கூசுகிற அளவுக்கு என்ன கேவலமான காரியத்தைச் செய்தாளாம்?
“நீங்க எல்லாரும் எனக்கு யாரோ இல்ல. என்ர சொந்தம். உங்களிட்ட என்ர அப்பாவில பிழை இல்லை எண்டு சொல்ல வந்திருக்கிறன். அதுக்கு எதுக்கு மனசு கூச வேணும்? அவரும் ஒரு சூழ்நிலை கைதியாத்தான் அந்தநேரம் நிண்டிருக்கிறார். வேற வழி இல்லாமத்தான் போயிருக்கிறார். இப்ப வரைக்கும் அதை நினைச்சு கவலைப்படுறார் மச்சான்.” கிடைக்கிற சந்தர்ப்பத்தில் எப்படியாவது தந்தையைப் புரியவைத்துவிட முயன்றாள் அவள்.
“சொந்தபந்தம் தேவையில்லை எண்டு போயிட்டு பிறகு எதுக்கு கவலைப்படவேணும்? இங்க நாங்க அவரை தேடவும் இல்ல நினைக்கவும் இல்ல!” அவளின் எந்த விளக்கத்தையும் அவன் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
“ஒரே ஒருக்கா அப்பான்ர பக்கம் நியாயம் இருக்காதா எண்டு யோசிச்சுப் பாக்க மாட்டீங்களா மச்சான்?அம்மா, அப்பா, தங்கச்சி எண்டு பாசமா வாழ்ந்த ஒரு மனுசனுக்கு அவ்வளவு ஈஸியா நாட்டை விட்டு போக மனம் வருமா சொல்லுங்க?”
“வந்திருக்கே!” என்றான் அவன். “அந்தளவுக்கு கல்லு நெஞ்சு! சுயநலம்! இல்லாட்டி அந்த ஆள் வந்திருக்க வேணும். வந்து நேரா கதைச்சிருக்க வேணும். அதுக்குத் தைரியம் இல்லாத ஒரு கோழையைப் பற்றி நான் ஏன் யோசிக்க?”
“அவர் ஒண்டும் கோழை இல்ல!” அதற்குமேல் முடியாமல் வெடுக்கென்று பதிலிறுத்தாள் சஹானா. எவ்வளவுக்குத்தான் தளைந்து போவது?
“அப்ப வரச்சொல்லு! வந்து தன்னில பிழை இல்லை எண்டு நிரூபிக்கச் சொல்லு!” அவன் பேச்சிலும் சூடேறிற்று!
“நீங்க ஏன் வெளிநாட்டுக்குப் போகேல்ல?” சம்மந்தமே இல்லாமல் கேட்டாள் அவள். “இங்க எந்த வீட்டுல பாத்தாலும் யாரோ ஒருத்தர் வெளிநாட்டுலதான் இருக்கினம். நீங்க மட்டும் ஏன் இங்கேயே இருக்கிறீங்க?”
“நான் ஏன் போகோணும்?” என்று திருப்பிக் கேட்டான் அவன். “இங்க என்ன இல்லை எண்டு அங்க வந்து உங்களைப்போல அகதியா வாழ? என்ர நாட்டுல என்ர ஊருல நான் நானா வாழ்ந்துகொண்டு இருக்கிறன். எனக்கு வெளிநாடு தேவையில்லை!” அலட்சியமாகச் சொன்னான் அவன்.
“இதேதான் மச்சான். உங்களிட்ட இருக்கிற அத்தனையும் என்ர அப்பாட்டையும் இருந்தது. நல்ல குடும்பம், நல்ல படிப்பு, நல்ல வேலை, சமுதாயத்தில நிறைஞ்ச மதிப்பு இப்பிடி எல்லாமே! பிறகும் ஏன் வெளிநாட்டுக்குப் போனவர்? போகிற சூழ்நிலை வந்திட்டுது.” தன்னால் முடிந்தவரை அவனுக்கு அப்பாவின் பக்கத்தை விளங்கவைக்க முயன்றாள்.
அவன் எள்ளலாகச் சிரித்தான். “புத்திசாலித்தனமா கதைக்கிறதா நினைப்பு போல. ஆனா உனக்கு இதெல்லாம் விளங்காது. விளங்கிறதுக்கு இந்த மண்ணில பிறந்திருக்க வேணும். இந்த வீட்டில வாழ்ந்திருக்க வேணும். இண்டைக்கும் எத்தனையோ குடும்பம் எங்களை நம்பி வாழுது. எத்தனையோ பேரின்ர வாழ்க்கையைத் தாத்தா மாத்தி இருக்கிறார். அப்பிடியான ஒரு குடும்பத்தில பிறந்து வளந்த ஒருத்தர் குலம் கோத்திரம் தெரியாத ஒருத்தியோட இந்த ஊர்ல வாழ ஏலாது. சனம் மதிக்காது. கூடப்பிறந்த தங்கச்சி இருக்க பொம்பிளையை கூட்டிக்கொண்டு வந்த ஒருத்தனை ஊரே கேவலமா பாக்கும். அந்தப் பயத்திலதான் கோழையா ஓடிப்போனவர். நீ சொன்னமாதிரி யோசிச்சா கூட, ‘நான் செய்தது சரி’ எண்டுற நம்பிக்கை இருந்திருந்தா இங்கயே இருந்து போராடி இருக்கவேணும்! தன்னை நியாயவான் எண்டு நிரூபிச்சு இருக்கவேணும்.”
அவள் சொல்கிற எதையும் அவன் கேட்பதாக இல்லை. தன்னுடைய நியாயத்தில் இருந்து இறங்கி வரவும் தயாராயில்லை. இவனுக்கு எப்படித் தந்தையைப் புரிய வைப்பது என்று மலைத்தாள் சஹானா.
உன் அன்னை தான் இதற்கெல்லாம் காரணம் என்று உடைத்துப்பேசப் பயந்தாள் சஹானா. அது அவனுக்குக் கோபமூட்டக் கூடுமே! ஆனாலும் விடாது, “தான் விரும்பின என்ர அம்மாக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையைக் குடுக்க நினைச்சிருக்கலாம். தன்னை நம்பி வந்த அம்மாவை சந்தோசமா வச்சிருக்க வேணும் எண்டு நினைச்சிருக்கலாம். அது இங்க கிடைக்காது எண்டு தெரிஞ்சு அப்படி நடந்திருக்கலாம்.” என்றாள் தெளிவாக.
“நேற்று வந்த ஒருத்தியைப்பற்றி அவ்வளவு யோசிச்ச அந்தப் பெரிய மனுசன் பத்துமாதம் சுமந்து, பெத்து, வளத்து, ஆளாக்கின தாய் தகப்பனை நினைக்கேல்லையே? கூடப்பிறந்தவளை நினைக்க இல்லையே? குடும்ப மானத்தைப்பற்றி யோசிக்க இல்லையே? அந்தளவுக்குச் சொக்குப்பொடி போட்டிருக்கு!” அவளின் எல்லா கேள்விக்கும் அவளின் வாயை அடைக்கவைக்கும் பதில் அவனிடம் இருந்தது.
“உங்கட அம்மாக்கு அப்பா கல்யாணம் பேசினவராம். அத்தைதான் வேண்டாம்..” அவள் சொல்லிமுடிக்கமுதல் குறுக்கிட்டு,
“ஓமோமோம்! அவர் பேசப்போனதும் தெரியும்! அங்க உன்ர அம்மா வலை வீசினதும் தெரியும்! அதுல மயங்கி கூடப்பிறந்தவளை மறந்து ஓடிப்போனதும் தெரியும்!” என்று முடித்துவைத்தான் அவன்.
அவளின் பொறுமை பறந்தே போயிருந்தது.
“சும்மா சும்மா வார்த்தைகளைக் கொட்டாதீங்க மச்சான்! அப்பா அம்மாவை ரெண்டு வருசமா விரும்பினவர். ‘என்ர தங்கச்சிக்குக் கல்யாணம் செய்து வச்சிட்டுத்தான் நான் கல்யாணம் கட்டுவன்’ எண்டு அப்பப்பாக்கு வாக்கும் குடுத்திருந்தவர். அதேமாதிரி உங்கட அம்மாக்கு நல்ல மாப்பிள்ளைகளும் பாத்தவர். யாரையும் கட்டமாட்டன் எண்டு நிண்டு தானும் வாழாம அப்பாவையும் வாழவிடாமச் செய்தது உங்கட அம்மா! ஒரு மனுசன் எவ்வளவு காலத்துக்குத்தான் பொறுமையா இருக்கிறது? நியாயமான காரணம் இருந்தாலும் பரவாயில்லை. மனதில வஞ்சம் வச்சு அப்பாவை வாழவிடக்கூடாது எண்டு நினைச்ச உங்கட அம்மாக்கு என்ன செய்தும் பிரயோசனம் இல்லை எண்டு தெரிஞ்ச பிறகுதான் ஊரை விட்டுப் போனவர். விளங்கினதா? சும்மா சும்மா என்ர அப்பாவை மட்டும் குற்றம் சாட்டாதீங்க! நான் சொன்னதில நம்பிக்கை இல்லாட்டி இதெல்லாம் உண்மையா இல்லையா எண்டு உங்கட அம்மாட்ட கேளுங்க!” படபட என்று அத்தனையையும் கொட்டிமுடித்தாள் அவள்.
கொதித்து எழப்போகிறான் என்று அவள் நினைக்க அவனோ கையைத் தட்டினான். “அபாரம்! அருமையான கற்பனை! நீயெல்லாம் படம் எடுத்தா நூறு நாள் என்ன ஆயிரம் நாளே ஓடும்! ஆனா உன்ர பருப்பு இங்க வேகாது!” என்று உதட்டைப் பிதுக்கிவிட்டுப் போனான் அவன்.
உடலும் மனமும் சோர்ந்துவிட அவளின் கால்கள் தாமாக ரகுவரமூர்த்தியிடம் சென்று நின்றது. எப்போதும்போல அவரின் கால்மாட்டில் தலை வைத்துச் சரிந்துகொண்டாள். ‘எல்லாரின்ர மனசுக்கையும் இவ்வளவு கவலை, கோபம் இருந்திருக்கு எண்டு இவ்வளவு நாளும் எனக்குத் தெரியாதே அப்பப்பா. தெரிஞ்சிருந்தா முதலே அப்பாவை கூட்டிக்கொண்டு வந்திருப்பன். இனி என்ன செய்யறது எண்டு தெரிய இல்லையே?’ மனம் அதுபாட்டுக்குத் தன் வேதனைகளை அவரிடம் கொட்ட அப்படியே கிடந்தாள் சஹானா.
தெய்வானை நெருங்கவே விடவில்லை. பிரபாவதியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. சஞ்சயன், தன் முடிவுகளில் இருந்து மருந்துக்கும் மாற மறுத்தான். சஞ்சனா இந்த வீட்டில் செல்லப்பிள்ளை. அவளின் பேச்சு எடுபடாது.
அவளின் தலையை அவர் வருடிக்கொடுப்பது போல ஒரு தோற்றம் அவளுக்குள். அன்று வைத்தியர் வந்து பார்த்துவிட்டு எப்போதும் போல்தான் என்றாராம். ஆனால், அவரின் கரத்தை அவள் பற்றிக்கொண்டு இருக்கிறபோது ஏதோ ஒரு அசைவை சஹானா உணர்வாள். இதைச் சொன்னால் நம்புவார் தான் இல்லை.
அப்போது, மெல்ல அவளின் தோளைத் தட்டி, ‘வெளியே வா!’ என்று அவசரமாக அழைத்துச் சென்றாள் சஞ்சனா.
அவர்களின் வீட்டுக்கு நேர் முன்னே இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஒருத்தி அந்த வீட்டின் படலையோடு நிற்க இன்னொருத்தி சைக்கிளில் நின்றிருந்தாள். அவளைக் காட்டி, “அம்மம்மாக்கு இவவைத்தான்(இவளைத்தான்) அண்ணாக்கு கட்டிவைக்க விருப்பம்.” என்றாள் சஞ்சனா.
“என்னது?” என்று அதிர்ந்தாள் சஹானா. “அவரையெல்லாம் கட்டி மனுசன் வாழுவானா? உன்ர அண்ணா எண்டதுக்காக ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர வாழ்க்கையை வீணாக்காத சஞ்சு!” என்றவளை நன்றாக முறைத்தாள் சஞ்சனா.
“உன்ர வாய்க்கு உனக்குத்தான் அண்ணாவை கட்டி வைக்கப்போறன். பார்!”
கையெடுத்துக் கும்பிட்டாள் சஹானா. “அம்மா தாயே! நீ ஃபிரீயா தந்தா கூட எனக்கு உன்ர அண்ணா வேண்டாம். யாராவது கண்ணைத் திறந்துகொண்டுபோய்ப் பாழும் கிணத்துக்க விழுவினமா சொல்லு?” என்றுவிட்டுத் திரும்பியவள், தன் பின்னால் நின்ற சஞ்சயனைக் கண்டதும் திருதிரு என்று விழித்தாள். அடுத்த நொடியே, “ஐயோ நான் ஒண்டுமே சொல்ல இல்ல!” என்றபடி விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடியேவிட்டாள்.
சஞ்சனாவுக்கோ அவள் முழித்த முழியில் சிரிப்பை அடக்கவே முடியாமல் போக விழுந்து விழுந்து சிரித்தாள்.


