மேள தாள வாத்தியங்களோடு பெண் அழைத்துவரப்பட்டு அவளுக்கான சடங்குகள் அனைத்தும் சிறப்பாக நடந்து, தாய் மாமனிடமும் பெரியவர்களிடமும் ஆசிர்வாதங்களைப் பெற்றபின், முக்கியமானவர்கள் புகைப்படத்துக்கு நின்றனர்.
சஞ்சனாவினால் அவளோடு கூட நிற்கமுடியாமல் ஓடியாடி வேலைகளைப் பார்க்கவேண்டி இருந்தாலும், தங்களின் குடும்பம் புகைப்படத்துக்கு நிற்க ஆயத்தமானபோது ஓடிவந்து சஹானாவையும் அழைத்தாள்.
“நான் எதுக்கு?” என்று கேட்டாள் சஹானா.
“பின்ன என்ன தனிய நிப்பியா மச்சி? வா!” என்று சிரித்தாள் சஞ்சனா.
“நான் என்ன உங்கட குடும்பமா உங்களோட நிக்க?” சஹானாவின் கேள்வியில் சஞ்சனாவின் சிரிப்பு மறைந்துபோனது. “என்ர அப்பாக்குப் பதிலா தனியாத்தான் நிக்கப்போறன். நீ போ!” என்றவளைத் திகைப்புடன் பார்த்தாள் சஞ்சனா.
அதற்குள், சஞ்சயன் தங்கையை வரும்படி அழைத்தான். ‘எல்லாம் இந்த அண்ணாவால’ சினத்துடன் அவனை முறைத்தவளுக்கு அப்போதுதான் மொத்தக் குடும்பமும் மேடையில் நின்றுகொண்டு இவளுக்காகக் காத்திருப்பது தெரிய வேறு வழியற்று மேடையேறினாள். நெஞ்சிலோ பெருத்த வலி. அவள் சரியில்லை என்று கண்டு, “என்னத்துக்கு ஒரு மாதிரி நிக்கிறாய்?” என்றான் சஞ்சயன் மெல்லிய குரலில்.
கோபத்துடன் அவனைத் திரும்பிப் பார்த்து, “எல்லாம் உங்களாலதான். ஃபோட்டோக்கு வா எண்டு கூப்பிட்டா உங்களோட நிக்க நான் என்ன உங்கட குடும்பமா எண்டு கேக்கிறாள். அவளை எந்தளவுக்கு நீங்க காயப்படுத்தி இருந்தா அப்பிடிக் கேப்பாள்!” என்று சீறினாள்.
“தங்கச்சி கமராவை பாருங்கோ!” என்ற குரலில் சஞ்சனா பார்வையைத் திருப்பிக்கொள்ள, சஞ்சயனின் விழிகள் அப்படிச் சொன்னவளிடம் தாவியது. மேடையைப் பார்ப்பதுபோல் முகத்தை வைத்திருந்தாலும் அங்கு நின்ற அவர்களை அவள் பார்க்கவே இல்லை.
அவர்களின் குடும்பம் இறங்கிய பிறகு தனியாகவே சென்று நின்றாள் சஹானா.
“அவளின்ர தடிப்பப் பாத்தியா?” மகனிடம் புகைந்தார் பிரபாவதி. “தான் வந்திருக்கிறன் எண்டு தனியா நிண்டு ஊருக்கே சொல்லிக்காட்டுறாள்!” நல்லபெயர் வாங்கிவிடப்போகிறாளே என்று அவருக்குப் புகைந்தது.
“அவள் என்ன செய்தாலும் அதுல ஒரு குறையைக் கண்டுபிடிக்காம பேசாம இருங்கம்மா!” என்று சிடுசிடுத்தாள் சஞ்சனா.
அதில் சஞ்சயன் அவளைக் கண்டிப்புடன் நோக்க, “சும்மா என்னை மட்டும் அடக்கவேண்டாம் அண்ணா. நீங்களும் கொஞ்சம் கவனமா கதையுங்கோ! அம்மாவை பற்றி ஒரு வார்த்த சொல்ல என்னையே விடமாட்டீங்க. அப்பிடியிருக்க, அவளின்ர அப்பாவை செத்திட்டார் எண்டு சொன்னா தாங்க ஏலுமா? நீங்க இப்பிடியெல்லாம் கதைக்கிறதுக்குக் காரணம் அம்மாதான். சும்மா சும்மா எல்லாத்தையும் உங்கட காதில போட்டு நல்லா வெறுப்பை வளத்து வச்சிருக்கிறா!” என்று, அவனிடமும் பொரிந்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள்.
மேடையில் சிரித்த முகமாக நின்றபோதும், அந்தச் சிரிப்பில் உயிர்ப்பே இல்லை என்று சஞ்சனாவுக்குத் தெரியாதா என்ன? அவளின் இயல்பையே மாற்றிவிட்டார்களே! மனதில் வலித்தது.
சஞ்சயனும் பொத்தாம் பொதுவாக மேடையைப் பார்ப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் அவளைத்தான் கவனித்துக்கொண்டிருந்தான். தந்தையின் நினைவு வந்துவிட்டது போலும். இதோ இதோ என்று கண்கள் தளும்பிக்கொண்டிருந்தது அவளுக்கு. புகைப்படம் எடுத்ததும், நெதர்லாந்தில் இருந்து வரும்போது அணிந்து வந்திருந்த மெல்லிய செயினை முதலே கழற்றி வைத்திருந்த சஹானா அதைப் பெண்ணுக்கு அணிவித்துவிட்டாள்.
“இப்பிடி ஒரு விசேசத்துக்கு நான் வரவேண்டி வரும் எண்டு எனக்குத் தெரியாது. அதால புதுசு வாங்க இல்ல. இது நான் போட்டதுதான், எண்டாலும் புது டிசைன்தான்!” என்று முறுவலித்தவளைக் கண்டு, சுற்றியிருந்த உறவினர்கள் சொந்தக்காரர்கள் எல்லோருக்கும் பெரும் திருப்தி.
‘பிரதாபன் வெளிநாட்டுக்குப் போனாலும் மகளை நல்லாத்தான் வளத்திருக்கிறான்..’ என்கிற எண்ணத்தைத் தன் ஒற்றைச் செய்கையில் அங்கிருந்த பலருக்குள்ளும் விதைத்துவிட்டிருந்தாள் சஹானா.
மத்தியான விருந்து வெளியே தயாராகி இருந்தது. “எனக்குப் பசியில்ல சஞ்சு.” என்றவளின் பேச்சைக் காதிலேயே விழுத்தாமல் அவளை இழுத்துக்கொண்டு நடந்தாள் சஞ்சனா. “நீ போய் இரு மச்சி! நான் போட்டுக்கொண்டு வாறன்!” என்றுவிட்டுத் தட்டு நிறையப் போட்டுக்கொண்டுவந்து கொடுத்தாள்.
பார்த்தவள் மலைத்துப்போனாள். “இவ்வளவும் என்னால சாப்பிட ஏலாது.” அந்தளவில் அங்கிருந்த எல்லா உணவு வகையாலும் நிறைத்து இருந்தாள் சஞ்சனா.
“அதெல்லாம் சாப்பிடலாம் சாப்பிடு!”
அதன்பிறகு என்ன பேசுவது? என்றுமில்லாத மௌனம் அவர்களுக்கிடையில் வந்து அமர்ந்துகொண்டது. சஹானா சாப்பிட முயன்றுகொண்டிருந்தாள்.
“இண்டைக்கு நீ கட்டாயம் வரவேணும் எண்டு நினைச்சுக்கொண்டே இருந்தன் மச்சி. இரவு வெளிக்கிட்டா இனி வரமாட்டாய் என்ன?” எனும்போதே சஞ்சனாவின் கண்கள் இலேசாகக் கலங்கிற்று.
அதுவரை உணவை அளைந்துகொண்டு இருந்த சஹானாவின் கை அப்படியே நின்றது. வரக்கூடாது என்பதுதான் அவளின் முடிவும்! பிறகும் என்னத்துக்கு இந்த மனது கிடந்து துடிக்கிறது? திடீரெனத் தன்னைச் சூழ்ந்த துக்கத்தை, பார்வையை அங்குமிங்கும் சுழற்றி விரட்ட முயன்றாள்.
“ஆர் என்ன சொன்னாலும் என்னை மறந்திடாத மச்சி! நானும் உன்ன மறக்கமாட்டன். மறக்கேலாது! எனக்குக் கல்யாணம் எண்டு ஒண்டு நடந்தா கட்டாயம் நீ இல்லாம நடக்காது! நீ வராட்டி நான் கல்யாணம் செய்யமாட்டன்!” உறுதியாகச் சொன்னாள் சஞ்சனா.
அடர்த்திமிகுந்த தூய பாசம் ஒன்று அவளை அழுத்துவது போலிருக்க, திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள் சஹானா. இவளை விட்டும் விலகியிருப்போம் என்று நினைத்தால் விடமாட்டாள் போலிருக்கிறதே.
“சத்தியமாத்தான் சொல்லுறன், உன்ர கல்யாணத்த மாமா எப்பிடியும் நெதர்லாந்துல தான் வைப்பார். அங்க நான் வரேலாது. ஆனா நீ இங்க வரலாம் தானே. அதால நீ இல்லாம எனக்குக் கல்யாணம் நடக்காது! நீ மட்டும் இல்லை! என்ர மாமா குடும்பம் வந்தாத்தான் எனக்குக் கல்யாணம். அப்ப என்ர வீட்டுக்காரர் என்ன செய்வினம் எண்டு நானும் பாக்கிறன்!” என்று மீண்டும் அழுத்திச் சொல்லிவிட்டு, “யார் என்ன சொன்னாலும் சரி, நீ என்ர மச்சிதான்! விளங்கிச்சோ?” என்றாள் உறுதியான குரலில்.