“இது அழகில்லை அண்ணா! எல்லாருக்கும் புத்தி சொல்லுற நீங்களா இப்பிடி நடக்கிறது? அதுவும் ஒரு பொம்பிளை பிள்ளைட்ட? இன்னும் ஒரு கிழமைதான் நிக்கப்போறா. அதுவரைக்கும் இங்க வந்துபோக ஆசைப்படுறா. அவ்வளவுதானே. விடுங்கோவன். உங்களுக்குப் பிடிக்காட்டி நீங்க விலகிப் போங்கோ.” என்று எடுத்துச் சொன்னாள் தங்கை.
எதுவுமே சொல்லாமல் இறுகிப்போய் நின்றான் சஞ்சயன்.
தன் வார்த்தைகள் தமையனை ஆற்றுப்படுத்தவில்லை என்று உணர்ந்து வேகமாக அவனுக்குப் பிடித்த பதத்தில் தேநீரை ஆற்றிக்கொண்டு வந்து கொடுத்தாள். அமைதியாகவே வாங்கி அருந்தியவன் நிதானத்துக்கு வந்துவிட்டான் என்று அவன் முகம் பார்த்துக் கணித்தாள் சஞ்சனா.
“ஏன் அண்ணா இவ்வளவு கோபப்படுறீங்க?” இதமான குரலில் மெல்லக் கேட்டாள்.
அவனோ அப்படிக் கேட்டவளின் விழிகளுக்குள் ஆராய்ந்தான். “நான் கோபப்படுறன். சரி! ஆனா நீ? மனதுக்க வச்சு வேதனைப்படுறாய். அவ்வளவுதான் வித்தியாசம். இல்லை எண்டு சொல்லு பாப்பம்?”
“அப்பிடியெல்லாம் இல்லை அண்ணா!” பார்வையை அகற்றிக்கொண்டு தடுமாறினாள் அவள்.
“அப்ப உனக்குக் கல்யாணத்துக்குப் பாக்கவோ?”
“இல்ல. இப்ப வேண்டாம்!” அவசரமாக மறுத்தவளையே கூர்ந்தான் சஞ்சயன். தமையனின் விழிகளை எதிர்கொள்வதைத் தவிர்த்தாள் அவள்.
“பாத்தியா? அவே செய்தது எங்களை மனதளவுல எவ்வளவு தூரத்துக்குப் பாதிச்சு இருக்கு எண்டு. இதைத்தான் என்னால பொறுக்க முடியேல்ல சஞ்சு. தாத்தா நினைவே இல்லாம கிடக்கிறார். அம்மம்மா தினமும் கண்ணீர் வடிக்கிறா. அம்மா நரகவாழ்க்கையை அனுபவிக்கிறா. இதையெல்லாம் பாத்து வளந்த நானும் நீயும், ‘கல்யாணமா? ஆளை விடுங்கடா சாமி’ எண்டுற அளவுக்கு வெறுத்துப்போய் இருக்கிறோம். இதெல்லாத்துக்கும் ஆர் காரணம்?” என்று அவளிடமே கேட்டான் அவன்.
பதிலற்று அவள் நிற்க, “விடு! அந்த ஆளை மாதிரி என்ர தங்கச்சிய அம்போ எண்டு விட்டுட்டு எங்கயும் போகாம இருந்தும், என்னால அவளுக்கு ஒரு சந்தோசமான வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க முடியேல்ல. ஆனா அவள், இன்னும் கொஞ்சக் காலத்தில தனக்குப் பிடிச்சவனைக் கட்டி சந்தோசமா இருப்பாள்!” தன்னை மறந்து பேசிய தமையனின் வார்த்தைகளில் பொதிந்து கிடந்த வலி சஞ்சனாவையும் தாக்கியது.
“இல்லை அண்ணா. இது எல்லாத்துக்கும் மாமா ஒரு காரணமா இருக்கலாம். அவ்வளவுதான். மற்றும்படி முழுக்காரணம் எங்கட அம்மாவும் அப்பாவும் தான். ரெண்டுபேருமே தங்கட வாழ்க்கையைச் சந்தோசமா கொண்டுபோக எந்த முயற்சியையும் எடுக்கேல்ல. எங்களைப்பற்றி யோசிக்கவே இல்ல. அதுவும் அம்மா அப்பாவை குறை சொல்லிச் சொல்லியே இவ்வளவு காலத்தையும் ஓட்டிப்போட்டா.” என்றவளை, “அம்மாவைப்பற்றி அப்பிடிச் சொல்லாத!” என்று வேகமாக அடக்கினான் அவன்.
அன்னையிடம் சிலபல குறைகள் உண்டு என்று அவனுக்கும் தெரியும் தான். ஆனால், பிடிக்காத ஒருவனோடு வாழ்வது என்பது எவ்வளவு பெரிய நரகம்? அப்படி வாழ்ந்து அவரின் குழந்தைகளுக்கும் அன்னையாகி இருக்கிறார். அதுவே அவருக்குள் மிகப்பெரிய வெறுப்பை உண்டாக்கிற்று! அந்த வெறுப்பில் அவரின் இயல்பே மாறிப்போயிற்று. இதையெல்லாம் அவனால் கூடப்பிறந்தவளிடம் சொல்ல முடியாது. அதில் அவளை அடக்கினான்.
“இல்லை அண்ணா. அம்மா அப்பாவை கொஞ்சம் விளங்கி நடக்க முயற்சி செய்து இருக்கலாம். விட்டுக்குடுத்து..” என்று அவள் சொல்லிமுடிக்க முதலே, “என்ன விட்டுக்குடுக்கிறது? அவர் என்ன பெரிய கொம்பரே விருப்பு, வெறுப்பு, ஆசை எல்லாத்தையும் அவருக்கு விட்டுக்குடுத்து நடக்க? உனக்கு பிடிக்காத ஒருத்தனை கட்டு எண்டு நான் சொன்னா நீ கட்டுவியா? கட்டிப்போட்டு எல்லாத்தையும் விட்டுக்குடுத்து அவனுக்கு பிடிச்ச மாதிரி மட்டுமே நடப்பியா? சொல்லு சஞ்சு?” என்ற, தமையனின் சீற்றத்தில் அதிர்ந்து நின்றாள் சஞ்சனா.
ஏன் இந்த அண்ணா அம்மா என்று வந்தாலே இப்படிக் கண்மூடித்தனமாக இருக்கிறான் என்று அவளுக்கு விளங்கவே இல்லை. அதற்குமேல் வாயைத் திறக்கவே பயந்தாள். அது அவனுக்கு ஒரு மாதிரி ஆகிற்று. யார் மீதோ இருக்கிற கோபத்தை அவளிடம் காட்டிவிட்டான். “ப்ச்! விடு! நான் ஏதோ கோபத்தில..” என்று அவன் இறங்கி வர, அவளுக்கு முகம் மலர்ந்து போயிற்று.
“சரியோ பிழையோ அதெல்லாம் முடிஞ்சு போச்சு அண்ணா. நாங்க அடுத்த தலைமுறை. மன்னிச்சு மறப்போமே?” என்றாள் கெஞ்சும் குரலில்.
“அப்ப நீ கல்யாணத்துக்கு ஓம் எண்டு சொல்லு!” என்றான் அவன்.
அவளின் வாய் வேகமாக மூடிக்கொண்டது. திருமணம் என்று நினைத்தாலே ஒரு வெறுப்பு. மனதில் மிகுந்த பயம். ஒரு ஆணைத் துணையாகச் சிந்திக்கவே முடிவதில்லை. அம்மா அப்பா மாதிரி ஒரு வாழ்க்கை அமைந்துவிட்டால்? அதற்குப் பேசாமல் இந்த வீட்டுக்குச் செல்லப் பெண்ணாகவே வாழ்வது மேலாயிற்றே.
தங்கையின் அமைதியே பதிலைச் சொல்லிவிட, “புத்திமதி சொல்லுறது ஈஸி அத செயல்ல காட்டுறது சரியான சிரமம் எண்டு இப்ப விளங்குதா?” என்றவன் இரண்டு அடி எடுத்து வைத்துவிட்டு நின்றான். “காலம் போய்ட்டுதுதான். ஆனா, அம்மான்ர கண்ணீர், எங்களை பெத்தவரின்ர குணம், அம்மம்மாவின்ர கவலை, தாத்தான்ர நிலை எண்டு இன்னும் எதுவுமே மாற இல்லை சஞ்சு.” என்றுவிட்டு நடந்தான் அவன்.
ஒரு கணம் அதிர்ந்து நின்றாலும், “நீங்க மாமாவை ஏற்றுக்கொள்ளுங்கோ. நான் கல்யாணத்துக்கு ஓம் எண்டு சொல்லுறன்.” என்று அவசரமாகச் சொன்னாள் அவள்.
“ஓ…! தியாகம் செய்றீங்களோ?” அவனின் கோபம் மிகுந்த குத்தலில் அவள் தலையைக் குனிந்தாள். “என்ர தங்கச்சிக்கு எப்பிடி கல்யாணம் செய்துவைக்க வேணும் எண்டு எனக்குத் தெரியும்! அவளைச் சந்தோசமா வாழவைக்கவும் தெரியும்! என்னை என்ன அந்த ஆள் எண்டு நினைச்சியா அம்மாவை மாதிரி உன்னையும் அழ வைக்க?” என்றுவிட்டுப் போனான் அவன்.
அவளுக்குத்தான் அது தெரியுமே! என்ன, இந்தப் பாசம் தான் அவன் கண்களைக் கட்டிப் போட்டிருக்கிறது. சஹானாவின் விடயத்தில் மூர்க்கனாகவும் மாற்றிப்போட்டிருக்கிறது.