கணவனுடன் கதைக்க மகளுக்குத் தனிமையைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றனர் பெற்றவர்கள்.
“சொல்லுங்கள் அங்கிள்..”
“நான் சித்ரா..”
“ஓ..!”
“அது.. சாப்பிட்டீர்களா?”
அந்தப்பக்கம் சில வினாடிகள் அமைதியில் கழிய, “இல்லை..” என்றான் ரஞ்சன் உணர்வுகளைக் காட்டாத குரலில்.
“அதைக் கேட்கத்தான் எடுத்தேன். வைக்கிறேன்.” என்றுவிட்டுக் கைபேசியை அணைத்தாள்.
உடனேயே தாய் கொண்டுவந்த உணவுக்கூடையில் மீண்டும் தன் உணவையும் வைத்து எடுத்துக்கொண்டவள், அந்தக் கூடையோடு அறையை விட்டு வெளியே வந்தாள்.
அங்கே நின்ற தாய் தந்தையரிடம், “அப்பா, நான் அவரின் கடைக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருகிறேன். நீங்கள் முருகனை வீட்டுக்கு அனுப்பி என் ஸ்கூட்டியை இங்கே எடுப்பியுங்கள்.” என்றவள், அவர்களின் பதிலை எதிர்பாராது கடைக்கு வெளியே வந்து வீதியில் வந்த ஒரு ஆட்டோவை மறித்து ஏறி ரஞ்சனின் கடைக்குச் சென்றாள்.
செல்லும் மகளையே பார்த்திருந்த பெற்றவர்களின் மனம் நிறைந்து போனது!
அடுத்த வீதியிலேயே அவன் கடை இருந்தபோதும், ஆட்டோவில் சென்று அவன் கடைக்கு முன்னால் இறங்கியவள், ஆட்டோக்காரரிடம் கொஞ்சம் பொறுக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
அங்கே கடைக்குள் எதையோ செய்தபடி நின்ற ரஞ்சன், அவளைக் கண்டதும் புருவங்கள் சுருங்க கேள்வியாகப் பார்த்தபடி அவளை நோக்கி வரவும், “வெளியே ஆட்டோ நிற்கிறது. அதற்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வாருங்கள்!” என்று அவனுக்கு உத்தரவைப் பிறப்பித்தவள், உணவுக் கூடையுடன் அவனது தனியறைக்குச் சென்றாள்.
எதற்கு வந்தாள் என்கிற கேள்வி எழுந்தபோதும், அவள் சொன்னதைச் செய்தவன், சித்ராவைத் தேடித் தன்னுடைய அறைக்குச் சென்றான்.
அங்கே இரண்டு தட்டுக்களில் உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தாள் அவள்.
அதைப் பார்த்த ரஞ்சனின் நிலையை அவனாலேயே வரையறுக்க முடியவில்லை. என்ன செய்வது, என்ன சொல்வது என்று எதுவுமே தெரியாமல் அப்படியே நின்றான்.
காலையில் அவ்வளவு கடுமையாக அவளைச் சாடியபோதும் அதை மனதில் வைத்திராது அவனுக்கு உணவைப் பரிமாறும் அவளையே பார்த்தபடி நின்றான்.
அவன் அவளைக் கஷ்டப்படுத்த நினைக்க அவளானாள் அவனை அக்கறையோடு கவனிக்கிறாளே!
அவனைத் திரும்பிப் பார்த்து, “கையைக் கழுவிக்கொண்டு வாருங்கள் சாப்பிட.” என்று அழைத்தாள் அவள்.
அப்போதும் அவன் அசையாது நிற்க, “என்ன? வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தால் தான் வருவீர்களோ?” என்றாள் அதட்டலாக.
ஒன்றும் சொல்லாது ரஞ்சன் கை கழுவச் செல்ல, வெளியே சென்ற சித்ரா நகுலனை அழைத்து, “ஒரு ஐந்து நிமிடம் கழித்து இரண்டு டீ வாங்கி வா..” என்று சொன்னவள், உள்ளே வந்து ரஞ்சனுடன் அமர்ந்து தன் உணவையும் உண்டாள்.
அதற்கு மேல் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனாலும் அவன் தட்டில் குறைபவைகளைப் பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள் சித்ரா.
“நானே எடுத்துக்கொள்வேன். நீ சாப்பிடு.” என்று அவன் சொன்னதைக் காதிலேயே விழுத்தவில்லை அவள்.
அவர்கள் சாப்பிட்டு முடியவும் டீ வரவும் சரியாக இருந்தது. அதை நகுலனிடம் இருந்து வாங்கிக் கொண்டவள், “அவனிடம் இதற்குப் பணத்தைக் கொடுங்கள்.” என்றாள் டீயைக் காட்டி.
அப்போதுதான் அவள் கையில் பணம் இல்லாததைக் கவனித்தவன், தன் பர்சைத் திறந்து நகுலனிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு, கொஞ்சப் பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“உன் செலவுகளுக்கு வைத்துக்கொள்!”
மறுக்காது அதை வாங்கிக் கொண்ட சித்ரா, “கடைகளுக்குப் போகவேண்டும். எப்போது உங்களுக்கு நேரமிருக்கிறது.” என்று கேட்டாள், டீயைப் பருகியபடி.
போகலாமா என்று கேட்காமல், போகவேண்டும் என்று உத்தரவாகப் பேசும் அவளையே நீண்ட நாட்களுக்குப் பிறகு விழிகளால் அளந்தான் ரஞ்சன்.
முன்னரை விட இப்போது மெலிந்திருந்தாள். அதேபோல முகத்தில் பழைய மிளிர்வு இல்லாதபோதும், நெற்றியில் இட்டிருந்த குங்குமமும், கழுத்தில் தொங்கிய பொன் தாலியும் அவள் முகத்துக்கு இன்னுமின்னும் பொலிவைக் கூட்டியிருந்தது. அதுவும் நெற்றியிலிருந்த குங்குமம் கொஞ்சம் அவள் மூக்கில் மெலிதாகச் சிந்தியிருந்தது. அதுவேறு அவளின் அழகுக்கு இன்னும் அழகைச் சேர்த்தது. அவன் வாங்கிக் கொடுத்த ஊதா நிறச் சுடிதார் வேறு அவள் நிறத்துக்கு மிக எடுப்பாகவே இருந்தது.
அவனிடமிருந்து பதில் எதுவும் வராமல் போனதில் சித்ரா அவனை நிமிர்ந்து பார்க்க, சட்டெனப் பார்வையைத் திருப்பியவன், “ஏன்?” என்று கேட்டான், எதையாவது சொல்லவேண்டுமே என்பதற்காக.
“முதலில் எனக்கொரு கைப்பை வாங்க வேண்டும். இன்னும் சில உடைகளும் வாங்க வேண்டும். அதோடு ஐபோன் ஆறு வாங்கித் தருவதாகச் சொன்னீர்களே..”
அவள் ஐபோன் கேட்டவிதம் மனதிலாட உள்ளே சிரித்துக்கொண்டவன், “சரி வா. இப்போதே போகலாம்..” என்றபடி டீயைக் குடித்துவிட்டு எழுந்தான்.
அருகிலேயே அனைத்துக் கடைகளும் இருந்ததில் கணவன் மனைவி இருவரும் நடந்தே சென்றனர்.
முதலில் ஒரு கைப்பையை வாங்கி, அதில் அவன் தந்த பணத்தை வைத்துக் கொண்டவள் தனக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் எந்தத் தயக்கமும் காட்டவே இல்லை.
அதோடு, இது நன்றாக இருக்கிறதா, வாங்கலாமா, வேண்டாமா என்று அவனிடம் கேட்கவும் இல்லை .
கைபேசிகள் விற்கும் கடைக்கும் சென்று, ஐபோன் ஆறை வாங்கிவிட்டே அவனை விட்டாள் சித்ரா.
அவள் வாங்கும் பொருட்களுக்கு பணத்தைச் செலுத்தும் வேலையை மட்டுமே பார்த்தான் ரஞ்சன்.
தான் நினைத்தது என்ன நடந்து கொண்டிருப்பது என்ன என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஆனாலும், நினைத்தவைகளை பிடிவாதமாகச் செயலாற்றவும் அவனால் முடியவில்லை. அவள் அருகில் இருந்தாலே தடுமாறிப் போவதும் சிந்தை குழம்புவதும் தானே அவனுக்கு வேலை!
அனைத்தையும் வாங்கிக்கொண்டு அவர்கள் வர, ரஞ்சனின் கைபேசிக்கு அழைத்த சந்தானம், மதிய உணவுக்குத் தன் கடைக்கு வரும்படி அழைத்தார்.
அதைத் தட்ட நினைத்தாலும் ஏனோ ரஞ்சனால் அவரின் பேச்சை மறுக்கமுடியவில்லை. சூழ்நிலைக் கைதியாக மாறிப்போனான்.
மதிய உணவை முடித்துக்கொண்டவர்கள் சுகந்தன், ஜீவன் நிற்கும் கடைக்குச் சென்றார்கள். இருவரையும் ஜோடியாகக் கண்டதும், முகம் மலர ரஞ்சனைக் கட்டிக் கொண்டார்கள் நண்பர்கள்.
ஆனாலும், அவர்களிடம் பெரிதாக முகம் கொடுக்கவில்லை ரஞ்சன்.
அதைக் கவனித்த சித்ரா, ரஞ்சன் கணக்கு வழக்குகளைப் பார்க்க ஆரம்பிக்கவும் என்ன விஷயம் என்பதாக ஜீவனைப் பார்த்துக் கண்ணால் கேட்டாள்.
“உன் வீட்டுக்காரன் எங்கள் மேல் கோபமாக இருக்கிறான்..” என்று அவள் காதுக்குள் முணுமுணுத்தான் அவன்.
அப்போதும் ஏன் என்று அவள் சைகையில் கேட்க, “உன்னைக் கட்டமாட்டேன் என்று அவன் சொன்னதற்கு நாங்கள் இந்தக் கடையை விட்டு வெளியே போகிறோம் என்று சொன்னோம்.” என்றான் அவன்.
உள்ளே உள்ளம் நெகிழ்ந்தபோதும், “அநியாயத்துக்குப் பாசக்காரப் பயபுள்ளைகளா இருக்கிறீர்களே..” என்றாள் சித்ரா கிண்டலாக.
“எல்லாம் உன்னால் வந்தது. உன்னை யார் இந்தச் சிடுமூஞ்சியை காதலிக்கச் சொன்னது!” என்று பாய்ந்தான் ஜீவன்.
“அவர் என் வீட்டுக்காரன். சிடுமூஞ்சி அது இது என்று சொன்னால் கத்தியால் குத்தி உங்கள் குடலை உருவி மாலையாகப் போட்டுவிடுவேன்!” என்றாள் சித்ரா கண்களை உருட்டி மிரட்டலாக.
“அம்மாடி!!” என்றபடி, ஜீவன் இரண்டு கைகளாலும் தன் வாயைப் பொத்திக்கொள்ள, பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கியபடி, “அது அந்தப் பயம் இருக்கட்டும் எப்போதும்!” என்றாள் அதிகாரமாக.
அவன் சரி என்பதாகத் தலையை மிக வேகமாக உருட்டவும், “சரிசரி விடுங்கள். இந்தத் தங்கைக்கு ஒரு கீதம் நீங்கள் படித்தால் என் அண்ணன்களுக்கு நான் ஒரு கீதம் படிக்க மாட்டேனா.” என்றாள் சித்ரா.
அன்றிலிருந்து அதுவே அவர்களது வழமையானது.
காலையில் ரஞ்சனோடு அவன் வண்டியில் தந்தையின் கடைக்கு வரும் சித்ரா, அங்கே நிற்கும் அவளது ஸ்கூட்டியில் தந்தையின் மற்றக் கடைகளுக்குச் சென்று வேலைகளைப் பார்ப்பதும், சந்தானம் வீட்டிலிருந்து வரும்போதே கொண்டுவரும் காலை உணவை மூவருமாக உண்பதும் வழமையாகி இருந்தது.
அதேபோல மதிய உணவை லக்ஷ்மி எடுத்துவர, ரஞ்சன் சித்ராவின் வசதிப்படி சந்தானத்தின் கடையிலோ அல்லது ரஞ்சனின் கடையிலோ என்று அவர்களது மதிய உணவு நேரமும் கழிந்தது.
தினமும் லக்ஷ்மி அம்மாள் அவர்களுக்கும் சேர்த்துச் சமைப்பதை எண்ணி, “உன் அம்மாவுக்கு எதற்குச் சிரமம்..” என்று சாப்பிடத் தயங்கினான் ரஞ்சன்.
“நாங்கள் மறுத்தால் தான் அவர் கவலைப் படுவார். அவருக்கு உதவிக்கு அப்பா ஒரு ஆன்ட்டியை வேலைக்கு வைத்திருக்கிறார்.” என்றாள் சித்ரா.
மதிய உணவு முடிந்ததும் ரஞ்சனின் கடைகள் இரண்டுக்கும் கூட தினமும் சித்ரா சென்றுவந்தாள். வீட்டுக்குச் செல்கையில் மீண்டும் ரஞ்சனின் வண்டியிலேயே இருவரும் சென்றனர்.
தன்னை மிரட்டிக் கட்டிக் கொண்டவளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தாலும், அவனால் அதைச் செயலாற்றவே முடியவில்லை. அதற்கு மிகப் பெரிய தடையாக நின்றவர்கள் சித்ராவின் பெற்றோர்.
அவர்கள் காட்டிய பாசத்திலும், மரியாதையிலும் அதைவிட மகளை நன்றாகப் பார்த்துக்கொள்வான் என்று நம்பும் அவர்களின் நம்பிக்கையிலும் சிக்கித் தவித்தான் ரஞ்சன்.
இரவு நேர உணவு அவர்கள் இருவரும் மட்டுமாகவே ரஞ்சனின் வீட்டில் கழிந்தது. இப்படியே நாட்கள் உருள, இராசமணி நித்யா இருவரிடமும் எந்த மாறுதலுமே இல்லை.
அதேபோல, ரஞ்சன் சித்ரா உறவிலும் எந்த முன்னேற்றமும் இன்றியே நாட்கள் நகர்ந்தன.
அன்று சந்தானத்துடன் பேசிய பிறகு, ரஞ்சனால் சித்ராவிடம் கடுமை காட்டவும் முடியவில்லை. அவள் செய்தவைகளை நினைத்துக் கொதிக்கும் மனதை அடக்கவும் முடியவில்லை.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அது குத்தலாக வெளிப்பட்டால், அதற்குப் பதிலடி கொடுக்கச் சித்ராவும் தயங்கியதில்லை. பாதிப்பு இருபக்கமும் சமமாக இருந்ததில் தேவையற்ற பேச்சுக்கள் அவர்களுக்குள் வெகுவாகவே குறைந்து போனது.
ஆனாலும், தான் அவன் மனைவி என்பதை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத சித்ராவும் அவனுடன் இணக்கமாக நடந்துகொள்ள முயலவும் இல்லை.
ஆகமொத்தத்தில், இருவரும் அதிகமாகப் பேசிக்கொள்ளாத போதும் அவர்களுக்குள் அழகான புரிந்துணர்வு ஒன்று அவர்களை அறியாமலேயே மலர்ந்திருந்தது.
ஆனாலும், ஒருவர் மற்றவருக்குச் செய்த பிழைகளை அவர்கள் மறக்கவும் தயாரில்லை. மன்னிக்கவும் தயாரில்லை! அதனால் அவர்களுக்குள் இருந்த இடைவெளியும் நிரந்தமாகியே போனது.