“பின்னே பாசத்தில் வந்து சாப்பாடு போடுகிறாயா?”
“என்னது பாசம் காட்டுவதா? உங்கள் மீதா? ஏன், ஒருமுறை அதைக்காட்டி நான் பட்டது போதாதா? ஏதோ தனியாகச் சாப்பிடுகிறீர்களே என்று பரிதாபத்தில் வந்து போட்டேன்..” என்றவளின் பேச்சைக் கேட்டதும் அவன் முகம் சுண்டிப் போனது.
“உன் பரிதாபம் எனக்குத் தேவையில்லை. நீ போகலாம்.” என்றான் இறுகிய குரலில்.
சித்ராவுக்கு சுர் என்று கோபம் ஏறியது. “என் பரிதாபம் தேவையில்லை என்றால், வேறு யாரின் பரிதாபம் தேவைப்படுகிறது? உங்கள் அத்தை மகள் ரத்தினத்தின் கரிசனையா?”
சித்ராவை நிமிர்ந்து பார்த்து முறைத்தான் ரஞ்சன். “அடுத்த வீட்டுப் பெண்களைப் பற்றித் தேவையில்லாமல் கதைக்காதே!” என்றான் இறுக்கமான குரலில்.
அவளைப் பற்றி ஒன்று சொன்னால் அவனுக்கு வலிக்கிறதோ என்கிற எரிச்சலில், “பார்ரா! அங்கே கொளுத்திப் போட்டால் இங்கே பற்றி எரிகிறது!” என்று எரிச்சலோடு சொன்னவள், கையிலிருந்த கரண்டியைப் பட்டென்று சட்டியில் போட்டுவிட்டு அதற்கு மேலும் அங்கே நிற்காது வந்து பொத்தென்று படுத்துக்கொண்டாள்.
உணவை முடித்துவிட்டு வந்த ரஞ்சனும், மறு ஓரத்தில் படுத்துக்கொண்டான்.
பெரிய கட்டிலாக இல்லாதபோதும், இருவர் படுக்கக் கூடிய அளவிலேயே அது இருந்தது.
அவர்கள் இருவருக்கும் நடுவில் சிறிய இடைவெளியே இருந்தபோதும் அதைத் தாண்ட இருவரும் நினைக்கவும் இல்லை. அதை எதிர்பார்க்கவும் இல்லை.
இருவருமே அழுத்தமான பிடிவாதக் குணமுள்ளவர்கள் என்பதாலும், அடுத்தவரின் மேல் மனம் முழுவதும் வெறுப்பைச் சுமந்துகொண்டிருந்ததாலும் எந்த விதச் சலனுமும் இன்றி அருகருகே படுத்திருந்தனர்.
சிறிது நேரத்தில், உறங்கிவிட்டதற்கு அறிகுறியாகக் கேட்ட ரஞ்சனின் சீரான சுவாசத்தில், மாலை உறங்கியதில் உறக்கமின்றித் தவித்த சித்ரா அவன் புறமாகத் திரும்பிப் படுத்தாள்.
நெற்றியில் ஒரு கையை வைத்தபடி உறங்குபவனின் முகத்தையே பார்த்தபடி முதன்முதலில் அவனோடு அவள் சண்டை பிடித்த தினத்தில் இருந்து அன்றுவரை நடந்த ஒவ்வொன்றையும் வலிக்க வலிக்க அசைப்போட்டபடி இருந்தவளின் விழிகள் எப்போது மூடிக்கொண்டன என்பதை அவள் அறியாள்.
காலையில் ரஞ்சனின் முகத்திலேயே கண்விழித்தாள் சித்ரா.
இவன் எப்படி என் அறையில் என்று ஒருநொடி அதிர்ந்தவளுக்கு, தானிருப்பது அவனறையில் என்பது மெல்லத்தான் நினைவில் வந்தது.
வெளியே செல்வதற்கு அவன் தயாராகிக் கொண்டிருப்பது தெரிய, சட்டென எழுந்து, “நானும் உங்களோடு வருகிறேன்..” என்றவள், அவனது பதிலை எதிர்பாராது குளியலறைக்குள் புகுந்தாள்.
காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தவளிடம், “எங்கே வரப்போகிறாய்?” என்று கடுமையான குரலில் கேட்டான் அவன்.
“அப்பாவின் கடைக்குப் போகவேண்டும். என்னை அங்கே இறக்கி விட்டுவிட்டு நீங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள்.”
“நீ அங்கே போகத் தேவையில்லை. இன்று மட்டும் அல்ல என்றுமே!” என்றான் அவன் அப்போதும் கடுமையான குரலில்.
“என்னது??” சித்ரா நிச்சயமாக அதை எதிர்பார்க்கவில்லை.
அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான் ரஞ்சன்.
“இதற்கே இப்படி அதிர்ந்தாள் எப்படி? இனி உன் விருப்பத்துக்கு நீ எங்கும் செல்லகூடாது! உன் அப்பாவின் கடைகளுக்கோ அல்லது உங்கள் வீட்டுக்கோ போகவே கூடாது. என் மனைவியாக என் வீட்டிலேயே இருக்கிறாய்!” என்று அதிகாரமாகச் சொன்னவனை, திகைத்துப்போய்ப் பார்த்தாள் சித்ரா.
அவன் இப்படிச் சொல்வான் என்று எதிர் பார்த்திராதவளுக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை.
வாயடைத்து நின்றவளை அப்போதும் ஏளனமாகப் பார்த்து, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய்! அன்று, என் கையால் தாலி வாங்கிக் காட்டுகிறேன் என்று சூளுரைத்தாயே, தாலி கட்டியவனுக்கான உரிமைகள் என்னென்ன என்று தெரியுமா?” என்று கேட்டவன், நிதானமாக அவளை நெருங்கினான்.
அவள் மேனியை ஆட்காட்டி விரலால் மேலிருந்து கீழ்வரை சுட்டிக் காட்டியவன், “இந்த உடலும் நீயும் எனக்குச் சொந்தமானவர்கள். உன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதைத் தட்டிக் கேட்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அந்த உரிமையை எனக்குத் தந்தது எது தெரியுமா?” என்று கேட்டவன், அவளது நைட்டிக்குள் விழுந்து கிடந்த தாலியை வெளியே எடுத்துக் காட்டி, “இது!” என்றான், விழிகள் பளபளக்க.
அந்தத் தாலியை வெளியே எடுக்கையில் அவன் விரல்கள் அவளைத் தீண்டிச் சென்றதைக் கூட உணரமுடியாமல் அதிர்ந்து நின்றாள் சித்ரா.
“உன் அப்பாவும் அவரின் செல்வாக்கும் இருக்கிற திமிரில் தானே என்னை உன் இஷ்டப்படி ஆட்டிவைத்தாய். இனி எப்படி ஆடுகிறாய் என்று நானும் பார்க்கிறேன்.” என்றவன் முடிக்கையில் அவன் குரல் உறுமலாக வந்தது.
அதுவரை அதிர்ந்து நின்றவளை அவன் சொன்ன ‘அப்பா’ என்கிற சொல் மந்திரக்கோலாக மாறி அவளது வாயைத் திறக்க வைத்தது.
தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்று, “என்னை இந்த வீட்டுக்குள் அடைக்க உங்களால் முடியாது ரஞ்சன்!” என்றாள் தெளிவான குரலில்.
விழிகள் இடுங்க, “ஏனோ?” என்று நக்கலாகக் கேட்டான் ரஞ்சன்.
“என்ன ஏனோ? என்னை என்ன உங்கள் அடிமை என்று நினைத்தீர்களா? நீங்கள் சொல்வதற்கு எல்லாம் ஆமாம் போட. உங்களின் சரிபாதி நான். அதைச் சொல்வதுதான் இது!” என்றாள் இப்போது அவள் தன் கழுத்தில் தொங்கிய தாலியை அவனுக்குக் காட்டியபடி.
அவன் உதடுகளோ ஏளனமாக வளைந்தன.
“அப்படியா?” என்று அளவுக்கு அதிகமாகவே வியந்தவன், “என் சரிபாதிக்கான கடமைகள் என்னவென்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டவனின் கேள்வி அவளுக்குப் புரியாமல் இல்லை.
உடனே பதில் சொல்ல முடியாமல் முகம் கன்றிக் கருத்தது சித்ராவுக்கு.
மனைவி ஆகிவிட்டதனாலேயே கடமைக்காக அவனுடன் உறவுகொள்ள முடியுமா?
அன்று, கழுத்தில் தாலி இல்லாதபோதும் குறுகுறுப்பு எதுவும் இன்றி அவனோடு அவள் உறவாடியதற்குக் காரணம் நெஞ்சு முழுக்க நிறைந்திருந்த நேசம்.
இன்று அது பொய்த்துப் போனபிறகு எதை வைத்து அவனோடு குடும்பம் நடத்துவது?
பதில் சொல்ல முடியாமல் நின்றவளை ஏளனமாகப் பார்த்துவிட்டு, “ஆனால், நீ அதற்குத் தயாராக இருந்தாலும் நான் தயாராக இல்லை. உனக்கு ஒன்று தேவை என்றால் அதற்காக எந்தளவுக்கும் இறங்கக் கூடிய உன்னோடு குடும்பம் நடத்தும் எண்ணம் எனக்கில்லை.” என்றான் ரஞ்சன்.
அதைக் கேட்டவளுக்கு உள்ளம் தீயாய்த் தகித்தது.
என்னோடு குடும்பம் நடத்தாமல் வேறு யாரோடு நடத்துவானாம்?
அந்தக் கேள்வி தந்த சினத்தில், “நீங்கள் மட்டும் திறமா? உங்கள் தேவைக்காகத் தானே என்னை விரும்புவதாகச் சொன்னீர்கள். பொய்யாக என்னோடு பழகினீர்கள். இல்லை என்று சொல்ல முடியுமா உங்களால்?” என்று சீறினாள் சித்ரா.
இப்போது முகம் கருக்க பதில் சொல்ல முடியாமல் நின்றான் ரஞ்சன்.
அவனைப் பார்த்தவளின் நெஞ்சம் முழுவதும் வேதனையும் வெறுப்பும் மட்டுமே மண்டியது.
ஒருவரை ஒருவர் இப்படி மாறிமாறிக் குத்திக் காட்டுவதில் எதைக் காணப்போகிறோம் என்று விரக்தியாக எண்ணியவள், “நீங்கள் என்ன சொன்னாலும் நான் அப்பாவின் கடைக்குப் போகத்தான் போகிறேன். அவர் பாவம். இனியாவது கொஞ்சம் ஓய்வாக நிம்மதியாக இருக்கட்டும். என்னால் அவர் பட்ட கஷ்டங்கள் போதும்.” என்றவள், அவன் வாங்கி வந்த உடைகளில் ஒரு சுடிதாரை அணிவதற்காகக் கையில் எடுத்தாள்.
அப்போதும் அவள் பேச்சை ஏற்காமல், “என் பேச்சை மீறி நடந்தால் நிச்சயம் நீ வேதனை அனுபவிப்பாய்!” என்றவனின் குரலில் இருந்த கடூரத்தில் அவளுக்குள் குளிர் பிறந்தது.
அவனை நிமிர்ந்து பார்த்து, “இப்போது மட்டும் என்ன சுகபோகத்திலா வாழ்கிறேன். நான் செய்த பாவத்துக்கு எல்லாவற்றையும் சேர்த்து அனுபவிக்கிறேன்!” என்று விரக்தியோடும் வேதனையோடும் சொன்னவள், உடை மாற்றுவதற்காக மீண்டும் குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
தயாராகி வெளியே வந்தவள், அவனுடன் சேர்ந்தே படியிறங்கினாள். அவர்கள் இருவரையும் கண்டதும் இராசமணி முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்று தன் அறைக்குள் புகுந்து கதவைச் சத்தமாக அடித்துச் சாத்தினார்.
கணவன் மனைவி இருவரினதும் முகமும் கன்றிப் போனபோதும், எதுவுமே பேசாமல் வெளியேறி, வண்டியில் சென்றனர்.
ரஞ்சன் ‘ரிபோக்’ வாசலில் வண்டியை நிறுத்த, சித்ரா இறங்கியதும் எதுவும் சொல்லாது அவன் வண்டியைத் திருப்ப, “ரஞ்சன்..!” என்று அழைத்தாள் சித்ரா.
எரிச்சலோடு அவன் திரும்பிப் பார்க்க, “நித்தியின் திருமணம் பற்றி நவீனின் வீட்டில் எப்போது கதைக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டாள்.
“நீ செய்துவைத்த வேலைக்கு எந்த முகத்தை வைத்துக்கொண்டு போய்க் கதைக்கச் சொல்கிறாய்?” என்று எரிந்து விழுந்தான் அவன்.
“அதற்காக அப்படியே விட முடியுமா? என்றானாலும் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளத் தானே வேண்டும்.” என்றவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அல்லது அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கப் போகிறீர்களா?” என்று வேண்டும் என்றே கேட்டாள்.
ரஞ்சனோ, அவளைப் பார்த்து முறைத்தான் ரஞ்சன்.
“இன்னும் அவள் வாழ்க்கையை எதற்குக் கெடுக்க நினைக்கிறாய்?” சீறினான் அவன்.
இந்தக் குத்தல் பேச்சில் இருந்து அவளுக்கு என்றுதான் விடுதலை?
நினைக்கவே நெஞ்சுக்குள் வலித்தது.
அதை அவனிடம் காட்டிக்கொள்ளாமல், “வேறு மாப்பிள்ளை பார்க்கவில்லை என்றால் பிறகு என்ன? எதற்காக நாட்களைக் கடத்துகிறீர்கள். உங்கள் அத்தை வீட்டில் போய்க் கதையுங்கள்.” என்றாள் சித்ரா.
“எனக்கு என் வேலையைப் பார்க்கத் தெரியும். நீ உன் வேலையைப் பார்!” என்று முகத்தில் அடிப்பது போல் சொன்னவன், வேகமாக வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றான்.
உள்ளத்தில் வேதனை மண்ட செல்லும் அவனையே கலங்கிவிட்ட விழிகளால் வெறித்தாள் சித்ரா.