்கும் கடைகளை வாங்கப் போகிறேன். செருப்புக்கள் இனி அவனுக்கு வராது. வங்கியிலும் இரண்டாவது கடை திறக்க அவன் வாங்கிய லோனையும் ரத்துச் செய்யக் கதைத்துவிட்டேன். இனி என் தயவில்லாமல் அவனால் ஒன்றுமே செய்ய இயலாது.” என்றார் கடுமையான குரலில்.
கண்களை மூடியிருந்தபோதும், இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சித்ராவின் விழியோரங்களில் கண்ணீர் வடிந்து காதுகளை நனைத்தது.


