அங்கே கடை வாசலில் இறங்கியவளால் என்ன முயன்றும் அன்று நடந்ததை ஒதுக்கவே முடியவில்லை. அன்று அவள் இங்கு வராமல் இருந்திருக்க, அவனைக் காணாமல் இருந்திருக்க, அந்த அசம்பாவிதம் நடந்திராமல் இருந்திருக்க இன்று அவளுக்கு இந்த நிலைமை வந்திராதே!
ஆனால், கடந்த காலத்தையும் நடந்து முடிந்தவைகளையும் திரும்ப வாங்கும் வல்லமை இந்த உலகத்தில் யாருக்கும் இல்லையே!
வேதனைப்பட்ட மனதை அடக்கிக்கொண்டு கடைக்குள் நுழைந்தாள் சித்ரா.
அவளைக் கண்டதும், அவளை வாடிக்கையாளர் என்று நினைத்து, “வாங்க அக்கா வாங்க. என்ன மாதிரியான செருப்புப் பார்க்கப் போகிறீர்கள்.” என்று வரவேற்றான் ஒரு இளைஞன்.
அவன் புதிதாக வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கிறான் என்று புரிந்தது. ரஞ்சனைத் தேடி விழிகளைச் சுழற்றியவள், அவனைக் காணாது, “ரஞ்சன் எங்கே?” என்று அதட்டலாகக் கேட்டாள் சித்ரா.
அந்த இளைஞனின் முகத்தில் கவனம் தோன்ற, “நீங்கள் யார்?” என்று எதிர்க் கேள்வி கேட்டான் அவன்.
“கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்!”
பார்வை வேகமாக கடையின் உட்பக்கமாகச் சென்று மீள, “அவர் இல்லை..” என்றான் அவன்.
அவன் பார்வையிலேயே தன் கேள்விக்கான பதில் தெரிந்துவிட அவனை முறைத்துவிட்டுக் கடையின் உள்ளே விறுவிறு என்று நடந்தாள் சித்ரா.
அவள் செய்யப்போவதை நொடியில் கணித்து ஓடிவந்து கையை நீட்டி மறித்தான் அவன். “முதலாளி இல்லாத நேரத்தில் அந்நியர்களைக் கடைக்குள் விடமுடியாது.” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, ‘பளார்’ என்று அறை விழுந்தது அவன் கன்னத்தில்.
ஆட்காட்டி விரலை நீட்டிப் பத்திரம் காட்டியவள், “கையைக் காலை நீட்டி மறித்தாய் என்று வை உன்னைத் தொலைத்துக் கட்டிவிடுவேன் ராஸ்கல்!” என்றவள், கன்னத்தைப் பற்றியபடி அதிர்ந்து நின்றவனைக் கடந்து உள்ளே சென்றாள்.
அங்கே உள்ளறையில், அன்று வெறுமையாக இருந்த மேசையில் இன்று ஒரு மடிக்கணணி வீற்றிருக்க அதிலே மூழ்கியிருந்தான் ரஞ்சன்.
யாரோ வந்த அரவம் உணர்ந்து, “என்ன சதீஸ்..” என்றபடி நிமிர்ந்தவன் அங்கே சித்ராவைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“யாழி..!” உதடுகள் உச்சரித்தாலும் வாடி வதங்கி, கோலம் கெட்டு நின்றவளைக் கண்டு அதிர்ந்தான்.
ஒவ்வொரு அங்க அசைவிலும் துள்ளும் உற்சாகமின்றி, இதழ்களில் மிளிரும் புன்னகை இன்றி, எப்போதும் பளிச்சிடும் அந்த விழிகளில் வெறுமை நிறைந்து வழிய, உடல் மெலிந்து, உருக்குலைந்து நின்றவளைப் பார்க்க முடியவில்லை அவனால்.
ஆனாலும், கடைத் திறப்புவிழா அன்று நடந்தவைகள் நினைவிலாட அவன் முகம் இறுகியது. “இங்கே எதற்கு வந்தாய்?”
“என்னைக் காதலித்து ஏமாற்றிய கயவனைப் பார்க்க வந்தேன்.” என்றாள் அவளும் மரியாதையைக் காற்றில் பறக்கவிட்டு.
“இங்கே யாரும் உன்னை ஏமாற்றவும் இல்லை. அப்படியான பழக்கமும் இல்லை!” என்றான் அவன் அலட்சியமாக.
“ஓ..! நீங்கள் யாரையும் ஏமாற்றியதில்லை? அந்தப் பழக்கம் உங்களுக்கு இல்லை! எங்கே இதை என் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள் பார்ப்போம்!” என்று அவள் ஏளனமாகக் கேட்டபோது, அந்தக் கேள்வியில் இருந்த உண்மையில் அவன் முகம் கன்றிக் கருத்தது.
பதில் சொல்ல முடியாமல் நின்றவனிடம், “என்னிடம் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது வேறொருத்தியைக் கட்டப் போகிறேன் என்று சொன்னவனுக்கு வேறு என்ன பெயர்?” என்று அவள் கேட்டபோதும் சட்டெனப் பதில் சொல்ல முடியவில்லை அவனால்.
“நானா உன்னைக் காதலிக்கிறேன் என்று சொன்னேன்? அல்லது உன் பின்னால் சுற்றினேனா? நீ விரும்புவதாகச் சொன்னாய், நான் மறுத்தேன். நீ விடாமல் தொந்தரவு தந்தாய் அதனால் சம்மதித்தேன்.” என்றான் அவன் வெகு அலட்சியமாக.
“இதயரஞ்சன் என்று பெயரை வைத்துக்கொண்டு இதயமே இல்லாமல் கதைக்கும் உங்கள் நாக்கு அழுகித்தான் போகும்!” என்றாள் ஆத்திரத்தில் உடல் நடுங்க.
“உன் சாபம் பலிக்கிறபோது அதைப் பார்த்துக்கொள்ளலாம்.” என்றான் அவன் அப்போதும் அலட்சியமாக.
விழிகள் அவனை வெறிக்க, “அப்போ நீங்கள் என்னைக் காதலிக்கவே இல்லையா?” என்று கேட்டாள் சித்ரா.
அவளைப் பாராமல், “இல்லை!” என்றான் ரஞ்சன் பிசிரற்ற குரலில்.
“பிறகு எதற்கு என்னோடு பழகினீர்கள்? அன்று.. அன்று அப்படியெல்லாம் நடந்தீர்கள்.” என்று கேட்டவளுக்குத் தன்னை நினைத்தே அசிங்கமாக இருந்தது.
அன்று இதே அறையில் வைத்து நிறைவாக உணர்ந்த ஒன்றை, அவர்களின் காதலின் சங்கமமாக நினைத்த ஒன்றை இன்று அசிங்கமாக அருவருப்போடு உணர்ந்தாள்.
“ஏதோ நானாக உன்னை வற்புறுத்தியது போல் சொல்கிறாயே. நீயும் விரும்பித்தானே வந்தாய். பிறகு என்ன?” என்றான் அவன்.
அதைக் கேட்டவளுக்கு அவமானத்திலும் ஆத்திரத்திலும் முகம் ரெத்தமெனச் சிவந்தது. அந்த நொடியே இறந்துவிட மாட்டோமா என்றிருந்தது. அவ்வளவு கேவலமாக உணர்ந்தாள்.
உயிர்க் காதல் என்று அவள் எண்ணியது அவனுக்கு உடல் காதலாகிப் போனதா?
உள்ளே வலித்தபோதும், “உங்களை நம்பித்தானே.. நாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என்றுதானே அதற்குச் சம்மதித்தேன்..” என்று சொல்வதற்குள்ளேயே குன்றிக் குறுகிப் போனாள் சித்ரா.
அவள் நிலை அறியாத அவனோ, “உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று என்றாவது உன்னிடம் சொன்னேனா?” என்று எள்ளல் நிறைந்த குரலில் நிதானமாகக் கேட்டான்.
அவள் முற்றிலும் அதிர்ந்துபோய்ப் பார்க்க, “என்ன பார்க்கிறாய்? என்றாவது நானாக வந்து உன்னோடு கதைத்தேனா? அல்லது உன்னைத் தொட்டேனா? ஏன், ஒரு தப்பான பார்வை பார்த்திருப்பேனா? அன்று கூட நீதான் என்னைத் தேடி வந்தாயே தவிர நான் வரவில்லை!” என்றான் பழைய குரலிலேயே!
அவன் எய்த அம்பு இலக்குத் தவறாமல் அவள் நெஞ்சைத் தாக்கியதில் உயிருக்குப் போராடும் மானைப் போன்று துடித்துப் போனாள் சித்ரா.
அதோடு, அவன் பேச்சில் இருந்த உண்மை வேறு அப்போதுதான் அவளுக்கு உறைத்தது. அதுநாள் வரை அவனாக அவளை அணைத்தது இல்லை. முத்தமிட்டது இல்லை. ஏன், தவறான ஒரு பார்வை.. அல்லது என் சொத்து என்கிற உரிமைப் பார்வை கூட பார்த்தது இல்லையே என்று நினைத்தவளுக்கு மின்னலடித்தது போன்று அது மண்டையில் உறைத்தது.
ஆமாம்.. அவன் உரிமையான ஒரு பார்வையையோ, என்னவள் என்கிற நெருக்கத்தையோ அவளிடம் காட்டியதே இல்லை.
அவள்தான் எல்லாச் சந்தர்ப்பத்திலும் அவனை நெருங்கியிருக்கிறாள் என்கிற உண்மை உறைக்க நெருப்பாய்த் தகித்தது அவள் தேகம்!
ஆனால் அது நேசம் கொண்ட நெஞ்சத்தின் தேடல் அல்லவா..
அவன் எதற்காகவும் அவளை நெருங்கியது இல்லை என்பது காதலியாக அவளுக்குப் பெருத்த அடி என்றால், அவளாக அவனை நாடியிருக்கிறாள் என்பது ஒரு பெண்ணாகப் பெருத்த அவமானமாக இருந்தது.
நெஞ்சமும் உள்ளமும் தகிக்க நிமிர்ந்தவளின் விழிகளில் அடிபட்ட தன்மை அப்பட்டமாகத் தெரிந்தது.
“அப்படியானால் அன்று நடந்தது.. க்கு..” என்றவளை கையமர்த்தினான் அவன்.
“சும்மா அதையே சொல்லிக் கொண்டிருக்காதே! உனக்குத்தான் எதுவுமே வெகு சாதரணமாயிற்றே! அதெல்லாம் உனக்கு ஒரு விசயமா என்ன? அதனால் நீ யாரையாவது கட்டிக்கொள்.” என்றவனை வாயடைத்துப்போய்ப் பார்த்தாள் சித்ரா.
அன்று ‘உன்னால் முடியாதது ஒன்று என்று உண்டா என்ன? நீ எதற்கும் துணிந்தவள் ஆயிற்றே!’ என்று அவன் சொன்னதன் பொருள் இதுதானா?
அன்றே அவளைக் கேவலமாக நினைத்துத்தான் தொட்டிருக்கிறான் என்று நினைத்த மாத்திரத்தில் உடல் முழுவதும் எரிந்தது.
“கட்டிலுக்கு உங்களையும் தாலிக்கு இன்னொருவனையும் தேட என்னை என்ன உங்களை மாதிரி ஒழுக்கம் கெட்டவள் என்று நினைத்தீர்களா?” என்று சூடாகக் கேட்டுவிட்டாள் சித்ரா.
நாணென விறைத்த தேகத்தோடு, “ஏய்!” என்று அவன் உறும, பயம் என்பதே சிறிதும் இன்றி அவனைப் பார்த்தாள் சித்ரா.
“என்னைத் தொட்டுவிட்டு உங்கள் அத்தை மகள் ரத்தினத்தைக் கட்டப் போகிறேன் என்று சொன்னவருக்கு எதற்கு இந்த ரோஷமும் கோபமும்? நானென்ன இல்லாததையா சொன்னேன்?”
ஒரு நொடி முகம் கன்றியபோதும், “அதைச் சொல்ல உனக்குத் தகுதி இல்லை!” என்றான் அவன், அவளை வார்த்தைகளால் குதறிவிடும் வேகத்தோடு.
அவன் நினைத்தது நடந்தபோதும், கலங்கிய விழிகள் தீப்பந்தமெனத் தகிக்க, “என்ன தகுதி இல்லை எனக்கு? உங்களைத் தவிர வேறு யாரோடும் நான் சுற்றியதைக் கண்டீர்களா? அல்லது உங்களை மாதிரி ஒருத்தியைக் காதலித்துவிட்டு இன்னொருத்தியைக் கட்ட நினைத்தேனா? நீங்கள் கட்டமாட்டேன் என்று சொல்லியும் உங்களைத்தான் கட்டவேண்டும் என்று வந்திருக்கும் என்னிடம் என்ன தகுதி இல்லை?” என்று ஆக்ரோசமாகக் கேட்டாள் சித்ரா.
“திருமணத்திற்கு முதலே என்னோடு கட்டிலுக்கு வந்த உனக்கு அப்படி என்ன பெரிய தகுதி இருக்கிறது?” என்று ஏளனமாகக் கேட்டவனை, பேசுவது அவன்தானா என்று நம்ப முடியாமல் பார்த்தாள் சித்ரா.
வருங்காலக் கணவனாக இருந்தால் கூட கழுத்தில் தாலி ஏறும் வரை அவனை நம்மிடம் நெருங்க விடக் கூடாது என்று பெற்றவர்கள் சொல்வதன் பொருள் மிக நன்றாகவே புரிந்தது!
ஆனால், இப்போது புரிந்து என்ன பலன்? அனைத்தையும் இழந்துவிட்டாளே!
விழியோரங்களில் நீர் மல்கியபோதும், “ஆமாம், நான் தகுதி இல்லாதவள் தான். ஒரு மோசக்காரனை, நயவஞ்சகனை நம்பி ஏமாந்த நான் தகுதி இல்லாதவள் தான்! ஆனால், அதற்காக ஓய்ந்து ஒடுங்கி விலகிப் போவேன் என்றுமட்டும் நினைக்காதீர்கள்! என்னோடுதான் உங்களுக்குத் திருமணம்! உங்கள் மனைவி நான்தான்!” என்றாள் சித்ரா நிமிர்ந்து.
அதைக் கேட்டவனின் கீழுதடு ஏளனமாக மடிந்தது. “நீ சொல்லிவிட்டால் அது நடந்துவிடுமா? என் அத்தை மகள் ரத்தினத்தோடுதான் எனக்குத் திருமணம். அழைப்பிதல் அனுப்புகிறேன். ஆனால் வராதே!” என்றான் இகழ்ச்சியாக.
அதைக் கேட்டவளின் அடி வயிற்றிலிருந்து நெஞ்சுவரை சுர்ரென்று கோபாக்கினி எழுந்தது.
தலையை நிமிர்த்தி அவனை நேராக நோக்கி, “கட்டாயம் வருவேன். மணமகள் நானில்லாமல் உங்கள் திருமணம் எப்படி நடக்கும்? நன்றாக உங்கள் நெஞ்சில் பச்சை குத்தி வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு நீங்கள்தான் புருஷன். உங்களுக்கு நான்தான் பெண்டாட்டி! இதை யாராலும் மற்ற முடியாது. உங்களாலும் கூட! உங்கள் கைத்தாலியை நான் வாங்கிக் காட்டுகிறேன்.” என்று சூளுரைத்தாள் சித்ரா.
அவளின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதியாமல், “நீ வாங்குவதற்கு என் கைத்தாலி என்ன கடையில் வாங்கும் பொருள் என்று நினைத்தாயா?” என்று ஏளனம் குறையாது அவன் கேட்க,
மிக நன்றாகவே நிமிர்ந்து, “அது கடைப் பொருள் இல்லைதான். எனக்கு மட்டுமே சொந்தமான பொருள்!” என்று சொன்னவள், “என்னுடனான திருமணத்திற்கு தயாராக இருங்கள் ரஞ்சன். விரைவில் நாம் திருக்கோணேஸ்வரர் கோவிலில் சந்திக்கலாம் மணமக்கள் கோலத்தில்!” என்றவள், நிமிர்ந்த நடையோடு அந்தக் கடையை விட்டு வெளியேறினாள்.