சித்ரா ரஞ்சனின் கைபேசியில் இலக்கங்களைத் தட்டிவிட்டு அதைக் காதுக்குக் கொடுக்க, “அதுதான் ஐபோன் நான் வாங்கித் தருகிறேன் என்று சொல்லிவிட்டேனே. பிறகு எதற்கு உன் அப்பாவுக்கு அழைக்கிறாய்?” என்று கொதிப்போடு கேட்டான் ரஞ்சன்.
“அப்பாவுக்குத்தான் என்று நான் சொன்னேனா?” என்றாள், காதுக்குக் கொடுத்த கைபேசியை எடுக்காமலேயே.
“பிறகு யாருக்கு?”
“ஹோட்டலுக்கு.”
“ஏன் மகாராணி இங்கே சாப்பிட மாட்டாயோ? நீ பணக்காரி இல்லையா.. ஹோட்டலில் கண்டதையும் சாப்பிட்டுத்தான் பழக்கம் போல.” என்றான் குத்தலாக.
“நான் சொன்னேனா இங்கே சாப்பிட மாட்டேன் என்று? யாராவது தந்தால் தானே சாப்பிடுவதற்கு? ஏற்கனவே அழையா விருந்தாளியாக வந்திருக்கிறேன். இதில் உணவுக்கும் போய் நின்றால் கடித்துக் குதறிவிட மாட்டார்களா? அதென்ன எப்போது பார்த்தாலும் பணக்காரி, பணத்திமிர் என்கிறீர்கள்? அப்போ உங்களுக்கு இருக்கும் திமிருக்கு என்ன பெயர்? அல்லது நீங்கள் என்ன பிச்சையா எடுக்கிறீர்கள்? நீங்களும் பணக்காரர்தானே, அதுவும் இப்போது!” என்று இருந்த ஆத்திரத்திலும் பசியிலும் பொரிந்து தள்ளினாள் சித்ரா.
கைபேசியில் அந்தப்பக்கம் யாரும் எடுக்காதது வேறு எரிச்சலைக் கொடுத்தது.
“ப்ச்! இது வேறு!”
அவனுக்கோ ஒருமாதிரி ஆகிப்போனது. அன்று காலையில் திருமணத்திற்காக கோவிலுக்கு வந்ததில் இருந்தே அவள் அவனுடன்தான் இருக்கிறாள். அங்கும் அவள் ஏதும் உண்ட நினைவு இல்லை. இங்கே வீட்டுக்கு வந்தபிறகும் ஒன்றும் உண்ணவில்லை என்றால்.. மாலை ஐந்து மணியைக் கடந்துகொண்டிருந்தது நேரம். கிட்டத்தட்ட முழுநாளும் பட்டினியாகக் கிடந்திருக்கிறாள்.
மனம் சுட, அவளிடமிருந்து கைபேசியைப் பிடுங்கிப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டவன், கீழே இறங்கிச் சென்றான்.
அவளுக்காக உணவையும் நீரையும் எடுத்துக்கொண்டு அவன் திரும்பி வந்தபோது சித்ரா அந்த அறையில் இல்லை. உணவுத்தட்டை மேசையில் வைத்துவிட்டு, அதற்கிடையில் இவள் எங்கே போனாள் என்று அவன் பார்வையைச் சுழற்ற குளியல் அறையில் இருந்து வெளியே வந்த சித்ரா, அவன் வாங்கி வந்திருந்த இளம்பச்சை நிற நைட்டியில் இருந்தாள்.
அவனது கட்டுப்பாட்டையும் மீறி அவள் மீது படிந்த பார்வையைச் சட்டெனத் திருப்பிக்கொண்டு, “உனக்குப் பசித்தால் போட்டுச் சாப்பிட வேண்டியதுதானே. அதென்ன யாரும் தரவேண்டும் என்று காத்திருப்பது..” என்று சிடுசிடுத்தான்.
இவன் இப்போது எதற்குச் சிடுசிடுக்கிறான் என்று புரியாததில் ஒருநொடி திகைத்து விழித்தாள் சித்ரா.
அதன் பிறகே மேசையில் இருந்த உணவைக் கண்டவள், இப்படிக் கடுப்போடு தரும் உன் சாப்பாடும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லத் துடித்த நாவை அடக்கிக் கொண்டு உணவுத் தட்டை எடுத்துக் கொண்டாள்.
இனி இதுதான் அவள் வீடு. அப்படியிருக்க எத்தனை நாட்களுக்கு ஹோட்டலில் இருந்து வருவித்து உண்ண முடியும்? அல்லது எத்தனை நாட்களுக்குத்தான் பட்டினி கிடக்க முடியும். ஆக, அவன் சொல்வது போன்று அவள் தேவைகளை அவள் இங்கேயே பூர்த்தி செய்துகொள்வதுதான் சரி என்று எண்ணியவள், கையைக் கழுவிக்கொண்டு உணவை உண்ணத் தொடங்கினாள்.
அதுவரை அவளைப் பாராதது போன்று பார்த்தபடி நின்ற ரஞ்சனும் அதன்பிறகே குளியலறைக்குள் நுழைந்தான். தலைக்குக் குளித்து வெளியே வந்தவன், சாரத்தோடும் மேலே வெள்ளை நிற உள் பனியனோடும் நின்றதை எதேர்ச்சையாக நிமிர்ந்து பார்த்தவள், அவனை அப்படிப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்துகொண்டாள்.
அவன் குழந்தைக்குத் தாயானபோதும் இப்படியான ஒரு சூழ்நிலையில் அவனைச் சந்தித்து இராதவளுக்கு அந்த அறைக்குள் இருப்பதே மூச்சு முட்டுவது போன்றிருந்தது. சட்டென எழுந்தவள் உணவுத்தட்டை சமையலறைக்குக் கொண்டு செல்பவள் போன்று, வேகமாகப் படியிறங்கிக் கீழே சென்றாள்.
அந்த வீட்டில் எந்த அறை எந்தப் பக்கம் இருக்கிறது என்று தெரியாமல் முழித்து, பின்னர் ஒருவழியாக சமையலறையைக் கண்டு பிடித்து அங்கே செல்ல, அங்கு நின்ற அவள் மாமியாரோ சித்ராவைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக்கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
மனம் சுட்டபோதும், இதெற்கெல்லாம் பயந்தால் ஆகாது என்று நினைத்தவள், தட்டையும் கையையும் கழுவிக்கொண்டு அந்தச் சமையலறையை மிக நன்றாகப் பார்த்துவிட்டே வெளியேறினாள்.
திரும்பவும் தங்கள் அறைக்குச் செல்லாது, அந்த வீட்டின் வெளியே வந்தவள், வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தாள்.
அந்த வீட்டைப் போலவே, மா, பலா, வாழை, தென்னை, முருங்கை, தேசிமரம் என்று சோலையாக, அதோடு பயனுள்ளதாகக் காட்சியளித்த அந்தத் தோட்டமும் மிகவும் பிடித்தது அவளுக்கு.
அதைப் பராமரிக்கும் மாமியார் மேலும் சிறு மதிப்புத் தோன்றியது. தன்னைப் பெற்றவர்களைப் பற்றி அவர் பேசியது நினைவில் வந்து நெஞ்சை அடைத்தபோதும், அவரின் இடத்தில் இருந்து யோசிக்கையில் ஆத்திரத்தில் வந்த வார்த்தைகள் என்று அவற்றை ஒதுக்கவேண்டுமோ என்று நினைத்தாள்.
ஆனாலும், அவற்றை அவ்வளவு இலகுவாக அவளால் மறக்கமுடியும் போன்றும் தோன்றவில்லை.
அங்கிருந்த மாமரத்தில் சாய்ந்தபடி, அந்த மாலைப் பொழுதில் அவளைத் தீண்டிச் சென்ற காற்று முகத்தில் மோத, அவள் வாழவந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தவளுக்கு, அங்கிருக்கும் மூவரும் மூன்று திசைகள் என்று தோன்றியது. நான்காவது திசையாக அவளும் வந்து சேர்ந்திருக்கிறாள்.
அடுத்ததாக அவள் என்ன செய்யவேண்டும்?
எப்போதும் ஓரிடத்தில் தங்கப் பிரியப்படாத சித்ரா, தான் செய்ய வேண்டியவைகளை மனதில் பட்டியலிட்டாள்.
அந்தப் பட்டியலில் முதலில் நின்றது அவளின் அன்புத் தந்தை. அவரை இனியும் அவள் கஷ்டப்படுத்தக் கூடாது என்று முடிவு செய்தவள், இருட்டத் தொடங்கவும் அவர்களது அறைக்குச் சென்றாள்.
அங்கே, அவள் முதலில் பார்த்த அதே கோலத்தில் கட்டிலில் சாய்ந்து இலகுவாக அமர்ந்திருந்தவன், சுவரில் தொங்கிய தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தான்.
இவள் நுழைந்ததும் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் தன் பார்வையைத் தொலைக்காட்சியின் பக்கம் திருப்பினான்.
சித்ராவுக்கோ அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. தொலைக்காட்சியிலும் மனம் செல்ல மறுத்தது. இதுவே அவளது வீடாக இருந்திருக்க எதையாவது உருட்டிப் பிரட்டியிருப்பாள்.
அங்கிருந்த சிறிய செல்பில் புத்தகங்களைக் கண்டதும் அதன் அருகே சென்று ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து அவளும் கட்டிலின் மறுபுறத்தில் அமர்ந்துகொண்டாள்.
அவளின் செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்தபோதும் எதுவும் சொல்லவில்லை ரஞ்சன்.
சித்ரா தன்னை மறந்து புத்தகத்தில் மூழ்கிவிட, “நான் சாப்பிடப் போகிறேன். நீயும் வா!” என்று அதிகாரமாகக் கேட்ட ரஞ்சனின் குரலிலேயே நிமிர்ந்தாள் அவள்.
இப்போதுதானே சாப்பிட்டோம் என்று எண்ணியபடி அங்கே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தவளுக்கு அது இரவு எட்டு மணியாகிவிட்டதை உணர்த்தியது. ஆனாலும் பசி இல்லாததை உணர்ந்து, “எனக்குப் பசியில்லை.” என்றாள் சுருக்கமாக.
“என்ன பசியில்லை? நீயென்ன மகாராணியா? உனக்குப் பசிக்கிற போதெல்லாம் நான் சேவகம் செய்ய. மரியாதையாக எழுந்து வா!” என்று சிடுசிடுத்தான் அவன்.
“இதுநாள்வரை என் வீட்டில் நான் மகாராணியாகத்தான் இருந்தேன்” என்று அழுத்தமான குரலில் சொன்னவள்,
“ஏதோ காலம் காலமாய் எனக்குச் சேவகம் செய்தவர் மாதிரிப் பேசுகிறீர்களே. எனக்குப் பசித்தால் நான் சாப்பிட்டுக் கொள்வேன். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்!” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, இப்போது மெய்யாக அன்றிப் பொய்யாகப் புத்தகத்தில் மூழ்கிவிட்டது போன்று காட்டிக்கொண்டாள்.
அவளின் அலட்சியத்தில், “திமிர் பிடித்தவள்!” என்று பல்லைக் கடித்துவிட்டு எழுந்து சென்றான் ரஞ்சன்.
அவன் சென்ற திசையையே பார்த்த சித்ராவுக்கு அவன் புரியாத புதிராகத் தெரிந்தான்.
அவர்கள் மூவருமாக ஒன்றாகச் சாப்பிடுகையில் அவள் எதற்கு இடையூறாக என்று நினைத்தே மறுத்தாள்.
அதோடு பசித்தால் தானே உண்ண முடியும்!
உன்னைக் கஷ்டப் படுத்துவேன் என்று சொன்னவனின் இந்த அக்கறையான செயல்களுக்கான அர்த்தத்தை அவளால் புரிந்துகொள்ளவே இயலவில்லை.
அதன் காரணம் காதலாலோ என்று நினைக்கையிலேயே அவள் இதழ்கள் ஏளனமாக வளைந்தன.
அவனாவது அவளைக் காதலிப்பதாவது?
அவனுக்கு எப்போதும் அவன் குடும்பமும் சொந்தமும் தானே முக்கியம் என்று எண்ணியவள் ஏதோ தோன்ற எழுந்து சென்று கீழே பார்த்தாள். பார்த்தவளுக்குத் திகைப்பா, அதிர்ச்சியா, வேதனையா என்று வரையறுக்க முடியாத உணர்வு ஒன்று வந்து தாக்கியது. அதற்குக் காரணம், அங்கே கீழே பெரிதாக விரிந்து கிடந்த ஹாலில் ஒரு பக்கமாகப் போடப்பட்டிருந்த சாப்பாட்டு மேசையில் தனியாக அமர்ந்து உண்டுகொண்டிருந்தான் ரஞ்சன்.
நெஞ்சுக்குள் என்னவோ செய்தது அவளுக்கு. சொல்லிக்கொள்ளாமலேயே அவள் வீட்டு நினைவும், அவர்களது இரவுச் சாப்பாட்டு நேரமும் மனக்கண்ணில் வந்தது.
எவ்வளவு ஆனந்தமான பொழுது அது. அங்கும், அதுநாள்வரை மூவர்தான் இருந்தார்கள். தாயின் அக்கறையோடு கூடிய திட்டலும், தந்தையின் கேலியும் அவளது கலாட்டாவும் என்று சந்தோசமாக அல்லவா கழியும் நேரம்.
இங்கானால் இப்படி மயான அமைதி நிலவுகிறதே! அதுவும் அந்த வீட்டுக்கு மாடாக உழைத்துப் போடும் அவனுக்கு அருகில் நின்று பார்த்துப் பார்த்துப் பரிமாற ஒருவர் கூடவா இல்லை?
அவன் மேல் கோபம் இருந்தாலும் அதை உணவிலா காட்டுவது? இதென்ன கொடுமை?
அவன் செய்தது பிழையாக இருந்தாலும் ஒரு தாயாக தன் மாமியாரால் எப்படி இப்படி நடக்க முடிகிறது?
சித்ராவும் தான் பிழை செய்தாள். அதுவும் சாதாரணப் பிழை அல்ல!
ஒருவனைக் காதலித்து அவனிடம் ஏமாந்து வயிற்றில் குழந்தையோடு வந்தபோது அந்த அடி அடித்த அம்மா, இரவு உணவை அவள் மறுக்க மறுக்க ஊட்டிவிட்டாரே!
அந்தத் தாய்க்கும் இந்தத் தாய்க்கும் எவ்வளவு வித்தியாசம்..
சிந்தனையில் உறைந்து நின்றவளின் விழிகளில், ரஞ்சன் தன் தட்டில் தானே உணவை இட்டுக் கொள்வது தெரியவும், அதற்கு மேலும் அவளால் அங்கு நிற்க முடியவில்லை.
வேகமாகக் கீழே இறங்கிச் சென்றவள் அவன் தட்டில் குறைந்திருப்பதைப் பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள்.
ஒரு நொடி அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு தட்டுக்கு முன்னால் கையை நீட்டி மறித்தான் ரஞ்சன். “நீ போ. நானே போட்டுக்கொள்வேன். இது எனக்குப் பழக்கம் தான்..”
அதைக் கேட்டவளுக்குப் பற்றிக்கொண்டுதான் வந்தது. இப்படித் தனியாகச் சாப்பிடுவதற்கு அவன் பழகும்வரை அந்த வீட்டில் இருக்கும் இரண்டு பெண்களும் எதை வெட்டிக் கிழிக்கிறார்கள் என்று நினைத்தவுடன் தோன்றிய ஆத்திரத்தை அவனிடமே காட்டினாள்.
“எனக்கு என் வேலையைப் பார்க்கத் தெரியும். நீங்கள் முதலில் வாயை மூடிக்கொண்டு சாப்பிடுங்கள்!”
“என்ன? என் மேல் அக்கறை உள்ளவள் போன்று நடிக்கிறாயா?”
“ஆமாமாம்! நீங்கள் பெரியா மகாராஜா பாருங்கள். உங்களிடம் நான் நடிக்க!” நொடித்தாள் சித்ரா.