அதுவரை நேரமும் அடக்கிவைத்த துக்கமெல்லாம் பீறிட்டுக்கொண்டு கிளம்ப அதன் அடையாளமாக கண்ணீர் துளிகள் இரண்டு உணவுத் தட்டில் விழுந்து சிதறியது. சஞ்சனாவுக்கும் கண்ணீர் மல்கியது. கைக்குட்டையால் ஒற்றி எடுத்துவிட்டு அவளுக்கும் நீட்டினாள்.
வாங்கித் துடைத்துவிட்டு அழுகை நிற்கத் தண்ணீரைப் பருகினாள் சஹானா.
அங்கே வந்த பெண்மணி ஒருவர், “சஞ்சுமா! விதுசான்ர ரூம் திறப்பு எங்க எண்டு கிளிச்சித்தி கேட்டவளம்மா. ஓடிப்போய் எடுத்துக் குடுத்திட்டு வா பிள்ளை. விதுசா அடுத்த மேக்கப் போடவேணுமாம்.” என்றார்.
விதுசா தான் இன்றைய நாயகி. மத்தியான உணவின்போது அவள் அடுத்த உடைக்கு மாறவேண்டும். கிடைத்த நேரத்தில் சஹானாவிடம் வந்திருந்தாள் சஞ்சனா. “இந்தா வாறன் சித்தி.” என்று அவரிடம் சொல்லிவிட்டு, மிகுதி உணவை ஒரே பிடியில் உள்ளுக்குத் தள்ளிவிட்டு, “நீ சாப்பிடு! முழுக்கச் சாப்பிடாம எழும்பக் கூடாது சொல்லிப்போட்டன்! நகை நட்டு எல்லாம் வச்சு எடுக்கிற படியா ரூம் திறப்பை கையிலேயே வச்சிருக்கச் சொன்னவா சித்தி. குடுத்திட்டு ஓடிவாறன்!” என்றுவிட்டு ஓடினாள் அவள்.
அதற்குமேல் உண்ணமுடியாமல் தானும் எழுந்துகொண்டாள் சஹானா. குப்பை வாளியின் புறமாகப் போனவளை மாறித்தான் சஞ்சயன்.
இவளையே கவனித்துக்கொண்டு இருப்பானோ? ஒருவித அச்சத்துடன் அவனை நோக்கினாள் சஹானா.
“எங்க போறாய்?”
“கொட்ட.” தட்டைக் காட்டி எழும்பாத குரலில் உரைத்தாள்.
கணத்தில் கோபம் வந்துவிட, அவளை இழுத்துக்கொண்டு வந்து மீண்டும் வலுக்கட்டாயமாக அமர்த்தினான். “தட்டு முழுக்கச் சோறு. இத கொட்டப்போறியா நீ? இந்த மெத்தின குணத்தை வேற எங்கயும் போய்க் காட்டு! மரியாதையா போட்டதைச் சாப்பிட்டு எழும்பவேணும் சொல்லிப்போட்டன்! இந்தச் சோறை சோறா கொண்டுவாறதுக்கு யாரோ ஒரு விவசாயி ஆறுமாசமா உழைச்சிருப்பான். நீ ஒரு நொடியில தூக்கி குப்பைல போடப்பாக்கிறியா! உன்னையெல்லாம் பட்டினி போடவேணும்! அப்பதான் சாப்பாட்டின்ர அருமை தெரியும்!” அவனின் கடுமையான அதட்டலில் கலங்கிச் சிவந்துபோனது சஹானாவின் முகம். சுற்றியிருந்தவர்களின் பரிதாபம் வேறு கொன்றது.
அவர்களில் யாரோ ஒருவர், “விடு தம்பி! வெளிநாட்டில பிறந்து வளந்த பிள்ளை, இதெல்லாம் பாத்திருக்காது!” என்று காட்டிய கரிசனமும் கண்ணீரைத்தான் வரவழைத்தது. தலையை நிமிர்த்தாமல் உணவை விழுங்கத் தொடங்கினாள். குத்தரிசிச் சோறு தொண்டைக்குள் சிக்கிக்கொண்டபோதும் நிறுத்தவில்லை. காரம் நெஞ்சை எரித்தபோதும் விடவில்லை.
அவள் முழுவதையும் சாப்பிட்ட பிறகே விட்டான் அவன்.
கை கழுவி ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வந்தது. வாந்தி வாந்தியாக எடுத்துத் தள்ளினாள். அவளுக்கு முடியவே இல்லை. எடுத்த வாந்தியில் தலையைச் சுற்றியது. தொண்டை புண்ணாகிப் போயிற்று! கண்ணீர் வேறு காரணமே இல்லாமல் வழிந்தது. நெஞ்சு எரிந்தது. அதைவிட அதிகமாக வலித்தது. அவளைத் தேடிக்கொண்டு வந்த சஞ்சனா, இவள் இருந்த நிலையைக்கண்டு திகைத்துப்போனாள்.
நடந்ததை அறிந்து தமையன் மீது மிகுந்த எரிச்சல் வந்தபோதும், முதுகைத் தடவிவிட்டு, தண்ணீர் அருந்தக் கொடுத்து அவளைத் தேற்றினாள்.
காற்றாட நடப்பதுபோல் அந்த வீட்டின் பின்பக்கம் அழைத்துப்போனாள். அந்த ஊராரின் விவசாயத் தோட்டமெல்லாம் வீட்டிலிருந்து நடந்து போகிற தூரத்தில் பின் பக்கத்தில்தான் அமைந்திருந்தது. அங்கே சஹானா இதுவரை போனதில்லை. இன்றோ, ஒரு பக்கமாக வயல் காணிகள் பச்சைப் பசேல் என்று கம்பளத்தை விரித்துவிட்டதுபோன்று காட்சி தர இன்னொரு பக்கம் பாவற்கொடி பந்தல், பூசணிக்கொடி, மிளகாய்ச் செடிகள், குடை மிளகாய் இப்படி நிறைய. அதன் எல்லை எதுவென்றே தெரியாத அளவில் தோட்டம் பரந்து விரிந்து நின்றது. எங்கோ தொலைவில் இருந்து தோட்டத்தை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த பனைகள் தான் எல்லையாம் என்றாள் சஞ்சனா.
அப்போதும் வேலை செய்துகொண்டு இருந்தவர்களைக் காட்டி, “பெரும் பாடு பட்டுத்தான் விவசாயம் செய்றது மச்சி. அதோட, இங்க எல்லா வீடுமே விவசாயம் தான். அதுதான் அண்ணாக்கு ஒரு பருக்கை சோத்த வீணாக்கினாலும் பிடிக்காது. அதுல கோபப்பட்டுட்டார் எண்டு நினைக்கிறன்.” என்று மறைமுகமாகச் சமாதானப்படுத்தினாள்.
அவளைப்பார்த்து வெற்றுப்புன்னகை சிந்தினாள் சஹானா. “இதையெல்லாம் காட்டி நீ விளங்கப்படுத்த தேவையே இல்ல சஞ்சு. எனக்கே தெரியும். எதையும் வீணாக்கிறது எனக்கும் பிடிக்காதுதான். ஆனா..” என்றவள் மேலே பேசாமல் அகன்ற வெளியில் விழிகளைப் பரப்பினாள்.
தன்னைச் சமன்படுத்திக்கொள்ளத் தனக்குள் போராடுகிறாள் என்று, நிலையற்று அலைந்த விழிகள் சொல்ல, “மச்சி..” என்றவளிடம் திரும்பி, “உன்ர அண்ணான்ர கோபமும் நான் விட்ட பிழையும் எனக்கு விளங்காம இல்ல. அதுக்காக அந்த இடத்தில வச்சு எல்லாருக்கும் முன்னால அவர் நடந்தமுறை சரி எண்டு இப்பவும் என்னால ஏற்க முடியேல்ல. உன்ர அண்ணாக்குச் சாப்பாட்டை வீணாக்கப் பாத்தன் எண்டுறதை விட அதைச் செய்தது நான் எண்டுறதுதான் முன்னுக்கு நிண்டிருக்கும். அதாலதான் அவ்வளவு பெரிய தண்டனையைத் தந்தவர். எனக்குக் குத்தரிசிச் சோறு பிடிக்காது. நீங்க சமைக்கிற காரம் நான் சாப்பிட்டதே இல்ல. ராகவி அத்தை எனக்காகவே தனியா சமைப்பா. ஆனாலும், என்னை அன்பா கூப்பிட்ட மனுசரை அவமதிக்கக் கூடாது, வெளிநாட்டுல இருந்து வந்து சீன் போடக்கூடாது எண்டுதான் எதையும் காட்டிக்கொள்ளாம சாப்பிட்டனான். இப்பவும் எனக்குத் தொண்டை நோகுது. வயிறு எரிவு இன்னும் போகேல்ல. இதுக்கெல்லாம் காரணம் உன்ர அண்ணா. இப்ப அவருக்கு என்ன தண்டனை குடுக்கிறது? இல்ல யார் குடுக்கிறது.” அவளின் கேள்வியில் விக்கித்து நின்றாள் சஞ்சனா.
கைகளைக் கட்டிக்கொண்டு பரந்து விரிந்து நின்ற தோட்டத்தில் மீண்டும் பார்வையைப் பதித்தாள் சஹானா. “அவரின்ர முகம் காணமுதலே ‘என்ர மச்சான்’ எண்டு பாசம் நெஞ்சில தானா சுரந்தது. அவரை பாக்கிறதுக்கு அவ்வளவு ஆசையா வந்தனான். அப்பிடி, கண்ணால காணமுதலே பாசம் வச்சவரை பாத்தபிறகு வெறுத்திட்டனோ எண்டு கவலையா இருக்கு.” கரகரத்த குரலில் தன்னை மறந்து சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.
“அரவிந்தன் மாமா வீட்டுக்கு வந்தாலும் அவர்ல தான் நம்பிக்கை நிறைய இருந்தது. அவரைப்பற்றி மாமா நெடுக(எப்பவும்) சொல்லுவார். பொறுப்பான பிள்ளை, குடும்பத்துக்கு மட்டுமில்ல ஊருக்கே நல்லது செய்றவராம். தன்ர தலைமுறை மட்டுமில்ல அடுத்தத் தலைமுறையும் சந்தோசமா வாழவேணும் எண்டு நினைக்கிறவர் எண்டு நிறைய. கண்ணால காணவே காணாத அடுத்தத் தலைமுறைக்காக யோசிக்கிறவர் கண்ணுக்கு முன்னால வந்து நிக்கப்போற இந்தக் குட்டி மச்சாள் சொல்லுறதைக் கேப்பார் எண்டு நினைச்சிருக்கிறன். அப்பம்மா, அத்தை கோபமா இருந்தாலும் எனக்காக அவர் கதைப்பார் எண்டு நம்பினான். ஆனா..” என்றவளுக்கு மேலே பேசமுடியவில்லை.
“இப்பிடி நிறையக் கற்பனை. கண்டதும் சந்தோசமா வரவேற்பீங்க, எல்லாருமா சேர்ந்து சிரிக்கலாம், கதைக்கலாம். அம்மாக்கு வீடியோ கோல் போட்டு வெறுப்பேத்தலாம் எண்டு என்னென்னவோ..” என்றவளுக்கு அன்றைக்கு இனித்த இந்தக் கற்பனைகள் எல்லாம் இன்று கசந்து வழிந்தது. “ஒவ்வொரு முறையும் உன்ர அண்ணா வார்த்தைகளால் குத்தேக்க வலிக்கும். ஆனாலும், அச்சு அசல் என்ர அப்பா மாதிரியே இருக்கிறவரை நான் வெறுத்துட கூடாது எண்டு தினமும் நினைப்பன். ஆனா இண்டைக்கு.. ப்ச்!” என்றவள் கசந்து வழிந்த உணர்வைத் தன் தொண்டைக்குள்ளேயே புதைக்க முயன்றாள்.
அதற்குமேல் நெஞ்சு அடைக்கும் அந்த வேதனையைத் தாங்க முடியாமல் திரும்பியவள் தங்களுக்குப் பின்னால் நின்ற அவனைக் கண்டதும் ஒருநொடி திகைத்தாள்.
அடுத்தநொடியே சமாளித்தும் கொண்டாள்.
“சாப்பாட்டைக் கொட்டப்பாத்ததுக்குச் சொறி. யோசிக்காம நடக்கப்பாத்தன். தடுத்து நிப்பாட்டினதுக்கு நன்றி!” இன்னுமே சீராகாத குரலில் அவனிடம் சொல்லிவிட்டு, அசையாமல் வரப்பில் நின்றவனை நெருங்கி, மெல்ல அவனைக் கடந்து விலகிச் சென்றாள்.


