அவன் தந்த பரிசினை உடனேயே பிரித்துப் பார்க்கவில்லை யாதவி. தனிமையில் அவனையும் அவன் நினைவுகளையும் மட்டுமே சுமந்து அதனை ஆசையாசையாகப் பிரிக்க ஆவல் கொண்டவள், தன் ஹாண்ட் பாக்கினுள் போட்டுக்கொண்டாள்.
வீட்டுக்கு வந்தும் வீட்டுச் சடங்குகள், வேலைகள், பொருட்களை ஒதுக்கிவைத்து என்று ஒரு வேகத்துடனேயே எல்லாவற்றையும் செய்தாள். ராகவியும் புதுப்பெண் என்று அமராமல், தோழியாக அவளுக்கு உதவி செய்ததில் வீடும் விரைவாக ஒதுங்கிற்று. அண்ணா அண்ணிக்குத் தனிமை கொடுத்துவிட்டு தன்னுடைய அறைக்குள் அவள் வந்தபோது அடுத்தநாளுக்கான முதல் மணித்துளி ஆரம்பித்திருந்தது. ஆனாலும் களைப்பு நீங்க நன்றாகத் தலைக்குக் குளித்துவிட்டு வந்து, தன் பாயில் அமர்ந்து ஆசையாசையாய் அந்தப் பரிசை வெளியே எடுத்தாள்.
அவனையே பார்ப்பதுபோல் ஒரு பரவசம். ஆவலாய் பிரிக்க, வெள்ளைத் தாளில்,
“இதயம் திறந்து கேட்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்
ப்ரியங்களுடன் பிரதாபன்”
என்று நீல நிற இங்க் பேனாவினால் முத்துமுத்தாய் எழுதியிருந்தான். கீழுதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டவளால் அதிலிருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை.
அந்த ப்ரியங்களிலேயே மனம் பிரியமாய் நிலைகொண்டது.
ப்ரியங்களுடன் பிரதாபனை மெல்லத் தடவிப்பார்த்தாள். கன்னங்கள் சூடாகிப் போயிற்று. மெல்ல அதனைப் பிரிக்க உள்ளே இருந்தது ஒரு ஓடியோ கேசட். பாடல்களைப் பதிந்து அனுப்பி இருக்கிறானா? ஆவல் மின்ன ரேடியோவை எடுத்துவந்து கேசட்டைப் போட்டாள்.
அவசரமாகச் சத்தத்தைக் குறைத்துத் தலையணை அருகே வைத்துவிட்டுச் சரிந்து நெற்றியின் மீது கையைப் போட்டுக்கொண்டாள்.
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா
அவள் இதழ்களில் ரகசியப் புன்னகை பூத்தது. அவள் அம்பு விட்டாளாமா? மனம் மயங்க விழிகளை மெல்ல மூடிக்கொண்டாள். பாடலோடு சேர்ந்து அவளின் எண்ணங்களும் அவனோடு பயணிக்க ஆரம்பித்திருந்தது.
ஆறாத ஆசைகள் தோன்றும்
எனைத் தூண்டும்
ஆனாலும் வாய் பேச
அஞ்சும் இந்த நெஞ்சம்
அவனுக்குப் பயமாமா? கள்ளன்! தைரியமா கைய பிடிச்சிட்டு யாருக்குக் கதை விடுறான்?
அவள் பேரை நாளும்
அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை
நிழல் போலச் செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னைக் கொல்லும் எந்நாளும்
கைகளில் முகத்தைப் புதைத்தவளின் உள்ளம் அந்த வரிகளில் அவள் வசமிருந்து நழுவிக்கொண்டிருந்தது.
யாப்போடு சேராதோ
பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ
காற்று பனிக்காற்று
வினா தாள் போல் இங்கே
கனா காணும் காலை
விடை போலே அங்கே
நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு எந்நாளோ
அந்தப் பாடல் முடிந்தபோதே அவள் அவள் வசமாயில்லை. உயிர் கரைந்து உருகிக் கொண்டிருக்க அடுத்தப் பாடல் ஆரம்பித்து இருந்தது.
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா…
காதோரமாய் வந்து அவன் பாடுவது போலவேயிருந்தது அவளுக்கு. அந்த ஒற்றை வரியிலேயே காதல் கசிந்து கண்ணீராக அவள் கன்னங்களை நனைத்தது! ‘பிரதாப்!’ உதடுகள் அவன் பெயரை நேசம் பொங்க உச்சரித்தன.
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா…
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாசை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்
என்ன தான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா…
அவன் அவளை மார்பிலேந்தி தன் ஆசைகளையெல்லாம் காதோரமாய்ச் சொல்வது போலிருக்க, கண்ணோரம் நீர்த்துளிகள் கசிய அப்படியே கட்டுண்டு அவன் காதலில் முகிழ்ந்துபோனாள் யாதவி. இசையின் ஊடாக அவளின் உயிருக்குள் நிறைந்துகொண்டிருந்தான் பிரதாபன்.
செல்லக் கிளி என்னைக் குளிப்பிக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லுச் சிலை போல நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்து தலைவார வேண்டும்
நீ வந்து.. இலை போட வேண்டும்
நான் வந்து.. பரிமாற வேண்டும்
என் இமை உன் விழி மூட வேண்டும்
இருவரும் ஒரு சுரம் பாட வேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா…
அவளின் உயிரை உருக்கிக்கொண்டிருந்தான் பிரதாபன்.
இப்படி எத்தனையோ பாடல்கள். அவன் நேசத்தைச் சுமந்துவந்து அவள் இதயத்தில் சேர்ப்பித்தது. இனி அவனின்றி அவள் இல்லை என்றாகிப் போயிருந்தாள் யாதவி.
திருமணம் முடிந்த அடுத்தநாளே பிரபாவதியிடம் சொல்லிவிட்டான் பிரதாபன். ஒருகணம் நம்பமுடியாமல் தமையனை வெறித்த பிரபாவதி அடுத்தகணம் வெறிவந்தவள் போலானாள். வீட்டிலிருக்கும் பொருட்களை எல்லாம் உடைத்து, “நீ எல்லாம் ஒரு அண்ணனா? தங்கச்சி ஆசையா கேட்டதை நிறைவேற்ற முடியாத நீ ஏன் உயிரோட இருக்கிறாய்?” என்றெல்லாம் கேட்டவளைக் கண்டு மொத்தக் குடும்பமும் அதிர்ந்து நின்றது.
பிரதாபனை அழைத்து, நடந்ததைக் கேட்டு அறிந்துகொண்டார் ரகுவரமூர்த்தி. அவருக்கு மகனின் செயலில் எந்தப் பிழையும் தெரியவில்லை. மனைவியை மகளைத் தேற்றும்படி ஏவினார். தெய்வானை அம்மாவுக்குத்தான் மனம் பொறுக்கவில்லை. அரவிந்தனைத் திட்டித் தீர்த்தார். ‘என்ர மகளின்ர மனதைக் கெடுத்தவன் நல்லாவே இருக்கமாட்டான். அவன் குடும்பமே விளங்காது’ என்று சாபம் விட்டார்.
பிரதாபன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மகளின் கண்ணீருக்கு முன்னே அவனது வாதங்கள் அவரிடம் எடுபடவேயில்லை. “தலைகீழா நிண்டு எண்டாலும் உன்ர தங்கச்சிக்கு நீ அவனைக் கட்டி வச்சிருக்கவேணும்!” என்ற அன்னையின் பேச்சில் அதிர்ந்து நின்றான் பிரதாபன்.
“அவள் மயக்கி இருப்பாள் அம்மா. அதுதான், இவன் பல்லைக்காட்டிக்கொண்டு வந்திட்டான். ஐயோ..! உன்ன நம்பினேனே துரோகி! என்ர வாழ்க்கையை அழிச்ச துரோகி!” என்று தன் பங்குக்குச் சேர்ந்து கத்தினாள் பிரபாவதி.
நாட்கள் ஒருவித கனத்தோடு நகர்ந்தன. வீடே நரகமாகிப்போன தோற்றம். தன் நேசத்தைப்பற்றி மூச்சுக்கூட விடமுடியாத நிலையில் இறுகிப்போய் நின்றான் பிரதாபன். யாதவி மட்டுமே ஆறுதலாய் இருந்தாள்.
அரவிந்தனின் திருமணம் முடிந்த அடுத்த வாரமே தங்கள் மனங்களைப் பற்றி அவனிடம் பேசிவிட்டான் பிரதாபன். அவனுடைய ஒற்றை ஆறுதலாக யாதவி மட்டுமே இருக்க இரு வீட்டுக்கும் தெரியாமல் வெளியே சந்தித்து அவளின் பெயரைக் கெடுக்க மனமில்லை. அதைவிட இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும் நினைத்தான். கூடவே சொந்தபந்தம் என்று யாருமற்றவர்கள். அவர்களுக்கு ஒரு கெட்ட பெயரை அவன் உருவாக்கிக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தான்.


