அந்த நேரத்திலும் அந்தப்பெண் இந்த விசயத்தைக் கையாண்ட விதம் அவனைக் கவர்ந்தது. அவள் கோபப்படவில்லை. அரவிந்தனைப் போன்று கூட வார்த்தைகளை விடவில்லை. நியாயம் பேசவில்லை. நாங்கள் பொய் சொல்லவில்லை என்று வாதாடவில்லை. எடுத்துச் சொன்னாள். விசாரித்து முடிவுகளை நீயே எடுத்துக்கொள் என்று அவனைச் சிந்திக்க வைத்தாள். அதுதான் அவனை இன்னும் குன்ற வைத்தது.
அதைவிட இந்தப் பெண்ணைப்பற்றித்தானே பிரதி என்னென்னவோ சொன்னாள். இங்கே மாறவேண்டியவள் அவனுடைய தங்கைதான் என்று புரிந்துவிட, அங்கிருக்க முடியாமல் சங்கடமாகிப்போயிற்று. எழுந்து விடைபெறும் முகமாக அவர்களைப் பார்த்துவிட்டு வெளியேறினான். சற்றுச் சிந்தித்துவிட்டு ஓடிவந்தாள் அவள்.
“ஒரு நிமிசம்.”
படலைக்கு வெளியே நிறுத்தியிருந்த தன் வண்டியில் ஏறி இருந்தவன் திரும்பினான்.
“ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சுப் பழகி இருக்கிறா உங்கட தங்கச்சி எண்டு நினைக்கிறன். அது அவாவில பிழை இல்ல. கேக்கிறது எல்லாத்தையும் செய்து குடுத்து, செல்லம் குடுக்கிறோம் எண்டு பிடிவாத குணத்தை வளர்த்துவிட்டவே மேலதான் பிழை. அதால அவா மட்டுமில்லை அவாவுக்குச் செல்லம் குடுக்கிற ஆக்களும் கவனமா இருக்கோணும்.” என்றபோது அவள் இதழ்கடையோரம் குட்டியாகச் சின்னச் சிரிப்பு ஒன்று ஜனிக்க, மிக வேகமாக மறைத்துக்கொண்டாள்.
அதைவிட வேகமாகக் கண்டுகொண்டவனின் கண்கள் வியப்பில் விரிந்தன. எவ்வளவு சாதுர்யமாக அவனையே குற்றம் சாட்டிவிட்டாள். இவள் மகா பொல்லாதவள்! மனதிலிருந்த பாரத்தைக்கூட ஒருகணம் மறந்து, எட்டிப்பார்த்துவிட்டுப்போன அந்தச் சின்னச் சிரிப்பில் லயித்தான் பிரதாபன்.
“கூடப்பிறந்த தங்கச்சில பாசம் வச்சிருக்கிறதைப் பிழை எண்டு சொல்லுறீங்களா?” இலகு குரல் என்றாலும் அவளின் குற்றச்சாட்டைக் குறுக்கு விசாரணை செய்தான் அவன்.
“பாசம் இருக்கத்தான் வேணும். ஆனா அந்தப் பாசம் கண்ணை மறைக்கக் கூடாது.”
இப்போது அவன் எதைக் கவனிக்கவில்லை என்கிறாள் இந்தப் பெண்? ஒற்றைப் புருவத்தைக் கேள்வியாக உயர்த்த, அந்தப் புருவச் சீண்டல் அவள் உதட்டோரம் குட்டிச் சிரிப்பை மீண்டும் தோற்றுவித்தது.
“கோபப்படாம மென்மையா எடுத்துச் சொல்லுங்கோ. மனதை உடைக்காம.. மெல்ல..” மேலே எப்படித் தொடர்வது என்று தெரியாமல் நிறுத்திவிட, புரிந்துகொண்டேன் என்பதாகத் தலையசைத்தான் பிரதாபன்.
ஆனால், ‘என்ன சொன்னார் அண்ணா?’ என்று பிடிவாதமாக நின்று தன்னிடமிருந்து நடந்தவற்றைப் பிடுங்காமல் விடமாட்டாள் பிரபாவதி. அவளிடம் எதைச் சொல்லிச் சமாளிப்பான். என்னவோ அதற்கான பதில் தன் முன்னே நிற்பவளிடம் மட்டுமே இருப்பது போலிருக்க, “என்ன செய்யலாம்?” என்று அவன் உதடுகள் கேட்டிருந்தது.
அவள் கண்களில் மெல்லிய வியப்பொன்று வந்தமர்ந்ததைக் கவனித்தான்.
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கிறாள். ஆனால், உணர்வுகள் ஒவ்வொன்றையும் துல்லியமாகக் காட்டும் பளிங்கு முகம். பளபளக்கும் கண்கள். அவை சலனமின்றி அவன் விழிகளை நேர் கோட்டில் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தன.
“என்ன மழுப்பலாகச் சொன்னாலும் உங்கட தங்கச்சி விடமாட்டா.”
அவன் விழிகள் ஆச்சரியத்துடன் அவள் மீது விழுந்தது. “இல்ல.. அண்ணா வந்து எல்லாம் சொல்லுறவர். அண்ணா கோபப்பட்டாலும் பொறுமையா கதைக்கச் சொல்லி, சொல்லி விடுறனான். என்ன சிலநேரங்கள்ல அண்ணா பிரெண்ட்ஸோட இருக்கேக்கையும் வந்து பொறுமையைச் சோதிப்பாளாம்.”
முகம் கன்றிப்போயிற்று பிரதாபனுக்கு. நண்பர்கள் முன்னால் எவ்வளவு அவமானமாயிருக்கும். கிட்டத்தட்ட அவனுக்கும் அரவிந்தன் வயதுதான். ஒன்றிரண்டு கூடுதலாய் இருக்கலாம். அரவிந்தனின் கோபத்திலும் நியாயம் இருப்பதை இப்போது உணர்ந்துகொண்டான்.
“உங்கட அண்ணா என்ன செய்றார்?”
“எங்கட கம்பஸிலேயே மேல படிச்சுக்கொண்டு பார்ட்டைம் லெக்சரரா இருக்கிறார்.”
“ஓ..!” என்றவனுக்கு முகக்கன்றலை அடக்குவது பெரும் கடினமாகப் போயிற்று.
பகுதி நேரம் என்றாலும் விரிவுரையாளர் பதவியில் இருக்கிறவனிடம் இப்படி நடப்பது என்பது மிகுந்த அநாகரீகம். அரவிந்தனின் அடங்காத கோபமும் சினமும் ஏன் என்று புரிந்தாற்போலிருந்தது.
“இவ்வளவு நடந்திருக்கு எண்டு எனக்குத் தெரியாது.” மனதிலிருந்து உண்மையைச் சொன்னான் பிரதாபன்.
“பரவாயில்லை விடுங்கோ. நடந்ததைப்பற்றி யோசிக்காம இனி என்ன செய்றது எண்டு பாருங்கோ.” இதமாகச் சொன்னாள் அவள்.
அருமையானவள். அந்தக் கணத்தில் அவனுக்குள் இப்படித்தான் அவளைக்குறித்துத் தோன்றியது.
“நீங்கள் வேணுமெண்டால் அண்ணாவை உங்களுக்குப் பிடிக்கேல்ல எண்டு சொல்லுங்கோ. இல்ல அவரைப்பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறன் எண்டு எதையாவது சரியில்லாம சொல்லுங்கோ.” சிந்தனை நிறைந்த அவனுடைய முகத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னாள் அவள்.
“அது பிழை இல்லையா?” மனம் ஒப்பாமல் அவன் கேட்டான்.
“உண்மை இல்லைதானே. உங்கட தங்கச்சி மனம் மாறுவா எண்டா சரிதான். வேணுமெண்டால் என்னைப்பற்றியும் ஏதாவது சொல்லுங்கோ. பொல்லாதவள், வில்லி, அந்த வீட்டுக்குப் போனா உன்ன சந்தோசமா இருக்க விடமாட்டாள். அது இது எண்டு..” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, “ச்சேசே!” என்று வேகமாய் மறுத்தான் அவன்.
அவன் மறுத்த வேகத்தில் கண்களில் கேலி மின்னப் பார்த்தாள் அவள். அவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. நீயாகக் கேள் சொல்கிறேன் என்பதாக அவளையே பார்த்தபடி நின்றான்.
அவள் கேட்கவில்லை. குறும்பாய் நகைத்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டாள். நட்போடு உரையாடினாலும், அந்த நட்புக்கும் எல்லை வகுத்துத் தானும் அந்த எல்லைக்குள் நின்றபடி எதிரே நிற்பவனையும் அதைத் தாண்டி வரவிடாமல் இனிமையாகத் கதைத்துக்கொண்டிருந்தாள் அவள்.
“உங்கட அண்ணா விரும்புறார் எண்டு சொன்னது..” அவனுக்கு அவளின் வார்த்தைகளின் மீது நம்பிக்கைதான். ஆனாலும் கேட்டான்.
“உண்மைதான். என்ர பிரெண்ட்தான் அவள். நானும் அவளும் செஞ்சோலைலயும், அண்ணா காந்தரூபன் அறிவுச் சோலைலயும் வளர்ந்தனாங்கள். என்ர பிரெண்ட்டாகத்தான் அண்ணாக்கு முதல் பழக்கம். இப்ப ரெண்டுபேருமே உயிரா நேசிக்கீனம். இப்பதான் அண்ணாக்கு வேலை கிடைச்சிருக்கு. நாங்களும் படிச்சு முடிச்சு வேலை கிடைச்சு ஒரு வருசத்துல எனக்குக் கல்யாணம். பிறகு அண்ணாக்கு.”
“அது என்ன ஒரு வருசக் கணக்கு?”
“கல்யாணத்துக்குக் காசு வேண்டாமா?” சிரித்துக்கொண்டு கேட்டவளின் வார்த்தைகள் மனதைப் பாரமாக்கிவிட அவள் முகத்தைப் பார்த்தான்.
அண்ணனும் தங்கையுமாக உழைத்துக் காசு சேர்த்துத் திருமணம் நடாத்த எண்ணியிருக்கும் அவர்களிடம் போயா பிரபாவதி தன் பலத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறாள்?
அதற்குமேல் அங்கே நின்று அவளோடு உரையாடிக்கொண்டிருந்தால் அவனுடைய உயரம்தான் குறைந்துகொண்டே போகும் போலிருந்தது. எனவே, “வரட்டா?” என்று அவன் விடைபெற அவள் தலையும் தானாக அசைந்து விடைகொடுத்தது.