தன் அறையோடு சேர்ந்திருந்த பால்கனியில், சுவரில் சாய்ந்தபடி நிலத்தில் அமர்ந்திருந்தாள் சித்ரா. கண்ணோரங்களில் நீர்க்கசிவு நிரந்தரமாகவே தங்கியிருந்தது. கைகளோ அப்பப்போ வயிற்றைத் தடவிப் பார்த்து அதன் வெறுமையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியது.
ரஞ்சனின் வார்த்தைகளை மறக்கவே முடியவில்லை. அவளாகத்தான் அவனோடு வலியச் சென்று பழகியதாகச் சொல்லிவிட்டானே.. அதை நினைக்க நினைக்க வேதனையோடு அவமானமாகவும் இருந்தது.
வண்டை நாடி மலர்கள் செல்வதில்லை என்றாலும் கொடி கொம்பைத் தானே நாடும். அப்படித்தானே அவளும் அவனை நாடியது. அதிலே தப்பென்ன?
ஆனால் ஒன்று! அவன் என்ன சொன்னாலும் அவன்தான் அவளது கணவன்! அதை நினைத்ததும் அவள் மனதும் உடலும் உறுதியோடு நிமிர்ந்தது.
அவன் சொன்னதுபோல, சாதனாவுடன் அவனைச் சேர்த்து வைத்துவிட்டு எங்கிருந்தாலும் வாழ்க என்று பாடவோ, இன்னொருவனைத் திருமணம் செய்யவோ முடியாது.
கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிப் பெற்றவர்களை வருத்தவும் அவளால் முடியாது.
அதோடு, தவறை அவன் செய்ய தண்டனையை அவள் அனுபவிப்பதா? இதுவரை பட்டது எல்லாம் போதும். இனி என்ன நடந்தாலும் அவனுடன்தான் அவள் வாழ்க்கை.
திடீரெனக் கைபேசி சத்தமிட சிந்தனை கலைந்து அதை எடுத்துப் பார்த்தாள்.
அழைப்பது ரஞ்சன் என்று தெரிந்ததும், அவன் எதற்க்காக அழைக்கிறான் என்பதை ஊகிக்க முடிந்தவளின் இதழ்களில் விரக்தியான புன்னகை ஒன்று நெளிய, நிதானமாக அதைக் காதுக்குக் கொடுத்து, “ஹலோ..” என்றாள்.
“கடைகளை வாங்கி, இப்படிப் போட்டோக்களை அனுப்பினால் நான் பயந்துவிடுவேன் என்று நினைத்தாயா?” என்று, எடுத்ததுமே பாய்ந்தான் அவன்.
“கடைகளை வாங்கியது அப்பா, நானில்லை. அதோடு மனச்சாட்சிக்கே பயப்படாத நீங்கள் உயிரற்ற இந்த போட்டோக்களுக்குப் பயப்படுவீர்கள் என்று நானும் நினைக்கவில்லை.”
“பெண்ணாடி நீ? கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இப்படித் தரமிறங்கி நடந்துகொள்ள எப்படித் துணிந்தாய்?” என்று சீறினான் அவன்.
“காதலித்தவளை கைவிட்டுவிட்டு இன்னொருத்தியைக் கட்ட நினைத்த உங்களின் தரத்துக்கு என் தரம் ஒன்றும் குறைந்ததில்லை.” என்று அவனுக்குப் பதிலடி கொடுத்தவள், “என்ன, உங்கள் அத்தை மகள் ரத்தினம் திருமணத்தை நிறுத்திவிட்டாளோ. அதுதான் ரஞ்சன் மச்சானுக்கு இவ்வளவு கோபமோ?” என்று நக்கலாகக் கேட்டபோது, அவளுக்கும் வலித்தது.
அவளை மிக இலகுவாகக் கழட்டி விட்டவனுக்கு சாதனா திருமணத்தை நிறுத்தியதும் கோபம் வருகிறது என்றால், அவளை விட சாதனா அவன் மனதில் அதிகமாக இடம் பிடித்திருக்கிறாளா?
“ஏய்! என்னடி திமிரா? அவள் கல்யாணத்தை நிறுத்தினால் உன்னைக் கட்டுவேன் என்று நினைத்தாயா? யாரைக் கட்டினாலும் உன்னைக் கட்டமாட்டேன்!” என்றவனின் கடினப்பட்ட பேச்சில் அவளின் இமையோரங்கள் நனைந்தது.
அவன் பேச்சு மனதை வாள் கொண்டு அறுத்தபோதும், “உங்களுக்கு உங்கள் தங்கையின் வாழ்க்கை முக்கியம் இல்லைப் போலவே ரஞ்சன். அவளுக்கு என்னவானாலும் பரவாயில்லையா?” என்று எள்ளலோடு கேட்டாள் சித்ரா.
“அவளுக்கு என்ன பிரச்சினை. அவள் நன்றாகத்தான் வாழ்வாள். வாழ வைப்பேன்!” என்று உறுமினான் அவன்.
“நவீனுக்கு இந்தப் போட்டோக்களை அனுப்பி, அண்ணாவே இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாள் என்று கேட்கவா?” என்று அவள் சொல்லிமுடிக்க முதலே, “ஏய் என்னடி மிரட்டுகிறாயா? அப்படி அனுப்பிப் பார்! நடக்கிறதே வேறு! நித்தியின் திருமணத்திற்கு ஏதாவது கெடுதல் நடந்தது, நீ தொலைந்தாய்!” என்றான் ஆத்திரமும் வெறுப்புமாக.
“நீங்கள் என் வாழ்க்கையைக் கெடுக்கலாம். ஆனால் உங்கள் தங்கைக்கு ஒன்று என்றால் மட்டும் கோபம் வருகிறதோ? எனக்குத் தேவை உங்களோடு திருமணம். அது நடக்க வேண்டும். இல்லையானால் நவீனுக்கு இன்னும் பணக்கார, வசதியான வீட்டுப் பெண்ணை நானே பேசி முடிப்பேன். அவனும் உங்களைப் போல பணத்துக்காக பிணமாகக் கூடியவன் தானே! செய்யவா?”
அதைக் கேட்டதும் ஒருநொடி அதிர்ந்து நின்றான் ரஞ்சன். எதற்கும் அசையாத அவனை அசைத்துப் பார்த்தது அவள் பேச்சு. தன்னை மட்டுமே தாக்குவாள் என்று அவன் நினைக்க அவளோ தங்கை வரைக்கும் பாய்ந்தது அவன் சற்றும் எதிர்பாராதது.
ஆத்திரம் மேலோங்க, “என்னடி, உன் பணத்திமிரைக் காட்டுகிறாயா? நான்தான் நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேனே. பிறகும் எதற்கு அலைகிறாய். ஒதுங்க வேண்டியதுதானே. உலகத்தில் வேறு ஆண்களே இல்லையா உனக்கு?” என்றவனின் பேச்சில் வெகுண்டது சித்ராவின் மனம்.
“ஆமாம்! பணத் திமிரைத்தான் காட்டுகிறேன். புதுப் பணக்காரன் நீங்களே இவ்வளவு ஆடும்போது நான் நிரந்தரப் பணக்காரி எவ்வளவு ஆடுவேன்..?” என்று அவனுக்குக் குறையாத ஆத்திரத்தோடு கேட்டவள்,
“வேறு ஒருவனைக் கட்டி, நீங்கள் எனக்குச் செய்த துரோகத்தை நான் அவனுக்குச் செய்யவா? உங்களோடு பழகியதை மறைத்து அவனோடு வாழ்வதற்கு என்ன பெயர் ரஞ்சன்? என்றாவது நடந்தவைகள் அவனுக்குத் தெரிய வந்தால் பிறகும் நரக வாழ்க்கைதானே. இதுதானே உங்களைப் போன்ற நயவஞ்சகர்களைக் காதலித்து ஏமாந்துபோன பல பெண்களின் நிலை. ஏமாற்றப்பட்ட பெண்கள் திருப்பி அடித்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் உணர வேண்டாமா? அழுது கரையாமல் பெண்கள் நிமிர்ந்து நின்றால் என்னாகும் என்று தெரியவேண்டாமா?” என்று ஆவேசமாகக் கேட்டாள் சித்ரா.
அதற்கு அவன் என்னவோ சொல்ல வரவும், “நிறுத்துங்கள் ரஞ்சன். இனி நீங்கள் பேச ஒன்றும் இல்லை. நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்! முழுக்க நனைந்த பிறகு எனக்கு முக்காடு தேவையில்லை. என் கழுத்தில் நீங்கள் தாலியைக் கட்டினால் உங்கள் தங்கையின் வாழ்க்கை பிழைக்கும். இல்லையானால், நடப்பவற்றுக்கு நான் பொறுப்பில்லை. அவள் வாழ்க்கை மட்டுமல்ல, எல்லாமே!” என்று அந்த ‘எல்லாமே’யை அழுத்திச் சொன்னவள், “எனக்கு இன்று இரவே உங்கள் முடிவு தெரியவேண்டும். இல்லையானால், நாளை காலை நான் என்ன செய்ய நினைக்கிறேனோ அத்தனையையும் செய்து முடிப்பேன்!” என்றவள், முதன்முதலாக அவனோடு கதைக்கையில் தானாகக் கைபேசியை அணைத்தாள்.
துண்டிக்கப்பட்ட கைபேசியையே கொலைவெறியுடன் வெறித்துக் கொண்டிருந்தான் ரஞ்சன். எவ்வளவு திமிர் அவளுக்கு என்று எண்ணுகையிலேயே அவன் கைபேசி மீண்டும் ஒலியெழுப்பியது.
திரும்பவும் எதற்கு அழைக்கிறாள் என்றபடி பார்க்க, சுகந்தனின் இலக்கங்களைக் காட்டியது அது.
“என்னடா?” சித்ராவின் மேல் இருந்த கோபத்தில் எரிந்து விழுந்தான் ரஞ்சன்.
சிலநொடிகள் அமைதியில் கழிய, “கொஞ்சம் கடைக்கு வந்துவிட்டுப் போ.” என்றான் சுகந்தன்.
“ஏன், எதற்கு?”
“நீ முதலில் கடைக்கு வா..”
“ஏன், கடைக்கு வந்தால் தான் சொல்வாயா?இப்போதே சொல்லு..” என்று எரிந்து விழுந்தவனின் பேச்சைக் கேட்காமல் அழைப்பைத் துண்டித்தான் சுகந்தன்.
வரவர எல்லோருக்கும் திமிர் கூடிவிட்டது என்று பல்லைக் கடித்தவன் கடைக்குச் சென்றான்.
உள்ளே நுழைந்தவனைக் கண்டதும், “நாங்கள் பழையபடி வொர்க் ஷாப்புக்கே வேலைக்குப் போகப்போகிறோம் ரஞ்சன்.” என்றனர் சுகந்தனும் ஜீவனும் ஒருங்கே.
ஆத்திரம் தலைக்கேற, “டேய்! இருக்கிற விசருக்கு நீங்களும் எரிச்சலைக் கிளப்பாதீங்கடா. உங்களுக்கு என்ன பிரச்சினை? இங்கே என்ன குறை? ஏன் திரும்ப அந்தக் குப்பைக்குள்ளேயே போகிறோம் என்கிறீர்கள்?” என்றான் இவன்.
“அந்த வேலை குப்பை என்றாலும் எங்கள் மனம் வெள்ளையாகத்தான் இருந்தது.” சட்டென்று சொன்னான் ஜீவன்.
அவனைக் கூர்ந்தன ரஞ்சனின் கண்கள். “என்னடா பேச்சு ஒருமாதிரி இருக்கிறது. ஏன், இங்கே உங்கள் மனதுக்கு என்ன நடந்தது?”
“உன் கடையில் நிற்க மனம் குத்துதுடா. நீ செய்கிற பாவத்தில் எங்களுக்கும் பங்கு இருக்கிறதோ என்று தோன்றுகிறது. அன்றைக்குச் சித்ரா அழுது வீங்கிய முகத்தோடு வந்ததைப் பார்க்க, அவளின் நிலைக்கு நாங்களும் ஒரு காரணம் என்று மனம் சொல்கிறது. எங்களுக்கும் அக்கா தங்கை இருக்கிறார்கள் ரஞ்சன். பெண் பாவம் பொல்லாததுடா.. அவளுக்குத் துரோகம் செய்தால் நிச்சயம் நீ அனுபவிப்பாய்..” என்றான் சாபம் கொடுப்பது போன்று.
“நண்பனுக்கே சாபம் கொடுக்கும் மிக நல்ல நண்பன்டா நீ!” கசந்த குரலில் சொன்னான்.
“அதே நண்பன் நியாயப்படி நடந்தால் உயிரையும் கொடுக்கத் தயங்காத நண்பன் தான்டா நான்!” என்றான் ஜீவன்.
“நீ செய்வது எல்லாம் நியாயம் அற்ற செயல்கள். செய்யாதே என்று நாங்கள் சொன்னாலும் கேட்கமாட்டாய். அந்த நிலையை நீ தாண்டிவிட்டாய். நீ கஷ்டப் பட்டபோது உன்னைக் கைவிட்ட சொந்தம் தான் இப்போது உனக்குப் பெரிதாகப் போய்விட்டது. அதனால்தான் நாங்கள் இங்கிருந்து விலகிக் கொள்கிறோம். உன் விருப்பப் படியே நீ இரு.” என்றான் சுகந்தன் தெளிவான குரலில்.
அதைக் கேட்டவனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. “அவள் இங்கேயும் வந்து நடித்தாளா? அவள் பேச்சை நம்பி, அவளுக்காக என்னையே தூக்கி எறிகிறீர்கள் இல்லையா?” என்றவனைக் கண்டிப்புடன் பார்த்தனர் நண்பர்கள்.
“உன் பேச்சிலிருந்தே புரிகிறது அவளை நீ புரிந்து வைத்திருக்கும் லட்சணம். இதுவரை உன்னைப் பற்றிக் குறையாக எங்களிடம் சித்ரா எதுவுமே சொன்னதில்லை. அப்படியே அவள் எது சொன்னாலும் நம்பும் அளவிற்கு நாங்களும் முட்டாள்கள் இல்லை. நாங்களும் நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். உன்னைப்போல எங்களையும் மனச்சாட்சி இல்லாதவர்கள் என்று நினைத்துவிட்டாய் போல.” என்றான் ஜீவன் ஆத்திரத்தோடு.
அவனுக்கு, அன்று கலங்கிய விழிகளும் கசங்கிய முகமுமாக அழுகையை அடக்கியபடி அவனைத் திரும்பிப் பார்த்துச் சிரித்த சித்ரா கண்ணுக்குள்ளேயே நின்றாள். அந்த அருமையான பெண்ணின் வாழ்க்கையையும் கெடுத்து, தன் வாழ்க்கையையும் கெடுக்கிறான் ரஞ்சன் என்கிற கோபம் இருந்தது.
“நேற்று வந்த அவளுக்காக என்னையே இப்படித் தூக்கி எறிய எப்படிடா உங்களால் முடிந்தது?” என்று வேதனையோடு கேட்டவனை நண்பர்கள் இருவருமே முறைத்தனர்.
“அவள் யாரோ ஒருத்தியில்லை. எங்கள் தங்கை என்று முதலே சொல்லிவிட்டோம். அதோடு உன்னை உயிராகக் காதலிப்பவள். எங்கே எங்களை நேராகப் பார்த்துச் சொல்லு, அவள் உன்னைக் காதலிக்கவில்லை என்று.” என்று ஜீவன் கேட்டபோது, ரஞ்சனால் பதில் சொல்லவே முடியவில்லை.
“நீ அவளை விரும்பவில்லை? உன் மனதில் அவள் இல்லை?” என்று ரஞ்சனின் விழிகளைக் கூர்ந்தபடி சுகந்தன் கேட்டபோது பார்வையைத் திருப்பிக் கொண்டான் ரஞ்சன்.
ஆழ்மனதில் புதைத்துவிட்டதாக அவன் நினைத்தவைகளை அவர்கள் தோண்டி எடுப்பது போல் தோன்றியது.
அமைதியாக நின்றவனைப் பார்த்ததும் ஜீவனுக்குப் பத்திக்கொண்டு வந்தது. “பாருடா சுகந்தா, எப்படிக் கல் மாதிரி நிற்கிறான் என்று. இவனெல்லாம் ஒரு மனிதன்? அதுசரி! அவளை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே காதலிக்கிற மாதிரி நடித்தவன் தானே நீ..” என்ற ஜீவனைச் சட்டென்று திரும்பிப் பார்த்த ரஞ்சனின் விழிகளில் பெரும் வலியொன்று வந்து போனது.
“போதும்டா. நிற்பாட்டு!” என்றவன் கடையை விட்டு வெளியேறப் போக, “நாங்கள் நாளையில் இருந்து கடைக்கு வரமாட்டோம்!” என்றான் சுகந்தன் குரலில் உறுதியுடன்.
அவர்கள் இருவரையும் திரும்பிப் பார்த்து பலமாக முறைத்துவிட்டு வெளியேறினான் ரஞ்சன். எங்கே செல்வது? இந்தப் பரந்த உலகில் ஆறுதலாய் மாடி சாய யாருமே இல்லையே!
அந்தளவுக்கு இந்த உலகமே அவனுக்கு அந்நியமாகிப் போனது போன்ற ஒரு மாயை அவனை வாட்டியது.
இரண்டு கடைகளுக்குமே போகப் பிடிக்கவில்லை. ஒன்றில் சுகந்தனும் ஜீவனும் அவனை வறுத்து எடுத்தனர் என்றால் அடுத்த கடைக்குள் நுழைந்தாலே அவன் மனக்கண்ணுக்குள் சித்ரா வந்து நின்றாள்.
வீட்டுக்கும் போகப் பிடிக்கவில்லை. அங்கே தனக்காக யாருமே இல்லை என்று மனம் விரக்தி கொண்டது.
தன்னுடைய போராட்டம் எல்லாம் யாருக்காக அல்லது எதற்காக என்கிற கேள்வி எழுந்தது.
ஒரு மரத்தடியின் கீழ் வண்டியை நிறுத்தியவனுக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. அந்த மதிய நேரத்து வானத்தை அண்ணாந்து பார்த்தவனின் விழிகள், அங்கே ஒளிந்துகொண்டு அவனை வேடிக்கை பார்க்கும் தந்தையை தேடின.
‘நீங்கள் உயிருடன் இருந்திருக்க எனக்கு இந்தப் போராட்டம் வந்திருக்காதே அப்பா. இப்போது பாருங்கள், எல்லோருக்கும் நான் கெட்டவனாகிப் போனேன். என் நண்பர்கள் என்னை ஏமாற்றுக்காரன் என்கிறார்கள், கண்ணன் அண்ணா நன்றி கெட்டவன் என்கிறார், நித்தி அவளைத் திருத்தும் தகுதி இல்லாதவன் என்கிறாள், அம்மா பொறுப்பில்லாதவன் என்கிறார். யாழி நயவஞ்சகன் என்கிறாள். உங்களுக்கும் என்னைப் பிடிக்கவில்லையாப்பா?’ என்று மானசீகமாகத் தந்தையோடு உறவாடியவனின் விழியோரங்களில் கண்ணீர் பூப்பூத்தது.
அவரின் இழப்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு பலமடங்காக அவனைத் தாக்கியது. அவர் இருந்திருக்க அவனும் படித்திருப்பான், நல்லதொரு வேலைக்குச் சென்றிருப்பான், காதலித்தவளையே கைப்பிடித்தும் இருந்திருப்பான். அவர் இல்லாமல் போனதால் தானே, அவரின் ஆசைகளை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்கிற நிலை வந்தது. தந்தை இருந்திருக்க தன் மனதை அவரிடம் சொல்லி அவரை அவன் சமாதானப் படுத்தியிருப்பானே.
தன் குடும்பத்தைத் தாங்கவேண்டிய கட்டாயமும், நல்ல நிலைக்கு வந்தே ஆகவேண்டும் என்கிற உத்வேகமும், அதற்காக எதையெதையோ செய்யவேண்டிய நிலையும் வந்ததற்குக் காரணம் அவர் இல்லாததுதானே!
ஆனால், அவன் அப்படி முன்னேறியதிலும் அர்த்தம் இல்லாமல் போய்விட்டதே!
அம்மாவையும் தங்கையையும் சொந்தங்கள் மதிக்கும் இடத்தில் நிறுத்தவேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராது கஷ்டப்பட்டவன் இன்று அவர்கள் முன்னாடியே குற்றவாளியாக நிற்கும் நிலை வந்துவிட்டதே!
எல்லோருக்கும் அவன் குற்றவாளி என்றால், யாருக்காகத்தான் இதையெல்லாம் செய்தான்? அவனுக்காகவா?
இனி என்ன செய்வது? யாருக்காக எதைச் செய்வது?
அவன் முடிவு அவன் கையில் இல்லை போல் தெரிந்தது. ஆனாலும், எதற்காகவும் யாருக்காகவும் இன்றைய அவன் நிலையை இழக்கவோ, பழைய நிலைக்குத் திரும்பவோ அவன் தயாராக இல்லை.
அந்த எண்ணம் வலுவாக அவனில் வேரூன்றியபோதும், சித்ராவை மறுத்தால் அவள் எதுவும் செய்வாள் என்பதும், அன்று கடையில் அவள் சும்மா சவால் விடவில்லை என்பதும் இப்போது மிக நன்றாகவே புரிந்தது.
மீண்டும் வானத்தை நிமிர்ந்து பார்த்து, ‘சாரிப்பா.. நீங்கள் ஆசைப்பட்ட எதையுமே நான் நிறைவேற்றவில்லை. வைத்தியராக முடியில்லை. நீங்கள் வாங்கித் தந்த வண்டியைக் கூட காப்பாற்ற முடியவில்லை. சாதனாவைக் கட்டி நீங்கள் உயிராக நேசித்த உங்கள் உறவுகளை ஒன்றாகச் சேர்ப்போம் என்று நினைத்தேன். அதுகூட முடியவில்லை. உங்கள் பிள்ளைக்கு அந்தளவுக்குத் திறமை இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள். நித்தியின் திருமணமாவது உங்கள் விருப்பப்படி நடக்கவேண்டும் அப்பா.’ என்று நெஞ்சடைக்க அவரோடு பேசியவன் மனதளவில் மிக நன்றாகவே நொந்திருந்தான்.
அன்று முழுவதும் உணவின்றி, மனதில் நிம்மதியின்றி, உறவுகள் அனைத்தும் இருந்தும் அனாதையை போன்று அந்த வீதியோரத்து மரத்தடியிலேயே நின்றவன், ஒரு முடிவுக்கு வந்து சித்ராவுக்கு அழைத்தான்.
அவள் அந்தப் பக்கம் எடுத்ததும், “திருமணத்துக்கு சம்மதிக்கிறேன்..” என்றான் ஓய்ந்து, தோற்றுப்போன குரலில்.
அந்தக் குரல் சித்ராவின் உயிரின் ஆழம்வரை நுழைந்து அவளைப் பாதித்தது. “ரஞ்சன்?” என்றாள், அடுத்து என்ன கேட்பது என்று தெரியாது.
அவனை இந்த நிலைக்குக் கொண்டுவந்தவளே அவள்தான் என்கிற ஆத்திரம் மேலோங்க, “ஆனால் ஒன்று! நீ வென்றுவிட்டதாக மட்டும் நினைக்காதே. இவனை ஏன்டா கட்டினோம் என்று நினைப்பாய். நினைக்க வைப்பேன்! எவ்வளவு பிடிவாதம் உனக்கு. பார்க்கலாம்! முதலில் மனைவியாக வீட்டுக்கு வா. பிறகு வாழ்நாள் பூராகக் கஷ்டப்படுவாய்!” என்று உக்கிரமாக உறுமியவன், கைபேசியை அணைத்தான்.
அதைக்கேட்ட சித்ராவின் விழியோரங்கள் கண்ணீரில் நனைந்தன. அவனின் சம்மதம் அவளுக்கு சற்றேனும் மகிழ்ச்சியைக் கொடுக்கவே இல்லை.
அதேபோல வேறு வழியின்றி அவன் சம்மதித்ததும், அதைச் சொல்கையில் அவன் குரலில் தொனித்த வலியையும் உணர்ந்தவளுக்கும் வலித்தது.
ஆனால், எதற்காகவும் எதையும் மாற்ற முடியாதே!
ஒரு பெருமூச்சினை வெளியேற்றியபடி தந்தையிடம் விசயத்தைச் சொல்ல அவள் எழுந்தபோது, மீண்டும் அலறியது அவள் கைபேசி.
மீண்டும் அவன்தான்.
புருவங்கள் சுருங்கக் காதுக்குக் கொடுத்தாள். “உன் அம்மா அப்பாவிடம் சொல்லிவை. சீர் செய்கிறேன் அது செய்கிறேன் இது செய்கிறேன் என்கிற பெயரில் என் வீட்டுக்கு ஒரு உப்புக்கட்டி கூட வரக் கூடாது என்று!” என்று மீண்டும் உறுமிவிட்டு வைத்தான் அவன்.