தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டார் அரவிந்தன்.
ஜீன்ஸ் அணிந்திருந்ததில் சஹானாவின் கால்கள் தப்பியிருக்க வெயிலுக்கு இதமாகக் கையில்லாத மெல்லிய சட்டை அணிந்திருந்ததில் கை முழுவதும் சிராய்த்து, திட்டுத் திட்டாகச் சிவந்து, கன்றி என்று வலியில் உயிர் போனது அவளுக்கு. அதைவிடக் கழுத்து? இன்னுமே அவன் பற்றிய இடத்தில் எரிந்துகொண்டிருந்தது. கண்ணீருடன் அவளுக்குப் பார்த்துப் பார்த்து மருந்திட்டார் ராகவி.
“நீயாவது தடுத்திருக்கக் கூடாதா அகில்? அவள்தான் சின்னப்பிள்ளை எண்டா உனக்கு எங்கபோச்சு அறிவு?” மனம் பொறுக்காமல் மகனை அதட்டினார் அரவிந்தன்.
ஏற்கனவே தான் அழைத்துப் போனதால் தான் இப்படி நடந்துவிட்டதோ என்று தன்னளவில் குமைந்துகொண்டிருந்த அகிலன், தகப்பனின் கோபத்தில் முகம் சிறுத்துவிட யாரையும் பார்க்கமுடியாமல் இறுகிப்போய் நின்றான்.
“அகில் மச்சானைப் பேசாதீங்கோ மாமா. அவர் வேண்டாம் எண்டு சொன்னதைக் கேக்காம போனது நான். உங்களை மாதிரி அவேயும் என்னைக் கண்டதும் சொந்தம் கொண்டாடுவீனம் எண்டு நினைச்சன்.” அடைத்த குரலில் அவள் சொன்னதைக் கேட்ட அரவிந்தனுக்கு மனம் பாரமாகிற்று!
ராகவியால் பொறுக்கவே முடியவில்லை. “இதுகள் எல்லாம் என்ன மனுசரப்பா? இந்தப் பிஞ்சு முகத்தைப் பாத்து என்னெண்டு இப்பிடியெல்லாம் கதைக்க முடிஞ்சது? பந்தம் பாசம் எண்டு கொஞ்சமும் இல்லையா? ஈவு இரக்கமே இல்லாம நடந்து இருக்குதுகள்!” எதையும் நிதானமாகக் கையாளும் அவரே வெடித்தார்.
அரவிந்தனுக்கும் அப்படித்தான் தோன்றியது.
அதைவிட, தங்கை அவரை நம்பித்தானே பெண்ணை அனுப்பிவைத்தாள். மகளிடம் பெரிதாக ஒன்றும் சொல்லாதபோதும், “அவளின்ர அப்பா தன்ர சிறகுக்க வச்சு வளத்தவர் அண்ணா. அவளுக்குச் சின்னதா ஒண்டு எண்டாலே துடிச்சுப்போவார். அவள் தனிய அங்க வாறது தெரிஞ்சா விடவே மாட்டார். அவருக்காக எண்டுதான் என்ர மனதை கல்லாக்கிக்கொண்டு உங்களை நம்பி அனுப்பி வைக்கிறன். திரும்ப என்னட்ட வந்து சேருற வரைக்கும் அவளுக்கு நீங்கதான் பொறுப்பு!” என்று கண்ணீரோடு சொன்னாளே.
“அவளை நான் கவனமா பாப்பன். நீ அனுப்பு!” என்று உறுதிகொடுத்தாரே.
இப்போதானால்.. என்ன பதில் சொல்லுவார்? கவனமாக இந்த விசயத்தைக் கையாள எண்ணியிருந்தார். இனி?
“உங்களோட போயிருந்தாலும் இப்பிடித்தான் எதையாவது செய்து இருப்பீனம்.” கணவரின் எண்ணங்களை ஊகித்தவராகச் சொன்னார் ராகவி.
“ஏன் மாமா? அந்தளவுக்கு என்ன நடந்தது? மனதுக்குப் பிடிச்சவர கட்டுறது இங்க அவ்வளவு பெரிய பிழையா?” அவளின் கேள்வியில், இப்போது எதற்கு இதைச் சொன்னாய் என்பதாகப் பார்த்தார் அரவிந்தன்.
“எப்பிடியும் அவளுக்குத் தெரியத்தான வேணும்? அது தெரியாம என்ன சமாதானம் கதைக்கிறது?” கணவரைச் சமாளித்தார் ராகவி.
முப்பது வருடங்களுக்கு முந்திய கதை. அவரில்தான் ஆரம்பித்தது. எப்படிச் சொல்வது என்று திகைக்கச் சரியாகச் சஹானாவின் புதிய நம்பருக்கு அழைத்தார் யாதவி.
எல்லோர் முகத்திலும் கலவரம்.
அழைப்பை ஏற்ற சஹானா தாயின் குரலைக் கேட்டதும் விசும்பினாள். பதறிப்போய், “என்னம்மா ஏன் அழுறாய்?” என்று அவர் கேட்டதுதான் தாமதம், நடந்த அத்தனையையும் ஒன்றுவிடாமல் கேவிக்கேவிச் சொல்லிமுடித்தாள்.
எல்லோரும் கலவரத்தோடு பார்த்திருக்க, உறுதியான குரலில் நிதானமாகப் பேசினார் யாதவி.
“என்ன நடந்தாலும் சரி சஹி. நீ எதுக்காகப் போனியோ அதை முடிச்சுப்போட்டுத்தான் வரவேணும். உனக்கு அழுகையோ கவலையோ வாற நேரத்தில அப்பாவை மட்டும் நினை. செல்லமா வளத்தாலும் அவர் உன்னைப் பயந்து நடுங்கிற பிள்ளையா வளக்கேல்ல. பொறுப்பில்லாம வளர்க்கேல்ல. நீ பிரதாப்ன்ர மகள். தைரியமா நினைச்சதை நடத்தி முடிச்சுப்போட்டுத்தான் இங்க வரவேணும்!” என்றுவிட்டுத் தானே அழைப்பைத் துண்டித்தார்.
துண்டித்த கணமே உடலும் உள்ளமும் தள்ளாடியது! அதைச் சமாளிக்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டு அப்படியே நின்றார். ஒரு ஊசி போடுவதற்கே என்ன பாடுபடுவாள்? தனியாக அவளை அனுப்பியது தவறோ? மனது கனத்துவிட எண்ணங்கள் கணவரிடம் ஓடியது.
‘பிரதாப்! உங்கட மகள் அங்க அழுறாள். என்னால தாங்க முடியேல்ல. அவளுக்கு நீங்கதான் தைரியம் குடுக்கவேணும். உங்களை நம்பித்தானே நானும் அவளும் இருக்கிறோம்.’ மனதோடு கணவரிடம் பேசியவரை அந்த நம்பிக்கை எனும் வார்த்தை பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்தது.
இத்தனை வருட காலத்து இல்லறத்தின் ஆதார சுதியே அன்று கணவர் தந்த நம்பிக்கை தானே!
ஆனால், எத்தனை வருடங்கள் ஓடிவிட்டது. மனதும் உடலும் ஓய்ந்துவிடுகிற இந்த வயதிலுமா இத்தனை கோபம்? இத்தனைக்கும் காரணமான நிகழ்வுகள் அத்தனையும் நெஞ்சின் மேலே எழும்பிற்று!
அதேநேரம் அங்கே சாவகச்சேரியில், அன்னையிடம் அழுது கொட்டியதில் சஹானாவும் மனதளவில் தெளிந்திருந்தாள். இப்படி விரட்டி அடிக்கிற அளவுக்கு அவர்களுக்கு என்ன கோவம்? அதை அறியாமல் விடுவதில்லை. அந்தக் கோபத்தைப் போக்காமலும் விடுவதில்லை என்கிற பிடிவாதம் அவளுக்குள் மிக ஆழமாக எழுந்திருந்தது.
எனவே, “சொல்லுங்கோ மாமா! அப்பிடி என்னதான் நடந்தது?” என்று பிடிவாதம் பிடித்து அவரின் வாயைத் திறக்க வைத்தாள்.
————–
சாவகச்சேரியில் காலம் காலமாய் வாழும் பெரும் கமக்காரர்(விவசாய) குடும்பம் தான் ரகுவரமூர்த்தி குடும்பம். மரியாதையும் மிகுந்த செல்வாக்கும் கொண்டவர்கள். சாவகச்சேரி முழுக்கச் சுற்றிச் சுற்றிப் பார்த்தாலும் அவர்களின் உறவுதான். சொந்தத்தை விடாது கட்டிக்காப்பவர்கள். முடிந்தவரை சுற்றிச் சுற்றித் தேடி ஏதோ ஒரு வழியில் முறையாக அமையும் சொந்தத்தில் தான் பெண் எடுப்பதும் கொடுப்பதும்.
மகன் பிரதாபன் கல்வித் திணைக்களத்தில் பொறுப்பான பதவியில் இருக்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வர்த்தகத்துறையில் கடைசிவருடத்தில் இருந்தாள் மகள் பிரபாவதி.
ஒருநாள், திடீரென்று தமையனிடம் வந்து நின்றாள் பிரபாவதி. “என்னம்மா?” அவள் முகம் பார்த்தே ஏதோ சரியில்லை என்று கண்டு கேட்டான் பிரதாபன்.
“அண்ணா, எனக்கு அரவிந்தன் எண்டு ஒருத்தரை பிடிச்சிருக்கு. ஆனா, நான் எவ்வளவு சொன்னாலும் கேக்கிறார் இல்ல. எங்கட வசதி பாத்து பயப்படுறார். அவரிட்ட எனக்காக நீதான் கதைக்கோணும்.” அவள் சொன்ன வேகத்தில் அதிர்ச்சியோடு சேர்ந்து சிரிப்பும் வந்துவிட்டது அவனுக்கு.
அவள் எப்போதுமே இப்படித்தான். அவனைப்போல நிறுத்தி நிதானித்துப் பேசுகிறவளும் அல்ல நடக்கிறவளும் அல்ல. எல்லாவற்றிலும் அதிரடிதான். அவளின் அந்தத் துடுக்குத்தனத்தை வெகுவாக ரசிப்பான் பிரதாபன். இன்றும் துணிந்து தன்னிடம் படார் என்று போட்டுடைத்தவளைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டான்.
“சின்ன வயசில இதெல்லாம் என்ன பிரதி? வெளி ஆள் எண்டா அம்மா அப்பா சம்மதிக்க மாட்டீனமே.”
“என்ர வயதிலதானே கவி அக்காவும் காதலிச்சுக் கட்டினவா? அப்பாதானே செய்து வச்சவர். நானும் அவர் இல்லாட்டி செத்துடுவன் அண்ணா. எனக்கு அவர்தான் வேணும்! கட்டினபிறகு படிக்கிறன்.” தைரியமாகச் சொன்னவளைக் கண்டு பிரதாபன் அதிர்ந்துதான் போனான்.
“என்ன கதைபேச்சு பிரதி இது? அவா செய்தா நீயும் அப்பிடியே செய்யோணும் எண்டு கட்டாயமில்லை. முதல், இதென்ன பிடிவாதம்? நான் போய்க் கதைக்கிறன். பிறகு என்ன ஏது எண்டு பாக்கலாம். அதுவரைக்கும் சும்மா மனதைப்போட்டுக் குழப்பாத.” கனிவுடனும் கண்டிப்புடனும் சொன்னான் பிரதாபன்.