பிரதாபனுக்கும் யாதவிக்கும் காதல் பேச்சுக்களோ, சின்னச் சின்னச் சில்மிசங்களோ நடந்தேறியதே இல்லை. ஆனால், இதயங்கள் இணைபிரியாமல் அன்போடு சேர்ந்திருந்தன. வீட்டுக்கு அவன் வரும் பொழுதுகளில் இருத்திவைத்து ஒருநேரச் சாப்பாடு கொடுக்காமல் அனுப்பவே மாட்டாள் யாதவி. அந்தப் பொழுதுதான் இருவரும் வாழும் பொழுது. வயிறார அவன் உண்பதைக் கண்டு அவள் நெஞ்சும், பார்த்துப் பார்த்துப் பரிமாறும் அவளின் அன்பில் அவன் நெஞ்சும் நிறைந்துபோகும்.
“வரட்டா?” என்று கேட்டு, கண்கள் கலந்து அவன் விடைபெறும் பொழுதினில் காலம் காலமாய் வாழ்ந்துவிடுவர் இருவரும்.
நாட்கள் நகர்ந்தன. கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் மெல்ல மெல்லப் பிரபாவதியும் மாறினாள். பிரதாபனோடு கூடக் கதைக்கத் தொடங்கினாள்.
வீட்டில் திருமணம் பேசத் துவங்கினர். மறுப்பாள் என்று எதிர்பார்க்க, அவளோ பார்க்கச் சொன்னாள். எல்லோருக்குமே உற்சாகம் தொற்றிக்கொள்ள, வீடும் பழையபடி மாறிற்று!
சிவானந்தனைத் தங்கைக்குப் பேசலாம் என்று பிரதாபன் சொல்ல, முன்னெடுக்கப்பட்ட அந்த விசயம் சிவானந்தனுக்குப் பிரபாவதியையும் சிவானந்தனின் தங்கை சுமித்திராவை பிரதாபனுக்கும் முடிப்பது என்று வர, அதிர்ந்தான் பிரதாபன்.
அதற்குள், யாதவியும் படிப்பை முடித்துவிட்டதில், தன் மனதை வீட்டில் சொன்னான்.
மீண்டும் பூகம்பம் வெடித்தது.
மறந்திருப்பாள் என்று நினைத்தவள் மீண்டும் ஆங்காரம் கொண்டு ஆடினாள். “நான் எதிர்பார்த்தனான். இதுதான் நடக்கும் எண்டு நினைச்சனான். நினைச்ச மாதிரியே நடந்திட்டுது. போயும் போயும் அவளைப் பிடிச்சிருக்கிறியே நீ! ஆனா நான் விடமாட்டன்! என்னை வேண்டாம் எண்டவன்ர தங்கச்சி என்ர வீட்டிலேயே வந்து வாழவோ? அவளை நீ கட்டவே கூடாது! என்னை மீறிக் கட்டினாயோ, திரும்பவும் நஞ்சு குடிப்பன்!” அவள் மிரட்டியபோது, மொத்தக் குடும்பமும் நிலைகுலைந்து நின்றது.
இதைத் தடுக்கவேண்டும் என்பதற்காகவே செய்யக்கூடியவள். அவளின் குணம் தான் அவனுக்கு நன்கு தெரியுமே! மனம் வெறுத்துப்போய் நின்றவனை அழைத்துப் பேசினார் ரகுவரமூர்த்தி.
“நீ வளந்தபிள்ளை. ஆட்களை எடைபோட தெரிஞ்சவன். பிழையான ஆளை வாழ்க்கைத் துணையா தேர்ந்து எடுக்கமாட்டாய் எண்டு நம்புறன்.” சொந்தத்தில் மட்டுமே மணமுடிப்பது என்பதை ஒரு கட்டாயமாகக் கொண்டிருந்த அவரே அவனை விளங்கிக்கொண்டு அப்படிச் சொன்னபோது, அகநெகிழ்ந்துபோய் அவரை அணைத்துக்கொண்டான் பிரதாபன்.
தைரியமாகச் சொல்லிவிட்டாலும் தந்தை என்ன சொல்லுவாரோ, ஏற்றுக்கொள்வாரோ என்று கலங்கிக்கொண்டுதானே இருந்தான். பொறுப்பாக நடக்கவேண்டியவன் காதல் என்று வந்து நிற்கிறான் என்று எண்ணிவிட்டால், அவனால் தாங்கமுடியாது. அவனது அப்பா மிக மிக முக்கியம் அவனுக்கு! அப்படியானவர் அவனைப் புரிந்துகொண்டாரே.
“உங்கட மருமகளை உங்களுக்கும் பிடிக்கும் அப்பா! அருமையானவள்!” என்றான் தகப்பனிடம்.
ஏற்றுக்கொண்ட புன்னகையுடன் அவன் தோளில் தட்டிக்கொடுத்தார் ரகுவரமூர்த்தி. அவன் அவரை அணைத்த வேகமும் கரங்களில் தெரிந்த மெல்லிய நடுக்கமுமே, அந்தப் பெண்ணின் மீதான மகனின் அன்பின் ஆழத்தையும் அதை அப்பா மறுத்துவிடுவாரோ என்று வெகுவாகப் பயந்ததையும் அவருக்குக் காட்டிக் கொடுத்திருந்தது.
அவன் அவருக்கு மகனேயானாலும் முழுமையான மனிதன். எனக்கு அவளைத்தான் பிடித்திருக்கிறது என்று அறிவித்துவிட்டுத் தன் திருமணத்தைத் தானே நடத்திக்கொண்டிருந்தால் அவரால் எதுவும் செய்திருக்க முடியாது. அப்படிச் செய்யாமல் தோளுக்கு மேல் வளர்ந்த தனயனாக இருந்தும் அவரின் சம்மதத்தை எதிர்பார்த்து நின்ற மகனின் அற்புதமான மனதை அந்த அப்பாவும் நன்றாகவே விளங்கிக் கொண்டிருந்தார்.
“முதல் பிரதியை கட்டிக்குடு. அதுதான் முறை. அதுக்குமுதல் அந்தப் பிள்ளை இங்க வந்தாலும் சந்தோசமா வாழாது. பிரதி வாழ விடமாட்டாள். இவள் இருக்கும்வரைக்கும் அந்தப் பிள்ளையை இங்க கொண்டு வந்திடாத.” என்றார்.
“அப்பா! நான் பிரதிக்கு அண்ணா அப்பா. எனக்கும் அவளை வச்சுக்கொண்டு கட்டுற ஆசை இல்லை. கல்யாணத்துக்கு நான் அவசரப்படவும் இல்லை. பெண் குடுத்துப் பெண் எடுக்கிற சம்மந்தத்துக்கு நீங்க வாக்குக் குடுத்து, அதை நான் மறுக்கக்கூடாது எல்லோ. அதுதான் இப்பவே சொல்லவேண்டி வந்தது. அண்ணனா நிண்டு, அவளின்ர கல்யாணத்தை ஒரு குறையும் இல்லாம செய்து வைக்கிறது என்ர பொறுப்பு அப்பா! அதுக்குப் பிறகுதான் நான் கட்டுவன். நீங்க கவலைப்படாம இருங்கோ. எல்லாத்தையும் நான் பாக்கிறன்!” என்று வாக்குக் கொடுத்தான் பிரதாபன்.
ரகுவரமூர்த்திக்குச் சந்தோசத்தில் தொண்டை அடைத்துப் போயிற்று! “என்ர பிள்ளையை நான் நல்லா வளத்திருக்கிறன் தம்பி!” பெருமையோடு சொல்லிவிட்டு அவனது தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் போனார்.
நெஞ்சம் நெகிழத் தந்தையைப் பார்த்தான் பிரதாபன். அப்பாவுக்காகவே பிரதிக்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்துக் கட்டிவைக்க வேண்டும். அவரின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். அவன் கொடுத்த வாக்கையும் நிறைவேற்ற வேண்டும்! மனதில் உறுதி பூண்டான்.
“நான் அவளைக் கட்டேல்ல. இண்டையோட அதையெல்லாம் விடுறன். நீ சிவானந்தனை கட்டுறியா? அவன் நல்லவன், நல்ல உத்தியோகம். சொந்தம் வேற. உனக்கே தெரியும். வேற வீட்டை போய் வாழுற உணர்வே உனக்கு வராது. மாமியும் நல்லவா. எல்லாத்தையும் விட அவனுக்கும் உன்னைப் பிடிக்கும்.” என்று இதமாக எடுத்துரைத்தான் பிரதாபன்.
“எனக்குப் பிடிக்கேல்ல அண்ணா!” கண்கள் கலங்கச் சொன்னாள் தங்கை. “கொஞ்சமாவது மனதுக்குப் பிடிச்சாத்தானே அண்ணா கல்யாணம் கட்டமுடியும்?” என்று அவள் கேட்டபோது, அவன் மனமும் கனிந்து போயிற்று!
என்னதான் நல்லவன் என்றாலும் மனத்துக்குப் பிடிக்கவேண்டாமா? யாதவி கூட அன்று என்ன சொன்னாள்? நல்ல மாப்பிள்ளையை அதுவும் அவளை நேசிப்பவனை மறுக்கிறாளே என்று சின்னக் கவலைதான். ஆனால், அவன் மட்டும் தான் நல்ல மாப்பிள்ளையா என்ன?
“அதுக்கு ஏனம்மா அழுறாய்? உனக்குப் பிடிச்சவனோடதான் உன்ர கல்யாணம் நடக்கும்! கவலைப்படாத.”
மாப்பிள்ளை தேடும் படலத்தை வெகுவாக, மிகவுமே உற்சாகமாக ஆரம்பித்தான் பிரதாபன். எந்தக் குறையுமில்லாத, வெளிப்படையாகச் சொல்லாதபோதும், அரவிந்தனை விட இன்னுமே சிறப்பான வரனாகத் தேடினான்.
எத்தனையோ வரன்களைக் கொண்டுவந்த போதிலும், “வேண்டாம், பிடிக்கேல்ல அண்ணா.” என்றாள் பிரபாவதி.
நமக்குப் பிடித்தாலும் அவளுக்குப் பிடிக்கவில்லை போல. பிடிக்காதவனைக் கட்டவா முடியும் என்று சளைக்காமல் தொடர்ந்து தேடிக்கொண்டுவந்தான் பிரதாபன். எந்தப் பிரயோசனமும் இல்லை. அரவிந்தனும் மறைமுகமாக உதவிசெய்தான்.
குடும்பப் பின்புலம் ஆராய்ந்து, மாப்பிள்ளையின் குணநலன் கவனித்து, நல்லவனா என்று நாயாக அலைந்து திரிந்து விசாரித்து, வேலை அவனுடைய செல்வநிலை என்று எதையும் விடாது அவதானித்து ஊரெல்லாம் சலித்துத் தேடிக்கொண்டு வந்தாலும் பிடிக்கவில்லை என்கிற ஒற்றை வார்த்தையில் அவனது அத்தனை முயற்சிகளையும் ஒன்றுமில்லாமல் ஆக்கினாள் பிரபாவதி.


